Saturday, December 27, 2014
கண்ணன் கதைகள் (15) - இரு கண்கள்
பூந்தானம் நம்பூதிரி சிறந்த பக்தர். படிப்பறிவு இல்லாதவர். பக்தியுடன் இறைவன் பெயரில் தா மனதிற்குத் தோன்றியபடி மலையாளத்தில் சிறு சிறு கவிதைகள் எழுதுவார். ஒரு சமயம் அவர் கண்ணனைப் பற்றிய பாடல்களை எழுதி, மேல்பத்தூர் நாராயண பட்டத்திரியிடம் கொடுத்து, தயவு செய்து இதில் தவறு ஏதும் இருந்தால் திருத்தித் தாருங்கள் என்று சொன்னார். நாராயண பட்டத்திரி தான் சிறந்த அறிவாளியென்ற கர்வத்தில், “இதில் நிறைய இலக்கணப் பிழை இருக்கிறது, படிப்பறிவு இல்லாதவன் எழுதுவது போல் இருக்கிறது” என்று ஏளனமாகக் கூறினார். பூந்தானம் மிகுந்த வருத்தத்துடன் சென்று விட்டார். அவர் மனம் கலங்கியது. அவர் வருத்தத்தை குருவாயூரப்பனால் சகிக்க முடியவில்லை. நாராயண நம்பூதிரியின் ரோகத்தின் உபத்திரவத்தை அதிகப்படுத்தினார். ரோகத்தின் அவஸ்தையில் அவர் அலறினார்.
அடுத்த நாள் நாராயண பட்டத்திரியின் வீட்டிற்கு ஒரு அழகிய இளைஞன் வந்தான். நீங்கள் இயற்றிய நாராயணீயத்தைக் கேட்பதற்காக வந்திருக்கிறேன், படியுங்கள் என்று சொன்னான். பட்டதிரியும் மகிழ்ச்சியுடன் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கப் படிக்க, பல இடங்களில் பிழை இருக்கிறது என்று அந்த இளைஞன் சொல்லிக் கொண்டே வந்தான். பட்டத்திரி, “இத்தனை தவறுகளைச் சொல்லும் நீ யார்?” என்று கேட்டார். உடனே அந்த இளைஞன் மறைந்தான். புல்லாங்குழலை ஊதிக்கொண்டு அங்கே குருவாயூரப்பன் காட்சி அளித்தார். மேலும், “நாராயண நம்பூதிரியின் பக்தியை விட பூந்தானத்தின் பக்தியின் மேல் எனக்கு விருப்பம் அதிகம், அவரது பாடல்களில் இலக்கணம் இல்லாவிட்டாலும் பக்தி இருக்கிறது, பூந்தானத்திடம் மன்னிப்பு கேள், உன்னுடைய ரோகத்தின் உபத்திரவம் குறையும்” என்று கூறி மறைந்தார்.
உடனே நாராயண பட்டத்திரி, தன்னுடைய வித்யா கர்வத்தை எண்ணி வெட்கி, பூந்தானத்திடம் மன்னிப்பு கேட்டார். மேலும், அவரால் தனக்கு அப்பனின் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ந்து அவருக்குத் தன் மோதிரத்தையும் பரிசாக அளித்தார். “நமது இந்த நட்பின் அடையாளமாக இந்த மோதிரம் எப்போதும் உங்கள் விரலிலேயே இருக்கவேண்டும்,அந்தக் குருவாயூரப்பனே நேரில் வந்து கேட்டாலொழிய வேறொருவருக்கும் தரக் கூடாது” என்று அன்புக் கட்டளையிட்டார். அதனால்தான் அந்த மோதிரத்தைக் கொள்ளையர்கள் பார்த்துவிடக் கூடாது என்றும், மாங்காட்டச்சனிடம் அதைத் தரவும் தயங்கினார் பூந்தானம். இப்போது புரிகிறதா? முந்தைய கண்ணன் கதையில் அவர் ஏன் தயங்கினார் என்று? கண்ணனுக்கு பூந்தானம் நம்பூதிரியும், நாராயண பட்டத்திரியும் இரு கண்களைப் போன்றவர்கள் என்பது இதிலிருந்து விளங்குகிறது. பின்னாளில் “ஞானப்பான” என்ற சிறந்த காவியத்தையும் பூந்தானம் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment