Friday, February 28, 2014

ஸ்ரீ நாராயணீயம் / ஸ்ரீ நாராயணீயமும் நாராயண பட்டத்ரியும்

ஸ்ரீ நாராயணீயம்

ஸ்ரீ நாராயணீயம் / ஸ்ரீ நாராயணீயமும் நாராயண பட்டத்ரியும்

முன்னுரை:

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன், மேப்பத்தூர் என்ற ஊரில் பிறந்த நாராயண பட்டத்ரி அவர்களால் இயற்றப்பட்ட ஸ்லோகங்கள். ஸ்ரீ நாராயணீயம் என்ற . அற்புதமான, அழகான தொகுப்பு. ஸ்ரீமத் பாகவத ஸாராம்சம். பட்டத்ரி, தனது தந்தையிடத்திலும், அச்சுத பிஷாரடி என்ற குருவிடத்திலும் தர்க்கம், மீமாம்ஸை, வியாகரணம் போன்ற சாஸ்திரங்களைக் கற்றார். அச்சுத பிஷாரடி வாத ரோகத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்படுவதைக் கண்ட பட்டத்ரி, குரு தக்ஷிணையாக, அந்த வாத ரோகத்தை முன்வந்து ஏற்றுக்கொண்டார். உடனே, வாத ரோகம், பட்டத்ரியைப் பீடித்து அதனால் மிகவும் அவதிப்பட்டார். பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. துஞ்சத்தெழுத்தச்சன் என்பவர் கவிஞர், பக்தர், ஜோசியர். அவர், பட்டத்ரியை குருவாயூருக்குச் சென்று “நாவிலே மச்சம் தொட்டு உண்” என்று பணித்தார். அறிவற்றவர்களாய் இருந்தால், மீனை உண்ணச் சொல்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், பட்டத்ரிக்கு மச்சாவதாரம் தொடங்கி பகவானை வர்ணிக்கச் சொல்கிறார் என்று புரிந்தது. உடனேயே, குருவாயூர் சென்று அங்குள்ள புண்யதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, சன்னிதியிலேயே அமர்ந்து, அவன் பெருமையைக் காவ்யமாக எழுத ஆரம்பித்தார். அந்தக் காவ்யமே “ஸ்ரீ நாராயணீயம்”. மொத்தம் 1034 ஸ்லோகங்கள் உள்ளன. 100 தசகங்கள் கொண்டது . ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் உள்ளன. சில தசகங்களில் 10 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளன. 


ஒவ்வொரு ஸ்லோகம் எழுதி முடித்ததும், “ஹே குருவாயூரப்பா, இவ்வாறு நடந்தது உண்மையா? என்று கேட்பாராம். குருவாயூரப்பன் “ஆம்” என்று தலையை ஆட்டினால்தான் அடுத்த ஸ்லோகம் எழுதுவாராம். ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் "ஹே கிருஷ்ணா! ஹே குருவாயூரப்பா! உனது மூர்த்திதான் எனக்குக் கதி, என்னை ரோகத்திலிருந்து காக்க வேண்டும்" என்ற வரிகளை நோக்கும்பொழுது, நாராயண பட்டத்ரி தன் ரோகத்தை மட்டுமின்றி பக்தர்கள் எல்லாருடைய ரோகங்களையும் போக்கவே பிரார்த்தித்திருக்கிறார் என்று தெரிகிறது. "என்னுடைய ரோகத்தைப் போக்க வேண்டும் என்பதால் இதை படிப்போர் யாவருமே இப்படி உச்சரித்து, தமது ரோகத்தையும் போக்கிக் கொள்ளவேண்டும் என்ற அவருடைய விசாலமான எண்ணம் தெரிய வருகிறது. இப்படி, எல்லா ஸ்லோகங்களுக்கும் ஊகித்துக்கொள்ள வேண்டும். கலியுகத்தில் ஜன்மம் கடைத்தேற பக்தி மார்க்கம் ஒன்றே வழி.  நாராயணீயத்தில் பக்தியே பிரதானம்.  ஆகையால், இதைப் படிக்கும்போது  பகவத் தியானமே  சிறந்த வழி, பகவானே சிறந்த புகலிடம் என்றும் தெரிய வருகிறது.

