Thursday, February 27, 2020

கண்ணுக்கினியன கண்டோம்- திரு வடமதுரை (மதுரா) விருந்தாவனம், கோவர்த்தனம் அடங்கியது -பகுதி 1

மதுரா- ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த இடம். யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்று. 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுரா, வளர்ந்த கோகுலம்(ஆயர்பாடி), மற்றும் விருந்தாவனம், ஆட்சி புரிந்த துவாரகா இம்மூன்று தலங்களையும் சேவிக்கும் பாக்கியம் அண்மையில் கிடைக்கப் பெற்றது. ‘தீர்த்த யாத்ரா(Tirtha Yatra)’  என்ற இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்தும் யாத்திரையில்  அனைத்து இடங்களையும் சென்று சேவித்தோம். விருந்தாவன யாத்திரை செல்வதற்கு முன்னரே துவாரகை சென்று சேவித்திருந்தாலும், கண்ணன் பிறந்த மதுரா மற்றும் வளர்ந்த விருந்தாவனம் சென்ற அனுபவங்களையும், கண்டதையும் கேட்டதையும் முதலில் பகிர்ந்த பிறகு, கிருஷ்ணர் அரசாட்சி செய்த துவாரகை சென்றதைப் பற்றி பதிவு செய்வதே பொருத்தமாக இருக்கும்.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள மதுரா 'கிருஷ்ண ஜென்ம பூமி' எனவும், மதுராவும் அதைச் சுற்றியுள்ள கண்ணன் விளையாடிய, வளர்ந்த விருந்தாவனம் மற்றும் கோவர்த்தனம், ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர்பாடியான கோகுலம் எல்லாம் சேர்ந்து  'வ்ரஜபூமி ' என்றும் அழைக்கப்படுகிறது.  டெல்லி விமான நிலையத்தில் இருந்து காலை 10.30 மணி வாக்கில்  விருந்தாவனம் செல்லத் தயாரானோம். 4 மணி நேரம் ஆகும் என்றதால் கொண்டு வந்திருந்த சிற்றுண்டியை உண்டுவிட்டுக் கிளம்பினோம். 3 மணிக்கு விருந்தாவனத்தை அடைந்தோம். அந்த மண்ணை மிதித்ததுமே, பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இது என்ற உணர்வில் உடல் சிலிர்த்தது. ராதே ராதே என்று வரவேற்றார்கள். விருந்தாவனத்தில், hello, welcome போன்ற சொற்கள் கிடையாது. வரவேற்பு ஆகட்டும், தொலைபேசி, கைபேசியில் ஆகட்டும் எல்லாமே ராதே ராதே தான். சற்று இளைப்பாறிய பிறகு  விருந்தாவன பரிக்ரமா செல்லப் போகிறோம் என்று யாத்திரை இயக்குனர் சொன்னார்.

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீ றிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்ட மான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே!
-நாச்சியார் திருமொழி 

விருந்தாவனம் / வ்ரஜபூமி
வ்ருந்தாவனம், உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. முற்காலத்தில் துளசிச் செடிகள் நிறைந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. சமஸ்கிருத மொழியில் ப்ருந்தா என்றால் துளசி என்றும் வனம் என்றால் காடு என்றும் பொருள். கண்ணன் பிறந்து வளர்ந்த வடமதுரையும், அதற்கடுத்த பகுதிகளான கோகுலம், விருந்தாவனம், கோவர்த்தனம், பர்ஸானா, நந்தகாவ் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகள் வ்ரஜபூமி என்று சொல்லப்படுகிறது. இத்தலங்களைப் பற்றிய வர்ணனை ஸ்ரீமத் பாகவதத்தில் காணப்படுகிறது. எண்ணிலடங்கா மலைகள், கோவில்கள், குளங்கள், வனங்கள், யமுனா நதி போன்றவற்றால் சூழப்பட்ட பகுதி இது.

