Tuesday, September 13, 2011

தென்சிறுவளூர் - ஸ்ரீதேவி பூதேவி ஸமேத அழகிய மணவாளப்பெருமாள் கோயில் (Thensiruvalur azhagiya manavala perumal koil) /கண்ணுக்கினியன கண்டோம்-3

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று ஆகிவிட்ட பின்பும், சொந்த ஊருக்குச் செல்லும்போது கிடைக்கும் பரவசத்திற்கு நிகர் இல்லை.

சில பெரியோர்கள் "உங்க பூர்வீகம் என்ன?" என்று கேட்பதைப் பார்த்திருப்போம். ஒருவர் தாய்நாடு, சொந்த மண், சொந்த ஊர், பூர்வீகம்.. என்று சொல்லும்போது அதில்தான் எத்தனை பற்றுதல்? அந்த வார்த்தைகளில் அவர்களது பற்றுதல் வெளிப்படுகிறது. அது ஏன்? உங்க பூர்வீகம் எந்த ஊர் ? என்ன பெருமாள்? என்று யாராவது கேட்கும்பொழுது, "எங்க பூர்வீகம் ... ஊர் .... பெருமாள் " என்று சொல்லும்போதுதான் எவ்வளவு பெருமிதம்?


ஏன் இந்த இன்பப் பெருமிதம்? யோசித்துப் பார்த்தபொழுது , நமது முன்னோர்கள், முப்பாட்டனார், பாட்டனார், தந்தை, தாய் என்று அனைவரும் வாழ்ந்த ஊர், வணங்கிய பெருமாள் என்ற உணர்வு நம்மை அறியாமலே வருவதால்தான் என்று தோன்றுகிறது.

இனி, எங்கள் பூர்வீகம், தென்சிறுவளூர் - ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ழகிய மணவாளப்பெருமாள் கோயில் பற்றிய விவரங்கள்:

தென்சிறுவளூர் - ஸ்ரோதபுரி என்றும், நவமால் சிறுவளூர் என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் : ஸ்ரீ அழகியமணவாளப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஸமேதராய் எழுந்தருளியிருக்கிறார்.
உற்சவர் :புஷ்பவல்லி தாயார் ஸமேத தேஹளீச பெருமாள்.

இந்த கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டத்தில் உள்ளது.
சுற்றுப்பட்டு கிராமங்களில் சிறுவளூர், சுறுளூர் என்றே மக்கள் சொல்கிறார்கள்.

இந்த கிராமம் மிகவும் புராதனமானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாஸ்திரிய முறைப்படி அமைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட மண்டலாடீஸ்வரர் என்ற சிவன் கோயிலும், சிவன் கோயிலுக்குச் செல்லும் வழியில் காளி கோயிலும், சிவன் கோயிலுக்கு மேற்கே பெரிய நல்ல தண்ணீர் குளமும், அதற்கும் மேற்கே வைஷ்ணவ அக்ரஹாரமும், பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. இது தவிர எல்லை தேவதைகள், எல்லையம்மன், அதிஉக்ரகாளியம்மன் ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு , துருக்கிய முகமதியர்கள் கோயில்களை சேதப்படுத்தியும், கோயில் சொத்துக்களை அபகரித்தும் படையெடுத்த சமயத்தில், பெரியோர்களும், அரசர்களும் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு, கோயில்களில் உள்ள மூலவருக்கு கற்சுவர் எழுப்பி, பின் உற்சவ மூர்த்திகளை வேறு வேறு இடங்களுக்கு எடுத்துச்சென்று மறைத்து வைத்தார்கள். ஸ்ரீ வேதாந்த தேசிகனே ரங்கநாதருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்தபடியால்தான் நமக்கு இன்று "ஸ்ரீ அபீதி ஸ்தவம்" என்ற ஸ்தோத்ர பொக்கிஷம் கிடைத்துள்ளது. அதே போல, திருக்கோவிலூரில் உள்ள உற்சவ மூர்த்திகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்ற பெரியோர்கள், அங்கு இருந்த உற்சவ மூர்த்தியான தேஹளீச பெருமாளை, ஸ்ரோதபுரி என்று அழைக்கப்பட்ட நம் தென்சிறுவளூரில் எழுந்தருளப் பண்ணினார்கள்.

அங்கிருந்த தேசிக சம்பிரதாய வைஷ்ணவர்கள், ஸ்ரீதேவி பூதேவி ஸமேத
ழகிய மணவாளப்பெருமாளையும், உற்சவர், ஸ்ரீ தேஹளீசரையும் மிகுந்த பக்தி ஸ்ரத்தையோடு ஆராதித்து வந்தார்கள். அதைப்பார்த்து மகிழ்ந்த, சிறந்த விஷ்ணு பக்தரும், ஸ்ரீ வேதாந்த தேசிகனின் சிஷ்யரும், செஞ்சியை ஆண்டவருமான கோபண்ணா, அந்த கிராமத்தை அவர்களுக்கே இனாமாக வழங்கினார்.

