Friday, May 6, 2016

திருமெய்யம் ஸத்யகிரிநாதப் பெருமாள் / திருமெய்யம் ஸத்யமூர்த்திப் பெருமாள் / கண்ணுக்கினியன கண்டோம்-10

108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், பாண்டியநாடு திவ்யதேசம்,

திருமெய்யம் - ஸத்யகிரிநாதப் பெருமாள்

“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்,
கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானை, கைதொழாக் கையல்ல கண்டாமே.” –திருமங்கையாழ்வார்
(பெரிய திருமொழி, 2016, 11-7-5)

திவ்யதேசம்: திருமெய்யம்
மூலவர்: ஸத்யகிரிநாதன் (ஸத்யமூர்த்தி), நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம் ; குடவரைக் கோயிலில் அனந்த சயனத்தில் பள்ளி கொண்ட பெருமாள்,தெற்கே திருமுக மண்டலம்
உற்சவர்:  அழகிய மெய்யர்
தாயார்: உஜ்ஜீவனத் தாயார், உய்யவந்த நாச்சியார் (தனி சன்னதி)         
விமானம்: ஸத்யகிரி விமானம்
தலவிருக்ஷம்: ஆல மரம்  
தீர்த்தம்: ஸத்ய தீர்த்தம், கதம்ப புஷ்கரிணி
பிரத்யக்ஷம் / திருக்காட்சி: ஸத்யமுனி, ஸத்யதேவதைகள், ஆதிசேஷன், சந்திரன், கருடன், புரூரவன், தக்ஷகன்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்-1090,1206,1524,1660,1760,1852, 2016, 20502674 (126)
பழமை: பல்லவர் காலத்து குடவரைக் கோயில்
உற்சவங்கள்/ திருவிழா:  வைகாசி பிரம்மோற்சவம் , ஆடிப்பூரத் திருவிழா, பவித்ரோத்சவம், ஜேஷ்டாபிஷேகம், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஆண்டாள் திருக்கல்யாணம் முதலியவை.
பிரார்த்தனை: குழந்தையற்றவர்கள் தாயாரை வேண்டி குழந்தைப்பேறு பெறுகின்றனர். திருமண தோஷம், நோய், பேய் பிசாசு பிரச்னை, மனநோய் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

திருமெய்யம். புதுக்கோட்டை - காரைக்குடி வழியில் அமைந்துள்ள திவ்யதேசம். திருமெய்யம் என்னும் இத்திவ்யதேசம், தற்போது திருமயம் என்று அழைக்கப்படுகிறது. திருமெய்யம் கோட்டைக்குள் அமைந்துள்ளது. ஸத்யக்ஷேத்ரம். ஏழு ஸத்யப் பெருமைகளான ஸத்யமூர்த்தி, ஸத்யகிரி விமானம், ஸத்யக்ஷேத்ரம், ஸத்யபுரம், ஸத்யகிரி, ஸத்ய தீர்த்தம், ஸத்யவனம், ஆகிய மகிமைகளைக் கொண்டது.

இத்தலத்துப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் ஸத்யமூர்த்திப் பெருமாளாகவும், கிடந்த திருக்கோலத்தில் திருமெய்யராகவும் ஸேவை சாதிக்கிறார். ஸத்யமூர்த்திப் பெருமாள், ஒரு கரத்தில் பிரயோக சக்ரத்துடனும், மற்றொரு கரத்தில் சங்குடனும் ஸேவை சாதிக்கிறார். பெருமாளின் ஒரு புறங்களிலும் கருடனும், ஸத்யரிஷியும், ஸத்ய மகரிஷியின் மனைவியும் இருக்கின்றனர்.

உஜ்ஜீவனத் தாயார் தனி சன்னதி. தாயாரை வேண்டினால் மாங்கல்யப் பேறு, குழந்தைப்பேறு உறுதி. நோய் நிவாரணம் கிட்டும். மனநலம் சரியில்லாதவர்களுக்கு மனநோய் நீங்கும். பேய், பிசாசு போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபடுவர் என்பது நம்பிக்கை.

