Tuesday, January 12, 2016

கூடாரவல்லி

கூடாரவல்லி

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் -27வது திருப்பாவை.
-
"கூடாரை வெல்லும்" என்பது "கூடாரவல்லி" என்ற வார்த்தையாக மருவியது. மார்கழி 27ம் நாள் பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் அகங்களிலும் 'கூடாரவல்லி' கொண்டாடப்படும். அக்கார அடிசில் மற்றும் சர்க்கரைப் பொங்கல் செய்து, நிறைய நெய் மிதக்கும்படியாக விட்டு, பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணுவார்கள்.

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! கூடார் என்பதற்கு எதிரிகள் என்பதைவிட 'நம்மோடு ஒன்றாமல் இருப்பவர்கள்', கூடாதவர்கள் அதாவது, விலகி இருப்பவர்களையும், நண்பராக இருக்க விரும்பாதவரையும் உனது அன்பால் வெல்லும் பெருமை உடைய கோவிந்தா! என்பதாக அர்த்தம். உன்னைப் பாடி அருள் பெற வந்தோம். அவனைப் பாடி, பறை என்னும் நோன்பின் பயனை பெற்றதே புகழுடன் கூடிய சன்மானம் என்கிறாள் ஆண்டாள்.

சூடகம் என்றால் கையில் அணியும் வளையல், தோள்வளை 
என்றால் வங்கி, தோடு காதில் அணியும் நகை, செவிப்பூ என்றால் மாட்டல், பாடகம் என்னும் காலில் அணியும் கொலுசு போன்ற நகை, இப்படி பல அணிகலன்களை அணிந்து கொண்டு, மார்கழி மாத விரதமான பாவை நோன்பின் ஆரம்பத்தில் "வையத்து வாழ்வீற்காள்" என்ற பாசுரத்தில் சொன்னபடி நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது விரத முடிவில் கண்ணனை அடையும் மகிழ்ச்சியில் இவற்றை உண்கிறார்கள். ஆடையுடுப்போம் என்றால், முன் ஆடை அணிந்ததில்லை என்று அர்த்தமாகாது. விரத ஆரம்பத்தில் புதிய ஆடைகளையும், ஆடம்பரமான ஆடைகளையும் துறந்த ஆயர் குலப் பெண்கள், இப்போது விரத முடிவில் ஆடம்பரமான ஆடைகளையும் புத்தாடைகளையும் அணிந்து கண்ணனை அடைந்தனர் என்று பொருள்.

பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், பாலிலேயே சமைத்த க்ஷீரான்னம் அதாவது பால்சோறு, நெய்யிலே சோற்றைத் தேடும்படியாக நெய் விட்டு, கையில் எடுக்கும்போது முழங்கை வழியே நெய் வழியுமாறு கூடியிருந்து குளிர்ந்து, அதாவது,கூட்டமாக அமர்ந்து, அனைவரும் கூடி அமர்ந்து,கூடியிருப்பதே மகிழ்ச்சிதானே விலகி இருந்தவர்கள் சேர்ந்துவிட்டதால் கிடைத்த மகிழ்ச்சி மற்றும் உன்னுடன் அமர்ந்து மனம் குளிர உண்டு பிரும்மானந்தத்தை அனுபவிக்க வேண்டும் என வேண்டுகிறார்கள்.

பகவானுக்காகவே இந்த சரீரம் என்பதைப் புரிய வைக்கிறது இந்தப் பாசுரம்.