Saturday, April 30, 2016

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயில் / கண்ணுக்கினியன கண்டோம்-9

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயில்,கண்ணுக் கினியன கண்டோம்,Mannargudi Sri Rajagopalaswamy temple

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயில்,கண்ணுக் கினியன கண்டோம்,Mannargudi Sri Rajagopalaswamy temple

ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயில்.
   
ஊர்: மன்னார்குடி/ராஜமன்னார்குடி (செம்பகாரண்ய க்ஷேத்ரம்) 
மூலவர்: பரவாசுதேவர், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம் 
உற்சவர்: ஸ்ரீவித்யா ராஜகோபாலன் / ராஜகோபாலன் ருக்மணி சத்யபாமா ஸமேதராக 
தாயார்: செம்பகலக்ஷ்மி (மூலவர்) 
உற்சவர்: செங்கமலத் தாயார் ஹேமாப்ஜ நாயகி, ரக்தாப்ஜ நாயகி 
தனிச் சன்னதிகள்: ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சனேயர், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், ஸ்ரீ கோதண்ட ராமர், ஸ்ரீ துர்க்கை, தும்பிக்கையாழ்வார் சன்னதிகள் 
விமானம்: ஸ்வயம்பு 
தலவிருக்ஷம்: சண்பகம் 
தீர்த்தம்: ஹரித்ரா நதி (நதியைப் போன்ற மிகப்பெரிய தெப்பக்குளம்), பாம்பணி நதி, கிருஷ்ணா தீர்த்தம், கோப்ரளய தீர்த்தம், துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய 9 தீர்த்தங்கள். காவிரியின் கிளை நதியான பாமணி ஆறு, பத்தாவது புண்ணிய நீர் நிலையாக சொல்லப்படுகிறது. 
மண்டபங்கள்:
பிரத்யக்ஷம்/ திருக்காட்சி: பிரம்மா, ப்ருகு ,அக்னி,கோபில-கோப்ரளய ரிஷிகள் 
ஆகமம்: பாஞ்சராத்ரம் 
பழமை: 1000 வருடங்களுக்கு மேல். 

உற்சவங்கள்/ திருவிழா: தெப்போற்சவம், ஆவணி மாதத்தில் பவித்ரோத்ஸவம் , பங்குனி பிரம்மோற்சவம், விடையாற்றி உற்சவம். வெண்ணெய்த்தாழி பல்லக்கு மற்றும் தங்கக் குதிரை வாகனம் ஆகியவை மிகமிகச் சிறப்பானவை. 
பிரார்த்தனை: இங்குள்ள சந்தான கிருஷ்ணரை மடியில் வைத்துக் கொண்டால் குழந்தையில்லாத் தம்பதியருக்குக் குழந்தை பிறக்கும் என்று ஐதீகம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்காலை 6.30 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை

ஸ்தலப்பெருமை: 
மன்னார்குடி. எனது பாட்டியின் பிறந்த ஊர். சன்னதித் தெருவிலேயே பாட்டி வளர்ந்த வீடு இன்றும் உள்ளது. இக்கோவிலைப் பற்றி அவர் நிறைய சொல்லக் கேட்டிருக்கிறேன். அதிலும் பாட்டி, “என் ராஜகோபாலன் என்றே சொல்லுவார். என் ராஜகோபாலன் கொள்ளை அழகு. அவனது முகத்தைப் பாசத்தோடு நோக்கிக் கொண்டிருக்கும் பசுமாடும் கன்றுகளும் அழகோ அழகு. ராஜகோபாலன் ஏக வஸ்த்ரதாரி. எந்த அலங்காரமாக இருந்தாலும் ராஜகோபாலனுக்கு ஒற்றை வஸ்திரம்தான். இடுப்பில் ஒரே வஸ்த்ரம். அதே வஸ்த்ரத்தைத் தலைப்பாகையாய் சுற்றிக்கொண்டு, இடுப்பில் ஒட்டியாணம், கிண்கிணிகளுடன் கூடிய அரைஞாண், அதில் தொங்கும் சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு, ஒரு கையில் சாட்டையுடன், மற்றொரு கையில் செண்டு சொருகிக் கொண்டு, இடது கையை பக்கத்தில் நிற்கும் தன் தோழன் தோளில் போட்டபடி கொள்ளைச் சிரிப்புடன், ஒருகாதில் குண்டலம், இன்னொருகாதில் தோடு, அருகில் பசுவும் இரு கன்றுகளும் சூழ, மாடு கன்று மேய்க்கும் பாலகனாக, இடையனாக ராஜகோபாலன் ஸேவை சாதிப்பார்என்று சொல்வார். கேட்கும்போதே செல்லவேண்டும் என்ற ஆசை ஏற்படும்.

