Saturday, February 29, 2020

கண்ணுக்கினியன கண்டோம்- திரு வடமதுரை (மதுரா) விருந்தாவனம், கோவர்த்தனம் அடங்கியது - பகுதி 2

நாள் 2
பர்ஸானா(Barsana)

காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, 7 மணிக்கு பர்ஸானா கிளம்பினோம்.
இந்தியில் ‘பர்ஸானா’ என்றால் பொழிதல் என்று பொருள். க்ருஷ்ண ரஸம் பொழிவதால் பர்ஸானா என்று பெயர்.  மதுராவிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலும், கோவர்த்தனத்திலிருந்து 19 கி.மீ தொலைவிலும் பர்ஸானா அமைந்துள்ளது. இது பிருந்தாவனத்தின் உபவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ராதாராணியின் தந்தை வ்ருஷபானு. தாயார் ஸ்ரீகீர்த்தி. பர்ஸானா, மன்னர் வ்ருஷபானுவின் தலைநகரமாகும். அதனால் விருஷபானுபுரி என்றும் அழைக்கப்படுகிறது. வ்ருஷபானுவின் பெண்ணான ராதாராணி பிறந்த இடம் ராவல்.  வளர்ந்த இடம் பர்ஸானா. ராவல் என்னும் இடத்திலிருந்து ராதாராணி பர்ஸானாவிற்கு இடம்பெயர்ந்தார். ராதாராணியின் அவதாரம் பற்றி ராவல் செல்லும்போது பார்ப்போம்.

பகவான் கிருஷ்ணர், ஸ்ரீ ராதாராணி மற்றும்  தனது நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்த, லீலைகள் பல செய்த இடம் பர்ஸானா. ராதாராணி தனது தோழிகளுடன் பொழுதுபோக்கிய இடம். பிரம்மகிரி, விஷ்ணுகிரி என்று இரண்டு மலைகள் இங்கு உள்ளது. விருந்தாவன லீலைகலைக் காண விரும்பிய பிரம்மதேவர், பகவான் கிருஷ்ணர், ராதை, மற்றும் கோபியர்களின் பாததூளிகள் தன் மேல் விழவேண்டும் என்பதற்காக பர்ஸானாவிற்கு வந்து மலையாக மாறிக் காத்திருந்தார். பிரம்மகிரி என்ற இந்த மலையின் நான்கு முகடுகள், பிரம்மாவின் நான்கு தலைகளைக் குறிக்கும். பானுகர், விலாஸ்கர், தான்கர் மற்றும் மான்கர் என்று பெயர். பானுகர் என்ற மலையின் மீது வ்ருஷபானு தனது மாளிகையை அமைத்தார். ஆழ்வார்கள், ராதையை நப்பின்னை ரூபத்தில் அனுபவிக்கிறார்கள். ஸ்ரீ ஆண்டாளும்,”கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா” என்று திருப்பாவை 19ம் பாசுரத்தில் பாடுகிறாள்.

 


ராதாராணி வாழ்ந்த இந்த இடத்தில் தற்போது ஒரு கோவில் உள்ளது. மலையின்மேல் அழகான கோவில். இங்கு உள்ள ராதா ராணி கோயில் லடிலால்ஜி அல்லது ஸ்ரீ ஜி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. லட்லி லால் ஜி அல்லது ஸ்ரீ ஜி என்றால் அன்பான ராதா என்று பொருள். ஸ்ரீஜி என்ற ராதாராணி இந்தக் கோயிலில் எப்போதும் எங்கும் நிறைந்திருப்பாள்  என்று நம்பப்படுகிறது. கோயில் மலையில் இருப்பதால், கோயிலை அடைய அழகான படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராதா ராணியின் கடாக்ஷம் பெற ஒருவர் சுமார் 108 படிக்கட்டுகள் ஏற வேண்டும். வயதானவர்கள் அல்லது முடியாதவர்களை அழைத்துச் செல்ல பைக் வசதியும் உண்டு. காரில் கோயிலை அடைய வேறொரு பாதை உள்ளது. லட்லிலால்ஜியை நன்கு தரிசித்தோம். பின்னர் மலைக்கோயிலின் மேலிருந்து பர்சானா கிராமத்தின் அழகையும் ரசித்தோம். அங்கிருந்தே தூரத்தில் 'மயூர் குடிர்' என்ற இடத்தையும் கண்டோம். 
ஸ்ரீ ராதா ராணியுடன் ஹோலி விளையாடுவதற்காக கிருஷ்ணர் பர்சானாவுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இன்று வரை, இங்குள்ள உள்ளூர்வாசிகள் மற்றும்  நந்த்காவின் ஆண்கள், பர்சானாவின் பெண்களுடன் ஹோலி விளையாட வருகிறார்கள். இந்த விழாவைக் காண உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வந்து ஹோலியை இங்கு கொண்டாடுகிறார்கள். ராதாஷ்டமி மற்றும் ஹோலி போன்ற பண்டிகைக் காலங்களில் இந்த விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு அனைவரும் ராதே ராதே என்றே கூறிக் கொண்டிருக்கிறார்கள்! பிச்சை எடுப்பவர்கள் கூட ராதே ராதே என்றுதான் கேட்கிறார்கள்! விரஜபூமியில் பிராணவாயுவிற்கு பதிலாக ராதே ராதே தான் உயிர்மூச்சு!!