கிருஷ்ணர் வளர்ந்த விருந்தாவனத்தின் பெருமை அளவிட முடியாதது. இங்கு தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். இடையர்களுடன் விளையாடி மகிழ்ந்தான். இதை வலமாகக் சுற்றி வருவதை‘விருந்தாவன பரிக்ரமா’ அல்லது விரஜ பரிக்ரமா' என்று கூறுகிறார்கள். இதில் சிறிய மற்றும் பெரிய  பாதைகள் உண்டு. இதே  போல,  கோவர்த்தன மலையை வலம் வருவதை கோவர்த்தன பரிக்ரமா என்று சொல்கிறார்கள். இங்கும் வலம் வர பாதைகள் அமைக்கப் பட்டுள்ளது. வல்லபாசார்யர் மற்றும் நிம்பார்க்கர் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த வைணவர்கள், பரிக்ரமா'வை முக்கியமாகக் கருதுகிறார்கள்.  பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்க இரண்டு மாதங்கள் கூட ஆகுமாம். அநேக பக்தர்கள் பல்வேறு விதமாகப் ‘பரிக்ரமா’வில் ஈடுபடுகிறார்கள்.

நாள் 1 
சற்றே இளைப்பாறிய பின்,  ‘விருந்தாவன பரிக்ரமா’ செல்ல ஆயத்தமானோம். குளிராக இருந்ததால், ஸ்வெட்டர், shawl போன்றவற்றை எடுத்துக் கொண்டோம். விருந்தாவனத்தில் குரங்குகள் அதிகம். முடிந்த வரையில் கைகளில் வெளியே தெரியாதவாறு பொருட்களை வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். அதே போல,  மூக்குக் கண்ணாடிகளையும் பறித்துச் சென்று விடுமாம். ஜாக்கிரதையாய் இருக்கச் சொன்னார்கள். கும்பல் அதிகம் இருக்கும் கோயில்களில், நகைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். சிறிய battery ஆட்டோக்களில் ஏறிக் கொண்டோம்.

இந்த ‘விரஜபூமி’யின் பரப்பு 84 கோஸ்(kos), அதாவது 285 கி.மீ. சுற்றளவு கொண்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. விருந்தாவனத்தில் நிறைய வனங்கள் இருந்தாலும்,12 வனங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. அவைகளின் பெயர்கள்
1. மகாவனம்
2. காம்யவனம்
3. மதுவனம்
4. தாளவனம்
5. குமுத வனம்
6. பாண்டிரவனம்
7. பிருந்தாவனம்
8. கதிரவனம்
9. லோஹவனம்
10. பத்ரவனம்
11. பஹுளாவனம்
12. பில்வவனம் என்று யாத்திரை இயக்குனர் கூறியதைக் குறிப்பெடுத்துக் கொண்டேன். 

இந்த பூமியில் 5000 கோவில்களுக்கு மேல் உள்ளனவாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாபன் விருந்தாவனத்தில் பல்வேறு கிருஷ்ணர் கோவில்களை அமைத்தாராம். காலப்போக்கில், அவையாவும் வனத்தினுள் புதைந்தும் போயினவாம். சில நூறு வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் முயற்சியாலும், மற்றும் குறிப்பாக “ஆறு கோஸ்வாமிகளாலும்”  மீண்டும் இக்கோவில்களை அமைத்து, முறைப்படி பூஜையைத் தொடங்கினராம். ஔரங்கசீப் போன்ற முகமதியர்கள் கோயில்களை சேதப்படுத்தியும், கோயில் சொத்துக்களை அபகரித்தும் படையெடுத்த சமயத்தில், பெரியோர்களும், அரசர்களும், விருந்தாவனவாசிகளும் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு, கோயில்களில் உள்ள மூர்த்திகளை வேறு வேறு இடங்களுக்கு எடுத்துச்சென்று மறைத்து வைத்தார்களாம்.

விருந்தாவனத்தில், பகவான் லீலை செய்த இடங்கள் பல உள்ளன.  யாத்திரை அழைத்துச் செல்பவர்கள் முக்கியமான  இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.  நாங்கள் சென்ற இடத்தை பற்றிய, அடியேன், கண்டு, கேட்டு மகிழ்ந்ததை மட்டும் இங்கு பதிவிடுகிறேன்.

