Wednesday, January 4, 2012

ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், சென்னை / கண்ணுக்கினியன கண்டோம்-4



ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்.

இத்திருக்கோயில், வடசென்னையில், முத்தியாலுப்பேட்டையில், பவளக்காரத் தெருவில் உள்ளது.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில். திருமழிசையாழ்வாரின் அபிமான ஸ்தலம் என்று சொல்லப்படுகிறது.


மூலவர் - ருக்மிணி பாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபாலன்.
புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, மிக அழகாய் காட்சி தருகிறார்.

தனி ஸன்னிதியில் ராமர், ஸ்ரீனிவாசர், ஆண்டாள், ஸுதர்சனர், ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்கின்றனர். உற்சவ மூர்த்திகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு.

திருமழிசையாழ்வார், இங்கு சில காலம் தங்கி, பெருமாளை மங்களாஶாஸனம் செய்திருக்கிறாராம். திருமழிசையாழ்வாரின் திருவுருவம், சில பாதுகாப்புக் காரணங்களுக்காக சில காலம் இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்தது என்றும் சொல்கிறார்கள். இன்றளவும் இத்திருக்கோயிலில் திருமழிசையாழ்வாரின் "வாழித்திருநாமம்' தினசரி சாற்றுமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் 
"ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் பகல்பத்து, ராப்பத்து உற்சவங்களும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. அலங்காரங்கள் மிக நேர்த்தியாய் செய்யப்பட்டு, உற்சவங்கள் கண்டருளும் பெருமாளைக் காணக் கண் கோடி வேண்டும். ராப்பத்து உற்சவத்தில் ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் மிகவும் அழகு.




இக்கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ளது. தற்சமயம், இத் திருக்கோயிலைச் சீரமைப்பதற்கான திருப்பணிகள் நடந்து வருகின்றன. பெருமாள், புனர் நிர்மாணப் பணிகளுக்காக பாலாலயத்தில் இருக்கிறார். இத்திருப்பணி, விரைவாக முடிந்து, ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற வேணுகோபாலனையே வேண்டி நம்மால் முடிந்த உதவியையும் செய்வோமே!