பண்டரிபுரத்தில் நரஹரி என்ற பொற்கொல்லர் இருந்தார். தீவிரமான சிவபக்தர். அவருக்கு விட்டல நாமாவளியைக் கேட்கக் கூடப் பிடிக்காது, கேட்டால் காதுகளைப் பொத்திக் கொள்வார். பாண்டுரங்க கோவில் இருக்கும் தெருவின் வழியே கூடப் போகமாட்டார்.
ஒரு சமயம், பாண்டுரங்கனின் பக்தனான வணிகர் ஒருவர், தனக்குக் குழந்தை பிறந்தால் பாண்டுரங்கனுக்கு நவரத்தினங்கள் இழைத்த அரைஞாணைக் காணிக்கையாகச் செலுத்துவதாக வேண்டிக்கொண்டார்.
ப்ரார்த்தனையும் பலித்தது. வேண்டிக்கொண்டபடியே அரைஞாண் செய்ய முடிவு செய்து, பொற்கொல்லரான நரஹரியைத் தேடி வந்தார். நரஹரி தம்மால் சிவனைத் தவிர பிற தெய்வங்களுக்குச் செய்ய முடியாது என்று சொல்ல, வணிகரோ, வேறு பொற்கொல்லர் இந்த ஊரில் இல்லை என்பதால் உம்மிடம் வந்தேன், தயவு பண்ணி செய்து கொடுங்கள் என்று கூறினார்.
நரஹரி, விக்ரஹத்தின் அளவு தந்தால் செய்து தருகிறேன் என்று சொல்ல, வணிகர் கோவிலுக்குச் சென்று, அளவை வாங்கிக் கொண்டு வந்து நரஹரியிடம் கொடுத்தார்.
நரஹரியும் மிக நேர்த்தியாக அரைஞாண் செய்து தர, மகிழ்ந்த வணிகர், அதைப் பெற்றுக் கொண்டு கோவிலில் கொடுத்தார். அதை விட்டலனுக்கு அணிவித்தபோது, சில விரற்கடைகள் குறைவாக இருந்தது. மீண்டும் நரஹரியிடம் சென்று அரைஞாணைக் கொடுத்து, சரிசெய்து தரச்சொல்ல, அவரும் சரி செய்து கொடுத்தார். இரண்டாம் முறை செய்து கொடுத்தது, விக்ரஹத்திற்குப் பெரிதாக இருந்தது. வணிகர் வருத்தத்துடன் நரஹரியிடம் சென்று, அவரையே கோவிலுக்கு வந்து விக்ரஹத்தை அளந்து கொள்ளுமாறு சொல்ல, நரஹரி ஒப்புக் கொள்ளவில்லை. வணிகர் கெஞ்சினார். கடைசியில், கண்ணைக் கட்டிக் கொண்டுதான் கோவிலுக்கு வருவேன் என்ற நிபந்தனையுடன் கோவிலுக்குச் சென்று அளவெடுக்க சம்மதித்தார். அவரது விஷ்ணு த்வேஷத்தைக் கண்ட வணிகர் வியந்து, நரஹரியின் கண்ணைக் கட்டி அழைத்துச் சென்று, பாண்டுரங்கனின் விக்ரஹத்தின் முன்னால் நிறுத்தினார்.
கண்களைக் கட்டிக் கொண்டிருந்த நரஹரி, அளவேடுக்கவேண்டி பாண்டுரங்கனின் இடுப்பைத் தடவ, அவர் கைகளுக்குப் புலித்தோலைத் தடவுவதுபோல் பட்டது. உடனே அவர், மற்ற அங்கங்களைத் தடவ, திரிசூலம், உடுக்கை, சடாமுடி, ருத்திராக்ஷம் என்று கைகளில் தட்டுப்பட்டது. அவர், சிவபெருமான் என்று நினைத்து, கண்கட்டை அவிழ்த்து, கண் திறந்து பார்த்தால், எதிரே சங்கு, சக்ரங்களுடன், பீதாம்பரதாரியாகப் பண்டரிநாதன் நின்றார். அதிர்ந்து, மீண்டும் கண்களைக் கட்டிக் கொண்டார். தடவிப் பார்த்தால், முன்போலவே சிவபெருமானுக்கு உரிய அனைத்தும் கைகளில் தட்டுப்பட்டது.
இப்போது நரஹரியின் அகக்கண் திறந்தது. ஹரனும் ஹரியும் ஒன்றே என்று உணர்ந்த அவர் விட்டலனை வணங்கித் தொழுது அழுதார். தனது அறியாமையை மன்னிக்க வேண்டினார். இப்போது அரைஞாணும் கனகச்சிதமாய்ப் பொருந்தியது.
எதிரே பாண்டுரங்கன் சிரித்தவாறு சேவை சாதிப்பதைக் கண்ட அவர், விட்டலனை நமஸ்கரித்தார். அதுமுதல் நரஹரி பாண்டுரங்க பக்தராகவும் விளங்கினார்.
அருமையான கதை.நல்ல படிப்பினை.
ReplyDelete