இதை எழுதி முடித்ததும், அவருடைய வாதரோகம் நீங்கிவிட்டது. ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய சரிதத்தைக் கூறுவதாலும், நாராயண பட்டத்ரி என்பவர் இயற்றியதாலும் , நாராயணீயம் என்று பெயர் பெற்றது. 

நாராயணீயம் படித்தாலோ, பாராயணம் செய்தாலோ, சிரவணம் செய்தாலோ ஐஸ்வர்யம் கூடும், கொடிய ரோகம் நிவர்த்தியடையும், கிரக பீடை நீங்கும். காலசர்ப்ப தோஷ நிவர்த்தி, வாதரோக நிவர்த்தி, உத்யோக உயர்வு, சந்தான பாக்கியம், ஆயுள் விருத்தி, ஆரோக்யம் முதலியன கிடைக்கும், ராஸக்ரீடை, ருக்மிணி கல்யாணம் தசகங்களைப் படித்தால் ஆண்-பெண் இருபாலருக்கும் விவாகம் கூடிவரும் என்று எத்தனையோ பலன்களைச் சொல்கிறது பலஸ்ருதி.

தினமும் நாராயணீயம் ஒரு ஸ்லோகமாவது பாராயணம் செய்தால் நமது, பிரச்னைகள் , இன்னல்கள், மன அழுத்தம் குறைந்து , நிம்மதியையும், நீண்ட ஆயுளையும், உடல் நலத்தையும் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பட்டத்ரி, ஸ்ரீ நாராயணீயத்தை நிறைவு செய்த நாளான கார்த்திகை 28ம் நாள், நாராயணீய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நான் சிறுமியாய் இருந்த பொழுது, “ஸ்லோகங்கள் வாயில் நுழையாதவர்கள் அர்த்தங்களைப் படித்தாலும் அதே பலன், ஒரு நாளைக்கு, ஒரு தசகம் அல்லது ஒரு ஸ்லோகமாவது படி” என்று என் பாட்டி சொல்வார். நிறைய குருவாயூரப்பன் கதைகளையும் சொல்வார். அது முதல், எனக்கு ஸ்ரீ குருவாயூரப்பன் தான் இஷ்ட தெய்வம். எனக்கு நோய், மனக்கவலை, பிரச்னைகள் வந்தால் அனைத்திலிருந்தும் “என்னுடைய குருவாயூரப்பன்” தான் என்னையும், என் குடும்பத்தாரையும் இன்றளவும் காத்து வருகிறான்.


சுமார் 30 வருடங்களாக ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் எழுதிய நாராயணீயம் படித்து வருகிறேன். வேறு சில நாராயணீயப் புத்தகங்களிலும் விளக்கங்கள் படித்துள்ளேன்.  சில உபன்யாசங்களிலும் கேட்டிருக்கிறேன். எனக்கு சம்ஸ்க்ருதம் எழுத்துக்கள் தெரியும். எழுத்துக் கூட்டிப் படித்து விடுவேன். அர்த்தம் தெரியாது. இருப்பினும், படிக்கும் யாவருக்கும் பலனளிக்கும் என்பதாலும், வடமொழி அறியாதவர்களும் உச்சரிப்பு பிறழாமல் படிக்க வேண்டும் என்பதற்காகவும், என்னுடைய ஆத்ம திருப்திக்காகவும் இந்தச் சிறு முயற்சி. ஒரு நாளைக்கு ஒரு தசகம், சம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும், மற்றும் படித்த, கேட்ட அர்த்தங்களை மனதில் கொண்டு, எளிய நடையில் ஒரு சிறிய விளக்கம் பதிவிட " என் குருவாயூரப்பன்" பணித்துள்ளான். இதில் ஏதேனும் தவறு இருந்தால், மன்னிக்கவும். இச்செயல் நன்றாக ‘அவன்’ அடியேனைத் திருத்திப் பணி கொள்வான். நிச்சயம். ஸ்லோகங்களை வீடியோவில் ஒலிபரப்பிய மடிப்பாக்கம் ஸ்ரீமதி.லக்ஷ்மி மாமிக்கு என் நன்றிகள்.

