Friday, April 29, 2016

சென்னை வேளச்சேரி ஸ்ரீ யோக நரஸிம்ம ஸ்வாமி கோயில் / CHENNAI VELACHERY SRI YOGA NARASIMHASWAMY TEMPLE/ கண்ணுக்கினியன கண்டோம்-8

சென்னை வேளச்சேரி ஸ்ரீ யோக நரஸிம்ம ஸ்வாமி கோயில்,CHENNAI VELACHERY SRI YOGA NARASIMHASWAMY TEMPLE

சென்னை வேளச்சேரி ஸ்ரீ யோக நரஸிம்ம ஸ்வாமி கோயில்,CHENNAI VELACHERY SRI YOGA NARASIMHASWAMY TEMPLE

As some of my readers requested to write in english, I have written both in tamil and in english.

ஊர் : வேளச்சேரி, சென்னை
மூலவர்: ஸ்ரீ யோக நரஸிம்ம ஸ்வாமி
உற்சவர்: ஸ்ரீ பக்தவத்ஸலர்(ஸ்ரீதேவி, பூதேவி உபய நாச்சியார்கள்)
தாயார்: ஸ்ரீ அமிர்தபலவல்லித்தாயார்(தனிக்கோயில் நாச்சியார்)
தனிச் சன்னதிகள்: ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ ஆஞ்சனேயர்
ஸ்தலப்பெயர்: வேதஸ்ரேணி(வேளச்சேரி)
ஸ்தலப் பெருமாள் : வேதநாராயணர்
ப்ரத்யக்ஷம்: ப்ரஹ்லாதன்
விமானம்: வேதபுரி விமானம்
ஆகமம்: ஸ்ரீ பாஞ்சராத்ரம்
ஸம்ப்ரதாயம்: தென்னாச்சார்ய ஸம்ப்ரதாயம்
திருவாராதனம்: பாத்ம ஸம்ஹிதை முறைப்படி
பழமை: 1000 வருடம்

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.00 முதல் பகல்10.30 மணி வரை
மாலை 5.00மணி முதல் இரவு 8.30 மணி வரை
(விசேஷ காலங்களில் கோயில் திறந்திருக்கும் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது)

திருவாராதனம்: காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை
மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை

உற்சவங்கள்/ திருவிழா:

ஒவ்வொரு மாதமும் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம். சித்திரை ஸ்வாதி ப்ரம்மோத்ஸவம், வைகாசி ஸ்வாதி வசந்தோத்ஸவம், ஆனி ஸ்வாதி ஜேஷ்டாபிஷேகம், ஆடி ஆண்டாள் திருக்கல்யாணம், புரட்டாசி அன்னக்கூடை, கார்த்திகை பவித்ரோத்ஸவம், மார்கழி மாத தினசரி பூஜைகள், தை கனு உத்ஸவம், பங்குனி தாயார் ப்ரம்மோத்ஸவம் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் முதலியவை.

ஸ்தலப்பெருமை:

சதுர்வேதிமங்கலம் /வேதநாராயணபுரம், அதாவது நான்கு வேதங்களும் சொல்லிக்கொடுக்கப்பட்ட இடம். வேள்விகள் நிறைய நடந்ததால் வேதஸ்ரேணி,வேள்விச்சேரி என்ற பெயர் கொண்ட இந்த இடம், பிற்காலத்தில் வேளச்சேரி என மறுவியதாம். மூலஸ்தானத்தில் பெருமாள் ஸ்ரீ யோக நரஸிம்ஹர், நான்கு திருக்கரங்களுடன், வீற்றிருந்த யோக திருக்கோலத்தில் ஸேவை சாதிக்கின்றார். மேற்கே திருமுக மண்டலம். மிக அரிய இந்தத் திருக்கோலத்தில் உள்ள பெருமாள் வரப்ரஸாதி. பெரிய திருவுருவம். பெரியவாய நேத்ரங்கள். பெருமாளின் திருமுக மண்டலத்தைப் பார்க்கும்போது நேத்ரங்களையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போலத் தோன்றுகிறது. சாந்த ஸ்வரூபியாக பரிவுடன் நம்மைப் பார்த்து அருள் பாலிக்கின்றார். ‘கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே?’ என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது. அரங்கனின் கண்ணழகில் மயங்கிய உறங்காவில்லிதாசரைப் போல நாமும் “கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக் கினியன கண்டோம்” என்று காணுதற்கரிய அழகைக் கண்டு மயங்கி நிற்கிறோம்.

ஸ்தலப் பெருமாள் வேதநாராயணர், வலது கையில் பிரயோக சக்ரத்துடன் காட்சியளிக்கிறார். உற்சவர் பக்தவத்சலப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸேவை சாதிக்கின்றார். உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீ ப்ரஹ்லாதன், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆகியோரையும் ஸேவிக்கலாம்.

ஸ்ரீ அமிர்தபலவல்லித்தாயார் தனிக்கோயில் நாச்சியாராக ஸேவை சாதிக்கின்றார். ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு விசேஷ பூஜைகள்.

ஸ்ரீராமருக்கு தனி சன்னதி. உற்சவர் ஸ்ரீராமருடைய வில்லில் பூ முடிந்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்று சொல்லப்படுகிறது. ஆஞ்சநேயருக்கும் தனி சந்நிதி உள்ளது.

பிராகாரத்தில், அரசமரமும் வேப்பமரமும் சேர்ந்து இருக்கின்றது. அதனடியில் நாகர் இருக்கிறார்.

வேளச்சேரி விஜயநகரம் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையத்தில் இருந்து 1 km. தொலைவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

A small gist about the temple:

Velachery Yoga Narasimha Swamy Temple

Shri Yoga Narasimha Swamy Temple is said to be 1000 years old. In olden days, vedas were taught in this place, yagnas were conducted regularly and hence it was called as chathurvedhimangalam/Vedhanarayanapuram and Velvichery, which later became Velachery.