முதலில் சென்ற இடம்
காளியா காட் (Kaliya ghat)
ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளில், காளியன் கதை அனைவரும் அறிந்ததே. காளியன் என்ற பாம்பு, கருடனுக்கு வைக்கப்பட்ட பாகங்களைத் தின்று வந்தது. கோபமடைந்த கருடன், தன் இறக்கைகளால் காளியனை அடித்து விரட்டினான். காளியனும் கருடன் வரமுடியாத அந்த காளிந்தி மடுவிற்குச் சென்றது. அந்த மடுவில் காளியன் புகுந்ததும், அதன் விஷமான மூச்சுக் காற்றால் மடுவின் கரையிலுள்ள மரங்கள் கருகின. மடுவிற்கு மேல் வானில் பறக்கும் பறவைகளும் இறந்து விழுந்தன. இடையர்களும், பசுக்களும் அந்த மடுவின் விஷ நீரைப் பருகினார்கள்.  உடனே உயிரிழந்து கீழே விழுந்தார்கள். கண்ணன், அந்தப் பாம்பின் கொடிய செயலைத் தடுக்க முடிவு செய்து, தனது சிவந்த மென்மையான பாதங்களால் மடுவின் கரையில் விஷக்காற்றால் வாடி நின்ற கடம்ப மரத்தின்மீது ஏறி, அந்த மடுவில் குதித்து, அப்பாம்பின் கர்வத்தை அடக்கி,  அதன் படங்களின் மேல் ஏறி நர்த்தனம் செய்தார். இந்த படித்துறையே Kaliya ghat (காளிய காட்). அருகிலேயே 5000 வருடங்கள் பழமையான அந்தக் கடம்ப மரத்தை இன்றும் பார்க்கலாம்.
இயற்கையாகவே அமிர்தகலசம் போன்ற ஒரு பாகம் மரத்தில் உள்ளது. கண்ணனின் சரண கமலங்கள் பட்ட காரணத்தால் இன்றும் இம்மரம் ஜீவித்திருக்கிறது. அடுத்ததாக,

மதன்மோகன் கோயில் (Madanmohan temple) / துவாதச-ஆதித்ய திலா(Dwadashaditya Tila)
குளிர்ந்த யமுனையில் காளியனுடன் நீண்ட நேரம் இருந்ததால், குளிர்ச்சியுற்ற தனது திருமேனிக்கு சிறிது உஷ்ணத்தை விரும்பிய கிருஷ்ணர் அருகிலிருந்த குன்றின் மீது அமர்ந்தார். அப்போது,உலகின் 12 ஆதித்தியர்களும் (சூரியதேவர்களும்) அங்கே ஒன்றுகூடி, பகவான்மீது சூரிய ஒளியைப் பொழிந்ததால், இவ்விடம் துவாதச-ஆதித்ய திலா (பன்னிரண்டு ஆதித்தியர்கள் தோன்றிய குன்று) என்று பெயர் பெற்றது. 

காளியா காட் அருகே அமைந்துள்ள மதன் மோகன் கோயில் பிருந்தாவனத்தில் உள்ள அனைத்து கோஸ்வாமி கோயில்களிலும் பழமையானது. ‘மதன்’ என்றால் காமதேவர்/அன்பு, மோகன் என்றால் வசீகரிப்பவர்,  காமதேவனைக் கூட கவர்ந்திழுக்கக் கூடிய கடவுளுக்கு மதன் மோகன் என்று பெயரிடப்பட்டது. ராதா மதன் மோகன் கோயில் த்வாதாஷாதித்யா மலையில் (த்வாதச ஆதித்ய குன்று) 50 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் புராணக்கதை உள்ளது. காளியனை அடக்கிய  கிருஷ்ணர் யமுனையிலிருந்து வெளியே வந்தபோது, ​​ இந்தக் குன்றில் ஓய்வெடுத்தார். தண்ணீரில் முழுமையாக நனைந்த கிருஷ்ணர் குளிர்ச்சியாக உணர்ந்தார், அப்போது உலகின் பன்னிரண்டு ஆதித்தியர்களும் அங்கு ஒன்றுகூடி, பகவான்மீது சூரிய ஒளியைப் பொழிந்தனர்.இதனால் அம்மலைக்கு த்வாதச ஆதித்ய குன்று/  த்வதாஷாதித்ய திலா/dwadashaditya tila என்ற பெயர் வந்தது. அந்த 12 சூரியதேவர்களின் கடுமையான வெப்பத்தால், கிருஷ்ணரின் உடல் வியர்க்கத் தொடங்கியது, இந்த  வியர்வை நீர் ஒரு சிறிய ஏரியாக  உருவானதாம்.  அருகிலுள்ள இந்த ஏரி, பிரஷ்கண்டனா காட் (Prashkandana Ghat) என்று பெயர் பெற்றது. மூல கோபுரம் ஒன்றும், இரண்டு கோபுரங்கள் அதன் இருபுறமும் உள்ளது, இவை மூன்றும் சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ள இது ஒரு அற்புதமான கட்டிடக்கலையை வெளிப்படுத்துகிறது. இந்தக் கோயிலில் ராதா, கிருஷ்ணர், லலிதா சகி (ஸ்ரீ ராதையின் தோழி) மூர்த்திகளைக் காணலாம்.  சைதன்ய மகாபிரபுவின் சிலையும் உள்ளது.