குடவரைக் கோயிலில் உள்ள திருமெய்யர், மிகப் பெரிய திருமேனியுடன் (30
அடி) , ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விடப் பெரிய திருமேனியுடன் யோக ஸயனக் கோலத்தில், விஷக் காற்றைக் கக்கும் ஐந்து தலை ஆதிசேஷன் மேல், பள்ளிகொண்ட பெருமாளாக ஸேவை சாதிக்கிறார். பாறையிலேயே செதுக்கப்பட்ட திருமேனி. திருமார்பில் திருமகள், நாபியிலிருந்து பிரம்மா, சகல தேவர்களும் பின்சுவற்றிலும், திருவடியில் பூமாதேவியும், கருடன், தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திர சூர்யர்கள்,  மார்க்கண்டேயன், மது கைடபர் இரு புறங்களிலும், பெருமாளைச் சூழ்ந்து கைதொழுது நிற்கின்றனர்.  ஆதிசேஷன் இத்தலத்தைப் பாதுகாப்பதாக ஐதீகம். ஆதிசேஷனுடைய பாதுகாப்பில் இருந்த பெருமாளை அசுரர்கள் தூக்க வந்ததாகவும், யோக ஸயனத்தில் இருந்த பெருமாளின் நித்திரையைக் கலைக்க மனமில்லாத ஆதிசேஷன், விஷக்காற்றை விட்டு அசுரர்களை அழித்ததாகவும் ஸ்தல புராணம். சூலக் குறிகளால் ஆதிசேஷனின் அக்கினி ஜ்வாலைகள் போல் செதுக்கப்பட்டு,  ஸ்தலபுராணக் கதையை அப்படியே சித்தரித்துக் காட்டுவது போல இந்தக் குடவரைக் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய ஸயனப் பெருமாள் இவர் என்று கூறப்படுகிறது. ஆதிசேஷன் ஸர்வஞானமும் பிரார்த்தித்து கிடைக்கப் பெற்றதால்அஞ்ஞான இருள் நீக்கி மோக்ஷம் தரும் க்ஷேத்ரம்.

இத்தலத்து புஷ்கரிணியான ஸத்யதீர்த்தம், எண்கோண வடிவில் எட்டுத்துறைகளுடன் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், பாண்டியநாடு திவ்யதேசம்,

விஷ்வக்ஸேனர், ஆண்டாள், நவநீதக்ருஷ்ணர், ராமர், அனுமார், சக்கரத்தாழ்வார், லக்ஷ்மி நரசிம்ஹர், ஆழ்வார்கள் சன்னதிகளும் உள்ளன.

கோயிலின் உள்ளே இருக்கும் மண்டபங்களிலும் தூண்களிலும்  அழகிய கலைநுணுக்கங்களுடன் கூடிய  சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், பாண்டியநாடு திவ்யதேசம்,

ராஜகோபுரம், செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டிருக்கின்றது. கோபுரத்தில் சிலைகள் ஏதுமில்லை. பல்லவர் காலத்துக் குடவரைக் கோயில் என்பதால் வரலாற்று சிறப்பு மிக்கது.

108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், பாண்டியநாடு திவ்யதேசம்,108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், பாண்டியநாடு திவ்யதேசம்,

இந்தக் கோவிலின் அருகிலேயே மற்றொரு குடவரைக் கோயிலான அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் சிவாலயமும் உள்ளது.  பல்லவர் காலத்தில்  சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இரு கோவில்களும்  அமைந்துள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்: 7AM–12PM; 4:30–7PM

பேருந்து: புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மதுரை மற்றும் எல்லா இடங்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.
ரயில் நிலையம்: திருமயம்
விமான நிலையம்மதுரை, திருச்சி.

முகவரி:
Sri Sathyamurthy Perumal Temple, Tirumayam-622 507, Pudukkottai district.

No comments:

Post a Comment