Tuesday, February 25, 2014

சரணம் சரணமஹம் ப்ரபத்யே

சரணாகதி, பரந்யாஸம், பரஸமர்ப்பணம், ப்ரபத்தி,சரணம் சரணமஹம் ப்ரபத்யே

பகவானுடைய திருவடிகளை அடைக்கலம் அடைவதே சரணாகதி (பிரபத்தி).

ஜனனம், ஸம்சாரம், மரணம் என்ற சுழல்களில் உழல்கின்ற ஒவ்வொரு ஜீவனும், அச்சுழலில் இருந்து வெளியேற வேண்டுமானால் பகவானையே சரணமாகக் கொள்ள வேண்டும். பகவான் ஒருவரே அந்தக் கொடிய சுழலில் இருந்து நம்மைக் காப்பாற்றி, பிறவாமை என்னும் ஸாஸ்வத சுகத்தை நமக்கு அளிக்க வல்லவர்.

எனவே, ஒவ்வொருவரும் தக்க ஆசார்யரை அடைந்து அவரிடம் உபதேசம் பெற்று பகவானைச் சரணடைய வேண்டும். இவ்வாறு சரணடைந்து விட்ட ஜீவனை ரக்ஷிக்கும் பாரத்தை பகவான் தானே ஏற்றுக் கொள்கிறார்.

தன்னைத் தானே  காத்துக் கொள்வது முதலில் தலை தூக்கி நிற்கும். ஆனால் அந்த முறையால், நம்மை  பாதுகாத்துக்கொள்ள முடியாது. தன் உடம்பில் கடைசி சுற்றுப்புடவை இருக்கும்வரை, த்ரௌபதி தன்னைத்தானே காத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டாள். அது பலனளிக்கவில்லை எனத்தெரிந்ததும் தன் இரு  கைகளையும் தலை மேல் கூப்பி "ஆபத்பாந்தவா, சரணாகத ரக்ஷகா என்னைக் காப்பது உன் பொறுப்பு" என்று  ஓலமிட்டாள். உதவுவதற்காகவே காத்திருக்கும் பகவான் அவளைக் கைவிடவில்லை. 

என் பாட்டி இந்தக் கதையை எனக்குச் சொல்லும்போது சொல்வார் : 
"ஆபத்பாந்தவா, சரணாகத ரக்ஷகா, அநாத ரக்ஷகா, என்று த்ரௌபதி கூப்பிட்டாள். பெருமாள் வரவில்லை. கடைசியாக, இரு கைகளையும்  மேலே தூக்கி "ஹ்ருதயகமலவாஸா" என்று கூப்பிட்டாள், உடனேயே வந்துவிட்டார் பெருமாள். ஏனெனில் இதயம் பக்கத்திலேயே இருக்கிறது, உடனே வந்துவிட்டார்" என்று சொல்வார்.  பெருமாள்  நமக்கு அவ்வளவு அருகாமையில் இருக்கிறார். நாம்தான் அவரை மறந்து விடுகிறோம் என்பார்.

ஆகவே, தன்னைக் காத்துக்கொள்ளும் எண்ணத்தை விட்டு ஸகல பாரத்தையும் பகவானிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

இந்த சரணாகதிக்கு பரந்யாஸம், பரஸமர்ப்பணம், ப்ரபத்தி, அத்ருஷ்டார்த்தம் என்ற பெயர்களுமுண்டு.

இதை அனுஷ்டிக்கும் ஒவ்வொருவரும், பின்கண்ட வகையில் மனதில் உறுதி பூண்டவராக இருக்கவேண்டும்.

1.  இதுவரை ஸாஸ்த்ரங்களாகிய பகவானுடைய ஆணையை மீறி, பல பாவங்களையே செய்து வந்தேன். இனி, பகவானுக்கு அனுகூலமான காரியங்களையே செய்வேன்.

2. அவனுக்கு பிரதிகூலமான(இஷ்டமில்லாத) காரியங்களைச் செய்யமாட்டேன்.

3. என் இடர்களைக் களைந்து என்னைக் காக்க வல்லவன் பகவானைத்தவிர வேறு எவருமே இல்லை.

4. நான் பகவானைப் பிரார்த்தித்தால் அவர் என்னைத் தனக்கே உரியதான கருணையால் நிச்சயம் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

5. ஸ்ரீய:பதியான பகவான் என்னைக்காத்து ரக்ஷிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

இந்த ஐந்து வி உறுதியுடன், தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் பகவானுக்கே உரியவர்கள் என்று சரணாகதியடைகிறேன்.