பர்சானாவில் லஸ்ஸி(lassi) மிகவும் பிரசித்தம். கீழே இறங்கும்போது அனைவரும் லஸ்ஸி அருந்தினோம். மிகவும் ருசியாக இருந்தது. அங்குள்ள கடைகளில் சில பொருட்களையும் ஞாபகார்த்தமாக வாங்கிக் கொண்டோம்.  

பாவன் ஸரோவர் (Paavan Sarovar)

 
பாவன என்பதற்கு புனிதம் என்றும் ஸரோவர் என்றால் ஏரி என்றும் பொருள். ஆகவே, பாவன ரோவரில் குளிப்பவர்கள், தங்கள் பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என்று நம்பப்படுகிறது. ஸரோவர் மிக அழகாக உள்ளது. ஒரு சிவன் கோவிலும் உள்ளது. கிருஷ்ணர், மாலையில் மேய்ச்சல் நிலங்களிலிருந்து திரும்பும் போது தனது மாடுகளை இங்கு அழைத்து வருவாராம். மாடுகளும் இந்த சரோவரின் குளிர்ந்த நீரைக்குடித்து, தாகத்தைத் தணித்துக் கொள்ளுமாம்.  ஒருமுறை நந்தகோபர், கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி சங்கமத்தில் நீராட வேண்டும் என்பதற்காக பிரயாக்ராஜுக்கு செல்ல விரும்பினார். கிருஷ்ணரோ, அக்ஷய திரிதியையான மறுநாள் பயணம் செய்யுமாறு கூறினார். மறுநாள், நந்தர் அதிகாலையில் எழுந்து, குளிப்பதற்காக பாவன ஸரோவருக்குச் சென்றபோது, ​​ கறுப்பு நிறமுடைய ஒரு  நபரைக் கண்டார், அவர் யார் என்று நந்தர் கேட்க, அவர் தான் பிரயாக்ராஜின் ராஜா என்றும், யாத்ரீகர்கள் தனக்கு விட்டுச்செல்லும் பாவங்களைக் கழுவ, புனிதமான பாவன ஸரோவரில் நீராட வந்திருப்பதாகவும் கூறினார். தன்னுடன் மற்ற ஆறுகள், தீர்த்தங்களும்  வந்திருப்பதாகவும் கூறினார்.  இதைக் கேட்ட நந்தகோபர் ஆச்சரியப்பட்டார். அதனால் பிரயாகராஜ் செல்லாமல், அவர் பாவன ஸரோவரில் குளித்துவிட்டு தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டார். ஸரோவரின் வடக்கு கரையில் பாவனபிஹாரி கோயில் உள்ளது. ஸ்ரீ ராதாராணி தனது சகிகளுடன் இந்த ஸரோவரில் நீர் விளையாட்டுகளை விளையாடி மகிழ்வாளாம். புனிதமான இந்த ஸரோவரில் ப்ரோக்ஷித்துக் கொண்டு நந்தக்ராமம் புறப்பட்டோம்.

நந்தகாவ்(Nandgaon)

 
 


நந்தீஷ்வர மலையைச் சுற்றியுள்ள பகுதி நந்தகிராமம்/ நந்தகாவ் என்று அறியப்படுகிறது. இது பிருந்தாவனத்தின் உபவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நந்த மகாராஜரின் தந்தை (பர்ஜன்யா) முன்பு தனது குடும்பத்தினருடன் வாழ்ந்த இடம். நந்தகோபரும், வ்ருஷபானுவும் நல்ல நண்பர்கள். கோகுலத்தில் உண்டான இடையூறுகள் காரணமாக நந்தகோபர் கோகுலத்திலிருந்து தனது நண்பர் உள்ள இடத்திற்கு அருகே உள்ள நந்தகிராமத்திற்கு இடம்பெயர்ந்தார். இந்த நந்தகாவ் கிராமம் நந்தீஷ்வர் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. கிருஷ்ணர் தனது தோழர்களுடன் இளமைப் பருவத்தில் லீலைகள் நடத்திய இடம். கிருஷ்ணரின் லீலைகலைக் காண விரும்பிய பரமசிவன், பகவானைப் பிரார்த்திக்க,  சிவனின் பிரார்த்தனையில் மகிழ்ந்த கிருஷ்ணர், பிருந்தாவனத்தில் இந்த இடத்தில் மலை வடிவில் தங்கும்படி கூறினார். இவ்வாறு சிவபெருமான் நந்தீஷ்வர மலையின் வடிவத்தை எடுத்து இங்கு நந்தகிராமத்தில், கிருஷ்ணரின் லீலைகளை அனுபவித்து வருகிறார்.

ஒரு காலத்தில் நந்தகோபரின் இல்லம் இருந்த இடத்திலேயே தற்போதைய கோயில் கட்டப்பட்டுள்ளது. மலையின் உச்சியில் இந்த கோயிலை ராஜா ரூப் சிங் கட்டியுள்ளார். இந்த இடம், மிகவும் ரம்மியமாக, அழகாக உள்ளது. நந்தகோபரின் மாளிகையையும், கோயிலுக்குள், கிருஷ்ணரும் பலராமரும் யசோதை மற்றும் நந்தகோபருக்கு அருகே இருப்பதையும் தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

விருந்தா குண்ட்(Vrindakund)/விருந்தாதேவி கோயில் (Vrindhadevi temple)


நந்தகிராமத்திற்கு அருகிலேயே இருக்கிறது இந்த விருந்தா குண்ட். இங்கே விருந்தாதேவி கோயில் உள்ளது.  நாலாபுறமும் பச்சைப்பசேல் என்று இயற்கை எழில் கொஞ்சுகிறது.  