In the sanctum santorum, The Moolavar Sree Yoga Narasimhar with four hands, is in a sitting posture facing west, which is considered rare. The utsavar is Bhakathavatsala perumal with Sridevi & Bhoodevi as consorts. Prahlada is also there. Veda Narayana Perumal is said to be the sthalaperumal and is seen with 'Prayoga Chakra'in his hand.

Thayaar 'Amirthabalavalli' is in a separate sannadhi in the prakaram. There are separate sannadhis for Sri Kothandaramar and Anjaneyar. To those facing delay in marriages, worshipping the utsavar rama idol by tying flower in his bow is said to ensure speedy and successful marriage. Naagar is under the peepal and neem tree.

Tirumanjanam for Moolavar on all swathi nakshathram days. Utsavams like Brahmotsavam, Jyeshtabhishekam, Vasanthotsavam, Panguni uthiram thirukkalyanam, are conducted yearly once.

The temple is situated at 1 km. from Vijayanagaram bus stop and Velachery railway station. The temple is managed by Hindu endowment religious board. The deities are The renovation is under way and the management has proposed to perform the samprokshanam in July 2016.

Tuesday, January 12, 2016

கூடாரவல்லி

கூடாரவல்லி

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் -27வது திருப்பாவை.
-
"கூடாரை வெல்லும்" என்பது "கூடாரவல்லி" என்ற வார்த்தையாக மருவியது. மார்கழி 27ம் நாள் பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் அகங்களிலும் 'கூடாரவல்லி' கொண்டாடப்படும். அக்கார அடிசில் மற்றும் சர்க்கரைப் பொங்கல் செய்து, நிறைய நெய் மிதக்கும்படியாக விட்டு, பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணுவார்கள்.

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! கூடார் என்பதற்கு எதிரிகள் என்பதைவிட 'நம்மோடு ஒன்றாமல் இருப்பவர்கள்', கூடாதவர்கள் அதாவது, விலகி இருப்பவர்களையும், நண்பராக இருக்க விரும்பாதவரையும் உனது அன்பால் வெல்லும் பெருமை உடைய கோவிந்தா! என்பதாக அர்த்தம். உன்னைப் பாடி அருள் பெற வந்தோம். அவனைப் பாடி, பறை என்னும் நோன்பின் பயனை பெற்றதே புகழுடன் கூடிய சன்மானம் என்கிறாள் ஆண்டாள்.

சூடகம் என்றால் கையில் அணியும் வளையல், தோள்வளை 
என்றால் வங்கி, தோடு காதில் அணியும் நகை, செவிப்பூ என்றால் மாட்டல், பாடகம் என்னும் காலில் அணியும் கொலுசு போன்ற நகை, இப்படி பல அணிகலன்களை அணிந்து கொண்டு, மார்கழி மாத விரதமான பாவை நோன்பின் ஆரம்பத்தில் "வையத்து வாழ்வீற்காள்" என்ற பாசுரத்தில் சொன்னபடி நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது விரத முடிவில் கண்ணனை அடையும் மகிழ்ச்சியில் இவற்றை உண்கிறார்கள். ஆடையுடுப்போம் என்றால், முன் ஆடை அணிந்ததில்லை என்று அர்த்தமாகாது. விரத ஆரம்பத்தில் புதிய ஆடைகளையும், ஆடம்பரமான ஆடைகளையும் துறந்த ஆயர் குலப் பெண்கள், இப்போது விரத முடிவில் ஆடம்பரமான ஆடைகளையும் புத்தாடைகளையும் அணிந்து கண்ணனை அடைந்தனர் என்று பொருள்.

பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், பாலிலேயே சமைத்த க்ஷீரான்னம் அதாவது பால்சோறு, நெய்யிலே சோற்றைத் தேடும்படியாக நெய் விட்டு, கையில் எடுக்கும்போது முழங்கை வழியே நெய் வழியுமாறு கூடியிருந்து குளிர்ந்து, அதாவது,கூட்டமாக அமர்ந்து, அனைவரும் கூடி அமர்ந்து,கூடியிருப்பதே மகிழ்ச்சிதானே விலகி இருந்தவர்கள் சேர்ந்துவிட்டதால் கிடைத்த மகிழ்ச்சி மற்றும் உன்னுடன் அமர்ந்து மனம் குளிர உண்டு பிரும்மானந்தத்தை அனுபவிக்க வேண்டும் என வேண்டுகிறார்கள்.

பகவானுக்காகவே இந்த சரீரம் என்பதைப் புரிய வைக்கிறது இந்தப் பாசுரம்.

Saturday, November 21, 2015

கண்ணன் கதைகள் (60) - கைசிக ஏகாதசி / நம்பாடுவான்

Image courtesy: Devathirajan swami


கரண்ட மாடு பொய்கையுள் கடும்பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
திரண்டு தோளி ரணியன் சினங்கொளாக மொன்றையும்
இரண்டு கூறு செய்துகந்த சிங்க 
மென்ப துன்னையே
                                                                                       -திருமழிசையாழ்வார்!

திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் வசித்து வந்த ஹரிஜன வகுப்பை சேர்ந்தவர் நம்பாடுவான் என்னும் பாணன். வடிவழகிய நம்பியின் மேல் மிகவும் பக்தி கொண்டவர். அக்காலத்தில் அவருக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. கோயிலின் வாசலிலிருந்து பகவானை பார்க்க முடியாது. ஆயினும், வருத்தப்படாமல் தினமும் அதிகாலையில் நீராடிவிட்டு, கைசிகம் என்ற பண்ணில் (பைரவி ராகம்) திருக்குறுங்குடி நம்பியின் புகழை இசைத்து, திருப்பள்ளியெழுப்பும் சேவையை செய்து வந்தார். அவ்விதம் ஒரு நாள், கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசியன்று கோவிலுக்கு சென்றபொழுது, ஒரு பிரம்ம ராக்ஷஸன் அவரைத் தடுத்து, “ நீ எனக்கு உணவாக வேண்டும்” என்றது. நம்பாடுவானோ,"விரதம் முடித்துவிட்டு பெருமாளை வழிபட்டபின் உனக்கு உணவாகிறேன்" என்று சொல்ல, பிரம்ம ராக்ஷஸன் அதை நம்பவில்லை. அதற்கு நம்பாடுவான்,"பெருமாளின் உண்மையான பக்தன் பொய் சொல்லமாட்டான்'' என்று கூறி பதினெட்டு விதமான சத்தியங்களைச் செய்கிறான். 16 சத்தியங்களைச் செய்தும் ராக்ஷஸன் நம்பாடுவானை விடவில்லை. 17-வதாக நம்பாடுவான்," எவன் ஸர்வவ்யாபியான வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாஸிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்" என்று சொன்னதும் தனது பிடியை விட்டது. பிறகு நம்பாடுவான், 18--வதாக ,"எல்லா உயிரினங்களையும், ஜனங்களையும் காப்பவனும், இயக்குபவனும் , தேவர்கள், முனிவர்கள் முதலியோரால் ஆராதிக்கப்படுபவனுமான அந்த ஸ்ரீமன் நாராயணனையும் மற்ற தெய்வங்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவத்தை நான் அடையாக கடவேன்" என்று சொன்னான். இந்த வார்த்தையைக் கேட்டதும், பிரம்ம ராக்ஷஸ்," சரி சரி சீக்கிரம் உனது விரதத்தை முடித்துவிட்டு வா" என்று அவனை அனுப்பியது.

நம்பாடுவான் கோவிலுக்கு ஓடிச் சென்று, " பெருமானே! இனி உம்மைப் பாடவே முடியாதோ? நான் உம்மைப் பார்க்கவே முடியாதோ ?" என்று எண்ணிக் கொண்டு, கைசிகப் பண்ணை உருக்கமாகப் பாடினார். அப்போது பெருமாள், த்வஜஸ்தம்பத்தை விலகி இருக்கச் சொல்லி நம்பாடுவானுக்கு தரிசனம் தந்தார். திருக்குறுங்குடியில் மற்ற ஸ்தலங்களைப் போலல்லாமல் த்வஜஸ்தம்பம் சற்று விலகி இருப்பதை இப்போதும் காணலாம்.

பிறகு, தான் சத்தியம் செய்தபடி பிரம்ம ராக்ஷஸை நோக்கிச் சென்றபோது, திருக்குறுங்குடி எம்பெருமான் , ஒரு கிழப்பிராம்மணன் வேடத்தில் நம்பாடுவானுக்கு எதிரே தோன்றி, "இங்கே ஒரு பிரம்ம ராக்ஷஸ் இருக்கிறது. அதன் பசிக்கு இரையாகாமல் வேறு வழி செல்" என்று கூறினார். ஆனால், நம்பாடுவான் அதை மறுத்து, அந்த ராக்ஷஸனுக்கு உணவாவதற்காகவே செல்கிறேன் என்று கூறினான். இதைக்கேட்ட பிராம்மணன்,"ஆபத்துக் காலத்திலும், பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டிய சந்தர்ப்பத்திலும், பெண்களுடன் ஏகாந்தமாய் இருக்கும்போதும் பொய் சொல்வதும், சத்தியம் செய்வதும், பாபமாகாது" என்று கூற, நம்பாடுவான்,"நான் செய்து கொடுத்த சத்தியத்தை ஒரு போதும் மீறமாட்டேன்" என்று கூறி, வாக்களித்தபடி பிரம்ம ராக்ஷஸனிடம் சென்று என்னை உண்டு உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறினான். நம்பாடுவானைப் பார்த்த பிரம்ம ராக்ஷஸ், "இப்போது எனக்குப் பசியே இல்லை. நான் என் மனதை மாற்றிக்கொண்டுவிட்டேன். நீ விரதத்தால் பெற்ற பலனை எனக்குக் கொடு என்று கேட்க, நம்பாடுவான் மறுத்தான். இன்றைய தினம் உனக்குக் கிடைத்த விரதப் பலனில் பாதியையாவது எனக்குக் கொடுத்தால் நான் சாபவிமோசனம் பெற்று சுய உருவைப் பெறுவேன்'' என்றது. நம்பாடுவான், "உனக்கு ஏன் இந்த பிரம்ம ராட்சச உருவம் வந்தது? என்று கேட்க, பிரம்ம ராக்ஷஸன் தனது கதையைக் கூறினான். "நான் முற்பிறவியில் யோகசர்மா என்ற அந்தணன். யாகத்தை இழிவாகக் கருதிய நான், ஒரு யக்ஞத்தைத் தவறாகச் செய்து கொடுத்தேன். யாகத்தின் நடுவில் இறந்தேன். அதனால் , இவ்வாறு அலைகிறேன்” என்றது. மேலும், உனது தரிசனத்தால் எனக்கு முன் ஜன்ம ஞாபகம் உண்டானது என்றும் கூறியது.

நம்பாடுவான், கைசிகப் பண்ணினால் பகவானைப் பாடிய தன் புண்ணிய பலனில் பாதியை கைசிக துவாதசியன்று பிரம்மராட்சஸனுக்கு தத்தம் செய்துகொடுக்க, அந்த பிரம்ம ராட்சதனின் சாபம் நீங்கியது. நம்பாடுவானும் பலகாலம் பெருமாளை போற்றிப் பாடி மோக்ஷத்தை அடைந்தான்.

இந்த வரலாற்றை வராகமூர்த்தியே தன் மடியிலிருந்த பிராட்டிக்கு உரைத்ததாக புராணம் கூறுகிறது. இன்றும், இந்தப் புராணம் திருக்குறுங்குடியில் நாடக ரூபமாக கைசிக ஏகாதசியன்று இரவு நடக்கின்றது. இதில் நம்பாடுவான், பிரம்ம ராட்சசன், நம்பிக் கிழவன் ஆகிய மூன்று பாத்திரங்களில் நடிப்பவர்கள் 10 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கிறார்கள். ஒவ்வொரு கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் கைசிக புராணம் இன்றும் வாசிக்கப்படுகிறது.