5000 ஆண்டுகளுக்கு முன்பு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாபர் இந்த கோவிலை முதன்முதலில் பிருந்தாவனத்தில் வேறு சில கோயில்களுடன் நிறுவினார். ஔரங்கசீப்பின் படையெடுப்பின் போது மதன்மோகன், கோவிந்தர், கோபிநாதர் என பல மூலமூர்த்திகள், இராஜஸ்தான் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.  மதன் மோகன் இரகசியமாக ஜெய்ப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பல ஆண்டுகளாக வணங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாங்கே பிஹாரி மந்திர்/ Banke Bihari Mandir
விருந்தாவனில் அதிக மக்கள் கூடும் சன்னதி. ‘பங்கே’ என்றால் வளைந்தவர், ‘பிஹாரி’ என்றால் ரசிப்பவர் என்று பொருள். ‘த்ரிபங்கி ரூபம்’, அதாவது மூன்று இடங்களில் வளைந்திருப்பவர். அதனால்தான் கிருஷ்ணரை 'பாங்கே பிஹாரி' என்று அழைக்கிறார்கள். பங்கே பிஹாரி - காடுகளில் (வன்/பன்-கே)  பிஹாரி அல்லது விஹாரி என்றால் வசிப்பவர், காட்டைச் சுற்றி வசிப்பவர். அதனாலும் பங்கே பிஹாரி என்று கொள்ளலாம்.

இந்த கிருஷ்ணரைக் காணக் கண் கோடி வேண்டும். அப்படியோர் அழகு. 
“கண்டோம்!கண்டோம்!கண்ணுக்கினியன கண்டோம்!”

தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே உருவு
கரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோமே!
-நாச்சியார் திருமொழி

பங்கே பிஹாரியைப் பற்றிய ஒரு நம்பிக்கை உள்ளது.  பங்கே பிஹாரியின் பிரகாசமான கண்கள், நீண்ட நேரம் பார்க்கும் நபரை மயக்கமடையச் செய்யுமாம். அதுவுமல்லாமல், குழந்தையாய்க் கொண்டாடப்படும் கடவுளுக்கு, கண் த்ருஷ்டி பட்டு விடுமாம்.  எனவே சன்னதியில் திரைச்சீலைகள் மற்ற கோயில்களைப் போல திறந்து வைக்கப்படாமல் அடிக்கடி மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படுகிறது.  குழந்தையை எழுப்புவதும், அதிகாலையில் ஆரத்தியின் மணிகளால் அவரைத் தொந்தரவு செய்வதும் முறையற்றது என்று நம்பப்படுவதால் அதிகாலை ஆரத்தியும் இந்த கோவிலில் செய்யப்படுவதில்லையாம். ஜன்மாஷ்டமியில் மட்டுமே அதிகாலை ஆரத்தியாம். அக்ஷய திரிதியை அன்று மட்டுமே யாத்ரீகர்கள் பாங்கே பிஹாரியின் தாமரைப்பாதங்களைப் பார்க்க முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பு பளிங்கினால் ஆன இந்த கிருஷ்ணரின் மூர்த்தியை வைத்திருந்த ஒரு இந்து பூசாரி, முஸ்லீம் படையெடுப்பிற்கு பயந்து,  நிதிவனத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைத்தாராம். சில நாட்களுக்குப் பிறகு, பகவான் க்ருஷ்ணரின் பெரும் பக்தராக இருந்த ஸ்வாமி ஹரிதாஸ் என்பவரின் கனவில் வந்து க்ருஷ்ணர் தான் இருக்கும் இடத்தைச் சொல்ல, அந்த இடத்தைத் தோண்டியவுடன் சிலை கிடைத்ததாம். ஆரம்பத்தில் இந்த பங்கே பிஹாரி மூர்த்தி,  நிதிவனில் சிறிய கோவிலில் இருந்தார். பின்னர் பிஹாரிஜியின் மகிமைக்கு ஏற்றவாறு ஒரு பெரிய கோவிலில் கோஸ்வாமிகளால் கி.பி 1862 இல் கட்டப்பட்ட்டு, அங்கே பிரதிஷ்டை செய்தார்கள். இக்கோயில் நவீன ராஜஸ்தானி பாணியில் கட்டப்பட்டுள்ளது.  

