பாத்ம புராணத்தில் ஏகாதசி தோன்றிய கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் முரன் என்ற ஒரு அரக்கன், தேவர்களாலும், மும்மூர்த்திகளாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். அசுரன் அபரிமிதமான பலம் வாய்ந்தவனாக இருந்தான். அதனால் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் மிகுந்த தொல்லைகளைக் கொடுத்தான். அவர்கள் திருமாலை சரணடைந்தனர். அவரும், அவர்களைக் காக்கத் திருவுள்ளம் கொண்டு, முரனுடன் சண்டையிட்டார். கடும்போர் நடந்தது. ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனம் வரையில் சண்டை நடக்கும். பிறகு போரை நிறுத்திவிட்டு அடுத்த நாள் போர் தொடரும். இவ்வாறு ஆயிரம் வருடங்கள் சண்டை நடந்தது. திருமால், இதற்கு ஒரு வழி செய்யவேண்டும் என்று தீர்மானித்தார்.
ஒரு நாள் சூரிய அஸ்தமனத்திற்குப் பின், திருமால், பத்ரியில் உள்ள ஒரு குகையில் ஓய்வெடுக்கச் சென்றார். மும்மூர்த்திகளுள் அவரும் ஒருவராதலால் .முரனைக் கொல்ல முடியாது. அதே சமயம், முரன், பெண்ணால் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெறவில்லை.அதனால், தனது திருமேனியிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கினார். பிறகு, தூங்குவது போல் படுத்திருந்தார். முரன், போர் விதிக்குப் புறம்பாக, திருமாலைத் தாக்கும் எண்ணத்துடன் குகைக்கு வந்தான். திருமாலைத் தாக்கக் கையை ஓங்கினான். அப்போது திருமாலால் உருவாக்கப்பட்ட அந்தப் பெண்ணின் "ஹூம்" என்ற மூச்சுக் காற்றில் எரிந்து சாம்பலானான். திருமால் அவளைப் புகழ்ந்தார். மேலும், "என்னுடைய 11 இந்திரியங்களில் இருந்து உருவானதால் உனக்கு 'ஏகாதசி' என்று பெயரிடுகிறேன். நீ தோன்றிய இந்த நாளில், யார் உபவாசம் இருந்து என்னை வழிபடுகிறார்களோ, யார் உன்னைத் துதிக்கிறார்களோ, உன்னுடைய வரலாற்றை யார் கேட்கிறார்களோ, பேசுகிறார்களோ அவர்களுடைய பாபங்களெல்லாம் தொலையும்"என்று வரமளித்தார். மார்கழி மாதம் தேய்பிறையில் தோன்றியதால் இதற்கு 'உற்பத்தி ஏகாதசி' என்று பெயர். இதுவே பாத்ம புராணப்படி 'ஏகாதசி' தோன்றிய கதை.
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி 'வைகுண்ட ஏகாதசி' எனப்படும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ஏகாதசியில் திருமாலை வழிபடுகிறவர்களுக்கு, இம்மையில் அனைத்து செல்வங்களும், மறுமை இல்லாத வைகுந்தப் பேறும் கிடைக்கும்.
ஏகாதசியின் தத்துவம்: ஏகாதசி என்பதற்கு பதினொன்று என்று அர்த்தம். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஒருமைப்படுத்தி, தியானம் செய்வதே ஏகாதசியின் தத்துவமாகும். இவ்வாறு உடலும் உள்ளமும் ஒன்றி, உபவாசம் இருந்து திருமாலை வழிபடுவதை 'ஏகாதசி விரதம்' என்று கூறுவர்.
No comments:
Post a Comment