விரும்பிய பலனைக் கொடுக்கும் பொறுப்பும் (பரமும்) உன்னுடயதே என்றும், அதன் பலனும் உன்னுடையதே என்றும் அவனிடம் சமர்ப்பிப்பது பரந்யாசமாகும்.

சரணாகதி செய்வதால் மோக்ஷம் என்கிற பரலோக சுகம் மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை. இகத்திலும், ஐஸ்வர்யம், புத்திரப்பேறு, உத்யோக உயர்வு, வ்யாபாரவ்ருத்தி முதலிய ஸகலமான பலன்களும் சரணாகதியால் கிடைக்கும். அவனிடம் சரணடைவதால் ஸகலவிதமான பாபங்களும் பஸ்பமாகிவிடுகின்றன. இதை," ஸர்வ பாபேப்யோ  மோக்ஷயிஷ்யாமி" என்ற அவர் வாக்கே உறுதி செய்கிறது.

இதற்காகவே, ஸ்ரீ தேசிகன் "நியாஸ தசகம்"  என்ற ஸ்தோத்ரத்தை இயற்றியிருக்கிறார்.

Saturday, February 22, 2014

முஸலகிஸலயம்


முஸலகிஸலயம்

ஆசார்யனின் கருணை இருந்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு வாதிகேஸரியின் வாழ்க்கையே ஒரு உதாரணம்.

பெரியவாச்சான் பிள்ளைக்கு வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர் என்று ஒரு சிஷ்யர் இருந்தார். இவர், பரிசாரகன். தளிகை செய்பவர். இவர் படிப்பில்லாமல் முப்பது வயது வரை திரிந்து கொண்டிருந்தார்.

இவர், ஒரு நாள் சாஸ்திரங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து, "நீங்கள் படிக்கிறது என்ன?" என்று கேட்டார். அவர்கள் கிண்டலாக 'முஸலகிஸலயம்' என்றார்கள். (இதற்கு அர்த்தம் உலக்கைக் கொழுந்து என்பது. முசலம் என்றால் உலக்கை. கிசலம் என்றால் கொழுந்து). மரம்தானே என்று தண்ணீர் தெளித்தாலும், உலக்கையிலிருந்து துளிர் வருமா? நடக்கவே நடக்காது என்று அர்த்தம்.

இவர், பெரியவாச்சான் பிள்ளையிடம் வந்து 'முஸலகிஸலயம்' சாஸ்திரம் அதைக் குறிப்பிடுகிறது என்று கேட்டார். "நீ படிப்பில்லாதவன்" என்று ஏளனமாக அவர்கள் உலக்கைக் கொழுந்து என்று சொல்லியிருக்கிறார்கள்" என்றார் பெரியவாச்சான் பிள்ளை.

"என்னை வித்வானாக்கி அருள் புரிய வேண்டும்" என்று வாதிகேஸரி அவரை நமஸ்கரித்துக் கேட்டுக்கொண்டார். பெரியவாச்சான் பிள்ளையும் சம்மதித்து அவருக்கு அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்து, காவியம், நாடகம், தர்க்கம், வியாக்யானம், வேதம், வேதாந்தம் எல்லாவற்றையும் கற்பித்தார். 


இவரும், சாஸ்த்ர நிபுணராகி,  தன்னைப் பரிஹசிக்க உபயோகப்படுத்திய 'முஸலகிஸலயம்' என்ற பெயரிலேயே ஒரு காவியம் எழுதித் தன்னைப் பரி
ஸித்தவர்கள் கையில் .பரிசாகக் கொடுத்து , அவர்களைத் தலை கவிழச் செய்தார். வாதத்தில் அனைவரையும் வென்றார். "வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர்” என்று பெயர்பட விளங்கினார்.

பிறகு துறவு பூண்டு, திருவாய்மொழியின் பழைய வியாக்யானங்களை எல்லாம் பரிசீலனை செய்து அவற்றின் 
ஸாரங்களைத் தொகுத்து 'பன்னீராயிரப்படி' என்ற தம் வியாக்யானத்தைச் செய்து முடித்தார். ஆசார்ய கடாக்ஷம் இருந்தால் எதைத்தான் அடைய முடியாது?!!