இம்லி தல் (Imli tal)

'இம்லிதலா' கோயில் அங்கு உள்ள புளிய மரத்திற்கு பிரபலமானது. விருந்தாவன பரிக்ரமா மார்க்கத்தில், யமுனையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது கௌடியா மடத்தினரால் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. அமைதியான இடம்.  ஏனெனில் இது ராதா ராணி மற்றும் கிருஷ்ணரின் புனிதமான அன்பைக் குறிக்கும் இடம் என்று நம்பப்படுகிறது. தியானத்திற்கு ஏற்ற இடமாகவும் இருக்கிறது. ஸ்ரீ ராதா ராணி மற்றும் கிருஷ்ணர் சந்நிதி உள்ளது.

புராணங்களின்படி, பகவான் கிருஷ்ணர் கோபிகளுடன் ஷரத் பூர்ணிமா (முழு நிலவு இரவு) அன்று ராஸ நடனத்தை நிகழ்த்தும்போது, ​​ஸ்ரீ ராதா ராணி அங்கிருந்து மறைந்தார். பகவான் கிருஷ்ணர், ராதாவைக் கண்டுபிடிக்க முடியாமல், பிரிவால் வாட்டமுற்றார். இம்லி தலா ராதைக்கு மிகவும் பிடித்த இடம் என்பதை அறிந்த பகவான் கிருஷ்ணர் புளியமரத்தின் அடியில் அமர்ந்து பிரிவாற்றாமையால் ராதையின்  பெயரைச் சொல்லி அரற்றுகிறார். ராதையும் விரைவில் அங்கே தோன்றினாள்.

மேலும், ஒரு முறை ஸ்ரீ ராதாராணி இம்மரத்தைக் கடந்து செல்லும்போது, பழுத்த புளியம்பழம்  ஒன்று அவளது காலில் குத்தியதில், ரத்தம் வந்து விட்டதாம். கோபத்துடன் அவள் புளிய மரத்தை பழுக்கக்கூடாது என்று சபித்தாளாம். அதன் பின்னர், விரஜமண்டலின் 84 கோஸ்(kos) பகுதியிலும் புளியமரம் பழுப்பதில்லையாம்.

இங்கேதான் கிருஷ்ணர் தனது அடுத்த அவதாரம் சைதன்யர் என்று முன்னறிவித்தாராம். சைதன்ய மகாப்ரபு விருந்தாவனத்திற்கு விஜயம் செய்தபோது, ​​அவர் தினமும் இம்லி தலாவுக்கு வந்து புளியமரத்தின் அடியில் அமர்ந்து ஜபம் செய்வாராம்.  இந்த மரத்தின் கீழ் சைதன்யரின் சன்னிதியும் உள்ளது.

ஜாடூ மண்டல் (jhadu mandal)



புகழ்பெற்ற ஸ்ரீ ஜீவா கோஸ்வாமி மற்றும் ஷியாமானந்தாவின் பொழுதுபோக்கு இடம். இந்த இடத்தைப் பெருக்கித் துடைக்கும் சேவையை ஷியாமானந்தாவுக்கு ஜீவா கோஸ்வாமி வழங்கியிருந்தார். அதனால் இப்பெயர்.

