Wednesday, December 31, 2014

கண்ணன் கதைகள் (19) - தயிர் சாதமும் வடுமாங்காயும்


கண்ணன் கதைகள் (19) -  தயிர் சாதமும் வடுமாங்காயும்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி, அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. கோவிலில் பூஜைகள் தடை  இல்லாமல்  நடக்க வேண்டும் என்பதால், சிறு  பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும்,  பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார். 

அவனும் அரிசியை சமைத்து அப்பனுக்கு  நைவேத்யம் செய்து, அப்பனிடம், " கண்ணா, சாப்பிடு" என்று கூறினான். கண்ணன் அசையவில்லை. உடனே அவன், வெறும் சாதத்தை எவ்வாறு கண்ணன் சாப்பிடுவான், என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான்.  தயிரை சாதத்தில் கலக்கி, உப்புமாங்காயை வைத்தான். அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை. சாப்பிடு கண்ணா என்று கெஞ்சினான். சாதம் அப்படியே இருந்தது. 

என்னுடைய  அப்பா வந்தால், உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார், சாப்பிடு என்று சொல்லிக் கெஞ்சி அழுதான். குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாத கண்ணன், காட்சி தந்தான். அன்னத்தை உண்டான். குழந்தையும் ஸந்தோஷமாக, காலித் தட்டுடன் வெளியே வந்தான். பொதுவாக, நைவேத்யத்தை கோவிலுள்ள  பிஷாரடிக்குக் கொடுப்பது வழக்கம். காலித் தட்டுடன் வெளியே வந்த அவனைக் கண்ட அவருக்கு மிகுந்த  கோபம் வந்தது. "சாதம் எங்கே?" என்று கேட்டார். குழந்தையும், "கண்ணன் சாப்பிட்டுவிட்டான்" என்று சொன்னான்.  நம்பூதிரி வந்ததும், பிஷாரடி,"நைவேத்தியத்தை உங்கள் மகன் சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டதாகச் சொல்கிறான்" என்று சொன்னார். நம்பூதிரி, "நைவேத்தியத்தை என்ன செய்தாய்?" என்று கேட்டார். மறுபடியும் குழந்தை, "கண்ணன் நேரிலேயே வந்து சாப்பிட்டுவிட்டான்" என்று சொன்னான். அப்போது  அருகில் உள்ள வீட்டில்  இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தயிரும், மாங்காயும் அவன் வாங்கிச் சென்றதைச் சொன்னார்கள். நம்பூதிரி மிகுந்த கோபத்துடன், "தினமும் பூஜை செய்யும் எனக்குக் காட்சி தராமல், கண்ணன் உனக்குக் காட்சி தந்து உணவை உண்டாரா? உன்னால் வெறும் சாதத்தைத் தின்ன முடியாது என்று தயிரும் மாங்காயும் வைத்து சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டுவிட்டான் என்று பொய் சொல்கிறாயா? " என்று அடித்தார்.  குழந்தை இடத்தைவிட்டு நகரவில்லை. குழந்தையை அடிப்பதைக் கண்ணனால் பொறுக்க முடியவில்லை. நம்பூதிரி மீண்டும் அடிக்கக் கையை  ஓங்கியபோது, "நான்தான் உண்டேன், குழந்தை குற்றமற்றவன்" என்று சன்னிதியிலிருந்து அசரீரி ஒலித்தது.  கூடியிருந்த அனைவரும் அதிசயித்தனர். 

நம்பூதிரி, கண்களில் நீர் வழிய, " என் மகனுக்குக் காட்சி தந்து, அவன் தந்த உணவையும் உண்டாயே!! என்னே உன் கருணை!! என் மகன் பாக்யசாலி!!" என்று கூறித் தன் மகனை வாரி அணைத்துக் கொண்டார்.  

Tuesday, December 30, 2014

கண்ணன் கதைகள் (18) - குரூரம்மாவின் கிருஷ்ண பக்தி

கண்ணன் கதைகள் (17) -  குரூரம்மாவின் கிருஷ்ண பக்தி, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
வில்வமங்கலம் ஸ்வாமிள்  பூஜை செய்யும்போது கண்ணனை நேரிலே காண்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சமயம், ஒரு பிராம்மணனுக்கு வயிற்று வலி வந்தது. எல்லா மருத்துவர்களிடம்  காண்பித்தும் வயிற்று வலி தீரவேயில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. வில்வமங்கலம் ஸ்வாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அவன், தனது வலி தீர வழி சொல்லும்படி அவரைக் கேட்டான். ஸ்வாமிகள்  கண்ணனைக் கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் பூஜையின் போது கண்ணனிடம் அது பற்றிக் கேட்டார். பகவானும் அது கர்ம வினையினால் என்று சொன்னார். வினை தீர வழி என்ன என்று அவன் கேட்க, ஸ்வாமிகளும், முற்பிறப்பில் செய்த தீமையால் வரும் இந்த வினை தீர வழியில்லை என்று சொன்னார்.அவனும்  தான் வினைப்பயனை நொந்துகொண்டு, வயிற்றைப் பிடித்துக் கொண்டு சென்றான். 

செல்லும்போது வயிற்று வலி அதிகமாகிவிடவே, அங்கு இருந்த வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தான். அது குரூரம்மாவின் வீடு. அவன் வயிற்றியப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவள், பசி என்று நினைத்து உணவளித்தால். அவன் மிகவும் வருந்தி, தனக்கு வயிற்று வலி இருப்பதால் ஒரு பருக்கை கூட சாப்பிட முடியாது என்று கூறினான். 

அதைக் கேட்ட அவள், சிறிதும் தயங்காமல்,"மகனே, ராமா, ராமா என்று ஜபிக்க ஆரம்பி, நம்பிக்கையோடு சொல், சரியாகிவிடும்" என்று சொன்னாள். அவனும் நம்பிக்கையோடு சொல்ல ஆரம்பித்தான். அவள் எப்போதும் ராமா, கிருஷ்ணா என்று நாம ஜபம் செய்வதால் அவளைவிட சிறந்த குரு வேறு யார் இருக்கமுடியும்?  சிறிது நேரத்திலேயே வலி சற்றே குறைந்தது போல் இருந்தது. இப்போது அவள், அவனிடம், "சரி, நீ அருகிலுள்ள  குலத்திற்குச் சென்று, கிருஷ்ண நாமத்தைச் சொல்லிக் கொண்டே முங்கிக் குளித்துவிட்டு வா, சாப்பிடலாம்" என்று சொன்னாள். அவனும் அவ்வாறே "கிருஷ்ணா, கிருஷ்ணா" என்று சொல்லிக்கொண்டு முங்கி எழுந்தான். என்ன ஆச்சர்யம்!!!! அவனது வயிற்று வலி  முற்றிலும் நீங்கிவிட்டது.  அவன் குரூரம்மாவின் வீட்டிற்கு சென்று மிக்க மகிழ்ச்சியுடன் உணவை உந்துவிட்டு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டான். அதன்  பிறகு அவன் பக்தியுடன் எப்போதும் ராமநாமத்தையும் கிருஷ்ணநாமத்தையும் ஜபித்து வந்தான்.

ஒரு முறை, ஒரு  கதாகாலட்சேபத்தின்போது வில்வமங்கலம் ஸ்வாமிகளைக் கண்ட அவன், இந்த சம்பவத்தைக் கூறி, குரூரம்மாவால், தனது வயிற்று வலி தீர்ந்தது என்று சொன்னான்.

அடுத்த நாள் பூஜையின் போது, ஸ்வாமிகள் கண்ணனிடம், "கண்ணா, நீ இப்படிச் செய்யலாமா? நீ 'கர்மாவினை'என்று சொன்னாயே தவிர, நாமஜபத்தால் வலி சரியாகும் என்று சொல்லவேயில்லையே?" என்று கேட்டார். 

கண்ணன் சிரித்துக் கொண்டே, "ஆமாம் கர்மவினை என்று சொன்னேன், நாமஜபம் செய்தால் .தீரும் என்று சொல்லவில்லை. வில்வமங்கலத்திற்கு நாமஜபம் அனைத்துப் பாபங்களையும் போக்கும் என்று தெரியாதா என்ன? இந்த விஷயத்தில் குரூரம்மாவிற்கு இருக்கும் நம்பிக்கையில், துளி கூட உனக்கு இல்லையே!" என்று கூறினார். பகவானான  கண்ணனே இவ்வாறு சொல்வதைக் கேட்ட வில்வமங்கலம், குரூரம்மாவின் பக்திக்குத் தலை வணங்கினார்.

Monday, December 29, 2014

கண்ணன் கதைகள் (17) - பார்வையிலே சேவகனாய்

கண்ணன் கதைகள் (16) -  பார்வையிலே சேவகனாய், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

கௌரி என்ற நம்பூதிரிப் பெண் கண்ணனின் பக்தை. அவள் சிறு  குழந்தையாக இருந்தபோது அவளது மாமா அவளுக்கு  ஒரு  கண்ணன் விக்ரகத்தைக் கொடுத்தார். அவள் எப்போதும் அந்தக் கண்ணனுடனே விளையாடுவாள். 
அவள் வளர்ந்ததும்  குரூரில் உள்ள ஒரு பிராம்மணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். குரூர் இல்லத்தில் வாழ்க்கைப்பட்டதால் அவளை குரூரம்மாள் என்று அழைத்தனர். திருமணத்திற்குப் பிறகு அவள்  கிருஷ்ண பக்தி இன்னும் அதிகரித்தது. திடீரென்று ஒரு நாள் அவள் கணவன் இறந்துவிட்டான். அப்போது அவளுக்கு வயது பதினாறு. குழந்தைகள் இல்லை.அதன் பிறகு அவள், முழுவதும் தன்னை கிருஷ்ண பக்தியிலேயே ஈடுபடுத்திக் கொண்டாள். பக்தி  பலவிதம். அவளது பக்தி யசோதையைப் போன்ற தாய்மை உணர்வுடன் கூடியதாக இருந்தது. கண்ணனுக்கு நைவேத்யம் செய்துவிட்டு அவன் வராவிட்டால் அழுவாள். அவள் அனைத்தையும் கண்ணனாகவே பாவித்தாள். 

