Tuesday, July 24, 2012

தில்லையம்பூர் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம்-6

Photo courtesy: "THE HINDU"
தில்லையம்பூர் .....இந்த ஊர் வலங்கைமான் அருகே, கும்பகோணம் தாலுக்காவில் , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. 

இந்த ஊர் என் பிறந்த வீட்டின் பூர்வீகம். புகுந்த வீட்டின் பூர்வீகமான தென்சிறுவளூர் - ஸ்ரீதேவி பூதேவி ஸமேத அழகிய மணவாளப்பெருமாள் கோயில் பற்றி சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவு அமைக்கப்பெற்றது எனது பாக்கியம். சமீபத்தில் என்னுடைய தம்பி தில்லையம்பூருக்குச் சென்று வந்து படங்கள் அனுப்பி இருந்தான். அதற்குப் பிறகு இந்த ஊரைப்பற்றி ஒரு பதிவு இட வேண்டும் என்ற அவாவில் இதை எழுதுகிறேன்.
இந்த ஊரின் வரலாறு:

சோழ மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிற்றரசர்களில் , தில்லைராயன் என்ற சிற்றரசன் , இந்த ஊரை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. தில்லையை (தற்கால சிதம்பரம்) ராஜதானியாகக்கொண்டு அந்த சிற்றரசன் ஆண்ட ஊர்களில் இந்த ஊரும் ஒன்று என்று சொல்லப்படுகிறது . இது பற்றிய விவரங்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் உள்ளதாம்.

வேதங்களைக் கற்றுணர்ந்து, உயர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது . தில்லையம்பூர் ஸ்ரீவேங்கடராம அய்யங்கார் , தில்லியம்பூர் ஸ்ரீ சக்ரவர்த்தி ஆச்சார்ய ஸ்வாமி, தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், போன்ற சிறந்த வித்வான்களும் பண்டிதர்களும் இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்ற பெருமையும் இந்த ஊருக்கு உண்டு. அவர்கள் வாழ்ந்த காலத்தையும் , அந்த வரலாறுகளையும் முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை.

இதை படித்து, யாராவது மேலும் விவரங்கள் கொடுத்தால், மிகுந்த சந்தோஷப்படுவேன். விவரம் தெரிந்தவர்கள் மறுமொழி அனுப்புங்கள் அல்லது என் ஈ-மெயிலுக்கு setlur.shanu@gmail.com எழுதுங்கள்.

குடமுருட்டி ( காவிரியின் கிளை) ஆற்றின் தெற்குக் கரையில், தில்லையம்பூர் என்ற இந்த சிறிய, அழகிய கிராமம் அமைந்துள்ளது. இயற்கை அழகும் பசுமையும் கூடியதாக இருக்கிறது . சுற்றுப்பட்டு கிராமங்களில் பேச்சு வழக்கில் தில்லியம்பூர், தில்லிம்பூர்,என்று சொல்லப்படுகிறது.அக்ரஹாரமும், பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. அக்ரஹாரத்தில் நிறைய வீடுகள் உள்ளன. அதில் எங்கள் தாத்தா ராஜகோபால ஐயங்கார் அவர்களின் வீடும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. 
இனி, எங்கள் பூர்வீகமான தில்லையம்பூரில் உள்ள, புராதனமான ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில்  பற்றிய விவரங்கள்:


மூலவர்: ஸ்ரீ வேணுகோபாலன். பாதுகைகளுடன் கூடிய பொலிந்து நின்ற திருவடிகளுடன் காட்சி தருவது தனிச்சிறப்பு.

ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராய்க் காட்சி தருகிறார். சதுர் புஜங்களுடன் சங்கு சக்ரம் ஏந்தி சேவை சாதிக்கிறார். உள்ளத்தை அள்ளும் புன்முறுவலுடன் கூடிய திருமுகம்.

யதாதாரம் விஶ்வம் கதிரபி ச யஸ்தஸ்ய பரமா
தமப்யேகா தத்ஸே திஶசி ச கதிம் தஸ்ய ருசிராம்
கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹர துர்போத மஹிமா
கவீநாம் க்ஷுத்ராணாம் த்வம் அஸி மணிபாது ஸ்துதிபதம் 

- ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் - 1.9

“இந்த பிரபஞ்சம் / உலகம் முழுவதையும் தாங்கும் பெருமாளை, நீ ஒருவளாகத் தாங்குகிறாயே!” என்று ஸ்வாமி தேசிகன் வியந்தது போல் நம்மையும் வியக்க வைக்கும் பாதுகையுடன் கூடிய திருவடிகள் !!!!

பெருந்தேவித்தாயார்,ஆண்டாள், ஆஞ்சநேயர் தனிச்சந்நிதியில் எழுந்தருளி
அருள் பாலிக்கிறார்கள்.

"கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன கண்டோம்"
என்று நம்மாழ்வாரைப் போலவே நாமும் பாடி, அவன் அருளால் அவன் தாள்
வணங்குவோம்.

அடியேனும் கூடிய சீக்கிரம் அவனை ஸேவிக்க, அந்த வேணுகோபாலனிடமே பிரார்த்திக்கிறேன்.

திருக்கோயில் முகவரி :

துவாரகா அக்ரஹாரம், தில்லையம்பூர் ,
வலங்கைமான் அருகில், தஞ்சாவூர்- 612 804
Dwaraka Agraharam, Thillaiambur (near Valangiman), Thanjavur - 612 804.