பின்வரும் சம்பவமும் இங்கே நடந்ததாம்.
நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு வயதான பெண்மணி ஜாடூ-மண்டலத்தில் வசித்து வந்தார். அவரது வீட்டில் ஒரு இயந்திரம்(அரைக்கும் கல்)  இருந்தது. மற்றவர்களுக்காக கோதுமையை அரைக்க இந்த கல்லைப் பயன்படுத்தி வந்தாள். அதுவே அவள் வாழ்வாதாரமாகவும் இருந்தது. கிருஷ்ணரிடம் அவளுக்கு அசைக்க முடியாத பக்தி இருந்தது. அழகான குரலில் கிருஷ்ணரின் இனிமையான பெயர்களைப் பாடிக்கொண்டே அரைப்பாள். ஒரு நாள், அந்த இயந்திரம், கோதுமையை அரைத்து கல்லிலிருந்து எடுக்கும்போது ஒரு கர்-கர் சத்தத்தை எழுப்பியது.  விடியற்காலையில் அவள் பாடிக்கொண்டே அரைத்துக்கொண்டிருந்தபோது, ​​ ஒரு அழகான கறுத்த நிறமுள்ள ஒரு சிறுவன் தோன்றி அரைக்கல்லில் தன் காலை வைத்தான். "பாட்டி, ஏன் கர்-கர்  சத்ததுடன் அரைக்கிறாய்? இதன் சத்தத்தால் என்னால் தூங்க முடியவில்லை” என்று சொன்னான். கிழவி சற்றே பயந்து, “என் அன்பு மகனே, நான் அரைக்கும் கல் வேலை செய்யாவிட்டால், நான் எப்படி என் வாழ்க்கையை பராமரிப்பேன்?” என்று கேட்க, அழகான அந்த சிறுவன், “நான் என் கால்தடத்தை உங்கள் அரைக்கும் கல்லில் வைப்பேன் . இந்த காலடித் தடத்தைத் தரிசனம் செய்து தாராளமாக காணிக்கை கொடுக்க மக்கள் வருவார்கள். அவர்களின் காணிக்கைகள் உனக்கு உதவும். எனவே, நீங்கள் இனி அரைக்கும் கல்லைப் பயன்படுத்தத் தேவையில்லை” என்று கூறினான்.    இதைச் சொல்லி, இருண்ட நிறமுடைய அச்சிறுவன் மறைந்துவிட்டான். காலையில், ​​அந்தப் பெண்மணி சிறுவனின் தடம் அவளது அரைகல்லில் பதிந்திருப்பதைக் கண்டார். ஒரு கூட்டம் வரிசையாக நின்று, கால்தடத்தின் தரிசனத்தைக் காண விரும்பியது. இந்த கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதன் மூலம் அப்பெண்மணிக்கு வாழ்வாதாரமும் கிடைத்தது. அவளும், ஸ்ரீ க்ருஷ்ணரைத் தினம் தியானித்துக் கொண்டிருந்தாள்.  

அனைத்து இடங்களிலும் நல்ல தரிசனம். இரவு உணவை முடித்துவிட்டு, பயணத்தின் அசதியினாலும், களைப்பினாலும் உறங்கச் சென்றோம்.

-விருந்தாவன யாத்திரை தொடரும்-

4 comments:

  1. அற்புதமாக எல்லா விவரங்களுடன் விளக்கி உள்ளீர்கள்.நான் தனியே சென்றபோது எது முக்கியம்,வரலாறு என்ன என்ன என்று ஒன்றும் தெரியாமல் பங்கே பிஹாரி கோவில் மாத்திரம் தரிசித்து வந்தேன்.
    ஒரு அமைப்பின் உதவியுடன் செல்வது முக்கியம் என உணர்ந்தேன்.
    படங்களும் நேர்த்தியாக இருக்கு.

    ReplyDelete
  2. Recollecting my visit to Vrindavan. Radhe Radhe

    ReplyDelete
  3. அறிந்துக் கொள்ள வேண்டிய பல கோவில்களின் தகவல்களை அழகிய படங்களுடன் தரிசித்துக் கொண்டேன்...

    ReplyDelete
  4. நமஸ்காரம், மிக அருமையாக விராஜா பூமியின் மஃஹிமை பற்றி விளக்கி உள்ளீர்கள்.
    கண்ணனின் பிரியமான இந்த பூமி நம் நினைவில் பசுமரத்தாணி போல் நிற்கும். இனிய நினைவை மீண்டும் தந்ததற்கு நன்றி
    இன்னும் ஒரு முறை விராஜா பூமியின் மஹிமையை அனுபவிக்க கண்ணனை பிரார்த்திக்கிறேன். நன்றி

    ReplyDelete