காலம் கடந்தது. அவளது உறவினர்கள் ஒவ்வொருவராக இறந்தனர். அவள் தனித்து இருந்தாள்.  எப்போதும் கண்ணனின் நாம ஜபம் செய்து கொண்டிருப்பாள்.  ஒரு நாள் அவள், " கண்ணா நீதான் எனக்குத் துணையாக எப்போதும் இருக்க வேண்டும், யசோதையை விட்டுச் சென்றதுபோல் என்னைக் கைவிட்டுவிடாதே" என்று மனமுருகப் பிரார்த்தித்தாள். 

ஒரு நாள், 7,8 வயதுள்ள ஒரு பாலகன் அவள் வீட்டு வாசலில் வந்து, "பாட்டி, .நான் ஒரு அநாதை. எனக்கு ஏதாவது வேலை தாருங்கள்" என்றான். அவள், "நீ மிகவும் சிறியவனாக இருக்கிறாய், உன்னால் வேலை செய்ய முடியாதே?" என்றாள்.  அவனோ,"நான் எல்லா வேலையும் செய்வேன். தங்குவதற்கு இடமும், உணவும் அளித்தால் போதும்" என்று கூறினான். இயல்பாகவே கருணை உள்ளம்  கொண்ட அவள், மிக மகிழ்ந்து அவனைத் தன் மகனாகவே நினைத்து ஏற்றுக் கொண்டாள். அவனை' " உன்னி" என்று அன்புடன் அழைத்தாள்.

வில்வமங்கலம் ஸ்வாமிகள் என்பவர் பூஜை  செய்யும்போது கண்ணனை நேரிலேயே பார்ப்பார் என்று கேள்விப்பட்டாள். அவரைத் தன் வீட்டிற்கு வந்து பூஜைகள் செய்து உணவருந்திப் போகுமாறு அழைத்தாள். அவரும் சம்மதித்தார். 

குரூரம்மாவின் அடுத்த வீட்டில் 'செம்மங்காட்டம்மா' என்று ஒரு  பணக்காரப் பெண்மணி இருந்தாள்.  குரூரம்மாவிடம் ஊரிலுள்ள அனைவரும் மிகுந்த மரியாதையுடன் இருப்பதால் அந்தப் பெண்மணிக்கு எப்போதும் பொறாமை. குரூரம்மாவின் வீட்டிற்கு ஸ்வாமிகள் செல்லக் கூடாது என்று, அதே நாளில் தன் வீட்டிற்கு அவரை அழைத்தாள். குரூரம்மாவிற்கு இது பற்றித் தெரியாது.

பூஜையன்று காலை குரூரம்மா குளிக்க ஆற்றுக்குச் சென்றாள்.   குளித்துவிட்டு ஈரத் துணியைப் பிழியும்போது, அருகில் நீராடிக் கொண்டிருந்த 
செம்மங்காட்டம்மாவின் மீது சில நீர்த் துளிகள் தெறித்தது. உடனே அவள் குரூரம்மாவை திட்டிவிட்டு, மீண்டும் நீரில் முங்கி எழுந்து ,"ஸ்வாமிகள் என் வீட்டிற்கு வருகிறார், இப்போது நான் செல்ல வேண்டும்" என்று கூறினாள். அதைக் கேட்ட  குரூரம்மாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. மனம்  நொந்தபடியே வீடு திரும்பி, 'உன்னி' யிடம் நடந்ததைக் கூறினாள். அவனும்,"கவலைப்படாதே பாட்டி, ஸ்வாமிகள் நிச்சயம் நம் வீட்டிற்கு வருவார்" என்று அவளைத் தேற்றினான். அவனை நம்பிய அவள், "அப்படியெனில், அதற்கான ஏற்பாடுகள் ஒன்றையும் நான் செய்யவில்லையே" என்றாள். அவனும்," நீ  ஓய்வெடு பாட்டி, நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன்" என்று கூறி பூஜைக்கு வேண்டியவற்றையும், மற்ற எல்லா வேலைகளையும் விரைவாகச் செய்து முடித்தான். 

செம்மங்காட்டம்மாவின் வீட்டில் ஸ்வாமிகள் வருவதற்கான  எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. ஸ்வாமிகள் வந்துவிட்டதன் அறிகுறியாக அவருடைய சிஷ்யன் சங்கை முழங்கியபோது சங்கிலிருந்து நாதம் எழவில்லை. அதை ஒரு  துர்நிமித்தமாகக் கருதிய ஸ்வாமிகளுக்கு, உடனே குரூரம்மாவின் வீட்டிற்கு வருவதாக வாக்களித்தது  நினைவிற்கு வந்தது. அதனால் குரூரம்மாவின் வீட்டிற்கு சென்று. மீண்டும் சங்கை முழங்கியபோது அதிலிருந்து நாதம் எழுந்தது. இறைவனுடைய ஆணையாக  அதை ஏற்று அங்கே சென்றார். 'உன்னி' வரவேற்றான். கண்ணனை நேரிலே பார்த்திருந்தும்கூட, மாயையால் அவனை அவர் அறியவில்லை. 

எப்போதும், ஸ்வாமிகளின் பூஜைக்கு வேண்டியவற்றை அவரது சிஷ்யர்கள்தான் செய்வது வழக்கம். வேறு எவருக்கும் எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாது. இங்கோ, பூஜைக்கு வேண்டிய அனைத்தும் முறையாக செய்யப்பட்டு, தயாராக இருந்தது. சிஷ்யர்களுக்கு ஒரே ஆச்சர்யம்!

பூஜை ஆரம்பித்தது. ஸ்வாமிகள் கண்ணை மூடிக் கண்ணனைத் தியானித்தார். கண்களை மூடியதும் 'உன்னி' அவர் முன்னே சென்று நின்றான். சிஷ்யர்கள் திகைத்தனர். ஒருவரும் பேசாமல்  மௌனமாய் இருந்ததால், சிஷ்யர்களால் 'உன்னி'யைக் கூப்பிட முடியவில்லை. ஸ்வாமிகள், பூக்களால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். கண்களைத் திறந்தபோது,. எல்லா பூக்களும் 'உன்னி'யின் காலருகே இருந்ததைப் பார்த்தார். அவனை நகர்ந்து அறையின் மூலைக்குச் சென்று நிற்கச் சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடித் தியானித்து அர்ச்சனை செய்தார்.  இப்போதும் பூக்கள் 'உன்னி'யின் பாதங்களில் விழுந்தன. ஸ்வாமிகளுக்கு, குரூரம்மாவிற்காக பகவானே 'உன்னியாக' வந்திருப்பது புரிந்தது. இப்போது அவர் கண் முன் மாயக் கண்ணன் நின்றான். 
அவர் மெய்சிலிர்த்து நமஸ்கரிக்க எழுந்தார். கண்ணன் தடுத்து  நிறுத்தினான். "நமக்குள் இது ரகசியமாக இருக்கட்டும், நான் குரூரம்மாவுடன் அவளது 'உன்னியாகவே' இருக்க விரும்புகிறேன்" என்று கண்ணன்  அவர் காதருகில் கூறுவது கேட்டது. 

பூஜையும் நல்லவிதமாக நடந்து முடிந்தது. ஸ்வாமிகளும் சிஷ்யர்களும் குரூரம்மாவிடம் விடைபெற்றுச் சென்றனர். குரூரம்மாவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்.தாள்.

குரூரம்மாவின் காலத்தில் நாமும் பிறந்திருந்தோமா என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கதையைத் தட்டச்சு செய்யும்போது, பாரதியாரின்  
"நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்., பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதியென்று சொன்னான்" என்ற வரிகள்  நினைவிற்கு வருகின்றது.  

"கண்ணா, மணிவண்ணா, உனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்"!!!

Sunday, December 28, 2014

கண்ணன் கதைகள் (16) - மானவேடன்

கண்ணன் கதைகள் (16) -  மானவேடன், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

வில்வமங்கலம் ஸ்வாமிகள் கண்ணனை நேரிலேயே பிரத்யக்ஷமாகக் கண்டவர். அவர் காலத்தில் மானவேடன் என்று ஒரு ராஜா இருந்தார். அவர் கவிஞர். சிறந்த பக்தரும் ஆவார். ஒரு முறை ராஜா குருவாயூருக்கு தரிசனம் செய்யச் சென்றார். அங்கே வில்வமங்கலம் ஸ்வாமிகளைக் கண்டார். அவரிடம் சென்று வணங்கி, ஸ்வாமிகளே! குருவாயூரப்பனை நேரில் காண எனக்கு வழிகாட்டுங்கள்" என்று வேண்டினார். ஸ்வாமிகள், "மிகுந்த பிரயத்தனத்துடன் முனிவர்கள் அடையும் அந்த மகாபாக்கியத்தை இவ்வளவு சுலபமாகக் கேட்கிறாயே! அது மிகவும் கடினம்" என்று சொன்னார். ராஜா மிகவும் வருந்தி, அழுது,"தாங்கள் எப்படியாவது பகவானைக் காண, அவனை அடைய வழி சொல்ல வேண்டும்" என்று கேட்டார்.