இந்த வரலாற்றை கைசிக ஏகாதசி தினமான இன்று (22-11-2015 ) படித்தாலும் கேட்டாலும் முன்னோர் சாபமும், துன்பங்களும் அகலும். பெருமாள் அருளும் புண்ணியமும் கிடைக்கும். நாமும் இந்த வரலாற்றைப் படித்து, திருக்குறுங்குடி நம்பியின் அனுக்ரஹத்தைப் பெறுவோமாக!

நம்பாடுவானுக்காக நகர்ந்த த்வஜஸ்தம்பம் : 

நம்பாடுவான் பிரம்மராக்ஷஸுக்கு சத்தியம் செய்து கொடுத்தபோது 18 வகை பாவங்களைக் குறிப்பிடுகிறான். அவற்றை வராக புராணத்திலே காணலாம். அவையாவன:

1. சத்தியம் தவறுதல்

2. பிறன் மனைவியிடம் இணைதல்.

3. தன்னுடன் உணவருந்துபவர்களிடம் ஏற்றத் தாழ்வுகளைக் காட்டி, தனக்கு சிறந்ததையும், உடன் உண்பவருக்கு அற்பமானதையும் அளித்தல்.

4. பிறருக்கு தானம் செய்த பொருளை திரும்பப்பெறுதல்.

5. அழகுள்ள பெண்ணை இளமையில் மணந்து, அனுபவித்து, வயதான காலத்தில் குற்றம் கூறி அவளைக் கைவிடுதல்.

6. அமாவாசையன்று மனைவியிடம் சுகம் அனுபவித்தல்.

7. உணவு கொடுத்து பசியாற்றியவனை நிந்தித்தல்.

8. ஒருவனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்து தருவதாக வாக்களித்து விட்டு, அவ்வாறு செய்யாமல் ஏமாற்றுதல்.

9. சஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தி நாட்களில் ஸ்நானம் செய்யாமல் உண்ணுதல்.

10. தானம் தருவதாக வாக்களித்து, பின் தானம் செய்யாதிருத்தல்.

11. நண்பன் மனைவிமீது இச்சை கொள்ளுதல்.

12. குரு பத்தினி, மன்னன் மனைவி மீது காமம் கொள்ளுதல்.

13. இரண்டு மனைவியரை மணந்து, ஒருத்தியிடம் ஆசையும் இன்னொருத்தியை அலட்சியமாகத் தள்ளி வைத்தல்.

14. கற்புக்கரசியான தன் பத்தினியை யௌவனத்திலேயே புறக்கணித்தல்.

15. தாகத்துடன் வரும் பசுவைத் தண்ணீர் குடிக்க விடாமல் தடுத்தல்.

16. பிரம்மஹத்தி செய்தவன், பஞ்ச மகாபாவங்கள் செய்பவன் பெறும் பாபம்.

17. வாசுதேவனைவிட்டு இதர தெய்வங்களை ,தேவதைகளை உபாசனை செய்தல்.

18. ஸ்ரீமன் நாராயணனோடு மற்ற தெய்வங்களையும் மற்ற தேவதைகளையும் சமமாக நினைத்தல்.

மேற்கண்ட பாவங்களைச் செய்தவனுக்கு கிட்டும் பாவமும், தண்டனையும் , செய்த சத்தியத்தை மீறினால் என்னை வந்துசேரட்டும் என்கிறான் நம்பாடுவான்.

Monday, February 9, 2015

கண்ணன் கதைகள் (59) - குருவாயூரப்பனும் குந்துமணியும்

கண்ணன் கதைகள் (59) - குருவாயூரப்பனும் குந்துமணியும்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
குண்டுமணி சிவப்பு, கறுப்பு நிறங்களில் சிறிய உருண்டை வடிவில் இருக்கும். கேரளாவில் அநேகமாக அனைவரது இல்லங்களிலும் இந்த மரம் இருக்கும். மஞ்சாடி என்ற மரத்தில் இருந்து வரும் விதை என்பதால் இதை கேரளாவில் "மஞ்சாடிக்குரு" என்று சொல்வார்கள். நாங்கள் கோவையில் இருந்தபொழுது, சின்ன வயதில், பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு தினம் சென்று அங்கு இருக்கும் குண்டுமணிகளைப் பொறுக்கி வீட்டிற்கு எடுத்து வருவோம். பிறகு அதை நன்கு கழுவி "பல்லாங்குழி" விளையாட உபயோகப்படுத்துவோம். சென்ற வருடம் கூட கேரளாவில் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தபொழுது நிறைய குண்டுமணிகளைப் பொறுக்கி வந்தோம். "

குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

நாங்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் வேண்டிக்கொண்டு வீட்டிலேயே ஒரு சின்னப் பெட்டியில், 7 மிளகு, கொஞ்சம் கடுகு, 7 குந்துமணி, ஒண்ணேகால் ரூபாய் எடுத்து வைத்து, குருவாயூர் செல்லும்போது அதை அங்கு சமர்ப்பிப்பது வழக்கம்.

அது சரி. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்? இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும், அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.

அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து, நன்கு அலம்பி, துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். வசதி படைத்தவள் அல்லவே ! அதனால் நடந்தே செல்லத்தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள். ஸ்ரமமாக இருப்பினும் "கண்ணனைக்காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே" என்று தொடர்ந்து பயணம் செய்தாள்.

ஒரு மண்டலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள். கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலைஅடைந்த சமயம், கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன், அவன் பக்தியை வெளிப்படுத்த, கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள், அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி, தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம், கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் " என்ன ஆயிற்று?" என்று பதறினர். கோவில்பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே ப்ரஸ்னம் கேட்டனர்.

அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து " நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்திவிட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்குவேண்டும்" என்று அசரீரி கேட்டது. கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை, அனைவரும் பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை கல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் அதை அப்பனிடம் சமர்ப்பித்ததும், யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது .

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.