துளசியின் பெருமை அனைவரும் அறிந்ததே. துளசிக்கு பிருந்தா என்று ஒரு பெயர் உண்டு. வ்ருந்தா, வ்ருந்தாதேவி, வ்ருந்தேஸ்வரி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறாள். விருந்தாதேவியின் தங்குமிடமாகும். மனதை மயக்கும் அழகுடன் விருந்தா என்கின்ற துளசிதேவி ஒளிர்கிறாள். ஒரு கிளியைக் கையில் பிடித்துக்கொண்டு வருகை தரும் அனைத்து மக்களிடமும்  புன்னகை பூக்கும் முகத்துடன் தரிசனம் தருகிறாள். விருந்தாதேவியின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே ஒருவர் இந்த பூமியில் நுழைய முடியும் என்றும் தரிசனம் கிடைக்கும் என்றும் சொன்னார்கள். விருந்தாதேவியிடம் எல்லா ஸ்தலங்களிலும் நல்ல தரிசனம் கிடைக்கப் பிரார்த்தித்துக் கொண்டேன். துளசிதேவி  இந்த ஒரே ஒரு கோவிலில் தான் மூர்த்தி வடிவில் வழிபடப்படுகிறாளாம். 


பிருந்தாதேவி  இங்கிருந்து கொண்டுதெய்வீக தம்பதியரான ராதா மற்றும் க்ருஷ்ணருக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறாளாம்.  தனது செல்ல கிளிகளின் உதவியுடன், வ்ரஜ பூமியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பற்றிய தகவல்களை சேகரித்து, அதற்கேற்ப ராதா கிருஷ்ணரின் சந்திப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறாளாம். இங்கே உச்சிகால ஆரத்தியைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தோம். மிக அழகாக, நேர்த்தியாக, பக்தியாக பூஜைகள் செய்யப்படுகிறது. இங்கு பச்சைக் கிளிகள், பல விதமான பறவைகள், அணில்கள் இனிமையாக சத்தமிட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்தக்கிளிகள் விரஜபூமியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் விருந்தாதேவிக்குச் சொல்லுமாம்.
 

இங்கு உள்ள கிளிகள் இளம் பச்சையில் மஞ்சள் நிறம் கலந்த மாதிரி இருக்குமாம். அட! ஆமாம்! செல்லக்கிளியே! Pose குடும்மா! என்று கேட்டுப் பெற்ற இன்பம் 😍😊


 

கோயிலுக்கு முன்னால் விருந்தா குண்ட் மற்றும் கோயிலுக்குப் பின்னால் புனித குப்த குண்ட் உள்ளது. ராதை இருக்கும் இடத்துக்கு அருகிலேயே இருப்பதால், ராதா ஷ்யாம் காலையில் சந்திக்கும் இடமாம். விரஜாவில் குப்த குண்ட், ராதா குண்ட் மற்றும் பிருந்தாவனத்தில் உள்ள ராதா கோவிந்த் கோயில் ஆகிய மூன்றும் யோக பீடங்கள் என்றும், சந்திக்கும் இடங்கள் என்றும் கூறப்படுகிறது. நந்தகாவில் கிருஷ்ணருக்கு காலை உணவு சமைத்தபின், ராதிகா பர்சானாவில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்பும்போது, ​​ முதலில் இங்கு வருகிறாள். மேய்ச்சலுக்காக வந்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரைச் சந்திக்கிறாள், அவர்களின் முதல் சந்திப்பு இந்த குப்த குண்டில்தான். இதனால் இது ஒரு சிறப்பு இடமாக இருக்கிறது. குப்த குண்டில் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இங்கே உள்ள அர்ச்சகர்களிடத்தில் மதிய உணவு தயார் செய்யச் சொல்லி ஏற்பாடு ஆகியிருந்தது. அருமையான உணவு. ஆத்மார்த்தமாக, மிகுந்த அன்புடன் பரிமாறினார்கள். 




அமைதியான, ரம்மியமான சூழல், மனதை மயக்கும் அழகுள்ள இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தில் விருந்தாதேவியின் பிரசாதமான மதிய உணவை முடித்துக் கொண்டு, அந்த இடத்தை விட்டுச் செல்ல மனமின்றி,  தங்குமிடத்திற்குப் புறப்பட்டோம்.

சாயங்காலம் வேறு எங்கும் செல்லாததால், அவரவர்களாகவே, ப்ரேம் மந்திர், இஸ்கான் கிருஷ்ண பலராமர் கோயில் செல்ல உத்தேசித்து, சற்று இளைப்பாறினோம். பின்னர், ஆட்டோவில் ப்ரேம் மந்திர் சென்றோம்.

ப்ரேம் மந்திர்(Prem mandir) 



பிரேம் மந்திர் (அன்பின் கோயில்) பிருந்தாவனத்தில் உள்ள ஒரு இந்து கோயில். கிருபாலு மகாராஜ் அவர்களால் நிறுவப்பட்டது. ஜகத்குரு கிருபாலு பரிஷத் என்ற அறக்கட்டளை பராமரிக்கிறது. பிருந்தாவனத்தின் மிக அழகான மற்றும் நேர்த்தியான கட்டமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


பிருந்தாவனின் புறநகரில் 55 ஏக்கர் பரப்பளவில், பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த பிரேம் மந்திர் வளாகம், முற்றிலும் இத்தாலிய பளிங்குகளால் கட்டப்பட்டுள்ளது. 125 அடி உயரம், இரண்டு அடுக்கில் இந்த வெள்ளை மாளிகை கண்ணைக் கவர்கின்றது. நுழைவாயில் முதல் சுற்றியுள்ள தோட்டங்கள் மற்றும் பிரதான வளாகம் வரை, அழகு கவர்ந்திழுக்கிறது.