ஸ்வாமிகளும் அவனிடம் கருணை கொண்டு, கண்ணனிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்று சொன்னார். பிறகு, கண்ணனிடம் கேட்டுவிட்டதாகவும், கண்ணனை அதிகாலையில் மகிழ மரத்தடியில் விளையாடும்போது பார்க்கலாம் என்றும் கூறினார். அதன்படி, மானவேடன் கண்ணனைக் கண்டான். அப்பொழுது கண்ணன், தலையில் மயில்தோகையுடனும், வனமாலை, கங்கணங்கள், கிண்கிணிகளால் ஆன அரைஞாண், பீதாம்பரம், தாமரை போன்ற திருவடிகள், மேகத்திற்கு ஒப்பான நிறமுடைய திருமேனியுடன், மயக்கும் அழகுடன் விளையாடுவதைக் கண்டான். உடல் புல்லரிக்க, தன்னை மறந்து ஓடி அப்பனைத் தழுவச் சென்றான். உடனே குருவாயூரப்பன், " வில்வமங்கலம் உன்னிடம் பார்க்கத்தான் சொன்னார், தூக்கச் சொல்லவில்லை" என்று கூறி மறைந்தார். கண்ணனைத் தொட முடியவில்லையே என்று அரசனுக்கு ஏக்கமாக இருந்தது. அப்போது அரசன், தன் கையில் ஒரு மயில்தோகை இருக்கக் கண்டான். அதைக் கண்டு மகிழ்ந்து ஸ்வாமிகளிடம் சென்று நடந்ததைக் கூறினான். ஸ்வாமிகள் கூறியதன்பேரில் அந்தத் தோகையை ஒரு ரத்தினக் கிரீடத்தில் பதித்து, பூஜித்து வந்தான். மேலும், மகிழ மரத்தால் செய்யப்பட்ட கண்ணன் விக்ரகத்தைச் செய்து, அதைக் கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் வைத்து, அதன்முன் அமர்ந்து, பாகவதத்தின் தசம, ஏகாதசி ஸ்காந்தத்தைத் தழுவி, "கிருஷ்ணகீதி" என்ற நாட்டிய நாடகத்தை இயற்றி, அதை பகவானுக்கு அர்ப்பணித்தான்.

துலா மாதம் கடைசி தினத்தன்று அர்ப்பணித்ததால், கோவிலில் இன்றும் அந்த நாளை 'கிருஷ்ணகீதி தினம்' என்று கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் கிருஷ்ணகீதியை நாட்டிய நாடகமாக நடித்து ஆடுவார்கள், கிருஷ்ணராக நடிப்பவர் அந்த மயில்தோகை பதித்த கிரீடத்தைத் தரித்திருப்பார். ஸ்ரீ அப்பனை வழிபட்டால் யோகமும் க்ஷேமமும் தேடி வரும் என்பதைக் கண்கூடாக இன்றும் காணலாம்.

Saturday, December 27, 2014

கண்ணன் கதைகள் (15) - இரு கண்கள்

கண்ணன் கதைகள் (15) - இரு கண்கள், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

பூந்தானம் நம்பூதிரி சிறந்த பக்தர். படிப்பறிவு இல்லாதவர். பக்தியுடன் இறைவன் பெயரில் தா மனதிற்குத் தோன்றியபடி மலையாளத்தில் சிறு சிறு கவிதைகள் எழுதுவார். ஒரு சமயம் அவர் கண்ணனைப் பற்றிய பாடல்களை எழுதி, மேல்பத்தூர் நாராயண பட்டத்திரியிடம் கொடுத்து, தயவு செய்து இதில் தவறு ஏதும் இருந்தால் திருத்தித் தாருங்கள் என்று சொன்னார். நாராயண பட்ட
த்திரி தான் சிறந்த அறிவாளியென்ற கர்வத்தில், இதில் நிறைய இலக்கணப் பிழை இருக்கிறது, படிப்பறிவு இல்லாதவன் எழுதுவது போல் இருக்கிறது” என்று ஏளனமாகக் கூறினார். பூந்தானம் மிகுந்த வருத்தத்துடன் சென்று விட்டார். அவர் மனம் கலங்கியது. அவர் வருத்தத்தை குருவாயூரப்பனால் சகிக்க முடியவில்லை. நாராயண நம்பூதிரியின் ரோகத்தின் உபத்திரவத்தை அதிகப்படுத்தினார். ரோகத்தின் அவஸ்தையில் அவர் அலறினார்.

அடுத்த நாள் நாராயண பட்டத்திரியின் வீட்டிற்கு ஒரு அழகிய இளைஞன் வந்தான். நீங்கள் இயற்றிய நாராயணீயத்தைக் கேட்பதற்காக வந்திருக்கிறேன், படியுங்கள் என்று சொன்னான். பட்டதிரியும் மகிழ்ச்சியுடன் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கப் படிக்க, பல இடங்களில் பிழை இருக்கிறது என்று அந்த இளைஞன் சொல்லிக் கொண்டே வந்தான். பட்டத்திரி, “இத்தனை தவறுகளைச் சொல்லும் நீ யார்?” என்று கேட்டார். உடனே அந்த இளைஞன் மறைந்தான். புல்லாங்குழலை ஊதிக்கொண்டு அங்கே குருவாயூரப்பன் காட்சி அளித்தார். மேலும், “நாராயண நம்பூதிரியின் பக்தியை விட பூந்தானத்தின் பக்தியின் மேல் எனக்கு விருப்பம் அதிகம், அவரது பாடல்களில் இலக்கணம் இல்லாவிட்டாலும் பக்தி இருக்கிறது, பூந்தானத்திடம் மன்னிப்பு கேள், உன்னுடைய ரோகத்தின் உபத்திரவம் குறையும்” என்று கூறி மறைந்தார். 


உடனே நாராயண பட்டத்திரி, தன்னுடைய வித்யா கர்வத்தை எண்ணி வெட்கி, பூந்தானத்திடம் மன்னிப்பு கேட்டார். மேலும், அவரால் தனக்கு அப்பனின் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ந்து அவருக்குத் தன் மோதிரத்தையும் பரிசாக அளித்தார். நமது இந்த நட்பின் அடையாளமாக இந்த மோதிரம் எப்போதும் உங்கள் விரலிலேயே இருக்கவேண்டும்,அந்தக் குருவாயூரப்பனே நேரில் வந்து கேட்டாலொழிய வேறொருவருக்கும் தரக் கூடாது என்று அன்புக் கட்டளையிட்டார். அதனால்தான் அந்த மோதிரத்தைக் கொள்ளையர்கள் பார்த்துவிடக் கூடாது என்றும், மாங்காட்டச்சனிடம் அதைத் தரவும் தயங்கினார் பூந்தானம். இப்போது புரிகிறதா? முந்தைய கண்ணன் கதையில் அவர் ஏன் தயங்கினார் என்று? கண்ணனுக்கு பூந்தானம் நம்பூதிரியும், நாராயண பட்டத்திரியும் இரு கண்களைப் போன்றவர்கள் என்பது  இதிலிருந்து விளங்குகிறது. பின்னாளில் “ஞானப்பான” என்ற சிறந்த காவியத்தையும் பூந்தானம் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, December 26, 2014

கண்ணன் கதைகள் (14) - மோதிரம்

கண்ணன் கதைகள் (14) -  மோதிரம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

பூந்தானம் நம்பூதிரி என்பவர் சிறந்த பக்தர். அவர் தினமும் தனது ஊரிலிருந்து காட்டு வழியே தொலைதூரம் நடந்து குருவாயூருக்குச் சென்று அப்பனைத் தரிசனம் செய்வார். அவ்வாறு செல்கையில் ஒரு நாள் வழியில் சில கொள்ளைக்காரர்கள் அவரைத் தடுத்துத் தாக்கினர். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார்கள். அவர் மனமோ, தன் விரல்களில் உள்ள மோதிரத்தை அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று பயந்தது. ஆபத்தினை உணர்ந்த அவர், கண்களை மூடி “குருவாயூரப்பா குருவாயூரப்பா,” என்று உரத்துக் கூறினார். சிறிது நேரத்தில் புதியதான மலரின் மணம் காற்றில் வீசியது. கண் திறந்து பார்த்தபொழுது மாங்காட்டச்சன் என்ற திவான் குதிரைமேல் வேகமாக வாளைச் சுழற்றிக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் கொள்ளையர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். மனம் நெகிழ்ந்த பூந்தானம் உமக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்று வினவ, அவரும் உன்னுடைய கையில் இருக்கும் மோதிரத்தை எனக்குக் கொடு என்று கூறினார். மோதிரம் களவு போய்விடக் கூடாது என்று பயந்த பூந்தானம் இப்போது தயங்கி, திகைத்து, செய்வதறியாது அந்த மோதிரத்தை திவானுக்குப் பரிசாக அளித்தார். திவான் அவரைத் தன் குதிரையில் ஏற்றிக் கொண்டு குருவாயூர் எல்லையில் விட்டுவிட்டுச் சென்றார்.

அதே நேரம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அப்பன், “அர்ச்சகரே! என் கையில் ஒரு மோதிரம் இருக்கும், அதைப் பூந்தானத்திடம் கொடுத்துவிடுங்கள், கொள்ளையர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்ற மாங்காட்டச்சன் உருவில் சென்று அவரிடம் இருந்து விளையாட்டாக மோதிரத்தைப் பெற்றேன்” என்று கூறினார்.

பூந்தானம் குருவாயூர்க் கோயிலை நெருங்கும்போது, அர்ச்சகர் ஓடி வந்து பூந்தானத்தின் காலில் விழுந்தார். தன் கனவில் அப்பன் சொன்னதைக் கூறி மோதிரத்தை அவரிடம் கொடுத்தார். மோதிரத்தைப் பார்த்த பூந்தானத்திற்குப் புல்லரித்தது. முந்தைய இரவு மாங்காட்டச்சனிடம் கொடுத்த அதே மோதிரம்தான் அது!! தன்னைக் காப்பாற்ற குருவாயூரப்பனே மாங்காட்டச்சனாக வந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.

அது சரி, பக்தியைத் தவிர வேறொன்றும் அறியாத, பொருட்களில் பற்றற்ற பூந்தானத்திற்கு மோதிரம் களவு போகக் கூடாது என்று 
ன் தோன்றியது? தன்னைக் காப்பாற்றியவருக்கு அதைப் பரிசளிக்க ஏன் தயங்கினார்? நாளை வரை பொறுத்திருங்கள்.

Thursday, December 25, 2014

கண்ணன் கதைகள் (13) - கயிறா? கதலியா?