Sunday, February 8, 2015

கண்ணன் கதைகள் (58) - குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்

கண்ணன் கதைகள் (58) - குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்தமிழ் வருடப்பிறப்பு / விஷு / கொன்னப்பூ, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
கண்ணன் கதைகள் (58) - குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்தமிழ் வருடப்பிறப்பு / விஷு / கொன்னப்பூ, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
சிறு வயதில், எனது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், விஷு கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. முதல் நாள் இரவே, பூஜைக்கு உரிய வெற்றிலை, பாக்கு, வெள்ளரி, காசு, கண்ணாடி, உருளி, நாராயணீயம். கொன்னப்பூ, அரிசி முதலியவற்றை எடுத்து வைப்பார்கள். என்னையும் "கைநீட்டம்" பெற வரச்சொல்லுவார்கள். நான் காலையில் "கைநீட்டம்" பெற சந்தோஷமாகப்போவேன். குருவாயூரப்பன் மீது எனக்கு 'மாளாக்காதல்' உண்டாக எனது பாட்டியும், அவரது தோழியான ஒரு மாமியும் சொன்ன கதைகளே முக்கிய காரணம்.  'லாலு' என்று நான் அன்புடன் அழைக்கும் அந்த மாமி,  சிறு வயதில் எனக்குச் சொன்ன கதை இப்போது ஞாபகம் வருகிறது. கதைக்குச் செல்வோமா?

கேரளத்தில் ஒரு சிறு பாலகன் இருந்தான். அவன் தினமும் குருவாயூரப்பனை தரிசனம் செய்யக் கோவிலுக்குப் போவான். அவனுக்கு ஸ்ரீ குருவாயூரப்பனை நேரிலே பார்க்க மிகவும் ஆசை. ஒரு நாள், கண்ணனை எப்படியும் பார்த்தே தீருவது என்று முடிவு செய்து, கண்ணனிடம் பிரார்த்தித்தான். கண்ணனோ வரவில்லை. கண்ணா வா என்றான் . நான் உன்னை நேரிலே பார்க்க வேண்டும் என்றான். நீ வராவிட்டால் நான் இங்கேயே இருப்பேன் என்று கூறி கோவிலிலேயே உட்கார்ந்து விட்டான். நடையும் அடைத்தாயிற்று.

கண்ணன் வரவில்லை. அழுதான். அரற்றினான். குழந்தையல்லவா? அவன் அழுவது கண்ணனுக்கு பொறுக்கவில்லை. வந்தான். எப்படி? மயில் பீலி, பட்டு, பீதாம்பரம் உடுத்திக்கொண்டு, குழலூதிக்கொண்டுவந்தான். குழந்தையுடன் விளையாடினான். சிறுவனுக்கு ஒரே சந்தோஷம். கண்ணனோ தன்னுடைய அரைஞாணை அவனுக்கு அளித்தான்.

சிறுவன் சந்தோஷமாக வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் நான் கண்ணனுடன் விளையாடினேன் என்றான். அம்மாவோ நம்பவில்லை. இங்கே பார் "கண்ணன் தன்னுடைய கிண்கிணியை எனக்கு கொடுத்தான் பார்" என்றான்.
கோவிலிலும் அரைஞாணைக் காணாததால் அனைவரும் சிறுவன் அதைத் திருடியதாக நினைத்தார்கள். அம்மா திட்டினாள். அதைப்பிடுங்கி வீசினாள். அது பக்கத்தில் இருந்த கொன்றை மரத்தின்மேல் சிக்கிக்கொண்டது. உடனே, அந்த மரம் முழுவதும் தங்க நிறத்தில் கிண்கிணியைப்போன்ற பூக்கள் பூத்துக்குலுங்கின. அப்பொழுது, "உன் மகனுடன் நான் விளையாடியது நிஜம்" என்று அசரீரி வாக்கு கேட்டது. அது முதல் "கொன்னப்பூ" பூஜைக்கு மிகவும் உகந்ததாகப் போற்றப்பட்டது. இப்பொழுது மேலே உள்ள படத்தில் குருவாயூரப்பனின் அரைஞாணும் கொன்னப்பூவின் மொக்குகளும் ஒரே மாதிரி இருப்பது போல் தெரிகிறதா?

Saturday, February 7, 2015

கண்ணன் கதைகள் (57) - ருக்மிணி கல்யாணம்

கண்ணன் கதைகள் (57) - ருக்மிணி கல்யாணம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

கிருஷ்ணர் துவாரகையை அடைந்தார். விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டதும், தேவர்கள் அளித்த ஐஸ்வர்யங்களை உடையதும், கடலின் நடுவே உள்ளதுமான அந்தப் புதிய துவாரகா நகரமானது, அவருடைய தேக காந்தியால் மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் விளங்கியது. பிரமனின் ஆக்ஞைப்படி, ரேவத நாட்டு அரசன், தன் பெண்ணான ரேவதியை, பலராமனுக்கு மணம் செய்து கொடுத்தான். கிருஷ்ணர், யாதவர்களோடு சேர்ந்து அந்தத் திருமணத்தில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விதர்ப்ப நாட்டு அரசனின் பெண்ணான ருக்மிணி, கிருஷ்ணரின் மீது அன்பு கொண்டாள். அவளுடைய அண்ணன் ருக்மி. சேதி நாட்டு அரசன் சிசுபாலன் அவனுடைய நெருங்கிய நண்பன். தீய எண்ணம் கொண்ட சிசுபாலனுக்கு, ருக்மிணியை மணம் செய்து கொடுக்க ருக்மி முடிவு செய்தான்.