இவர் இயற்றிய இதர நூல்கள் பரந்தரஹஸ்ய விவரணம், மாணிக்க மாலை, நவரத்ன மாலை, ஸகலப்ரமாண தாத்பர்யம், உபகார ரத்னம், கத்யத்ரய வியாக்யானம், ஆளவந்தார் ஸ்தோத்ர வியாக்யானம், அபயப்ரதான வியாக்யானம்,சாமரகஸ்யம், அனுஸந்தான ரகஸ்யம் என்பன.

இவர் சிஷ்யர்கள் நாயனாராச்சான் பிள்ளை, ப்ரகால தாஸர், பின்பழகிய பெருமாள் ஜீயர்.

- பழைய, கிழிந்த நூலில் இருந்து தட்டச்சியது. பதிப்பு பற்றி தெரியவில்லை.

Thursday, February 20, 2014

அர்த்தபஞ்சகம் - அறிய வேண்டிய ஐந்து விஷயங்கள்

அர்த்தபஞ்சகம்


வைணவத்தில் பல தத்துவக் கோட்பாடுகள் சம்பிரதாயமாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்று 'அர்த்தபஞ்சகம்' என்பது. வைணவத்தின் ஐந்து பேருண்மைகள். ஆன்மா அறிய வேண்டிய ஐந்து நிலைகள்.  இந்த விஷயங்கள் என்ன என்று ஸ்ரீ பராசரபட்டர் அருளியுள்ள திருவாய்மொழி .தனியனால் அறிந்து கொள்ளலாம்.

"மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்".

இந்த ஐந்து விஷயங்கள்:

1. அடைய வேண்டிய பொருள்
2. அடைகிறவன்
3. அடைவதற்காக செய்ய வேண்டிய வேலை
4. அடைவதிலுள்ள இடையூறுகள்
5. அடைவதன் பலன்

இதை முறைப்படிப் பார்த்தால் முதலில் 'இறைநிலை'(பரமாத்ம ஸ்வரூபம்) எனப்படும் பரப்ரும்மம் எது என்பதை அறிய வேண்டும்.
.
அடுத்து, 'உயிர்நிலை'(ஜீவாத்ம ஸ்வரூபம்) என்கிற ஆத்மா பற்றி அறிய வேண்டும்.

மூன்றாவதாக, .'தக்க நெறி'(உபாய ஸ்வரூபம்) எனப்படும் நெறிநிலையான உபாயம் பற்றி அறிய வேண்டும்.

நான்காவதாக, .'ஊழ்வினை'(விரோதி ஸ்வரூபம்) என்கிற எதிரியைப்பற்றி அறிய வேண்டும்.

முடிவில், ஐந்தாவதாக, 'வாழ்வு'(புருஷார்த்த ஸ்வரூபம்) எனப்படும் முக்தியை உணர வேண்டும். இந்த ஐந்தையும் 'அர்த்த பஞ்சகம்' என்பர்.

1.  ' இறைநிலை'(பரமாத்ம ஸ்வரூபம்) - பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை எனப்படும். இறைவன் பரமபதத்தில் இருப்பது 'பரம்'. முத்தொழில் நடத்த ஸங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், வாசுதேவ நிலை 'வியூகம்'. பல அவதாரங்கள் .'விபவம்'. எள்ளுக்குள் எண்ணையைப் போல எங்கும் இருத்தல் 'அந்தர்யாமி'. ஆலயங்களில் விக்ரஹ ரூபம் 'அர்ச்சை'.

2.  'உயிர்நிலை'(ஜீவாத்ம ஸ்வரூபம்) - நித்ய, முக்த, பத்த,கேவல,முமுக்ஷுக்கள்.

வைஷ்ணவர்களுக்கு மூன்று வித தத்துவங்கள் முக்கியம். அவை ,சேதனம், அசேதனம், ஈஸ்வரன். சித், அசித், ஈஸ்வர தத்வங்கள் ஆகிய தத்வ த்ரயம்.

i). ஜீவாத்மா (சேதனன்): இது உடம்பினின்று வேறுபட்டது, அழிவில்லாதது. ஜீவாத்மா பரமாத்மாவிற்கே அடிமை. வேறு எவருக்கும் அடிமைப்பட்டதல்ல.