விஸ்தாரமான சுற்றுவட்டப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதை பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள், கோவர்த்தன மலையை உயர்த்துவது போன்ற காட்சிகளை சித்தரிக்கின்றன. கோயிலின் வெளிப்புற சுவர்களில் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள் செதுக்கப்பட்டுள்ளது. ஒலி ஒளி நிகழ்ச்சி, பெரிய இசை நீரூற்று, காளிய நடனம் என்று அனைத்துமே மிக அற்புதமாக உள்ளது. இது தவிர, ஸ்ரீ கிருஷ்ண லீலைகள், கிருஷ்ணர் நிகழ்த்திய அற்புதங்கள், ராதாக்ருஷ்ணா மற்றும் சீதாராம் கோயிலுக்குள்ளே படங்களாகக் காணப்படுகின்றன. முதல் தளத்தில் ராதாக்ருஷ்ணா மற்றும் இரண்டாவது தளத்தில் சீதாராம் சன்னதிகள் உள்ளது. சேவித்துக் கொண்டோம்.


 


பிரேம் மந்திர் மிகவும் அழகாக மட்டுமல்ல, கிருஷ்ணரால் போதிக்கப்பட்ட அன்பின் சாரத்தையும் சித்தரிப்பதுபோல் உள்ளது.  கண்களுக்கு ஒரு விருந்து என்றே சொல்லலாம். பல்வேறு வண்ணங்களில் மாறிக்கொண்டே இருக்கும் கோவிலை ரசித்துக் கொண்டே இஸ்கான் கோவிலுக்கு செல்லப் புறப்பட்டோம். 



இஸ்கான் கிருஷ்ண பலராமர் கோயில் (Iskcon Krishna Balarama temple)


 

ஸ்ரீ கிருஷ்ண-பலராம் மந்திர் பிருந்தாவனத்தில் உள்ள ஒரு கௌடியா வைணவ கோயில். இது இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள முக்கிய இஸ்கான் கோயில்களில் ஒன்றாகும். கோயிலின் நடுவே கிருஷ்ணர் மற்றும் பலராமர் சன்னதியும்,  ஒருபுறம் லலிதா மற்றும் விசாகாவுடன் ராதாக்ருஷ்ணர் சன்னதியும் உள்ளது. மற்றொரு சன்னதியில் நித்யானந்தாவுடன் சைதன்யா மகாபிரபு, மற்றும் பக்திவேதந்த சுவாமி பிரபுபாதா மற்றும் அவரது ஆன்மீக ஆசிரியர் பக்திசித்தாந்த சரஸ்வதி தாகுர் ஆகியோரின் மூர்த்திகளும் உள்ளது. பஜனையும் ஆரத்தியும் இங்கே பிரதானம். நன்கு தரிசனம் செய்து கொண்டு, மனநிறைவுடன் தங்குமிடம் திரும்பினோம்.

இரவு உணவு முடித்ததும், அடுத்த நாள் 'கோவர்த்தன பரிக்ரமா' செல்லப் போகிறோம் என்று யாத்திரை இயக்குனர் சொன்னார். மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன் படுக்கச் சென்றோம்.

-யாத்திரை தொடரும்-

Thursday, February 27, 2020

கண்ணுக்கினியன கண்டோம்- திரு வடமதுரை (மதுரா) விருந்தாவனம், கோவர்த்தனம் அடங்கியது -பகுதி 1

மதுரா- ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த இடம். யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்று. 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுரா, வளர்ந்த கோகுலம்(ஆயர்பாடி), மற்றும் விருந்தாவனம், ஆட்சி புரிந்த துவாரகா இம்மூன்று தலங்களையும் சேவிக்கும் பாக்கியம் அண்மையில் கிடைக்கப் பெற்றது. ‘தீர்த்த யாத்ரா(Tirtha Yatra)’  என்ற இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்தும் யாத்திரையில்  அனைத்து இடங்களையும் சென்று சேவித்தோம். விருந்தாவன யாத்திரை செல்வதற்கு முன்னரே துவாரகை சென்று சேவித்திருந்தாலும், கண்ணன் பிறந்த மதுரா மற்றும் வளர்ந்த விருந்தாவனம் சென்ற அனுபவங்களையும், கண்டதையும் கேட்டதையும் முதலில் பகிர்ந்த பிறகு, கிருஷ்ணர் அரசாட்சி செய்த துவாரகை சென்றதைப் பற்றி பதிவு செய்வதே பொருத்தமாக இருக்கும்.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள மதுரா 'கிருஷ்ண ஜென்ம பூமி' எனவும், மதுராவும் அதைச் சுற்றியுள்ள கண்ணன் விளையாடிய, வளர்ந்த விருந்தாவனம் மற்றும் கோவர்த்தனம், ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர்பாடியான கோகுலம் எல்லாம் சேர்ந்து  'வ்ரஜபூமி ' என்றும் அழைக்கப்படுகிறது.  டெல்லி விமான நிலையத்தில் இருந்து காலை 10.30 மணி வாக்கில்  விருந்தாவனம் செல்லத் தயாரானோம். 4 மணி நேரம் ஆகும் என்றதால் கொண்டு வந்திருந்த சிற்றுண்டியை உண்டுவிட்டுக் கிளம்பினோம். 3 மணிக்கு விருந்தாவனத்தை அடைந்தோம். அந்த மண்ணை மிதித்ததுமே, பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இது என்ற உணர்வில் உடல் சிலிர்த்தது. ராதே ராதே என்று வரவேற்றார்கள். விருந்தாவனத்தில், hello, welcome போன்ற சொற்கள் கிடையாது. வரவேற்பு ஆகட்டும், தொலைபேசி, கைபேசியில் ஆகட்டும் எல்லாமே ராதே ராதே தான். சற்று இளைப்பாறிய பிறகு  விருந்தாவன பரிக்ரமா செல்லப் போகிறோம் என்று யாத்திரை இயக்குனர் சொன்னார்.

