Tuesday, January 27, 2015
கண்ணன் கதைகள் (46) - அந்தணப் பெண்களை அனுக்ரஹித்தல்
ஒரு முறை, கண்ணன் பிருந்தாவனத்திலிருந்து வெகு தூரத்திலுள்ள காட்டிற்கு இடைச்சிறுவர்களுடன் பசுக்களை மேய்க்கச்சென்றான். மனித நடமாட்டமற்ற அக்காட்டில் சிறுவர்களும் பசுக்களும், பசியாலும் தாகத்தாலும் வாடினர். அதைக்கண்ட கண்ணன், அருகே யாகம் செய்து கொண்டிருக்கும் அந்தணர்களிடம் உணவு கேட்கச் சொல்லி அச்சிறுவர்களை அனுப்பினான். அவர்கள் அந்தணர்களிடம் சென்று யாசித்தார்கள். வேதமறிந்த அந்த அந்தணர்கள், காது கேட்காதவர்கள் போல் பேசாமல் இருந்தார்கள். உணவு கிடைக்காததால் சிறுவர்கள் வருந்தி, திரும்பி வந்தார்கள். கண்ணன், "அந்தணர்களின் மனைவியரிடம் சென்று நான் வந்திருப்பதாகக் கூறி உணவு கேளுங்கள், இரக்கம் மிகுந்த அவர்கள் அன்னம் கொடுப்பார்கள்" என்று சிறுவர்களிடம் கூறினான். அவ்வாறே குழந்தைகளும் அந்தப் பெண்களிடம் உணவு கேட்டனர். நெடுநாட்களாகத் கண்ணனைக் காண விரும்பிய அப்பெண்கள், கண்ணனுடைய பெயரைக் கேட்டவுடன், அவனை நேரில் காண ஆவல் கொண்டு, நான்கு விதமான அன்னங்களை எடுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் கணவர்கள் தடுத்தும்கூட வேகமாய் கண்ணன் இருக்குமிடம் வந்தார்கள்.
தலையில் மயில் பீலியுடன், ஒளிவீசும் குண்டலங்களுடன், மஞ்சள் பட்டணிந்து, நீல மேனியுடன், வனமாலையணிந்து, கருணை நிரம்பிய பார்வையுடன், நண்பனின் தோளில் கையை வைத்துக் கொண்டு, பலராமனுடன் நிற்கும் கண்ணனை அப்பெண்கள் கண்டார்கள்.அவர்களில் ஒரு பெண்ணுக்கு, அவளுடைய கணவன் தடுத்ததால் வரமுடியவில்லை. அவள் அங்கேயே கண்ணனை தியானம் செய்து அவனுடன் கலந்து மோக்ஷம் அடைந்தாள். அப்பெண்கள், உலகங்களின் தலைவனான கண்ணனையே விழிகளை இமைக்காமல் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மனம் முழுவதும் கண்ணனே நிறைந்திருந்தான். அவர்கள் கொண்டு வந்திருந்த உணவினை கண்ணனிடம் கொடுத்தனர்.
கண்ணன், அந்தணப்பெண்கள் அளித்த உணவை ஏற்று அவர்களை அனுக்ரஹம் செய்தான். கண்ணனுக்கு சேவை செய்ய விரும்பிய அவர்களை, அவர்களுடைய கணவர்கள் செய்யும் யாகத்திற்கு உதவும்படி உத்தரவிட்டு, அவர்கள் கணவர்களையும் அவர்களிடம் அன்புடன் இருக்கப் பணித்தான். அவர்களும் தங்கள் தவறுகளை உணர்ந்து, தத்தம் மனைவியரின் பக்தியையும் உணர்ந்து, கண்ணனைத் துதித்தனர். பிறகு, கண்ணன் அந்தணப் பெண்கள் அளித்த உணவை, தன் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்தான்.
No comments:
Post a Comment