ருக்மிணி கிருஷ்ணரிடம் வெகுநாட்களாகக் காதல் கொண்டிருந்தாள். தன் விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று அஞ்சினாள். தனக்கு ஏற்பட்ட துன்பத்தை கிருஷ்ணரிடம் தெரிவிக்குமாறு ஒரு அந்தணரை அவரிடம் தூது அனுப்பினாள். அந்த அந்தணர், விரைவாக துவாரகா நகரை அடைந்தார். கிருஷ்ணர் அந்த அந்தணரை வரவேற்று உபசரித்தார். அந்தணரும் மிகுந்த சந்தோஷமடைந்தார். அவர், “கிருஷ்ணா! குண்டின தேசத்து இளவரசியான ருக்மிணி தங்களிடத்தில் காதல் கொண்டுள்ளாள். நான் அவளுடைய தூதுவனாக, அவள் அனுப்பிய சேதியோடு இங்கு வந்திருக்கிறேன்” என்று கூறினார். பிறகு,“உலகிற்கெல்லாம் நாயகனே! உம்முடைய குணங்களால் கவரப்பட்டு உம்மையே கணவனாக வரித்துவிட்டேன். தற்போது, சிசுபாலன் என்னை அடைந்து விடுவானோ என்று அஞ்சுகிறேன். கருணைக்கடலே! என்னைக் காக்க வேண்டும்” என்று ருக்மிணி கூறிய சேதியை அந்தணர் கிருஷ்ணரிடம் தெரிவித்தார். “வேறு கதியில்லாத என்னைக் கைவிட்டீரானால் நான் உடனே என் ஜீவனை விட்டுவிடுவேன்” என்று ருக்மிணி கூறியதை அந்தணர் சொன்னதும், கிருஷ்ணருடைய மனத்திலும் மிக்க சஞ்சலம் உண்டானது. கிருஷ்ணர் அந்த அந்தணரிடம், “அவளுடைய வேதனையைக் காட்டிலும் என் மனதில் அதிகமான மன்மத வேதனை ஏற்பட்டுள்ளது. நான் சீக்கிரமாக வந்து, அரசர்களின் முன்னிலையில், கருவிழிகளையுடைய என் பிரியையான ருக்மிணியைக் கரம் பிடிக்கிறேன்” என்று கூறினார்.

பின்னர் கிருஷ்ணர் ரதத்தில் ஏறிக்கொண்டு, அந்தணருடன் சீக்கிரமாகக் குண்டின தேசத்தை அடைந்தார். பலராமன் சேனைகளுடன் பின் தொடர்ந்து வந்தார். அரசனான பீஷ்மகன் அவர்களை வரவேற்று உபசரித்தான். கிருஷ்ணர் வந்த செய்தியைக் கூறிய அந்தணருக்கு, ருக்மிணி மிகுந்த அன்புடன் நமஸ்காரம் செய்தாள். உலகிலேயே அழகான கிருஷ்ணருடைய திருமேனியைக் கண்டும், ருக்மி எடுத்த முடிவைக் கேட்டும், குண்டின தேசத்து மக்கள் துயரமடைந்தார்கள். இரவும் கழிந்தது.

மறுநாள் காலை, ருக்மிணி மங்களகரமான ஆடை ஆபரணங்களுடன், காவலர்கள் சூழ, பார்வதிதேவியை வணங்கக் கோவிலுக்குக் கிளம்பினாள். அவள் மனத்தை கிருஷ்ணரிடத்திலேயே அர்ப்பணித்திருந்தாள். உயர்குலப் பெண்களுடன் பார்வதி தேவியின் ஆலயத்திற்குள் சென்று, நன்கு வழிபாடு செய்து, அவள் பாதங்களில் நமஸ்கரித்தாள். கிருஷ்ணனையே கணவனாக அளிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வேண்டினாள். ருக்மிணியைக் காண வேண்டும் என்ற ஆவலில் பல நாட்டு அரசர்கள் கோவில் வாசலில் கூடியிருந்தார்கள். கிருஷ்ணரும் ருக்மிணியைக் கிரஹிக்க எண்ணம்கொண்டு காத்திருந்தார். அப்போது ருக்மிணி, மிகுந்த அழகுடன் எல்லா திசைகளையும் ஆனந்தமுறச் செய்துகொண்டு, ஆலயத்திலிருந்து வெளியே வந்தாள். அவள் அழகானது உலகையே மயங்கச் செய்வதாய் இருந்தது. அவளது தேககாந்தியால் எல்லா அரசர்களும் மயங்கினர். அவளது கடைக்கண் பார்வையால் கிருஷ்ணரும் மோஹித்தார். சந்திரன் போன்ற முகத்தை உடைய ருக்மிணியை நெருங்கினார். “நிலவைப் போன்ற முகமுடையவளே! எங்கே போகிறாய்?” என்று கேட்டு, நொடிப்பொழுதில் அவள் அருகே சென்று, அவளது நுனிக்கை விரல்களைப் பிடித்து, அவளைக் கைகளினால் அன்புடன் பற்றி, அவளை கிரஹித்தார். மனோவேகத்தில் செல்லும் தன்னுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டார். ருக்மிணியின் மனோரதமும் நிறைவேறியது.

உடனே, அனைத்து திசைகளில் இருந்தும் எதிரிகளின் கூச்சல் அதிகமானது. இந்த இடைச்சிறுவன் எங்கிருந்து வந்தான்? என்று கூடியிருந்த அரசர்கள் கோபமடைந்து போர்புரியத் தொடங்கினார்கள். யாதவர்கள் அவர்களை ஜயித்தார்கள். நாய்க்கூட்டங்களைப் பார்த்த சிங்கம் போல், அந்த அரசர்களைக் கண்ட கிருஷ்ணர் சிறிதும் அசையவில்லை. ருக்மி எதிர்த்துப் போர்புரிய வந்தான். அவனைக் கட்டி இழுத்து, அவன் தலையை மொட்டை அடித்து, மீசையைக் கத்தரித்து அவன் கர்வத்தை அடக்கினார். பலராமனின் வேண்டிக் கொண்டதன்பேரில் அவனை விடுவித்துக் கொல்லாமல் விட்டார்.