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீ றிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்ட மான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே!
-நாச்சியார் திருமொழி 

விருந்தாவனம் / வ்ரஜபூமி
வ்ருந்தாவனம், உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. முற்காலத்தில் துளசிச் செடிகள் நிறைந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. சமஸ்கிருத மொழியில் ப்ருந்தா என்றால் துளசி என்றும் வனம் என்றால் காடு என்றும் பொருள். கண்ணன் பிறந்து வளர்ந்த வடமதுரையும், அதற்கடுத்த பகுதிகளான கோகுலம், விருந்தாவனம், கோவர்த்தனம், பர்ஸானா, நந்தகாவ் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகள் வ்ரஜபூமி என்று சொல்லப்படுகிறது. இத்தலங்களைப் பற்றிய வர்ணனை ஸ்ரீமத் பாகவதத்தில் காணப்படுகிறது. எண்ணிலடங்கா மலைகள், கோவில்கள், குளங்கள், வனங்கள், யமுனா நதி போன்றவற்றால் சூழப்பட்ட பகுதி இது.

கிருஷ்ணர் வளர்ந்த விருந்தாவனத்தின் பெருமை அளவிட முடியாதது. இங்கு தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். இடையர்களுடன் விளையாடி மகிழ்ந்தான். இதை வலமாகக் சுற்றி வருவதை‘விருந்தாவன பரிக்ரமா’ அல்லது விரஜ பரிக்ரமா' என்று கூறுகிறார்கள். இதில் சிறிய மற்றும் பெரிய  பாதைகள் உண்டு. இதே  போல,  கோவர்த்தன மலையை வலம் வருவதை கோவர்த்தன பரிக்ரமா என்று சொல்கிறார்கள். இங்கும் வலம் வர பாதைகள் அமைக்கப் பட்டுள்ளது. வல்லபாசார்யர் மற்றும் நிம்பார்க்கர் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த வைணவர்கள், பரிக்ரமா'வை முக்கியமாகக் கருதுகிறார்கள்.  பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்க இரண்டு மாதங்கள் கூட ஆகுமாம். அநேக பக்தர்கள் பல்வேறு விதமாகப் ‘பரிக்ரமா’வில் ஈடுபடுகிறார்கள்.

நாள் 1 
சற்றே இளைப்பாறிய பின்,  ‘விருந்தாவன பரிக்ரமா’ செல்ல ஆயத்தமானோம். குளிராக இருந்ததால், ஸ்வெட்டர், shawl போன்றவற்றை எடுத்துக் கொண்டோம். விருந்தாவனத்தில் குரங்குகள் அதிகம். முடிந்த வரையில் கைகளில் வெளியே தெரியாதவாறு பொருட்களை வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். அதே போல,  மூக்குக் கண்ணாடிகளையும் பறித்துச் சென்று விடுமாம். ஜாக்கிரதையாய் இருக்கச் சொன்னார்கள். கும்பல் அதிகம் இருக்கும் கோயில்களில், நகைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். சிறிய battery ஆட்டோக்களில் ஏறிக் கொண்டோம்.

இந்த ‘விரஜபூமி’யின் பரப்பு 84 கோஸ்(kos), அதாவது 285 கி.மீ. சுற்றளவு கொண்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. விருந்தாவனத்தில் நிறைய வனங்கள் இருந்தாலும்,12 வனங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. அவைகளின் பெயர்கள்
1. மகாவனம்
2. காம்யவனம்
3. மதுவனம்
4. தாளவனம்
5. குமுத வனம்
6. பாண்டிரவனம்
7. பிருந்தாவனம்
8. கதிரவனம்
9. லோஹவனம்
10. பத்ரவனம்
11. பஹுளாவனம்
12. பில்வவனம் என்று யாத்திரை இயக்குனர் கூறியதைக் குறிப்பெடுத்துக் கொண்டேன். 

இந்த பூமியில் 5000 கோவில்களுக்கு மேல் உள்ளனவாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாபன் விருந்தாவனத்தில் பல்வேறு கிருஷ்ணர் கோவில்களை அமைத்தாராம். காலப்போக்கில், அவையாவும் வனத்தினுள் புதைந்தும் போயினவாம். சில நூறு வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் முயற்சியாலும், மற்றும் குறிப்பாக “ஆறு கோஸ்வாமிகளாலும்”  மீண்டும் இக்கோவில்களை அமைத்து, முறைப்படி பூஜையைத் தொடங்கினராம். ஔரங்கசீப் போன்ற முகமதியர்கள் கோயில்களை சேதப்படுத்தியும், கோயில் சொத்துக்களை அபகரித்தும் படையெடுத்த சமயத்தில், பெரியோர்களும், அரசர்களும், விருந்தாவனவாசிகளும் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு, கோயில்களில் உள்ள மூர்த்திகளை வேறு வேறு இடங்களுக்கு எடுத்துச்சென்று மறைத்து வைத்தார்களாம்.