செண்டா? அப்படின்னா என்ன பாட்டி?” என்பேன்.

அது தொரட்டி. இடையனோல்லியோ? மாடுகளுக்கு தழை, இலை எல்லாம் வெட்டிப் போடணுமோன்னோ? அதுக்காக தொரட்டி மாதிரி வெச்சுண்டு இருப்பான் என்பார்.

கேள்விப்பட்டது நிறையவாயினும் மன்னார்குடி சென்று ஸேவித்ததே இல்லை. சில வருடங்கள் முன் சென்று பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியமும் கிட்டியது. பதிவிட இன்றுதான் அமைந்தது. 

மன்னார்குடி. அபிமான ஸ்தலம். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம் அல்ல. எனினும் குறைவில்லாத மகத்துவம் கொண்டது. 'கோவில்பாதி, குளம்பாதி' என்ற பழமொழி உண்டானதே இந்த ஊரால் தான் என்று சொல்வர். அவ்வளவு பெரிய கோவில் அவ்வளவு குளங்கள். மன்னார்குடி மதில் அழகு என்பது இவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. முதலாம் குலோத்துங்கன் கட்டிய கோவில். 

இத்தலப் பெருமாளுக்கு "சதுர்யுகம் கண்ட பெருமாள்' என்பது திருநாமம். ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமிக்கு "ராஜமன்னார்' என்ற பெயரும் உண்டு. ராஜமன்னார் கோயில் கொண்ட ஊர் என்பதால் இவ்வூர் "மன்னார்குடி' என்றும் கூறுவர். துவாரகைக்கு சமமான புனிதத் தலம். மிக உயர்ந்த ராஜகோபுரம், அழகிய மண்டபங்கள், சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மேற்கு கோபுரம். தக்ஷிணத் துவாரகை, வாசுதேவபுரி, இந்த ஊரின் வேறு பெயர்களாகும். செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் செண்பகாரண்ய க்ஷேத்திரம். ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி. இவ்விடத்தில் கோபில-கோப்ரளய மகரிஷிகளுக்கு கிருஷ்ண லீலைகளைக் காட்டி அருளியதால் தக்ஷிண த்வாரகை. மூலவர் வாசுதேவன் என்பதால் வாசுதேவபுரி, என்று இந்த ஸ்தலத்திற்குப் பல பெயர்கள். 

நாங்கள் கோவிலுக்குச் செல்லும்போது மாலை நேரம். மிக விசாலமான சாலையின் நடுவே மிக உயரமான, ராஜ கோபுரத்தின் உயரத்திற்கு இணையாக ஓங்கி உயர்ந்திருக்கும் கருட ஸ்தம்பம். அதன் உச்சியில் உள்ள கருட மண்டபத்தில் கருடன் ஸேவை சாதிக்கின்றார். இந்த கருட ஸ்தம்பம் 54 அடி உயரமாம்! ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாம். கருட ஸ்தம்பத்திற்குப் பின்னே கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரத்தைப் பார்க்கும்போதே பரவசம். ராஜகோபுரமும் ஊரின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் தெரியுமாம். 154 அடி உயரம்!! 

