Saturday, December 20, 2014
கண்ணன் கதைகள் (8) - ஞானிக்கும் பக்தி அவசியம்
ஆதி சங்கரர் சிறந்த ஞானி, வேதாந்தி. ஒரு சமயம், அவர் கேரளாவிலுள்ள காலடியில் இருந்து சிருங்கேரி சென்று கொண்டிருந்தார். குருவாயூர் வழியாகச் செல்ல நேரிட்டது. வழியில் நாரதர் எங்கோ வேகமாகச் செல்வதைக் கண்டு அவரிடம் , “ நாரதரே! எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டார். நாரதர், “ இன்று ஏகாதசியல்லவா, அதனால் குருவாயூரப்பனை ஸேவிக்கச் செல்கிறேன், நீங்களும் வாரும்” என்று கூறினார். ஆதிசங்கரர், “பாமரர்கள் தான் விக்ரஹ ஆராதனையும், நாம ஜபமும் செய்ய வேண்டும். ஆத்ம ஞானிகளுக்குத் தேவையில்லை” என்று சொல்லிவிட்டுத் தன் பயணத்தை ஆகாய மார்க்கமாகத் தொடர்ந்தார். குருவாயூரப்பனோ “ஞானிகளுக்கும் பக்தி தேவை” என்று அவருக்கு உணர்த்த விரும்பினார்.
அப்போது குருவாயூர்க் கோவிலில் ‘சீவேலி’ ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. குருவாயூர்க் கோயிலை ஆதிசங்கரர் கடக்கும்போது, திடீரென்று வானிலிருந்து வடக்கு வாசலில் சீவேலி சென்றுகொண்டிருந்த யானையின் முன்னே கீழே விழுந்தார். அனைவரும் குழப்பமடைந்து, சீவேலி ஊர்வலத்தை நிறுத்தினர். தனது முட்டாள்தனமான செயலையும், தவற்றையும் உணர்ந்த சங்கரர் மனம் வருந்தி, அப்பனிடம் மன்னிப்பு கேட்டார். அவர் முன் தோன்றிய குருவாயூரப்பன், "ஞானிக்கும் பக்தி அவசியம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். பணிவுடன் “கோவிந்தாஷ்டகம்”, “பஜகோவிந்தம்” முதலியவற்றால் அப்பனை ஆராதித்தார். மேலும் சில நாட்கள் குருவாயூரிலேயே தங்கியிருந்து வழிபட்டார். கோவிலின் நடைமுறை விதிகளை அமைத்தார். நாராயணன் நம்பூதிரி என்ற அப்போதைய கோவிலின் தாந்த்ரீகர் அந்த விதிமுறைகளை “தாந்த்ரீக” முறைப்படி எழுதி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. கோவிலின் தெய்வீகத் தன்மையை அதிகரிக்க “மண்டல விளக்கு” முறையை நிறுவினார். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 41 நாட்கள் இந்த பூஜை நடைபெறும். ஏகாதசியன்று நடைபெறும் “விளக்கேற்றம்” மிகவும் சிறப்பானதாகும். அன்றைய தினம் தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்தார் என்று சொல்லப்படுகிறது.
இன்றும் குருவாயூரப்பன் திருவீதியுலா வரும்போது ஆதிசங்கரர் வழிபட்ட இடத்தில் மேளதாளங்கள் இசைக்காமல் அமைதியாகக் கடந்து செல்வர். அப்போது குருவாயூரப்பனிடம் ஆதிசங்கரர் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம்.
உங்கள் பதிவுகளை படிக்க படிக்க குருவாயூர் சென்று நாராயணனை தரிசனம் செய்ய ஒரு ஆர்வத்தை உண்டாக்கி விட்டீர்கள்.அதை நிறைவேற குருவாயுரப்பனையே வேண்டி கொள்ளுகிறேன் .
ReplyDelete