விருந்தாவனத்தில், பகவான் லீலை செய்த இடங்கள் பல உள்ளன.  யாத்திரை அழைத்துச் செல்பவர்கள் முக்கியமான  இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.  நாங்கள் சென்ற இடத்தை பற்றிய, அடியேன், கண்டு, கேட்டு மகிழ்ந்ததை மட்டும் இங்கு பதிவிடுகிறேன்.

முதலில் சென்ற இடம்
காளியா காட் (Kaliya ghat)
ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளில், காளியன் கதை அனைவரும் அறிந்ததே. காளியன் என்ற பாம்பு, கருடனுக்கு வைக்கப்பட்ட பாகங்களைத் தின்று வந்தது. கோபமடைந்த கருடன், தன் இறக்கைகளால் காளியனை அடித்து விரட்டினான். காளியனும் கருடன் வரமுடியாத அந்த காளிந்தி மடுவிற்குச் சென்றது. அந்த மடுவில் காளியன் புகுந்ததும், அதன் விஷமான மூச்சுக் காற்றால் மடுவின் கரையிலுள்ள மரங்கள் கருகின. மடுவிற்கு மேல் வானில் பறக்கும் பறவைகளும் இறந்து விழுந்தன. இடையர்களும், பசுக்களும் அந்த மடுவின் விஷ நீரைப் பருகினார்கள்.  உடனே உயிரிழந்து கீழே விழுந்தார்கள். கண்ணன், அந்தப் பாம்பின் கொடிய செயலைத் தடுக்க முடிவு செய்து, தனது சிவந்த மென்மையான பாதங்களால் மடுவின் கரையில் விஷக்காற்றால் வாடி நின்ற கடம்ப மரத்தின்மீது ஏறி, அந்த மடுவில் குதித்து, அப்பாம்பின் கர்வத்தை அடக்கி,  அதன் படங்களின் மேல் ஏறி நர்த்தனம் செய்தார். இந்த படித்துறையே Kaliya ghat (காளிய காட்). அருகிலேயே 5000 வருடங்கள் பழமையான அந்தக் கடம்ப மரத்தை இன்றும் பார்க்கலாம்.
இயற்கையாகவே அமிர்தகலசம் போன்ற ஒரு பாகம் மரத்தில் உள்ளது. கண்ணனின் சரண கமலங்கள் பட்ட காரணத்தால் இன்றும் இம்மரம் ஜீவித்திருக்கிறது. அடுத்ததாக,

மதன்மோகன் கோயில் (Madanmohan temple) / துவாதச-ஆதித்ய திலா(Dwadashaditya Tila)
குளிர்ந்த யமுனையில் காளியனுடன் நீண்ட நேரம் இருந்ததால், குளிர்ச்சியுற்ற தனது திருமேனிக்கு சிறிது உஷ்ணத்தை விரும்பிய கிருஷ்ணர் அருகிலிருந்த குன்றின் மீது அமர்ந்தார். அப்போது,உலகின் 12 ஆதித்தியர்களும் (சூரியதேவர்களும்) அங்கே ஒன்றுகூடி, பகவான்மீது சூரிய ஒளியைப் பொழிந்ததால், இவ்விடம் துவாதச-ஆதித்ய திலா (பன்னிரண்டு ஆதித்தியர்கள் தோன்றிய குன்று) என்று பெயர் பெற்றது. 

காளியா காட் அருகே அமைந்துள்ள மதன் மோகன் கோயில் பிருந்தாவனத்தில் உள்ள அனைத்து கோஸ்வாமி கோயில்களிலும் பழமையானது. ‘மதன்’ என்றால் காமதேவர்/அன்பு, மோகன் என்றால் வசீகரிப்பவர்,  காமதேவனைக் கூட கவர்ந்திழுக்கக் கூடிய கடவுளுக்கு மதன் மோகன் என்று பெயரிடப்பட்டது. ராதா மதன் மோகன் கோயில் த்வாதாஷாதித்யா மலையில் (த்வாதச ஆதித்ய குன்று) 50 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் புராணக்கதை உள்ளது. காளியனை அடக்கிய  கிருஷ்ணர் யமுனையிலிருந்து வெளியே வந்தபோது, ​​ இந்தக் குன்றில் ஓய்வெடுத்தார். தண்ணீரில் முழுமையாக நனைந்த கிருஷ்ணர் குளிர்ச்சியாக உணர்ந்தார், அப்போது உலகின் பன்னிரண்டு ஆதித்தியர்களும் அங்கு ஒன்றுகூடி, பகவான்மீது சூரிய ஒளியைப் பொழிந்தனர்.இதனால் அம்மலைக்கு த்வாதச ஆதித்ய குன்று/  த்வதாஷாதித்ய திலா/dwadashaditya tila என்ற பெயர் வந்தது. அந்த 12 சூரியதேவர்களின் கடுமையான வெப்பத்தால், கிருஷ்ணரின் உடல் வியர்க்கத் தொடங்கியது, இந்த  வியர்வை நீர் ஒரு சிறிய ஏரியாக  உருவானதாம்.  அருகிலுள்ள இந்த ஏரி, பிரஷ்கண்டனா காட் (Prashkandana Ghat) என்று பெயர் பெற்றது. மூல கோபுரம் ஒன்றும், இரண்டு கோபுரங்கள் அதன் இருபுறமும் உள்ளது, இவை மூன்றும் சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ள இது ஒரு அற்புதமான கட்டிடக்கலையை வெளிப்படுத்துகிறது. இந்தக் கோயிலில் ராதா, கிருஷ்ணர், லலிதா சகி (ஸ்ரீ ராதையின் தோழி) மூர்த்திகளைக் காணலாம்.  சைதன்ய மகாபிரபுவின் சிலையும் உள்ளது.

