வசுதேவர் குழந்தைக்குப் பெயர் சூட்ட விரும்பினார். வசுதேவர் வேண்டிக் கொண்டதன் பேரில் கர்க்க முனிவர், நாமகரணம் செய்ய, நந்தனது வீட்டிற்கு வந்தார். சந்தோஷமடைந்த நந்தகோபன், அவரை வரவேற்றுப் பூஜித்தார். யசோதையும், நந்தனும் கர்க்கரை நமஸ்கரித்தார்கள். புன்முறுவலுடன் விழாவிற்கு வேண்டியவற்றைச் செய்யச் சொன்னார். கர்க்கர் நந்தகோபனைப் பார்த்து,"நான் யதுகுலத்தின் குரு. இந்த விழாவை மிகவும் ரகசியமாகச் செய்ய வேண்டும்" என்று கூறினார். ஏனெனில், ஆடம்பரமாகச் செய்தால், கம்ஸனுக்குத் தெரிந்துவிடும் என்பதால் அப்படிச் சொன்னார். நந்தகோபனும் அதற்கு சம்மதித்தார்.
பிறகு கர்க்கர், ரோஹிணியின் குழந்தையை எடுத்து வரச் சொன்னார். அந்தக் குழந்தை, நல்லொழுக்கம் மிகுந்த குழந்தையாக இருந்ததால், 'ராமன்' என்றும், பலசாலியாக இருந்ததால் 'பல' என்பதையும் சேர்த்து, "பலராமன்" என்று பெயரிட்டார். வசுதேவன், நந்தன் ஆகியோரின் இரு குடும்பங்களையும் இணைத்ததால், 'ஸங்கர்ஷணன்' என்றும் பெயரிட்டார்.
பிறகு, யசோதையின் குழந்தையை எடுத்து வரச் சொன்னார். கணக்கிலடங்கா ஆயிரக்கணக்கான பெயர்கள் கொண்ட இவருக்கு எந்த பெயர் சூட்டுவது? என்று கவலையடைந்தார். பிறகு ரகசியமாகப் பெயர் வைத்தார். மங்கலமாகவும், ஆனந்தமாகவும் இருப்பதைச் சொல்வதும், கருமையானதும், உலகத்தின் பாபத்தைப் போக்கும் தன்மை உடையதுமான “கிருஷ்ணன்” என்ற பெயர் வைத்தார். வசுதேவனின் குழந்தை என்பதால், "வாசுதேவன்" முதலிய பெயர்களையும் சூட்டினார். இந்தக் குழந்தைதான் ‘ஸ்ரீஹரி’ என்று சொல்லாமல், ஸ்ரீஹரியின் பெருமையை எடுத்துச் சொன்னார். மேலும் நந்தகோபனிடத்தில், "உன் மகனிடத்தில் பக்தி கொண்டவன் துன்பப்படுவதில்லை. உன் மகனுக்குத் துன்பம் தருபவன் நாசமடைவான்" என்று கிருஷ்ணனின் பெருமையை எடுத்துச் சொன்னார். மேலும், “இவன் அசுரர்களைக் கொல்வான். பந்துக்கள் நல்ல ஸ்தானத்தை அடையும்படி செய்வான். உன் மகனுடைய புகழைக் கேட்டு மகிழ்வீர்கள்” என்று கூறினார். பிறகு கர்க்கர், வெளிப்படையாக இக்குழந்தை ‘ஸ்ரீஹரி’ என்று சொல்லாமல், "இக்குழந்தையின் மூலம் அனைவரும் அனைத்துக் கஷ்டங்களையும் கடக்கப் போகிறீர்கள்" என்று கூறினார்.
பெயர் சூட்டும் விழா இனிதே நிறைவேறியது. அனைவரையும் ஆசீர்வதித்த பின்னர், கர்க்கர் தனது இருப்பிடம் சென்றார். நந்தகோபனும், மற்றவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன், குழந்தை கிருஷ்ணனை சீராட்டினர்.
No comments:
Post a Comment