பிறகு, மஹாலக்ஷ்மியான ருக்மிணியுடன் துவாரகைக்குச் சென்றார். அனைவரும் அவர்களை வரவேற்றார்கள். துவாரகையில் முறைப்படி கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. துவாரகை நகரம் முழுவதும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்களின் ஒலிகளால் ஸ்வர்க்கம் போன்று விளங்கியது. நகரத்து மக்கள் அனைவரும் கிருஷ்ணரையும், ருக்மிணியையும் காண ஓடோடி வந்தார்கள். உத்தமமான அவர்களுடைய சேர்க்கையைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். கிருஷ்ணருடைய சேர்க்கையால் ருக்மிணி மிகுந்த நாணத்தை அடைந்தாள். புதிய காதல் அனுபவத்தால் மிகுந்த சந்தோஷமடைந்தாள். அவள் முகம் மந்தஹாஸப் புன்னகையுடன் விளங்கியது. கிருஷ்ணர் தனிமையில் ருக்மிணிக்குப் பலவகையில் ஆனந்தமளித்தார். இரவும் பகலும் விளையாட்டுப் பேச்சுக்களால் மகிழச் செய்தார். முன்பை விடப் பலவிதமாய் அரவணைத்து, அவளை சந்தோஷமடையச் செய்தார் . மக்களும் சுபிட்சமாக, பேரானந்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.

Friday, February 6, 2015

கண்ணன் கதைகள் (56) - கோபிகைகளுக்கு உத்தவர் சேதி சொல்லுதல்

கண்ணன் கதைகள் (56) - கோபிகைகளுக்கு உத்தவர் சேதி சொல்லுதல்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

பிறகு கிருஷ்ணர் பலராமனுடன், ஸாந்தீபனி முனிவரிடம் அறுபத்து நான்கு நாட்களிலேயே பல வித்தைகளையும், கல்விகளையும் கற்றார். குருதக்ஷிணையாக, இறந்த அவரது மகனை யமலோகத்திலிருந்து மீட்டு, அவரிடம் கொடுத்தார். பின்னர் மதுரா நகரத்தை அடைந்தார்.

பிருந்தாவனத்தில் கோபிகைகள், கிருஷ்ணரை நினைத்து மிகவும் துயரம் அடைந்தார்கள். அதனை அறிந்த கிருஷ்ணர், அவர்கள் மீது கருணை கொண்டு, தனது நண்பரும், சிறந்த பக்தருமான உத்தவரை அவர்களிடம் சேதி சொல்ல அனுப்பினார். எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் உத்தவருக்குக் காண்பிக்க நினைத்து, அவரை அங்கு அனுப்பினார். உடனே உத்தவர் புறப்பட்டு, கோகுலத்திற்கு மாலையில் சென்றார். கிருஷ்ணனைப் பற்றிய செய்திகளைக் கூறி நந்தகோபரையும், யசோதையையும் சந்தோஷமடையச் செய்தார். நந்தனுடைய வீட்டின் அருகில் தேர் நிற்பதைப் பார்த்த கோகுலத்துப் பெண்கள், உத்தவர் வந்திருப்பதை அறிந்து, எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு நந்தனின் வீட்டை அடைந்தனர். கண்ணனுடைய பல்வேறு செயல்களையும் விளையாட்டுக்களையும் மீண்டும் நினைத்துப் பேச முடியாமல் ஆனார்கள். தடுமாற்றத்துடன் தயங்கிக் கொண்டு உத்தவரிடம் பேச முயன்றார்கள். "உத்தவரே! இரக்கமற்ற அந்தக் கண்ணன், தன் பெற்றோரைப் பார்ப்பதற்காக உங்களை அனுப்பினானா? நகரத்துப் பெண்களால் கவரப்பட்ட அவன் எங்கிருக்கிறான்? நாதனே! காக்க வேண்டும். உமது முத்தங்களையும், தழுவல்களையும், பேச்சுக்களையும், அழகிய விளையாட்டுக்களையும் யாரால் மறக்க முடியும்?" என்று அரற்றினார்கள். இவ்வாறு பலவிதமாய்ப் புலம்பிய கோபிகைகளிடம், உத்தவர் தத்துவங்கள் பொதிந்த கண்ணனின் சேதியைக் கூறி, சமாதானம் செய்தார். அதனைக் கேட்ட கோபியர்கள் மகிழ்ந்தனர். உத்தவர், அவர்களோடு கிருஷ்ணனின் செய்கைகளையும், விளையாட்டுக்களையும் பற்றிப் பேசிக்கொண்டு சில தினங்களை அங்கே கழித்தார். கோகுலத்தில், எப்பொழுதும், எல்லாரும் கிருஷ்ணனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டு வேலைகள் செய்யும்போது கூட, அவருடைய லீலைகளையே பாடிக் கொண்டிருந்தார்கள். தூக்கத்திலும் கிருஷ்ணனைப் பற்றியே பேசினார்கள். அவர்களது செய்கைகள் யாவும் கிருஷ்ணனை அனுசரித்தே இருந்தன. அனைத்து செயல்களும் கிருஷ்ணமயமாக இருந்தது. இதைக் கண்ட உத்தவர் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தார்.

உத்தவர் ராதையிடம், “ராதையே! உன் கிருஷ்ணன் பூக்களைக் கண்டால், இது என் ராதைக்கு மிகவும் பிரியமானது என்பார். நான் பேசினால் ராதையும் இவ்வாறுதான் பேசுவாள் என்றும், நான் பேசாவிட்டால், கோபம் கொண்ட ராதையைப் போல் என் பேசாமல் இருக்கிறாய்? என்றும் என்னைக் கேட்பார்” என்று கூறி, தாமரைக்கண்களுடைய ராதையை ஆனந்தமடையச் செய்தார். “ நான் சீக்கிரமே திரும்பி வருவேன். மிகுந்த கார்யங்களினால் வரமுடியவில்லை. பிரிவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். என்னைப் பற்றிய நினைவுகள் எப்போதும் உங்களுக்கு இருப்பதால் வெகு விரைவில் உங்களுக்கு பிரும்மானந்த சுகம் கிட்டப் போகிறது. அப்போது உங்களுக்கு பிரிவும், சேர்க்கையும் சமமான ஆனந்தத்தை அளிக்கும்” என்று கிருஷ்ணன் கூறியதை, உத்தவர் கோபிகைகளிடம் கூறி சமாதானப் படுத்தினார். இவ்விதமான அன்பையும், பக்தியையும் எந்த உலகிலும் கண்டதில்லை, கேட்டதில்லை. தவம் செய்வதாலோ, வேதங்களைக் கற்பதாலோ என்ன பயன்? கோபிகைகளை நமஸ்கரித்துத் தொழுதாலே போதும் என்று எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் மெய்மறந்து, ஆனந்தத்துடன் கூறிக்கொண்டு உத்தவர் கோகுலத்திலிருந்து மதுரா திரும்பினார்