5000 ஆண்டுகளுக்கு முன்பு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாபர் இந்த கோவிலை முதன்முதலில் பிருந்தாவனத்தில் வேறு சில கோயில்களுடன் நிறுவினார். ஔரங்கசீப்பின் படையெடுப்பின் போது மதன்மோகன், கோவிந்தர், கோபிநாதர் என பல மூலமூர்த்திகள், இராஜஸ்தான் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.  மதன் மோகன் இரகசியமாக ஜெய்ப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பல ஆண்டுகளாக வணங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாங்கே பிஹாரி மந்திர்/ Banke Bihari Mandir
விருந்தாவனில் அதிக மக்கள் கூடும் சன்னதி. ‘பங்கே’ என்றால் வளைந்தவர், ‘பிஹாரி’ என்றால் ரசிப்பவர் என்று பொருள். ‘த்ரிபங்கி ரூபம்’, அதாவது மூன்று இடங்களில் வளைந்திருப்பவர். அதனால்தான் கிருஷ்ணரை 'பாங்கே பிஹாரி' என்று அழைக்கிறார்கள். பங்கே பிஹாரி - காடுகளில் (வன்/பன்-கே)  பிஹாரி அல்லது விஹாரி என்றால் வசிப்பவர், காட்டைச் சுற்றி வசிப்பவர். அதனாலும் பங்கே பிஹாரி என்று கொள்ளலாம்.

இந்த கிருஷ்ணரைக் காணக் கண் கோடி வேண்டும். அப்படியோர் அழகு. 
“கண்டோம்!கண்டோம்!கண்ணுக்கினியன கண்டோம்!”

தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே உருவு
கரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோமே!
-நாச்சியார் திருமொழி

பங்கே பிஹாரியைப் பற்றிய ஒரு நம்பிக்கை உள்ளது.  பங்கே பிஹாரியின் பிரகாசமான கண்கள், நீண்ட நேரம் பார்க்கும் நபரை மயக்கமடையச் செய்யுமாம். அதுவுமல்லாமல், குழந்தையாய்க் கொண்டாடப்படும் கடவுளுக்கு, கண் த்ருஷ்டி பட்டு விடுமாம்.  எனவே சன்னதியில் திரைச்சீலைகள் மற்ற கோயில்களைப் போல திறந்து வைக்கப்படாமல் அடிக்கடி மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படுகிறது.  குழந்தையை எழுப்புவதும், அதிகாலையில் ஆரத்தியின் மணிகளால் அவரைத் தொந்தரவு செய்வதும் முறையற்றது என்று நம்பப்படுவதால் அதிகாலை ஆரத்தியும் இந்த கோவிலில் செய்யப்படுவதில்லையாம். ஜன்மாஷ்டமியில் மட்டுமே அதிகாலை ஆரத்தியாம். அக்ஷய திரிதியை அன்று மட்டுமே யாத்ரீகர்கள் பாங்கே பிஹாரியின் தாமரைப்பாதங்களைப் பார்க்க முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பு பளிங்கினால் ஆன இந்த கிருஷ்ணரின் மூர்த்தியை வைத்திருந்த ஒரு இந்து பூசாரி, முஸ்லீம் படையெடுப்பிற்கு பயந்து,  நிதிவனத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைத்தாராம். சில நாட்களுக்குப் பிறகு, பகவான் க்ருஷ்ணரின் பெரும் பக்தராக இருந்த ஸ்வாமி ஹரிதாஸ் என்பவரின் கனவில் வந்து க்ருஷ்ணர் தான் இருக்கும் இடத்தைச் சொல்ல, அந்த இடத்தைத் தோண்டியவுடன் சிலை கிடைத்ததாம். ஆரம்பத்தில் இந்த பங்கே பிஹாரி மூர்த்தி,  நிதிவனில் சிறிய கோவிலில் இருந்தார். பின்னர் பிஹாரிஜியின் மகிமைக்கு ஏற்றவாறு ஒரு பெரிய கோவிலில் கோஸ்வாமிகளால் கி.பி 1862 இல் கட்டப்பட்ட்டு, அங்கே பிரதிஷ்டை செய்தார்கள். இக்கோயில் நவீன ராஜஸ்தானி பாணியில் கட்டப்பட்டுள்ளது.  

இம்லி தல் (Imli tal)

'இம்லிதலா' கோயில் அங்கு உள்ள புளிய மரத்திற்கு பிரபலமானது. விருந்தாவன பரிக்ரமா மார்க்கத்தில், யமுனையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது கௌடியா மடத்தினரால் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. அமைதியான இடம்.  ஏனெனில் இது ராதா ராணி மற்றும் கிருஷ்ணரின் புனிதமான அன்பைக் குறிக்கும் இடம் என்று நம்பப்படுகிறது. தியானத்திற்கு ஏற்ற இடமாகவும் இருக்கிறது. ஸ்ரீ ராதா ராணி மற்றும் கிருஷ்ணர் சந்நிதி உள்ளது.