அக்ரஹாரத்தில் நிறைய வீடுகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. அதில் எங்கள் தாத்தா தேசிகாச்சாரியார் அவர்களின் வீடும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.



கோயிலின் முன்பாக கல்தூண், அதாவது கல்லினால் செய்யப்பட்ட ஸ்தம்பம் ஒன்று உள்ளது. அதில் மிக நேர்த்தியாக கருடனும், ஆஞ்சநேயரும் வீற்றிருக்கிறார்கள். முன்பக்கத்தில் ஆஞ்சநேயரும், பெருமாளைப்பார்த்தபடி கருடனும் மிகுந்த அழகோடு விளங்குகிறார்கள். திருக்கார்த்திகையன்று சொக்கப்பானை ஏற்றியிருப்பார்கள் போலும்!!!

கோயிலின்உள்ளே கருடன், அனைத்து பெருமாள் கோயில்களிலும் உள்ளபடியே, பெருமாளைப்பார்த்தபடி கைகூப்பியவாறு இருக்கிறார். பெருமாள் ஸன்னிதிக்கு முன்னால் இருபுறமும் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயன் இருவரும் நிற்கின்றனர். அதையொட்டி, பக்கத்தில் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஸன்னிதி உள்ளது.

கர்ப்பக்ருஹத்தில், பெருமாள் பெயருக்கு ஏற்றாற்போல் நின்ற திருக்கோலத்தில் சிரித்த முகத்துடன் ஸ்ரீதேவி பூதேவி ஸமேதராய், மிக அழகாக, இருக்கிறார். ஹேமாம்புஜ நாயகி ஸமேத வரதராஜ பெருமாள் உற்சவமுர்த்தியாக திருவீதி புறப்பாடு, மற்றும் உற்சவங்கள் கண்டருளுகிறார். புஷ்பாலயா ஸமேத தேஹளீஸ பெருமாளும், கையில் நவநீதத்துடன் நவநீத கிருஷ்ணரும், ஹாலக்ஷ்மியும், ஸ்வாமி தேசிகனும், உற்சவமூர்த்திகளாக அழகாக அலங்காரம் செய்யப்பட்டு, அதிசுந்தரமாகக் காக்ஷி கொடுக்கிறார்கள்.



தென்சிறுவளூர் பெருமாள் அபரிமிதமான சக்தி படைத்தவர். தெய்வ குற்றம் நீங்கவும், முன்னோர்கள் சாபம் விலகவும், திருமண தடை விலகி விவாஹம் நடைபெறவும் , நல்ல படிப்பு கிடைக்கவும், சகல தொல்லைகளும் நீங்கவும், கடன் தொல்லை, வியாதி நீங்கவும், பெருமாளிடம் பிரார்த்தித்து பலனடைந்தோர் ஏராளம். தென்சிறுவளூரைப் பூர்வீகமாகக் கொண்ட நல்ல உள்ளம் படைத்த சிலரால் இத்திருக்கோயில் நல்ல முறையில் சீர்திருத்தப்பட்டு, 26 -8 -2007 அன்று ம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டு, ஒரு மண்டபமும், திரு மடப்பள்ளியும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. நல்ல தண்ணீர் வசதியுடன் கூடிய ஒரு கிணறும் உள்ளது. அது தவிர, தங்கியிருந்து ஸேவிக்க விரும்புபவர்கள் சௌகர்யத்துக்கென ஒரு சிறிய ஹாலும் கட்டிவிடப்பட்டுள்ளது.

ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவன் மங்களாஶாஸனம் செய்து அனுக்ரஹித்தாயிற்று.

தென்சிறுவளூர் பெருமாளை 
 ஸேவித்து பிரார்த்திக்கும் அனைவரும்   நீங்காத செல்வம் நிறைந்து, எங்கும் திருவருள் பெற்று  இன்புறுவர்  என்பது திண்ணம். 


திருக்கோயில் முகவரி :

தென்சிறுவளூர் அக்ரஹாரம்,
தென்சிறுவளூர்(V&P),
வானூர் வட்டம் - 604 102.

இத்திருக்கோயிலுக்குச் செல்லும் வழி விவரம் :

சுற்றுப்பட்டு கிராமங்களில் சிறுவளூர், சுறுளூர் என்றே மக்கள் சொல்கிறார்கள். தென்சிறுவளூர் என்று யாரும் சொல்வதில்லை.

திண்டிவனத்தில் இருந்து கிளியனூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில், கொந்தமூர் என்ற இடத்தில் இறங்கி, குன்னம் செல்லும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திண்டிவனம்-குன்னம் மார்க்கத்தில் டவுன் பஸ் எண் 14 மற்றும் பாண்டி - குன்னம் மார்க்கத்தில் பஸ் எண் 226 , இந்த ஊர் வழியாகக் குன்னம் செல்கிறது. தென்சிறுவளூரில் இறங்க வேண்டும்.