கண்ணன் கதைகள் (13) -  கயிறா? கதலியா?,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு ஏழைப் பெண்மணி தென்னை மட்டையிலிருந்து கயிறு பிரித்து வியாபாரம் செய்து வந்தாள். அவளுக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. மிகவும் வருந்திய அவள் குருவாயூரப்பனிடம் தனக்குக் குழந்தை உண்டானால் கயிற்றுப் பிரியால் துலாபாரம் செய்வதாய் வேண்டிக் கொண்டாள். 

சிறிது நாட்களிலேயே அவள் கருவடைந்தாள். வியாபாரமும் செழிக்கத் தொடங்கியது. குழந்தைக்கு ஆறு மாதமானதும் பிரார்த்தனையை நிறைவேற்ற குருவாயூர் சென்றாள். இப்போது வசதியாய் இருப்பதால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று முடிவு செய்தாள். குழந்தையைத் துலாபாரத் தட்டில் கிடத்தி, மற்றொரு தட்டில் கதலிப் பழத்தை வைத்தார்கள். குழந்தையின் எடையை விட பத்து மடங்கு கதலியை வைத்தும், தட்டு சமநிலையை அடையவில்லை. கோவில் சிப்பந்தி அவளிடம், “ஏதோ தப்பு நடந்திருக்கிறது, என்ன பிரார்த்தித்தாய்?” என்று கேட்டனர். அவளும், “ஏழையாய் இருக்கும் சமயம் கயிறு வேண்டிக் கொண்டேன், இப்போது அவன் அருளால் வசதி பெருகிவிட்டது, அதனால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று செய்தேன்” என்று கூறினாள். கோவில் சிப்பந்திகள்,“ உன்னிடம் எவ்வளவு கோடி இருந்தாலும், பிரார்த்தித்த வேண்டுதலையே அப்பன் ஏற்பான்” என்று கூறினார்கள். பழங்களை இறக்கிவிட்டு கயிற்றை ஏற்றினார்கள், என்ன ஆச்சர்யம்! தராசு கீழே இறங்கியது. அப்பன் பொருட்களில் உயர்வு, தாழ்வைப் பார்ப்பதில்லை, அன்புடன் சமர்ப்பிக்கும் எதையும் ஏற்பான் என்பதற்கு இந்த லீலை உதாரணம்.

Wednesday, December 24, 2014

கண்ணன் கதைகள் (12) - நிவேதனம்

கண்ணன் கதைகள் (12) -  நிவேதனம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

யசோதை கண்ணனை வெளியே எங்கும் போகக் கூடாது என்று சொல்லிவிட்டுத் தயிர் கடையச் சென்றுவிட்டாள். சிறிது நேரம் சாதுவாக இருந்த கண்ணன்., நண்பர்கள் விளையாடுவதைக் கண்டவுடன் மெதுவே வீட்டை விட்டு வெளியேறினான். அவனைக் கண்ட நண்பர்கள் மிக மகிழ்ந்து, “கண்ணா, வா வழக்கம்போல் வெண்ணை தின்னச் செல்லலாம்” என்று கூப்பிட்டார்கள்.

கோபிகைகள் அனைவரும் கூடிப்பேசி, கண்ணன் வெண்ணை திருட வருவான் என்பதால் உரியில் வெண்ணைப் பானையை வைத்துவிட்டு, தொட்டால் சத்தம் வரும்படியாக மணியைக் கட்டியிருந்தார்கள். பிறகு நிம்மதியாக வேலை செய்யச் சென்றுவிட்டா
ர்கள். கண்ணனும் நண்பர்களும் மெதுவே ஒரு வீட்டில் நுழைந்தனர். உரியில் வெண்ணை இருப்பதைப் பார்த்த கண்ணன், அதில் மணி கட்டியிருப்பதையும் பார்த்து விட்டான். அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அந்த மணியிடம்,“மணியே! நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அடிக்காதே” என்று சொல்ல மணியும் சம்மதித்தது. 

கண்ணன், உரியிலிருந்து ஒவ்வொரு பானையாக இறக்கி நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, கடைசியாக இருந்த பானையில் கை விட்டு வெண்ணையை எடுத்து வாயருகே கொண்டு சென்றான். அதுவரை சப்திக்காமல் இருந்த மணி, இப்போது கணகணவென்று ஒலிக்கத் துவங்கியது. கண்ணன் வேகமாகக் கீழே குதித்துவிட்டு மணியிடம், "ஏ மணியே! ஒலிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இப்போது நான் உண்ணும்போது ஏன் ஒலிக்கிறாய்?" என்று கேட்டான். மணியோ,“கண்ணா, மணிவண்ணா, பலப்பல யுகங்களாக, உனக்கு நிவேதனம் செய்யும்போது நான் ஒலி எழுப்புவது வழக்கம்தானே, இன்று நீ உண்ணும்போது எப்படி ஒலிக்காமல் இருப்பேன்?” என்றது. சத்தம் கேட்டு கோபிகை வரவே அனைவரும் ஓடிச் சென்றார்கள். மெதுவே அடுத்த வீட்டில் நுழைந்தார்கள். அங்கும் உரியில் மணி கட்டியிருந்தது. இப்போது கண்ணன் ஒரு கையால் மணியின் நாக்கை ஒலிக்காதவாறு பிடித்துக் கொண்டு மறு கையால் வெண்ணை உண்டுவிட்டு ஓடினான். இடையர்கள் அனைவரும் ஓடுவதைக் கண்ட கோபிகைகள், தங்களுடைய யோசனையால் பயந்து கண்ணன் ஓடுவதாக நினைத்தனர். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது வெண்ணையைக் காணாமல், கண்ணனின் லீலையை நினைத்து வியந்து மகிழ்ந்தனர்.

Tuesday, December 23, 2014

கண்ணன் கதைகள் (11) - சதுரங்க விளையாட்டு

கண்ணன் கதைகள் (11) -  சதுரங்க விளையாட்டும் அம்பலப்புழா பால் பாயஸமும், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கேரளத்திலுள்ள அம்பலப்புழா, ‘தென்னகத்து துவாரகை' என்று பக்தர்களால் போற்றப்படுகிறது அம்பலப்புழா கிருஷ்ணர் கோயிலை தேவ நாராயணன் தம்புரான் என்ற மன்னன் கட்டியதாக வரலாறு. மூலவர் இங்கு குழந்தை கிருஷ்ணராகக் காட்சி தருகிறார். திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது குருவாயூர் உற்சவ மூர்த்தியை இங்கு வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலின் நைவேத்தியமான "அம்பலப்புழா பால் பாயஸம்" மிகவும் பிரசித்தி பெற்றது. குருவாயூரில் காலையில் பால் பாயசம் சாப்பிடும் கண்ணன், மதியம் அம்பலப்புழாவிற்குப் பால் பாயசம் சாப்பிட வருவதாக ஐதீகம். அம்பலப்புழா பால் பாயஸத்தைப் பற்றிய சுவையான கதை ஒன்று உண்டு.

கண்ணனின் சதுரங்க விளையாட்டும் அம்பலப்புழா பால் பாயஸமும்:

முன்னொரு சமயம் அம்பலப்புழையை ஆண்டு கொண்டிருந்த அரசன் முன் கிருஷ்ணர் ஒரு முனிவர் வடிவில் தோன்றினார். “இந்த நாட்டில் யாரேனும் என்னை சதுரங்கம் ஆடி ஜயிக்க முடியுமா? என்று சவால் விட்டார். அரசனுக்கு சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் மகிழ்ச்சியுடன் அரசனே சவாலை ஏற்றான்.

எந்த ஒரு சவாலிலும் பரிசு என்ன என்பதை முன்னமேயே முடிவு செய்ய வேண்டும் அல்லவா? அதனால் அரசன் முனிவரிடம், “சவாலில் நான்தான் ஜயிப்பேன், ஒரு வேளை நீர் ஜயித்தால் பரிசாக என்ன வேண்டும் என்பதை நீரே முடிவு செய்யும்” என்று சொன்னான். முனிவர், “என்னைப் போன்ற முனிவர்களுக்கு வேறென்ன தேவையாக இருக்க முடியும்? எனக்கு அரிசிதான் தேவை. ஆனால் நான் சொல்லும் முறையில் அரிசியைத் தர வேண்டும். முதல் கட்டத்தில் 1 அரிசி, இரண்டாவது கட்டத்தில் 2 அரிசி,, மூன்றாவது கட்டத்தில் 4 அரிசி, நான்காவது கட்டத்தில் 16 அரிசி என்ற ரீதியில் அரிசியைத் தர வேண்டும்” என்று சொன்னார்.

அரசனும், இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தில் வெறும் அரிசியைக் கேட்கிறீர்களே, வேறு ஏதாவது கேளுங்கள் என்று சொல்ல முனிவர் வேறு எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அரசனுக்கு அந்தக் கோரிக்கையில் வருத்தம் இருப்பினும், அரிசிதானே என்று சந்தோஷமாக ஆடத் துவங்கினான். சதுரங்க விளையாட்டு துவங்கியது, கண்ணனுடைய விளையாட்டும் தான்!! அரசன் ஆட்டமிழந்தான். சொன்னபடி முனிவருக்குப் பரிசு தரும் நேரம் வந்தது. கட்டத்தில் முனிவர் சொன்னபடி அரிசியை வைக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அரசனுக்குத் தன் தவறு புரிந்துவிட்டது. முனிவரின் உண்மையான கோரிக்கையை உணர்ந்தான். 20-வது கட்டம் வரும்போது அரிசி அளவு 10 லட்சமாக (மில்லியன்) உயர்ந்தது. 40-வது கட்டத்தில் ஒரு மில்லியன் மில்லியனாக ஆயிற்று. இவ்வாறு ஒரு பெருக்குத் தொடர்ச்சியின்(geometric progression) வளர்ச்சியாக வளர்ந்துகொண்டே போனது. களஞ்சியத்தில் இருந்த அரிசி, நெல் அனைத்தும் தீர்ந்து, பக்கத்து ராஜ்ஜியங்களில் இருந்த நெற்குவியலையும், அரிசியையும் கொட்டியாயிற்று. இப்போது, அரசன் முனிவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தான். 64 கட்டங்கள் கொண்ட சதுரங்கத்தில் நிரப்ப ((2 ^ 64) - 1) அதாவது 18.446.744.073.709.551.615 டிரில்லியன் டன் கணக்கில் அரிசி தேவைப்பட்டது. அரசன் கலங்கினான். என்ன செய்வது என்று புரியவில்லை.
அரசனின் சங்கடத்தைக் கண்ட முனிவர், கிருஷ்ணர் வடிவில் அரசன் முன் தோன்றினார். அரிசியை உடனடியாகக் கொடுக்க வேண்டாம், கடன் தீரும்வரை அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பால் பாயஸம் செய்து கொடு என்று கூறினார். அரசனும் கர்வத்தை ஒழித்து, தனது சொத்துக்கள் அனைத்தையும் கோவிலுக்கே கொடுத்தான். இன்றளவும் கோயிலில் அரிசியால் செய்யப்பட்ட பால் பாயஸம் கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, வரும் பக்தர்களுக்குப் பிரஸாதமாகக் கொடுக்கப் படுகிறது.