மதுராவில், ஸைரந்திரி கிருஷ்ணரைப் பற்றியே நினைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் அவருடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். தன் இல்லத்தையும், தன்னையும் நன்கு அலங்கரித்துக் கொண்டு காத்திருந்தாள். கிருஷ்ணன் உத்தவருடன் அவளது இல்லத்திற்குச் சென்றார். அவளது நீண்டநாள் எண்ணம் நிறைவேறியது. அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அவள், கிருஷ்ணனைப் பலவிதமாகப் பூஜித்தாள். கிருஷ்ணன் அவளிடம் வேண்டிய வரம் கேள் என்று கூற, அவளும், பல இரவுகள் கண்ணனோடு கழிக்கும் விஷய சுகத்தையே வரமாக வேண்டினாள். பிறகு, சில இரவுகள் அவளுடன் தங்கி அவளுக்கு ஆனந்தத்தை அளித்து அவளுக்கு உபஶ்லோகன் என்ற புத்திரனையும் அளித்தார். அந்த உபஶ்லோகன், நாரத முனிவரிடம் இருந்து பாஞ்சராத்ர ஆகமத்தை உபதேசம் பெற்று அதில் பிரசித்தனாக விளங்கினான். பின்னர், கிருஷ்ணர் பலராமருடனும், உத்தவரோடும் அக்ரூரரின் வீட்டை அடைந்தார். அவருடைய வரவால் மிகவும் மகிழ்ந்த அக்ரூரர், அவர்கள் அனைவரையும் நன்கு வரவேற்று உபசரித்து, பூஜித்துத் துதித்தார். அவரை நகரத்திற்கு அனுப்பி, குந்தியின் புத்திரர்களான பாண்டவர்கள் காட்டிலிருந்து நகருக்குத் திரும்பி வந்ததைப் பற்றியும், திருதராஷ்ட்ரனின் கெட்ட செயல்களைப் பற்றியும் அறிந்தார்கள்.

ஜராஸந்தன் என்பவன், தன் நண்பனும், மாப்பிள்ளையுமான கம்ஸனின் வதம் பற்றிக் கேள்விப்பட்டு, மிகுந்த கோபம் கொண்டு, மதுராநகரத்தை அழித்தான். சிறிய படையையுடைய கிருஷ்ணர், தேவலோகத்திலிருந்து பலராமனுக்குக் கிடைத்த தேர் முதலியவற்றால், அவனது இருபத்திமூன்று அக்ஷௌஹிணிப் படைகளை முறியடித்தார். பலராமன் ஜராஸந்தனைக் கட்டி வைத்தார். அவனோடு யுத்தம் செய்ய ஆசைகொண்ட கிருஷ்ணன் அவனை விடுவித்தார். ஏனெனில், அனைத்து அரசர்களையும் வென்று, அவர்களது சேனைகளையும் அடைந்த ஜராஸந்தனைப் போன்ற வீரன் அப்போது யாரும் இல்லை. தோல்வியடைந்த ஜராஸந்தன், மற்ற அரசர்களின் உதவியுடன் பதினாறு முறை கண்ணனோடு யுத்தம் செய்தான். அவனது முன்னூற்று தொண்ணூற்று ஒன்று அக்ஷௌஹிணிப் படைகளையும் கிருஷ்ணர் அடித்துக் கொன்றார். அவனுடன் பதினெட்டாவது முறை யுத்தம் ஆரம்பிக்கும்முன், மூன்று கோடி யவனர்களுடன் ஒரு யவனன் படையெடுத்து வருவதை அறிந்த கண்ணன், உடனே, விஸ்வகர்மாவைக் கடலின் நடுவில் ஒரு நகரை உருவாக்கச் சொல்லி, அதில் மக்கள் அனைவரையும் குடியேறச் செய்தார். பிறகு, தாமரை மாலையணிந்து, நகரத்திலிருந்து வெளியே வந்தார். யவனர்களின் தலைவன் பின்தொடர்ந்து வந்தான். உடனே கிருஷ்ணர் ஒரு மலைக்குகையில் மறைந்தார். தொடர்ந்து வந்த யவனன், கிருஷ்ணன் என்று நினைத்து, குகையில் தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் என்ற அரசனைக் காலால் உதைத்தான். விழித்த முசுகுந்தன், அந்த யவனனை, தன் பார்வையால் சாம்பலாக்கினான். அப்போது கிருஷ்ணன், குகையில், பக்தனான முசுகுந்தனுக்கு காட்சி கொடுத்தார். "எனக்கு அரச வாழ்வில் விருப்பம் இல்லை. தங்கள் அனுக்ரஹம் ஒன்றே வேண்டுகிறேன்" என்று முசுகுந்தன் துதித்ததைக் கேட்ட கிருஷ்ணன் மகிழ்ந்து, எல்லா துக்கங்களையும் போக்கும் பக்தியையும், அதன்பின் முக்தியையும் அவனுக்கு வரமாக அளித்தார். வேட்டையாடி உயிரினங்களைக் கொன்ற தோஷம் நீங்க அவனைத் தவம் செய்யச் சொன்னார்.

பிறகு கிருஷ்ணர் மதுராநகரம் சென்றார். யவனன் அழைத்து வந்த சேனைகளை அழித்தார். வழியில், ஜராஸந்தன் தடுத்தான். அவனுக்குக் கடைசியான வெற்றியைக் கொடுத்து, ஓடி ஒளிந்து கொள்வதுபோல் பாவனை செய்து, கடலின் நடுவே உள்ள துவாரகா நகரை அடைந்தார்.