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயில்,கண்ணுக் கினியன கண்டோம்,Mannargudi Sri Rajagopalaswamy temple

ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால், மீண்டும் ஒரு ஐந்து நிலை கோபுரம்


மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயில்,கண்ணுக் கினியன கண்டோம்,Mannargudi Sri Rajagopalaswamy temple

கோபுர வாயிலில் குழந்தை போல் விஷமம் செய்து கொண்டு ஒரு குட்டி யானை. ஒரே துறுதுறுப்பு. சாயலில் சிறிய வித்தியாசம் எனக்குப் பட்டது. வழக்கம் போல் என் கணவர் யானைக் குட்டியிடம் ஆசீர்வாதம் வாங்க, பாகன், “செண்பகம், ஆசீர்வாதம் குடு என்றார். இப்போதுதான் புரிந்தது, அது பெண்யானை என்று. அதன் நெற்றியில் வழக்கமாக இடப்பட்டிருக்கும் திருமண் இல்லை, ஸ்ரீசூர்ணம் மட்டும்தான். அதுதான் எனக்கு வித்தியாசமாகப் பட்டிருக்கின்றது. விஷமக்குட்டி செண்பகத்தையும் படம் பிடித்துக் கொண்டோம். 

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயில்,கண்ணுக் கினியன கண்டோம்,Mannargudi Sri Rajagopalaswamy temple

ராஜகோபாலனைக் காணும் ஆவலில் விறுவிறுவென த்வஜஸ்தம்பம் ஸேவித்து, தாயார் சன்னிதி சென்றோம். வைணவர்கள் தாயார் சன்னதியை முதலில் ஸேவிப்பது வழக்கம். தாயார் தயை மிக்கவள். நாம் செய்யும் தவறுகளை மன்னிக்கச் சொல்லி பெருமாளிடம் சொல்வாளாம். எப்படி நமது வீடுகளில் அம்மாவானவள் அப்பாவிடம் குழந்தை பாவம் அவனை ஒண்ணும் சொல்லாதீங்கோ என்பதைப் போலே. பெரியோர்கள், அறிந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். தாயார் சன்னிதி செல்லும் வழியில் அஷ்டலக்ஷ்மியுடன் ஆமை மீது பிரம்மாண்டமாக ஒரு துளசிமாடம். செம்பகலக்ஷ்மி தாயாரையும் ஸேவித்தோம். தாயார் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். ஆஞ்சனேயர் சன்னதியில் வாய் பேசாத சிலர் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயில்,கண்ணுக் கினியன கண்டோம்,Mannargudi Sri Rajagopalaswamy temple
பெருமாள் சன்னதியை அடைந்தோம். மூலவர் வாசுதேவர் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுடன் ஏகாந்தமாய் இருந்தார். நன்கு ஸேவித்தோம். பக்கத்திலே சந்தானகோபாலன். பட்டர் க்ஷேத்ர விசேஷங்களைச் சொல்கிறார். சொல்லிவிட்டு, சந்தானகோபாலனை என் கையில் கொடுத்தார். சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அழகான க்ருஷ்ண விக்ரஹம். வாங்கிக் கொண்டேன். ஆலிலை கிருஷ்ணர் போல, கால் விரலை வாயில் வைத்தபடி ஆதிசேஷனில் படுத்திருக்கிறார். அஹோ பாக்கியம்! என் இஷ்ட தெய்வம் என் கைகளில். குட்டி கிருஷ்ணனின் அழகைக் கண்ணாரக் கண்டோம் கண்டோம் கண்டோம்! கீழே உட்கார்ந்து, மடியில் விட்டுக் கொண்டு தாலாட்டச் சொன்னார். குட்டி கிருஷ்ணனைக் கையில் வாங்கிப் பிரார்த்தனை பண்ணிக் கொள்வது விசேஷமாம். கண்ணனே கையில் வந்தபின் வேண்டுவது வேறென்ன? சந்தான பாக்கியம் வேண்டுபவர்கள் சந்தானகோபாலனைத் தங்கள் கையிலே வாங்கிப் பிரார்த்தனை செய்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம். ரோகிணி நட்சத்திரத்தன்று பிரார்த்தனை செய்தால் விசேஷமாம். சன்னதியில் பலர் சந்தானகோபாலனைக் கையில் வாங்கக்காத்து நிற்கிறார்கள். பலர் இந்தப் பெருமானை வேண்டிக் கொண்டு சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறுகிறார்கள். 