Monday, December 22, 2014

கண்ணன் கதைகள் (10) - காசுமாலை

கண்ணன் கதைகள் (10) - காசுமாலை,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

சில வருடங்களுக்கு முன்பு ஒரு  பக்தர் தனது மனைவியுடன் தரிசனத்திற்காக குருவாயூர் சென்றார். நிர்மால்ய தரிசனம் செய்ய  விருப்பம் கொண்ட அவர்கள், அதிகாலையில் குளத்தில் ஸ்நானம் செய்துவிட்டுப் படி ஏறும்போது அங்கே  கீழே  ஒரு தங்கக் காசுமாலை இருக்கக் கண்டார். சுற்றுமுற்றும் யாருமில்லை. அதனால் அம்மாலை யாருடையது என்று விசாரிக்கக் கூட முடியவில்லை.  விடிந்ததும் விசாரித்துக் கொடுத்துவிடலாம் என்று எண்ணி, தமது பையில் வைத்துக் கொண்டார். சிறிது நேரத்திலேயே அவருக்கு தலைசுற்றலும், மயக்கமும் உண்டானது. அவரது மனைவி, "என்ன ஆயிற்று?" என்று  கேட்டார். அவரும், "என்னமோ  போல் இருக்கிறது, ஒன்றும் புரியவில்லை" என்று கூறினார். "காசுமாலையை உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்" என்று மனைவி சொன்னார். இந்த இருட்டில் யாரிடம் கொடுப்பது, விடிந்ததும் தேவஸ்தானத்தில் கொடுத்துவிடலாம்" என்று சொன்ன அவர், அதன்படியே விடிந்ததும் தேவஸ்தானத்தில் அந்தக் காசுமாலையை ஒப்படைத்து, அது குளத்துப் படியில் கிடந்ததையும் சொன்னார். உடனேயே அவரது தலைசுற்றலும், மயக்கமும் குறைந்தது. பிறகு தரிசனம் செய்தார். 

காசுமாலையைத் தொலைத்தவரும், தேவஸ்தானத்தில் முறையிடச் சென்றபோது, மாலையைப் பெற்றார். இவ்வாறு, தொலைத்தவரும் தனது பக்தரானதால், அவரது மனக்கிலேசத்தை நீக்க வேண்டி, இந்த பக்தருக்கு உபாதையை உண்டு  பண்ணி, பிறகு நீக்கி, இருவருக்கும்  சந்தோஷத்தை அளித்தார்.  

குருவாயூரப்பன், இவ்வாறு கலியுகத்திலும் பல அற்புதங்கள் செய்து, பிரத்யக்ஷ தெய்வமாக  விளங்குகிறார். 

Sunday, December 21, 2014

கண்ணன் கதைகள் (9) - உதவி சமையற்காரன்

ஒரு சமயம், ஒரு பக்தர் 100 படி அரிசி சமைத்து கோயிலில் அன்னதானம் செய்ய விரும்பினார். குருவாயூர்க் கோயிலில், வெளியாட்கள் சமைக்கவோ, சமைத்துக் கொண்டு வந்து கொடுக்கவோ முடியாது. கோயிலின் மடப்பள்ளியில் கீழ்சாந்திகள் (உதவி புரிபவர்) தான் சமைப்பார்கள். 

கோவிலில் மொத்தம் இரண்டு கீழ்சாந்திகளே இருந்தனர். அதிலும் ஒரு கீழ்சாந்தி விடுப்பில் சென்றிருந்தார். மல்லிசேரி நம்பூதிரி என்ற மற்றொரு கீழ்சாந்திதான் ஒருவனாக எவ்வாறு அவ்வளவு சமைப்பது என்று மிகுந்த கவலை கொண்டார். எப்படி அவ்வளவு ஏற்பாடுகளைச் செய்வது என்ற கவலையுடன் தூக்கமில்லாமல் இரவைக் கழித்தார். இரவு முழுவதும் நாராயண நாமத்தை உச்சரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. 

அடுத்த நாள், அதிகாலையிலேயே கோவிலுக்குச் சென்றுவிட்டார். வேலைகளைச் செய்யத் தொடங்கினார். விடுமுறையில் சென்றிருந்த கீழ்சாந்தி அவர்க்கு முன்பாகவே வந்து விருந்து தயார் செய்ய ஆரம்பித்திருந்தார். சமையல் முடியும் தருவாயில் இருந்ததைப் என்று பார்க்க நிம்மதியாக இருந்தது. சமையல் முடிந்த பிறகு அந்த கீழ்சாந்தி நாராயண சரஸில் குளித்து விட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றார். வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. விருந்தும் நல்லபடியாகவே முடிந்தது. 

அடுத்த நாளும் அவர் வரவில்லை. அவரை அழைத்து வரச் சொல்லி ஒருவரை அனுப்பினார். என்ன ஆச்சர்யம்! விடுமுறையில் சென்ற கீழ்சாந்தி சென்றது முதல் படுத்த படுக்கையாக இருப்பதாகத் தகவல் வந்தது. நம்பமுடியாததாய் இருந்தாலும் அவருக்கு உதவியாளராக வந்தது அந்தக் கண்ணனே என்பது மல்லிசேரிக்குப் புரிந்தது. குருவாயூரப்பனின் திருவிளையாடலை எண்ணி மிகவும் வியந்து மகிழ்ந்தார். நம்பியவரைக் காக்க இறைவன் எந்த உருவிலும் வருவார்!!

Saturday, December 20, 2014

கண்ணன் கதைகள் (8) - ஞானிக்கும் பக்தி அவசியம்

கண்ணன் கதைகள் (8) - ஞானிக்கும் பக்தி அவசியம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஆதி சங்கரர் சிறந்த ஞானி, வேதாந்தி. ஒரு சமயம், அவர் கேரளாவிலுள்ள காலடியில் இருந்து சிருங்கேரி சென்று கொண்டிருந்தார். குருவாயூர் வழியாகச் செல்ல நேரிட்டது. வழியில் நாரதர் எங்கோ வேகமாகச் செல்வதைக் கண்டு அவரிடம் , “ நாரதரே! எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டார். நாரதர், “ இன்று ஏகாதசியல்லவா, அதனால் குருவாயூரப்பனை ஸேவிக்கச் செல்கிறேன், நீங்களும் வாரும்” என்று கூறினார். ஆதிசங்கரர், “பாமரர்கள் தான் விக்ரஹ ஆராதனையும், நாம ஜபமும் செய்ய வேண்டும். ஆத்ம ஞானிகளுக்குத் தேவையில்லை” என்று சொல்லிவிட்டுத் தன் பயணத்தை ஆகாய மார்க்கமாகத் தொடர்ந்தார். குருவாயூரப்பனோ “ஞானிகளுக்கும் பக்தி தேவை” என்று அவருக்கு உணர்த்த விரும்பினார்.

அப்போது குருவாயூர்க் கோவிலில் ‘சீவேலி’ ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. குருவாயூர்க் கோயிலை ஆதிசங்கரர் கடக்கும்போது, திடீரென்று வானிலிருந்து வடக்கு வாசலில் சீவேலி சென்றுகொண்டிருந்த யானையின் முன்னே கீழே விழுந்தார். அனைவரும் குழப்பமடைந்து, சீவேலி ஊர்வலத்தை நிறுத்தினர். தனது முட்டாள்தனமான செயலையும், தவற்றையும் உணர்ந்த சங்கரர் மனம் வருந்தி, அப்பனிடம் மன்னிப்பு கேட்டார். அவர் முன் தோன்றிய குருவாயூரப்பன், "ஞானிக்கும் பக்தி அவசியம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். பணிவுடன் “கோவிந்தாஷ்டகம்”, “பஜகோவிந்தம்” முதலியவற்றால் அப்பனை ஆராதித்தார். மேலும் சில நாட்கள் குருவாயூரிலேயே தங்கியிருந்து வழிபட்டார். 
கோவிலின் நடைமுறை விதிகளை அமைத்தார். நாராயணன் நம்பூதிரி என்ற அப்போதைய கோவிலின் தாந்த்ரீகர் அந்த விதிமுறைகளை “தாந்த்ரீக” முறைப்படி எழுதி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. கோவிலின் தெய்வீகத் தன்மையை அதிகரிக்க “மண்டல விளக்கு” முறையை நிறுவினார். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 41 நாட்கள் இந்த பூஜை நடைபெறும். ஏகாதசியன்று நடைபெறும் “விளக்கேற்றம்” மிகவும் சிறப்பானதாகும். அன்றைய தினம் தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்தார் என்று சொல்லப்படுகிறது.