இதில் சேதனன் என்பவர் மூவர் - பத்தர், முக்தர், நித்யர். ஸம்ஸாரத்தில் மூழ்கி பலவிதமான ஸுகதுக்கங்களை அநுபவித்து, கர்மத்தில் உழல்பவர் பத்தர்.

இந்த ஸம்ஸார ஸம்பந்தத்தை விட்டு, கர்ம பந்தத்திலிருந்து விலகி எம்பெருமான் அனுபவத்தை பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள் முக்தர்கள்-
ரிஷிகள், ஆழ்வார்கள்.

எம்பெருமானுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்பவர் நித்யர்கள். ஸ்ரீவைகுண்டத்தில் பகவானுக்கு கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கும் நித்யஸுரிகள்.

ii). அறிவில்லாத வஸ்து (அசேதனம்): சேதனனே இவைகளால் விளையும் பயனை அனுபவிப்பவன்.
அசேதனம் என்பது ப்ரக்ருதி, காலம், சுத்த ஸத்வம் என்று மூன்று வகைப்படும். ப்ரக்ருதியிலிருந்து ஆகாயம், காற்று, நீர், மண், நெருப்பு,  முதலியவை உண்டாகின்றன.நேற்று, இன்று, நாளை, என்று நம்மால் விவரிக்கப்படுவது காலம். சுத்த ஸத்வம் என்பது ரஜோ குணம், தமோகுணம் ஆகிய இரண்டும் இன்றி இருக்கும் ஸ்ரீவைகுண்டம்.

iii) பரமாத்மா : இறைவன்

கேவலர் -பகவத் அனுபவமின்றி ஆத்மாவிலே நின்றவன்
முமுக்ஷு- உயர்ந்ததான மோக்ஷத்தில் நாட்டம் கொண்டவர்களை முமுக்ஷுக்கள் என்பார்கள்.

3.  'தக்க நெறி'(உபாய ஸ்வரூபம்) - கர்ம, ஞான, பக்தி, பிரபத்தி, ஆச்சார்ய அபிமானம் முதலியன

4.  'ஊழ்வினை'(விரோதி ஸ்வரூபம்) - ப்ரக்ருதி சம்பந்தமே விரோதி.
விரோதி மூன்று. அவை ஸ்வரூப விரோதி, உபாய விரோதி, ப்ராப்ய விரோதி..மோக்ஷத்தை  அடைய இடையூறாக உள்ள தன்மை. ஸ்ரீமன் நாராயணனின்  திருவடியைப் பற்ற முடியாமல் தடுக்கும் இடையூறுகளான ஊழ்வினைகள்.

5.  'வாழ்வு'(புருஷார்த்த ஸ்வரூபம்) - நான்கு புருஷார்த்தங்கள்: தர்ம, அர்த்த, காம, மோக்ஷம்,(அறம், பொருள், வீடு., இன்பம்.) பகவதனுபவம்.

ஸ்ரீ வைஷ்ணவத்தில் மூன்று ரகஸ்யங்கள் சிஷ்யர்களுக்கு .உபதேசிக்கப்படும். முமுக்ஷுக்கள் அறிய வேண்டிய ரஹஸ்யங்கள் மூன்று. அவை: திருமந்திரம், த்வயம், சரம ஶ்லோகம்.

முப்பொருள், நாற்பொருள், ஐம்பொருள்  ஆகிய அர்த்த விசேஷங்களைக்கொண்ட  "அர்த்த பஞ்சகம்"  என்பதை மேலெழுந்தவாரியாகப் படிப்பதால் மட்டும் ஒருவர் .அறிந்து கொள்ள முடியாது. அதை, நீண்ட முயற்சிக்குப் பின் பகவத் க்ருபையால் அறிந்து கொள்ளவும், உணரவும் முடியும்.

அர்த்த பஞ்சகமான, ஐந்து அர்த்தங்களை, ஐந்து விஷயங்களை நமக்கு   ஓதும் இந்த  "திருவாய்மொழி" யாழினிசை வேதம் என்று சொல்லுகிறார் பராசர பட்டர்.