ஸ்ரீ குருவாயூரப்பா சரணம்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - ஸ்ரீ கிருஷ்ண லீலைகள்
ராகம்: பூபாளம்
ஆவணி ரோகிணி அஷ்டமி நாளினில் தேவகி வயிற்றில் ஜனித்தவனே
அக்கணமே வசுதேவரின் மூலம் யசோதையின் வீட்டை அடைந்தவனே
பாவையாம் ரோகிணி பாலகனாம் பலராமனின் பின்பு பிறந்தவனே
ஜெய ஜெய ஹே குருவாயுபுரீஸ்வர தேவகி நந்தன க்ருஷ்ண ஹரே
ராகம்: கானடா
அழகிய பெண்ணினைப்போலுருமாறிய அரக்கியாம்பூதனை வந்திடவே
குழந்தை உனக்கவள் கொங்கை தந்தே அதில் கொடும் விஷப்பாலினை ஊட்டிடவே
அழகனே பாலுடனே கலந்தே அவள் ஆவியைப்பானமும் செய்தவனே
ஜெய ஜெய ஹே குருவாயுபுரீஸ்வர தேவகி நந்தன க்ருஷ்ண ஹரே
ராகம்: கரஹரப்ரியா
வளர்பிறை போல நீ தொட்டில் கிடந்து கண் வளர்ந்திருக்கும் அந்த வேளையிலே
வஞ்சகன் சகடனும் உன்னுயிர் கொண்டிட வந்தனன் வண்டியின் உருவினிலே
முளரி மலர்ப்பதம் கொண்டு தைத்தே அவன் முறிந்து விழுந்திட வைத்தவனே
ஜெய ஜெய ஹே குருவாயுபுரீஸ்வர தேவகி நந்தன கிருஷ்ண ஹரே
ராகம்: அடாணா
காற்றெனச்சீறி எழுந்த த்ருணாவர்த்தன் காலத்தை நொடியினில் முடித்தவனே
சீற்றம் கொண்டே பக்ஷி ரூபத்தில் நின்ற பகாசுரன் வாயைக் கிழித்தவனே
கூற்றமென ஒரு குதிரையைப் போல் வந்த கேசியை மாய்த்திட்ட கேசவனே
ஜெய ஜெய ஹே குருவாயுபுரீஸ்வர தேவகி நந்தன கிருஷ்ண ஹரே
ராகம்: யமுனாகல்யாணி
காளியப்பாம்பு வசிக்கும் தடாகத்தில் கடும் விஷஜ்வாலையும் வீசிடவே
கார்முகில் வண்ணனே பாரளந்த திருப்பாதமவன் முடி மீது வைத்தே
தாளமுடன் நடமாடி அவன் தலை வணங்கிடச்செய்த தயாநிதியே
ஜெய ஜெய ஹே குருவாயுபுரீஸ்வர தேவகி நந்தன கிருஷ்ண ஹரே
ராகம்: அம்ருதவர்ஷிணி
தேவர் தலைவனை வணங்கிடும் பூஜையைத் தேவையில்லையென நீக்கிவைத்தே
கோவர்த்தனம் எனும் மலைதனைப் பூஜிக்க கோபத்தினால் தேவேந்திரனும்
ஏவிய கடுமழை தடுத்திட மலைதனை குடையென விரல்தனில் பிடித்தவனே
ஜெய ஜெய ஹே குருவாயுபுரீஸ்வர தேவகி நந்தன கிருஷ்ண ஹரே
ராகம்: கல்யாணவஸந்தம்
பவக்கடல் பந்தமறுத்திடும் பாவன மூர்த்தியே உன்னை உரல்தனிலே
பாவை யசோதையும் பந்தனம் செய்திடப் பார்த்திருந்தாய் தாமோதரனே
தவழ்ந்து வந்தே மணிக்ரீவனுடன் நளகூபரன் சாபத்தைத்தீர்த்தவனே
ஜெய ஜெய ஹே குருவாயுபுரீஸ்வர தேவகி நந்தன கிருஷ்ண ஹரே
ராகம்: சுநாதவினோதினி
வெண்ணையுடன் தயிர் பாற்குடங்கள் பல வேண்டிய மட்டும் நிறைந்திருக்க
மண்ணையள்ளி உந்தன் சின்னஞ்சிறு குமிழ் வாயினில் போட்டதன் மாயமென்ன
அன்னை யசோதைமுன் வாய் திறந்தே பல அண்டங்கள் காட்டிய விந்தையென்ன
ஜெய ஜெய ஹே குருவாயுபுரீஸ்வர தேவகி நந்தன கிருஷ்ண ஹரே
ராகம்: சிவரஞ்சனி
தேவரும் முனிவரும் தேடித்தவம் செய்யும் திருவடி புழுதியில் படிந்திடவே
ஆவினம் மேய்த்திட நடந்த பிருந்தாவனம் முளைத்த புல்லாகவும் ஆகிலனே
பாவிநான் ஆயர்கள் பாடியில் அன்று பிறந்திடும் பாக்யமும் செய்திலனே
ஜெய ஜெய ஹே குருவாயுபுரீஸ்வர தேவகி நந்தன கிருஷ்ண ஹரே
ராகம்: காபி
யானைகள் அரசன் கஜேந்திரன் காலினை அன்றொரு முதலை இழுத்திடவே
ஆதிமுதல்வனே அபயமென்றே அந்த யானையும் அலறி அழைத்திடவே
தீன சரண்யனே முதலையைக்கொன்றந்த யானையின் உயிர்தனைக்காத்தவனே
ஜெய ஜெய ஹே குருவாயுபுரீஸ்வர தேவகி நந்தன கிருஷ்ண ஹரே
ராகம்: சுருட்டி
கோவிந்த கோவிந்த கோகுல நந்தன கோவிந்த கோவிந்த நாம ஹரே
கோடி ஜன்மாந்தர பாபங்கள் தீர்த்திட கோயில் கொண்டாய் கோபால ஹரே
பாவிகளும் உந்தன் நாமம் உரைத்திடில் பரமபதம் தரும் ராம ஹரே
ஜெய ஜெய ஹே குருவாயுபுரீஸ்வர தேவகி நந்தன கிருஷ்ண ஹரே