கவிக்கொண்டல் நரசிம்ஹாச்சாரியார் அந்தாதி போன்ற பிரபந்தங்கள் இயற்றுவதில் வல்லவர். அவர் இயற்றிய இந்தப்பதிகம் ( செய்யுள் வடிவம்) பக்ஷிராஜன் பெருமையைப் பற்றிக் கூறும் எளிய செய்யுட்கள் . " மனத்திற் *கவலை மகிழ்ந்தே யகற்ற விரும்பு" , "அகங்கொள் *கவலை யகற்று" என்பதன் பொருள்: *ஒருவர்க்குக் கவலை உண்டாவது கல்வியின்மை, செல்வம் இன்மை, பொருள் இன்மை, மக்கட்பேறின்மை, தன்நோய், சுற்றத்துநோய், தந்த பொருள் வாராமை, வழக்கு முதலியவைகளால் ஆகும் . அவைகளில் எது வந்திடினும் அகற்றாய் என்பதாம். அனைவரும் படித்து பயன் பெறுக. இன்புறுக.
ஸ்ரீ பக்ஷிராஜன் பதிகம்
(காப்பு நேரிசை வெண்பா)
மனதால் நினைக்கவொணா மாவேகம் கொண்டாய்
வினதைதன் மைந்த விமலா - உனதாம்
அரும்புகழைப் பாட அருள்வாயே காப்பாய்
வருவழுக்க ளின்றி வர.
(அவையடக்கம்)
ஆழிநீர் தன்னை அளப்பான் முயலுதல்போல்
தாழ் மதியன் சற்றும் தயங்காமல் - ஏழ்பாரும்
போற்று மிறையா மெழிற்பக்ஷி ராஜன்சீர்
தூற்ற முயன்றேன் துணிந்து.
நூல்
1. சீரார் நறையூர் திகழ்புள் ளதிபதியே
பேரார் சுகமே பெருமா - ஓரா
மனத்திற் *கவலை மகிழ்ந்தே யகற்ற
வினதை சுதனே விரும்பு.
2. வினதை சுதனே விமலா வெளியேன்
மனதிற்குடிகொள் மகிபா- உனதாம்
அருளைத்தருவாய் அமலா புகழ்சேர்
பொருளே கருணை புரிந்து.
3. திருவார் திருமால் திகழ்வா கனமே
ஒருவா ஒளிசேர் உயர்வே -தருவாய்
மனதின் விருப்பை மகிழ்ந்தே விரைவில்
வினதா சுதனே மிக.
4. திருமாலமருந் திகழ்வா கனமே
ஒருமா முதலே உனதாம் - அருளைத்
தருவாயெனக்குத் தயை செய் வினதை
திருமா மகனே தினம்.
5. விககா விமலா மிகு வேகமுளாய்
சுகமே கவலை களிப்பாய் -தகவே
ஒழிப்பாய் எனதுள்ளுறைவாய் மனமே
கொழிக்கக் குதுகலம் யான் கொண்டு.
6. விகங்க அரசே விமலா எனதாம்
அகங்கொள் கவலை அகற்றாய் - மிகவே
தொழுதேன் உனையே துயர் தீர் எனக்கிப்
பொழுதே எனதன்பு பூண்டு.
7. அப்பனே புள்ளின் அரசனே உன்றனக்கே
தப்பாது சென்னிதனைத் தாழ்த்தினேன் - ஒப்பில்
விகங்கம மாலே வினதா சுதனே
அகங்கொள் *கவலை யகற்று.
8. பொற்சிறகார் வேகமிகு புள்ளரசே ஞாலத்தோர்
கற்கின்ற நாமக் ககமாலே - எற்கு
நலந்தருவா யென்றும் நவின்றிடுவேன்
உன்பேர் வலந்தருவாய் என்பக்கல் வந்து.
9. பன்னக வைரி பலமார் சிறைகொண்ட
மின்வேக மேவும் விமலனே - பன்னு
பதத்திரி மாலே பரமா களிக்க
இதத்தினைச் செய்யின் றெனக்கு.
10. வலமார் சிறைகொண்ட மாலே யமுதக்
கலசம் கொணர்ந்த சுகமே - சலசம்
உறைதேவி மார்பன் உவக்கும் ஒருவா
குறை தவிர்ப்பாய் என்துதியைக் கொண்டு.
(நூற்பயன்)
பன்னு பக்ஷிராஜன் துதி பாடுவார் பக்தியுடன்
இன்னிலத்தில் நன்றே இருந்திடுவர்:- மன்னும்
உயர்செல்வம் பெற்றிடுவர் ஓங்குபுகழ் வாய்ந்தே
அயர்வில் அமரருமாவார்.