இன்றும் குருவாயூரப்பன் திருவீதியுலா வரும்போது ஆதிசங்கரர் வழிபட்ட இடத்தில் மேளதாளங்கள் இசைக்காமல் அமைதியாகக் கடந்து செல்வர். அப்போது குருவாயூரப்பனிடம் ஆதிசங்கரர் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம்.

Friday, December 19, 2014

கண்ணன் கதைகள் (7) - அம்பரீஷ சரித்திரம்

கண்ணன் கதைகள் (7) - அம்பரீஷ சரித்திரம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ராமபிரானின் முன்னோர்களில் ஒருவரான இக்ஷ்வாகு மிகவும்  புகழ் வாய்ந்தவர். அதனால் அந்த வம்சமே 'இக்ஷ்வாகு வம்சம்' என்று  பெயர் பெற்றது. இக்ஷ்வாகுவின் தந்தை  வைவஸ்வத மனு. வைவஸ்வத மனுவுக்கு பத்து புத்திரர்கள்.  அவர்களில் ஒரு பிள்ளை நபகன். அவனுடைய பிள்ளை நாபாகன். அவனுக்கு அம்பரீஷன் என்ற மகன் பிறந்தான். 

அம்பரீஷன் சிறந்த  பக்திமான். அவன் ஏழு கடல்களால் சூழப்பட்ட பூமிக்குத் தலைவனாக இருந்தான். இருப்பினும், விஷ்ணுவிடத்திலும், அவரது பக்தர்களிடத்திலும் அன்பு கொண்டு வாழ்ந்து வந்தான்.விரதங்களை மிகுந்த சிரத்தையுடனும் பக்தியுடனும் அனுஷ்டித்து வந்தான். விஷ்ணுவிடத்தில் கொண்ட பக்தியால், அனைத்து கர்மங்களையும் ஒன்றுவிடாமல் செய்து வந்தான். அவன் கேட்காமலேயே, அவனையும் அவன் நாட்டையும் காப்பதற்கு, ஆயிரக்கணக்கான முனைகளையுடைய சக்ராயுதத்தை விஷ்ணு அளித்தார்.  

மகாவிஷ்ணுவிற்கு உகந்த  நாளான ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்பதை நன்கு அறிந்த அவன், ஏகாதசி விரதத்தை விவரம் தெரிந்த  நாள் முதல் கடைப்பிடித்து வந்தான். ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று இரவு முதல் உண்ணாமல் இருந்து, மறுநாள் ஏகாதசி முழுவதும் உபவாசமிருந்து விஷ்ணுவைப் பூஜித்து, அதற்கு அடுத்த  நாள் துவாதசியன்று அதிதிகளுக்கு உணவளித்து,  பின் பாரணை செய்வது (உணவு உண்பது) என்ற நியதி மாறாமல் பின்பற்றி வந்தான். 

ஒரு முறை அம்பரீஷன், யமுனைக் கரையில் உள்ள மதுவனத்தில், நற்குணங்கள் கொண்ட தன் மனைவியுடன், தியானம் செய்ய வந்தான். அறுபது கோடிப் பசுக்களை வேதமறிந்தவர்களுக்குத் தானம் செய்தான். ஒரு வருட காலம் துவாதசி விரதத்தை அனுஷ்டித்துத் தங்களைப் பூஜித்து வந்தான். விரதம் முடிந்து பாரணை செய்ய வேண்டிய நாளில் துர்வாசர் அம்பரீஷனின் மதுவனத்திற்கு வந்தார். அம்பரீஷன் அவரிடம் போஜனம் செய்ய வேண்டினான். விரைவில் கோபம் கொள்ளும் அவரும் சம்மதித்து, மெதுவே யமுனை நதிக்கு நீராடச் சென்றார். வெகு நேரமாகியும் நீராடச் சென்ற  முனிவர் வரவில்லை. துவாதசி திதி முடிவடையும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்குள் பாரணையை முடிக்கவேண்டும் இல்லையேல் ஏகாதசி விரதம் தவறிவிடும். அதிதி போஜனமும் ஆகவில்லை. செய்வதறியாமல்  திகைத்த அவன் கற்றறிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டான்.   அவர்களும், "துர்வாசர் வராமல் பாரணை செய்வது தவறு. துவாதசி திதி முடிய சிறிது நேரமே உள்ளது.  அந்த நேரத்திற்குள் சிறிது துளசி தீர்த்தம் உட்கொண்டால் பாரணை செய்த மாதிரியாகிவிடும். முனிவர் வந்தபின் அவருக்கு போஜனம் செய்வித்துப் பிறகு உண்ணலாம்" என்று கூறினர். அம்பரீஷன், வேறு வழியின்றி துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முடித்துக் கொண்டான்.  முனிவருக்காகக் காத்திருந்தான்.  

அரசனான அம்பரீஷன், பாரணை செய்யவேண்டிய திதி முடியப்போகிறதே என்ற கவலையில் தீர்த்தத்தைக் குடித்துப் பாரணையை முடித்தான். ஞான திருஷ்டியால் அதை அறிந்த முனிவர், கோபத்துடன் கடுஞ்சொற்களால் அம்பரீஷனைத் தூஷித்து, " என்னை நீ அவமதித்து விட்டாய்" என்று கூறி, தன்னுடைய ஜடையைப் பிய்த்து எறிந்து, அதிலிருந்து ‘க்ருத்யை’ என்ற துர்தேவதையை உண்டாக்கி, "அம்பரீஷனை அழித்துவிட்டு வா" என்று ஏவினார். கையில் கத்தியுடன், உலகங்களை எரிக்கும் அந்த துர்தேவதையை நேரில் கண்ட அம்பரீஷன் சிறிதும் நகராமல் இருந்தான். சுதர்சன சக்கரமானது, அவனுக்கு நேர்ந்த தீங்கைப் பார்த்து அந்த க்ருத்யையை அழித்து, துர்வாசரைப் பின்தொடர்ந்து சென்றது. பயத்தினால் முனிவர் எல்லா உலகங்களுக்கும் ஓடினார். எல்லா இடத்திற்கும் சக்ராயுதம் பின்தொடர்ந்ததைக் கண்டு பிரமனை சரணடைந்தார். காலச்சக்கரத்தை யாரால் எதிர்க்க முடியும் என்று பிரம்மதேவர் முனிவரை அனுப்பிவிட்டார். பிறகு, பரமசிவனிடம் சென்றார். அவரும் தங்களை சரணடைய உபதேசம் செய்தார். கடைசியாக முனிவர் வைகுண்டத்தை அடைந்து, எங்கும் நிறைந்த மகாவிஷ்ணுவை சரணடைந்தார். விஷ்ணுவோ,"முனிவரே! நான் பக்தர்களுக்கு அடியவன். அறிவும், தவமும் அகங்காரமில்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் அம்பரீஷனையே சரணடையுங்கள்" என்று சொல்லிவிட்டார். முனிவரும் அம்பரீஷனின் கால்களைப் பற்றினார். அவன் விலகி, சக்ராயுதத்தைத் துதிக்க, அது திரும்பிச் சென்றது. இதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. அம்பரீஷனும். ஒரு வருடம் துர்வாசரை எதிர்பார்த்து, உண்ணாமல் விரதமிருந்து, அவர் வந்ததும் அவருக்கு உணவளித்து, வழியனுப்பி, பிறகு பாரணை செய்தான். துர்வாசரும், அம்பரீஷனின் பக்தியையும், தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் குணத்தையும் மெச்சி அவனை ஆசீர்வதித்தார்.

அம்பரீஷன், முன்பு இருந்ததைவிட அதிகமாய் மகாவிஷ்ணுவிடம் பக்தி கொண்டு முக்தி அடைந்தான். 

நாமும் ஏகாதசியன்று விரதமிருந்து மகாவிஷ்ணுவைத் தியானிப்போம். துவாதசி பாரணை தளிகை பற்றி அறிய இங்கே சொடுக்கவும். http://shanthisthaligai.blogspot.in/2012/01/dwadasi-paaranai.html

Thursday, December 18, 2014

கண்ணன் கதைகள் (6) - சிவப்புக் கௌபீனம்

கண்ணன் கதைகள் (6) - சிவப்புக் கௌபீனம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

முந்தைய பதிவான “கண்ணன் கதைகள் (5)” -ல் சிவப்புக் கௌபீனம் பற்றிப் படித்திருப்பீர்கள். அதென்ன சிவப்புக் கௌபீனம்? குருவாயூரப்பனின் லீலைகளில் அதுவும் ஒன்றாகும். 

முன்னொரு சமயம் ஒரு வயதான மூதாட்டி இருந்தாள். அவள் குருவாயூர்க் கண்ணனின் தீவிர பக்தை. அவள், ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் குருவாயூரப்பனின் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது வழக்கம். ஒரு நாள் “சீவேலி” தரிசனம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது. இருட்டில் வழி தவறிவிட்டது. மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தாள். அப்போது, ஒரு சிறிய பையன் அவள் முன் தோன்றி, “ பாட்டி, கவலைப் படாதீர்கள். உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்று சொன்னான். மழையில் இருவரும் தெப்பமாக நனைந்து விட்டனர். பேசிக் கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள்.

வீட்டை அடைந்ததும் அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள். அதற்கு அவன் ‘கோபாலன்’ என்று சொன்னான். மூதாட்டி, “ நீ செய்திருக்கும் உதவிக்கு உனக்கு ஏதாவது நான் தர வேண்டும், என்ன வேண்டும்? கேள்” என்று சொன்னாள். அவனும், “ மழையில் என் துணி நனைந்துவிட்டது. எனக்கு உம்முடைய புடவையிலிருந்து ஒரு கௌபீனம் தாருங்கள் போதும்” என்று கூறினான். அவள் சுற்றிப் பார்த்த பொழுது ஒரு சிவப்பு
ப் புடவை இருந்தது. அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கிழித்து அவனிடம் கொடுத்தாள். அவனும் பெற்றுக் கொண்டு சென்றான்.