குழந்தைக் கண்ணனைக் கொடுக்கவே மனமில்லை. மிகுந்த மனநிறைவாய் இருந்தது. என் கண்கள் ராஜகோபாலனைத் தேடின. உற்சவர் எங்கே என்று பட்டரிடம் கேட்டேன். பட்டர், “இன்று கருட சேவை, அதனால் பெருமாளை கருடன்மேல் ஏளப்பண்ண எடுத்துச் சென்றுவிட்டார்கள். முன் மண்டபத்தில் அலங்காரம் செய்தபிறகு பார்க்கலாம் என்று சொன்னார். 

பாட்டி சொன்ன, படங்களில் பார்த்த, அழகான அந்த ராஜகோபாலனைக் காண வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை. படங்களில் பார்க்கும்போது, மாடு கன்றுக்கு இருக்கும் பக்தி நமக்கு இல்லையே என்று தோன்றும். வாய்ப்பு கிடைத்தும் ராஜகோபாலனை ஸேவிக்க  முடியவில்லை என்ற ஆதங்கம். இரவே சென்னைக்கு ரயிலைப் பிடிக்க வேண்டும். அழுகை முட்டிக் கொண்டு வந்தது. எப்படியும் இருந்து ஸேவித்துவிட்டே போகலாம் கவலைப்படாதே என்று என் கணவர் கூறினார். 

சன்னிதியை விட்டு வெளியே வந்தால் துர்க்கை, தும்பிக்கையாழ்வார் சன்னதிகள். ராஜகோபாலனைக் காண முடியுமோ முடியாதோ என்ற கவலை. அவசரமாக பிரதக்ஷணம் செய்து கோவிலுக்கு வெளியே உள்ள மண்டபம் சென்றோம். அலங்காரம் முடிய நேரமாகும், முடிந்ததும் ஸேவிக்கலாம் என்று சொன்னார்கள். காத்திருந்தோம். சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பின்னர், ராஜகோபாலனை, கண்ணுக்கினியானை, மன்னார்குடி அழகனை, ஸ்ரீவித்யா ராஜகோபாலனை, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் கருடன் மீது கண்டோம்! கண்டோம்! நன்கு ஸேவித்தோம்


மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயில்,கண்ணுக் கினியன கண்டோம்,Mannargudi Sri Rajagopalaswamy temple

ஆச்சர்யமாக என் தூரத்து உறவினர் ஒருவரைப் பார்த்தோம். அன்றிரவு, அவர் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என்று அன்பாக சொன்னார். சாப்பிட்டுவிட்டு உரிய நேரத்தில் சென்னை ரயிலைப் பிடித்தோம். 

ஆயினும், இடையர் கோலத்தில் ஸேவிக்க இயலவில்லை என்பது குறைதான். இடையர் கோலத்தை ஸேவிக்கும் வாய்ப்பு அமையப் பிரார்த்திக்கிறேன். 

விசேஷங்கள்: 
தை 4ம் நாள் சேர்த்தி, தாயாருடன் சேர்ந்து ஏக சிம்மாசனத்தில் ஸேவை சாதிக்கிறார்.  


மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயில்,கண்ணுக் கினியன கண்டோம்,Mannargudi Sri Rajagopalaswamy temple
                                                               
Eka simhasana sevai
Picture courtesy: Mannargudi rajagopalaswamy FB page

பங்குனியில் 18 நாட்கள் பிரம்மோத்ஸவம் நடக்கிறது. தினமும் வித விதமான அலங்காரங்கள்.

