இஸ்கான். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த இயக்கத்தை நிறுவியவர் ஸ்வாமி ப்ரபுபாதா. ஹரே கிருஷ்ண இயக்கம் என்ற பெயரில் மிகவும் பிரபலம். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சோழிங்கநல்லூரில் உள்ள ‘அக்கரை’ என்னும் இடத்தில் இந்தக் கோயில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
கடல்காற்று நிறைந்த அமைதியான இடத்தில், மிகவும் எழிலாக அடுக்கடுக்கான கோபுரங்களுடன் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. வெள்ளை வெளேரென்று பார்க்க மிகவும் அழகாக இருக்கின்ற இக்கோவிலின் படிகளில் ஏறும்போது இருபுறமும் கல் யானைகள் வரவேற்கின்றது. படி ஏறிச் சென்றதும் கீழ்த்தளம். அங்கே பளிங்கினால் ஆன கன்றை நக்கிக் கொண்டிருக்கும் வெள்ளைப்பசுவும் பசுவிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் கன்றும். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற அழகு. மன்னார்குடி ராஜகோபாலனும் அவனைச் சுற்றியுள்ள மாடும் கன்றும் நினைவுக்கு வருகிறது.
அந்தத் தளத்தின் இருபுறங்களிலும் மாடிப்படிகள். சில படிகளில் சக்கரங்கள் போன்ற அமைப்பு. இவ்வாறு படிகளில் ஆறு சக்கரங்கள் இருக்கிறதாம். மாடிப்படிகளில் ஏறிச் சென்றால் பிரம்மாண்டமான ஹால். இந்த முதல் தளத்தில்தான் ஏழாவது சக்ரம் அதாவது மோக்ஷ சக்கரம் இருக்கிறதாம். அந்த சக்கரத்தில் நின்றுகொண்டு மேலே பார்த்தால், கூரையில் பிரம்மஸ்தானம் என்பர் சொல்லப்படும் ஒரு துவாரம். தளம் முழுக்கக் பளிங்கினாலேயே இழைத்திருக்கிறார்கள். இந்த தளத்தில்தான் மூன்று சன்னதிகளாக கர்ப்பக்ருஹம். பளிங்கு மூர்த்திகள்.நடுவில் உள்ள சன்னதியில் ராதையும் கிருஷ்ணனும் லலிதா விசாகாவுடன். ராதாக்ருஷ்ணன் சன்னதிக்கு இடப்புறம் ஸ்ரீ ஜகன்னாதர், ஸ்ரீ பலராமர், ஸ்ரீ சுபத்ரா சன்னதி, வலப்புறம் சைதன்யர், நித்தியானந்தா சன்னதி என்று அமைந்திருக்கிறது.
நாமசங்கீர்த்தனம் தான் பகவானை அடைய எளிதான வழி என்பதால் அங்குள்ள அனைவரும் இடைவிடாது 'ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே,
ஹரே க்ருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
இரண்டாம் தளத்தில் கோபுரங்களும் கலசங்களும் இருக்கிறது என்று சொன்னார்கள். நாங்கள் அங்கு செல்லவில்லை.
கோவிலை விட்டு இறங்கிக் கீழே வந்தால், வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாத விநியோகம். கோயில் திருப்பணிகளிலும், கைங்கர்யங்களிலும் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.
அனைவரும் சொல்லக்கூடிய எளிதான திருநாமத்தைச் சொல்லி நாமும் இன்புறுவோமாக!
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!
ஹரே க்ருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!
உற்சவங்கள்: ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா விசேஷம். கிருஷ்ண ஜெயந்தி அன்று, சங்காபிஷேகம், ஆரத்தி, இன்னிசை நிகழ்ச்சி, பஜனை, சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. கிருஷ்ண யாகமும் நடைபெறுகிறது.
வழி: கோல்டன் பீச் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் நுழைவு வாயிலை அடைந்து அங்கிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் கோவிலை அடையலாம். நேரடி ஷேர் ஆட்டோக்களும் உண்டு. நாங்கள் காரில் சென்றோம். கார் நிறுத்த வசதியும் உண்டு.
முகவரி:
ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோவில்.
பக்தி வேதாந்தஸ்வாமி ரோடு
அக்கரை,
சோளிங்கநல்லூர்
சென்னை 600119.
No comments:
Post a Comment