அடுத்த நாள் காலை, நிர்மால்ய தரிசனத்திற்காக ஸன்னிதியின் கதவைத் திறந்தபோது, மூர்த்திக்கு சிவப்பு வர்ணக் கௌபீனம் கட்டியிருப்பதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். முதல் நாள்  நன்கு அலங்காரம் செய்யப்பட்ட கண்ணன் இப்போது எப்படி கௌபீனத்தோடு காட்சி அளிக்கிறான்? என்று ஆச்சர்யமடைந்தனர்.. கண்ணனின் திவ்ய மேனி அனைவரையும் மயக்கும் வண்ணம் இருந்தது.

வழக்கம்போல் தரிசனத்திற்காக வந்திருந்த மூதாட்டியும் மகிழ்ந்து அனைவரிடமும் முந்தைய நாள் நடந்தவற்றைச் சொன்னாள். தன்னுடைய சிறிது கிழிந்த புடவையையும் காண்பித்தாள். அதன் கிழிந்த பகுதி, குருவாயூரப்பனின் கௌபீனமாக இருப்பதைக் கண்ட அனைவரும் வியந்தனர். மூதாட்டி, இந்த தெய்வீக நாடகத்தையும், குருவாயூரப்பன் தனக்கு அனுக்ரஹம் செய்ததையும் எண்ணியெண்ணி ஆனந்தித்தாள். அன்று முதல் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இரவில் சிவப்புக் கௌபீனம் சாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.

Tuesday, December 16, 2014

கண்ணன் கதைகள் (5) - குசேலரின் கதை

கண்ணன் கதைகள் (5) -  குசேலரின் கதை, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

குசேலோபாக்யானம்

இன்று மார்கழி மாதம் முதல் புதன்கிழமை. மார்கழி மாத முதல் புதன்கிழமை "குசேலர் தினம்" என்று கொண்டாடப்படுகிறது.


ஸாந்தீபனி முனிவரிடம் கண்ணனும், சுதாமா (குசேலர்) என்ற பிராமணரும் ஒன்றாக குருகுலம் பயின்றார்கள். கிருஹஸ்தனான அவர் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி பூண்டிருந்ததால், செல்வங்களில் பற்றற்றவராய்ப் புலன்களை அடக்கி, தன்னுடைய நாட்களைக் கழித்தார். அவருடைய மனைவியும் அவரைப் போன்ற குணங்கள் உள்ளவளாய் இருந்தாள். வறுமையில் குழந்தைகளைப் பேண முடியாததால், ஒரு நாள் அவள் தன் கணவரிடம், லக்ஷ்மீபதியான கிருஷ்ணர் உங்கள் நண்பரல்லவா? வாழ்வதற்குப் பொருளைப் பெற ஏன் அவரை அணுகக்கூடாது? என்று கேட்டாள். பசியின் துன்பத்தாலேயே அவள் அவ்வாறு கூறினாள். செல்வம் கர்வத்தை உண்டாக்கி வாழ்க்கையைக் குலைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தாலும், கண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால், தனது வஸ்திரத்தின் நுனியில் மூன்று பிடி அவலை முடிந்துகொண்டு, காணிக்கையாய் எடுத்துச் சென்றார்.

கிருஷ்ணர் இருக்கும் துவாரகா நகரத்தை அடைந்தார். கிருஷ்ணனுடைய மாளிகைக்குள் நுழைந்ததும் வைகுண்டத்தில் இருப்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். பகவான் கிருஷ்ண
ர், அவரை வரவேற்று உபசரித்ததும் விளக்கமுடியாத ஆனந்தமடைந்தார். கிருஷ்ணர், அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு குருகுலத்தில் நடந்த பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். குருபத்தினிக்கு விறகு கொண்டு வர காட்டுக்குச் சென்றபோது மழையில் நனைந்ததைப் பற்றிப் பேசினார்..

கொண்டு வந்த அவலைக் கொடுக்க வெட்கப்பட்டுத் தயங்கிய குசேலரிடமிருந்து கட்டாயப்படுத்தி அவலை வாங்கி ஒரு பிடியை உண்டார். இரண்டாவது பிடியை எடுத்ததும், “போதும், போதும்” என்று மகாலக்ஷ்மியான ருக்மிணி கிருஷ்ணருடைய கையைப் பிடித்துத் தடுத்தாள். (இதற்குமேல் உண்டால் கொடுப்பதற்குப் பொருள் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்). பக்தர்களுக்கு அடியவனான கிருஷ்ணர், குசேலரை மிகவும் உபசரித்தார். குசேலர், மிகவும் மகிழ்ச்சியுடன் அன்று இரவு கிருஷ்ணருடன் தங்கினார். மறுநாள் பொருள் எதுவும் பெறாமல் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார்.

" பொருள் வேண்டும் என்று கேட்டிருந்தால் கிருஷ்ணன்  கொடுத்திருப்பார். மனைவியிடம் எவ்வாறு சொல்வது?" என்று வழிநெடுக யோசித்துக் கொண்டே சென்றார். அவரது மனம் முழுக்க பகவான் கிருஷ்ணருடைய புன்னகையும், பேச்சுக்களும் நிறைந்திருந்தது. 


அப்போது அவர் பிரகாசம் மிக்க ரத்தினங்களால் விளங்கும் ஒரு மாளிகையை அடைந்தார். க்ஷணநேரம் வழி தவறி வந்து விட்டோமோ என்று திகைத்து, பின்னர் வீட்டினுள் நுழைந்தார். உள்ளே தோழிகள் சூழ, ரத்தினங்களாலும், தங்கத்தினாலும் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கும் தன் மனைவியைக் கண்டார். கிருஷ்ணனுடைய கருணை மிக அற்புதமானது, ஆச்சர்யமானது என்று அறிந்தார்.

ரத்னமயமான மாளிகையில் வசித்துக் கொண்டு இருந்தாலும் அவர் கண்ணனிடமே மனதைச் செலுத்தி மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தார்.

பகவான் கிருஷ்ணரை சந்திக்க குசேலர் அவலை எடுத்துச் சென்றது ஒரு மார்கழி மாத முதல் புதன்கிழமை. அதனால், மார்கழி மாத முதல் புதன்கிழமை "குசேலர் தினம்" என்று கொண்டாடப்படுகிறது. குருவாயூர் கோவிலில் பக்தர்கள் அன்றைய தினம் குருவாயூரப்பனான உன்னிக்கண்ணனுக்கு அவல் ஸமர்ப்பித்து வழிபடுவர். மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று கண்ணனுக்கு அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. வீடுகளில் அன்றைய தினம் "குசேலோபாக்யானம்" (குசேலரின் கதை) பாராயணம் செய்வார்கள். கையகலத்திற்கு ஒரு சிறிய சிவப்பு வஸ்திரம் (கண்ணனின் கௌபீனம் என்று ஐதீகம்) மடித்து வைத்து , அவல், வெல்லம் வைத்து வழிபடுவார்கள். பிறகு அந்த அவலை சிறு சிறு  கிழியாகக் (சிறிய மூட்டையைப் போல்) கட்டி அனைவருக்கும் விநியோகம் செய்வார்கள்.

இந்த கதையைப்  படித்து, அவலும் வெல்லமும் நைவேத்யம் செய்து கண்ணனை வழிபடலாம். பக்தர்களுடைய விருப்பத்தை குருவாயூரப்பன் நிச்சயம் நிறைவேற்றுவான். அது சரி, அதென்ன  சிவப்பு வஸ்திரம்? அதுவும் கண்ணனின்  கௌபீனமா? அடுத்த  கதைக்குப் பொறுத்திருங்கள். 

கண்ணன் கதைகள் (4) - கண்ணனும் முருகனும் நண்பர்கள்

கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,கண்ணன் கதைகள் (4) - கண்ணனும் முருகனும் நண்பர்கள்

கேரளத்தில் இரண்டு நண்பர்கள் ஒன்றாக வசித்து வந்தனர். ஒருவனுக்கு குருவாயூரப்பன் இஷ்ட தெய்வம். மற்றொருவனுக்கு முருகன் இஷ்ட தெய்வம். இருவரும் சேர்ந்து அவர்களது வீட்டில் ஒரு கதளி வாழை மரத்தை நட்டனர். முதல் நண்பன், வாழை மரம் கிழக்குப் பக்கம் குலை தள்ளினால் குருவாயூரப்பனுக்கு ஸமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டான். முருக பக்தனோ மேற்குப் பக்கம் குலை தள்ளினால் முருகனுக்கு ஸமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டான். இருவரும் வாழை மரத்தை நன்கு பாதுகாத்து வந்தனர். வாழை குலை தள்ளும் பருவமும் வந்தது. அது ஆகாயத்தை நோக்கிக் குலை தள்ளியது.

இதனால் நண்பர்களிடையே சண்டை உண்டானது. காய் முற்றி
ப் பழுத்த பிறகும் கூட, குலை எந்தப் பக்கமும் சாயாமல் நின்றது. இருவரும் செய்வதறியாது கலங்கினர். ஒரு நாள் இரவு, முருகன் தனது பக்தனது கனவில் தோன்றி, “ பக்தனே! நீ பழத்தை குருவாயூரப்பனுக்கே ஸமர்ப்பித்துவிடு. அதுவே எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். நீயும் உன் நண்பனுடன் பிரியமாகப் பழகு” என்று கூறி மறைந்தார். உடனே விழித்த அவன், சொப்பனத்தைத் தன் நண்பனிடம் சொன்னான். இருவரும் கதளிப்பழத்தை குருவாயூரப்பனுக்கு ஸமர்ப்பித்தனர்.

இன்றும் குருவாயூரில், துலாபாரத்தின் போது எடைக்கு எடை கதளிப்பழத்தை வேண்டுதலாக ஸமர்ப்பிக்கும் வழக்கம் இருக்கிறது.