புராணங்களின்படி, பகவான் கிருஷ்ணர் கோபிகளுடன் ஷரத் பூர்ணிமா (முழு நிலவு இரவு) அன்று ராஸ நடனத்தை நிகழ்த்தும்போது, ​​ஸ்ரீ ராதா ராணி அங்கிருந்து மறைந்தார். பகவான் கிருஷ்ணர், ராதாவைக் கண்டுபிடிக்க முடியாமல், பிரிவால் வாட்டமுற்றார். இம்லி தலா ராதைக்கு மிகவும் பிடித்த இடம் என்பதை அறிந்த பகவான் கிருஷ்ணர் புளியமரத்தின் அடியில் அமர்ந்து பிரிவாற்றாமையால் ராதையின்  பெயரைச் சொல்லி அரற்றுகிறார். ராதையும் விரைவில் அங்கே தோன்றினாள்.

மேலும், ஒரு முறை ஸ்ரீ ராதாராணி இம்மரத்தைக் கடந்து செல்லும்போது, பழுத்த புளியம்பழம்  ஒன்று அவளது காலில் குத்தியதில், ரத்தம் வந்து விட்டதாம். கோபத்துடன் அவள் புளிய மரத்தை பழுக்கக்கூடாது என்று சபித்தாளாம். அதன் பின்னர், விரஜமண்டலின் 84 கோஸ்(kos) பகுதியிலும் புளியமரம் பழுப்பதில்லையாம்.

இங்கேதான் கிருஷ்ணர் தனது அடுத்த அவதாரம் சைதன்யர் என்று முன்னறிவித்தாராம். சைதன்ய மகாப்ரபு விருந்தாவனத்திற்கு விஜயம் செய்தபோது, ​​அவர் தினமும் இம்லி தலாவுக்கு வந்து புளியமரத்தின் அடியில் அமர்ந்து ஜபம் செய்வாராம்.  இந்த மரத்தின் கீழ் சைதன்யரின் சன்னிதியும் உள்ளது.

ஜாடூ மண்டல் (jhadu mandal)



புகழ்பெற்ற ஸ்ரீ ஜீவா கோஸ்வாமி மற்றும் ஷியாமானந்தாவின் பொழுதுபோக்கு இடம். இந்த இடத்தைப் பெருக்கித் துடைக்கும் சேவையை ஷியாமானந்தாவுக்கு ஜீவா கோஸ்வாமி வழங்கியிருந்தார். அதனால் இப்பெயர்.

பின்வரும் சம்பவமும் இங்கே நடந்ததாம்.
நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு வயதான பெண்மணி ஜாடூ-மண்டலத்தில் வசித்து வந்தார். அவரது வீட்டில் ஒரு இயந்திரம்(அரைக்கும் கல்)  இருந்தது. மற்றவர்களுக்காக கோதுமையை அரைக்க இந்த கல்லைப் பயன்படுத்தி வந்தாள். அதுவே அவள் வாழ்வாதாரமாகவும் இருந்தது. கிருஷ்ணரிடம் அவளுக்கு அசைக்க முடியாத பக்தி இருந்தது. அழகான குரலில் கிருஷ்ணரின் இனிமையான பெயர்களைப் பாடிக்கொண்டே அரைப்பாள். ஒரு நாள், அந்த இயந்திரம், கோதுமையை அரைத்து கல்லிலிருந்து எடுக்கும்போது ஒரு கர்-கர் சத்தத்தை எழுப்பியது.  விடியற்காலையில் அவள் பாடிக்கொண்டே அரைத்துக்கொண்டிருந்தபோது, ​​ ஒரு அழகான கறுத்த நிறமுள்ள ஒரு சிறுவன் தோன்றி அரைக்கல்லில் தன் காலை வைத்தான். "பாட்டி, ஏன் கர்-கர்  சத்ததுடன் அரைக்கிறாய்? இதன் சத்தத்தால் என்னால் தூங்க முடியவில்லை” என்று சொன்னான். கிழவி சற்றே பயந்து, “என் அன்பு மகனே, நான் அரைக்கும் கல் வேலை செய்யாவிட்டால், நான் எப்படி என் வாழ்க்கையை பராமரிப்பேன்?” என்று கேட்க, அழகான அந்த சிறுவன், “நான் என் கால்தடத்தை உங்கள் அரைக்கும் கல்லில் வைப்பேன் . இந்த காலடித் தடத்தைத் தரிசனம் செய்து தாராளமாக காணிக்கை கொடுக்க மக்கள் வருவார்கள். அவர்களின் காணிக்கைகள் உனக்கு உதவும். எனவே, நீங்கள் இனி அரைக்கும் கல்லைப் பயன்படுத்தத் தேவையில்லை” என்று கூறினான்.    இதைச் சொல்லி, இருண்ட நிறமுடைய அச்சிறுவன் மறைந்துவிட்டான். காலையில், ​​அந்தப் பெண்மணி சிறுவனின் தடம் அவளது அரைகல்லில் பதிந்திருப்பதைக் கண்டார். ஒரு கூட்டம் வரிசையாக நின்று, கால்தடத்தின் தரிசனத்தைக் காண விரும்பியது. இந்த கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதன் மூலம் அப்பெண்மணிக்கு வாழ்வாதாரமும் கிடைத்தது. அவளும், ஸ்ரீ க்ருஷ்ணரைத் தினம் தியானித்துக் கொண்டிருந்தாள்.  

அனைத்து இடங்களிலும் நல்ல தரிசனம். இரவு உணவை முடித்துவிட்டு, பயணத்தின் அசதியினாலும், களைப்பினாலும் உறங்கச் சென்றோம்.

-விருந்தாவன யாத்திரை தொடரும்-