பிரம்மோற்சவத்தின் பதினாறாம் நாள் "வெண்ணெய் தாழி' உற்சவம் நடக்கிறது. வெகு பிரசித்தம். அப்போது பெருமாள் பல்லக்கில், தவழ்ந்த திருக்கோலத்தில், கையில் வெள்ளி வெண்ணெய்க்குடத்துடன் திருவீதியுலா செல்கிறார். வெண்ணெய்த்தாழி மண்டபத்துக்குச் செல்லும்போது, வழி நெடுகிலும் பக்தர்கள் வெண்ணெய் வீசி மகிழ்கின்றனர். பக்தர்கள் கண்ணனுக்கு பிரியமான வெண்ணை மற்றும் விசிறி கொடுத்து வணங்குவார்கள். நவநீத க்ருஷ்ணனின் பின்னழகைப் பார்க்கக் கூட்டம் கூடும். அன்று செட்டி அலங்காரத்தில் ஸேவிக்கலாம். மாலை தங்கக் குதிரை வாகனத்தில் சந்நிதிக்கு எழுந்தருள்வார்.


மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயில்,கண்ணுக் கினியன கண்டோம்,Mannargudi Sri Rajagopalaswamy temple
 Navaneethakrishnan pinnazhagu 
 Picture courtesy: Mannargudi rajagopalaswamy FB page


தேரெழுந்தூர் ஆண்டவன் ஒரு முறை வெண்ணைத் தாழி உற்சவத்திற்குச் சென்றிருந்தாராம். பெருமாளின் பின்னழகையும், அழகிய குஞ்சிதபாதங்களையும் பார்க்கக் கூட்டம் கூடியதாம். கூட இருந்த ஒரு பாகவதோத்தமரிடம் ஆண்டவன் கேட்டாராம், “ஏன் ஸ்வாமி, பாகவாதாள்லாம் இன்னைக்கு ராஜகோபாலனின் பின்புறம் சேவிக்கிறார்கள்?உமக்குத் தெரிந்திருக்குமே, தாத்பர்யம்...சொல்லுமேஎன்று. அப்போது அந்த ஸ்வாமிகள், “அணியும் ஆபரணங்களின் அழகு ஆபரணம் பூண்டு கொள்ளும் புருஷனைப் பொறுத்து அமைகிறது. அவ்வகையில் நவநீத க்ருஷ்ணனின் பின்னழகில் பூணப்பட்டிருக்கும் ஆபரணங்கள் அழகுடன் மிளிர்கிறது; அதைக் காண பக்தர் கூட்டம் அலை மோதுகிறது என்றாராம்ஆண்டவன் அக்கருத்தையும் ஸ்லாகித்து தனது அவதானத்தையும் கூறினாராம் இப்படிதினம் பெருமாளின் அலங்காரமும்,வாகனமும் சேவிக்கும் பாகவதர்கள் அவனது திருவடியைப் பிரதானமாக சேவிக்கின்றனர்இன்று நவனீத க்ருஷ்ணணின் திருவடி மடங்கி பின்புறம் இருப்பதால் அவனின் திருவடிகளை சேவிக்க பின் பக்கம் திரண்டுள்ளனர்என்று திருவடிகள் மேன்மையை ஸ்லாகித்தாயிற்று. 
(மதுரை தேசிகர் சன்னிதியில் பாதுகாப்ரபாவம் குறித்த உபன்யாசத்தில் ஆண்டவன் ஆஸ்ரமம் ஸ்ரீகார்யம் வீரராகாசார்யர் சொல்லியதை பகிர்ந்த நாராயணன் சேஷாத்ரி அவர்களுக்கு நன்றி.) 

முகவரி: அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மன்னார்குடி - 614 001 திருவாரூர் மாவட்டம். தமிழ்நாடு, இந்தியா. 

திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை முதலிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது. சென்னை, திருப்பதி, கோவை, மானாமதுரை ஆகிய நகரங்களில் இருந்து இரயில் வசதியும் உள்ளது.