Monday, December 15, 2014

கண்ணன் கதைகள் (3) - கொம்பு முளைத்த தேங்காய்

கண்ணன் கதைகள் (3) - கொம்பு முளைத்த தேங்காய்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு கிராமவாசி பல தென்னங்கன்றுகளை நட்டான். தனது தென்னை மரங்களில் இருந்து காய்க்கும் முதல் தேங்காய்களை குருவாயூரப்பனுக்குக் காணிக்கை அளிப்பதாய் வேண்டிக்கொண்டான். மரங்கள் காய்க்கத் தொடங்கிய போது, அவன் மரங்களில் இருந்து முதல் தேங்காய்களைச் சேகரித்து, கோணியில் கட்டிக் கொண்டு குருவாயூர் கோவிலுக்குப் பயணித்தான். 

போகும் வழியில் ஒரு கொள்ளைக்காரன் வழிமறித்து “கோணிப் பையில் உள்ளதைக் கொடுத்துவிடு” என்று மிரட்டினான். கிராமவாசியோ, “இதில் தேங்காய்கள் உள்ளன. அவை குருவாயூரப்பனுக்குச் சொந்தமானவை” என்று கூறி தர மறுத்தான். கொள்ளைக்காரன் அலட்சியமாக, “ குருவாயூரப்பனின் தேங்காய் என்று ஏதாவது இருக்கிறதா? அதற்குக் கொம்புகள் இருக்கிறதா என்ன ? என்று கூறிக் கொண்டே கிராமவாசியின் கைகளில் இருந்து கோணியைப் பற்றி இழுத்தான். தேங்காய்கள் வெளியே சிதறின. அதிசயப்படும்படியாக ஒவ்வொரு தேங்காய்க்கும் கொம்பு முளைத்திருந்தது! திருடன் மனம் திருந்தி, குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்டு, அந்த கிராமவாசியைப் போக விட்டான். கிராமவாசியும் தான் வேண்டிக்கொண்டபடியே தேங்காய்களைக் கோயிலில் காணிக்கையாகக் கொடுத்தான். இன்று கூட பக்தர்கள், கொம்புகள் உள்ள அந்தத் தேங்காய்களை, குருவாயூர்க் கோயிலின் முன் மண்டபத்தில் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

Sunday, December 14, 2014

கண்ணன் கதைகள் (2) - மஞ்சுளாவின் மலர்மாலை

கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள், கண்ணன் கதைகள் (2) - மஞ்சுளாவின் மலர்மாலை

கிழக்கே இருந்து குருவாயூருக்குள் நுழையும் போது முதலில் தென்படுவது அடிப்பகுதியில் பிரம்மாண்டமான கருடனுடன் கூடிய ஒரு பெரிய ஆலமரம். இது “மஞ்சுளால்”, அதாவது மஞ்சுளாவின் ஆலமரம் என்று அழைக்கப்படுகிறது.

வாரியார் வகுப்பைச் சேர்ந்த மஞ்சுளா, மனப்பூர்வமான பக்தியுள்ள பெண். ஒவ்வொரு இரவும், அவள் மலர் மாலைகளைக் கட்டி, குருவாயூர் கோயிலில் கொண்டு கொடுப்பாள். மேல்சாந்தி அம்மாலையை அப்பனுக்கு ஸமர்ப்பிப்பார். ஒரு நாள் அவள் தாமதமாக வந்ததால், கிழக்கு நடையில் உள்ள ஆலமரத்தின் அருகே வரும்போதே கோவில் மூடப்பட்டு விட்டது. கண்களில் நீர் வழிய, மிகுந்த மன வேதனையுடன் அம்மரத்தின் அருகே அவள் நிற்பதைக் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பூந்தானம் நம்பூதிரி கண்டார். அவர், அவளுக்கு ஆறுதல் கூறி, “ இறைவன் எல்லா இடத்திலும் உள்ளார். அதனால் நீ மாலையை ஆலமரத்தின் அடியில் உள்ள கல்லில் வைத்து விடு, அவர் அதை ஏற்றுக் கொள்வார்” என்று கூறினார். அவளும் நம்பிக்கையுடன் அந்த மாலையை மரத்தின் அடியில் வைத்துவிட்டு மனநிம்மதியுடன் வீடு சென்றாள்.

அடுத்த நாள் ஒரு அதிசயத்துடன் விடிந்தது. நிர்மால்ய தரிசனத்திற்குப் பிறகு, மேல்சாந்தி விக்ரகத்தின் மீதிருந்த முந்தைய நாள் மாலைகளை அகற்றினார். மிகவும் முயற்சித்தும் ஒரு மாலை மட்டும் அகற்ற முடியாமல் சிக்கிக்கொண்டு இருந்தது. நிர்மால்ய தரிசனத்திற்கு வந்திருந்த அனைவரும் வியந்தனர். அப்போது அங்கிருந்த பூந்தானம் நம்பூதிரிக்கு முதல் நாள் இரவு நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. “அது மஞ்சுளாவின் மாலையென்றால் அதுவும் வரட்டும்” என்று உரக்கக் கூவினார். உடனே அப்பனிடம் சிக்கிக் கொண்டிருந்த மாலை நழுவி, கீழே விழுந்தது. அனைவரும் ‘ஹரே கிருஷ்ணா’ என்று கோஷமிட்டுக் கொண்டே மஞ்சுளாவின் மாலையிலிருந்த பூக்களை எடுத்துக் கொண்டனர். ஆலமரத்தை நோக்கி அதனை வழிபட விரைந்தனர். அது முதல் அந்த மரம் “மஞ்சுளால்/மஞ்சுளா ஆல்” என்று அழைக்கப்படுகிறது.

உற்சவத்தின் முதல் நாள் நடத்தப்படும் ‘ஆனையோட்டம்’ (யானைப் பந்தயம்), கிழக்கு நடையில் உள்ள இந்த ‘மஞ்சுளால்’ என்ற மரத்தில் இருந்துதான் தொடங்குகிறது.

Saturday, December 13, 2014

கண்ணன் கதைகள் (1) - பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும்

கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள், கண்ணன் கதைகள் (1) -  பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும்

முன்னொரு சமயம் வில்வமங்கலம் ஸ்வாமிகளிடம் வாரியர் என்ற பக்தன் வேலை செய்து வந்தான். அவனுக்கு முறைப்படி பூஜை செய்யவோ, தியானம் செய்யவோ தெரியாது. அவன் ஒரு நாள் ஸ்வாமிகளிடம், “நான் குருவாயூரப்பனை எவ்வாறு தியானம் செய்ய வேண்டும்? அருள் கூர்ந்து எனக்கு சொல்லுங்கள்” என்று வேண்டினான். அவரோ அலட்சியமாக, “ஒரு பெரிய கொம்புள்ள எருமை போல் நினைத்து பூஜிக்க வேண்டும்” என்று சொன்னார். அவனும் அதை உண்மையென நம்பி அவ்வாறே பூஜித்து வந்தான்.

ஒரு நாள் ஸ்வாமிகளுடன் அவன் கோயிலுக்கு சென்றிருந்தான். அப்போது “ஸ்ரீவேலி” பூஜைக்காக உற்சவ விக்ரஹத்தை நம்பூதிரி எடுத்துக் கொண்டு வெளியில் வர முயற்சித்தார். வாசற்படியைத் தாண்ட முடியவில்லை. தாண்டும்போது ஏதோ இடிக்கும் சத்தம் மட்டும் கேட்கிறது. எது இடிக்கிறது என்று தெரியவில்லை, தாண்டவும் முடியவில்லை. ஸேவிக்க வந்த அனைவரும் கவலையுற்றனர். அங்கு இருந்த ஸ்வாமிகளிடம் அது பற்றிக் கேட்டனர். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்பொழுது, வேலையாளான பக்தன் நம்பூதிரியிடம், “நிதானமாக எடுத்து வாருங்கள், கொம்பு இடிக்கிறது, சற்று சாய்த்து எடுத்து வாருங்கள்” என்று சொன்னான். அதன்படி செய்ததும் விக்ரஹத்தை எடுத்து வர முடிந்தது. வில்வமங்கலம் ஸ்வாமிகள், “என்ன பிதற்றுகிறாய்”? என்று அவனைக் கடிந்து கொண்டார். அவனோ, “ஸ்வாமி, எருமையின் கொம்பு இடித்ததால் சொன்னேன் என்று பணிவுடன் கூறினான். உடனே வில்வமங்கலத்திற்குத் தான் முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது. கண்களை மூடித் தியானித்தபோது அவரது மனக்கண்ணில், சங்கு, சக்கரம், கதை, பத்மத்துடன் ஒரு தெய்வீக எருமை தெரிந்தது !!!! 

உடனே, அவர் அந்த பக்தனிடம், என்னை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார். அவனும், நான் எவ்வாறு பூஜிக்க வேண்டும் என்று  எனக்குச் சொல்லித் தாருங்கள் என்று கூற, அவர் சந்தோஷத்துடன், “ஸ்ரீ குருவாயூரப்பனை சூர்யனை விடப் பிரகாசமான கிரீடம், மேல் நோக்கியுள்ள திலகத்தால் அழகிய கருணை பொங்கும் கண்கள், புன்சிரிப்புடன் கூடிய செவ்வாய், மீனைப் போன்ற நாசி, கன்னங்களில் ஒளி வீசும் மகர குண்டலங்கள், மார்பை அலங்கரிக்கும் கௌஸ்துப மணி, வனமாலை, முத்துமாலை, ஸ்ரீவத்ஸம், நான்கு கரங்களில் தோள்வளைகள், கங்கணம், சிறந்த ரத்னங்களால் இழைத்த மோதிரம், மேலும், கரங்களில் சங்கம், சக்ரம், கதை, தாமரை, இடுப்பில் பொன் அரைஞாண், பீதாம்பரம், தாமரை மலரை ஒத்த திருவடி கொண்ட அழகிய திருமேனியுடன் தியானம் செய்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். அந்த பக்தனும் அவ்வாறே தியானம் செய்து பூஜைகளை அனுஷ்டித்து நற்கதி அடைந்தான். இதிலிருந்து, “ பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும் என்பதையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மனிதனின் தர்க்கத்திற்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்டவர்” என்பதையும் நாம் அறியலாம்.