Monday, February 9, 2015

கண்ணன் கதைகள் (59) - குருவாயூரப்பனும் குந்துமணியும்

கண்ணன் கதைகள் (59) - குருவாயூரப்பனும் குந்துமணியும்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
குண்டுமணி சிவப்பு, கறுப்பு நிறங்களில் சிறிய உருண்டை வடிவில் இருக்கும். கேரளாவில் அநேகமாக அனைவரது இல்லங்களிலும் இந்த மரம் இருக்கும். மஞ்சாடி என்ற மரத்தில் இருந்து வரும் விதை என்பதால் இதை கேரளாவில் "மஞ்சாடிக்குரு" என்று சொல்வார்கள். நாங்கள் கோவையில் இருந்தபொழுது, சின்ன வயதில், பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு தினம் சென்று அங்கு இருக்கும் குண்டுமணிகளைப் பொறுக்கி வீட்டிற்கு எடுத்து வருவோம். பிறகு அதை நன்கு கழுவி "பல்லாங்குழி" விளையாட உபயோகப்படுத்துவோம். சென்ற வருடம் கூட கேரளாவில் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தபொழுது நிறைய குண்டுமணிகளைப் பொறுக்கி வந்தோம். "

குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

நாங்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் வேண்டிக்கொண்டு வீட்டிலேயே ஒரு சின்னப் பெட்டியில், 7 மிளகு, கொஞ்சம் கடுகு, 7 குந்துமணி, ஒண்ணேகால் ரூபாய் எடுத்து வைத்து, குருவாயூர் செல்லும்போது அதை அங்கு சமர்ப்பிப்பது வழக்கம்.

அது சரி. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்? இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும், அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.

அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து, நன்கு அலம்பி, துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். வசதி படைத்தவள் அல்லவே ! அதனால் நடந்தே செல்லத்தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள். ஸ்ரமமாக இருப்பினும் "கண்ணனைக்காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே" என்று தொடர்ந்து பயணம் செய்தாள்.

ஒரு மண்டலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள். கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலைஅடைந்த சமயம், கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன், அவன் பக்தியை வெளிப்படுத்த, கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள், அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி, தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம், கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் " என்ன ஆயிற்று?" என்று பதறினர். கோவில்பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே ப்ரஸ்னம் கேட்டனர்.

அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து " நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்திவிட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்குவேண்டும்" என்று அசரீரி கேட்டது. கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை, அனைவரும் பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை கல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் அதை அப்பனிடம் சமர்ப்பித்ததும், யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது .

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.

Sunday, February 8, 2015

கண்ணன் கதைகள் (58) - குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்

கண்ணன் கதைகள் (58) - குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்தமிழ் வருடப்பிறப்பு / விஷு / கொன்னப்பூ, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
கண்ணன் கதைகள் (58) - குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்தமிழ் வருடப்பிறப்பு / விஷு / கொன்னப்பூ, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
சிறு வயதில், எனது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், விஷு கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. முதல் நாள் இரவே, பூஜைக்கு உரிய வெற்றிலை, பாக்கு, வெள்ளரி, காசு, கண்ணாடி, உருளி, நாராயணீயம். கொன்னப்பூ, அரிசி முதலியவற்றை எடுத்து வைப்பார்கள். என்னையும் "கைநீட்டம்" பெற வரச்சொல்லுவார்கள். நான் காலையில் "கைநீட்டம்" பெற சந்தோஷமாகப்போவேன். குருவாயூரப்பன் மீது எனக்கு 'மாளாக்காதல்' உண்டாக எனது பாட்டியும், அவரது தோழியான ஒரு மாமியும் சொன்ன கதைகளே முக்கிய காரணம்.  'லாலு' என்று நான் அன்புடன் அழைக்கும் அந்த மாமி,  சிறு வயதில் எனக்குச் சொன்ன கதை இப்போது ஞாபகம் வருகிறது. கதைக்குச் செல்வோமா?

கேரளத்தில் ஒரு சிறு பாலகன் இருந்தான். அவன் தினமும் குருவாயூரப்பனை தரிசனம் செய்யக் கோவிலுக்குப் போவான். அவனுக்கு ஸ்ரீ குருவாயூரப்பனை நேரிலே பார்க்க மிகவும் ஆசை. ஒரு நாள், கண்ணனை எப்படியும் பார்த்தே தீருவது என்று முடிவு செய்து, கண்ணனிடம் பிரார்த்தித்தான். கண்ணனோ வரவில்லை. கண்ணா வா என்றான் . நான் உன்னை நேரிலே பார்க்க வேண்டும் என்றான். நீ வராவிட்டால் நான் இங்கேயே இருப்பேன் என்று கூறி கோவிலிலேயே உட்கார்ந்து விட்டான். நடையும் அடைத்தாயிற்று.

கண்ணன் வரவில்லை. அழுதான். அரற்றினான். குழந்தையல்லவா? அவன் அழுவது கண்ணனுக்கு பொறுக்கவில்லை. வந்தான். எப்படி? மயில் பீலி, பட்டு, பீதாம்பரம் உடுத்திக்கொண்டு, குழலூதிக்கொண்டுவந்தான். குழந்தையுடன் விளையாடினான். சிறுவனுக்கு ஒரே சந்தோஷம். கண்ணனோ தன்னுடைய அரைஞாணை அவனுக்கு அளித்தான்.

சிறுவன் சந்தோஷமாக வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் நான் கண்ணனுடன் விளையாடினேன் என்றான். அம்மாவோ நம்பவில்லை. இங்கே பார் "கண்ணன் தன்னுடைய கிண்கிணியை எனக்கு கொடுத்தான் பார்" என்றான்.
கோவிலிலும் அரைஞாணைக் காணாததால் அனைவரும் சிறுவன் அதைத் திருடியதாக நினைத்தார்கள். அம்மா திட்டினாள். அதைப்பிடுங்கி வீசினாள். அது பக்கத்தில் இருந்த கொன்றை மரத்தின்மேல் சிக்கிக்கொண்டது. உடனே, அந்த மரம் முழுவதும் தங்க நிறத்தில் கிண்கிணியைப்போன்ற பூக்கள் பூத்துக்குலுங்கின. அப்பொழுது, "உன் மகனுடன் நான் விளையாடியது நிஜம்" என்று அசரீரி வாக்கு கேட்டது. அது முதல் "கொன்னப்பூ" பூஜைக்கு மிகவும் உகந்ததாகப் போற்றப்பட்டது. இப்பொழுது மேலே உள்ள படத்தில் குருவாயூரப்பனின் அரைஞாணும் கொன்னப்பூவின் மொக்குகளும் ஒரே மாதிரி இருப்பது போல் தெரிகிறதா?

Saturday, February 7, 2015

கண்ணன் கதைகள் (57) - ருக்மிணி கல்யாணம்

கண்ணன் கதைகள் (57) - ருக்மிணி கல்யாணம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

கிருஷ்ணர் துவாரகையை அடைந்தார். விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டதும், தேவர்கள் அளித்த ஐஸ்வர்யங்களை உடையதும், கடலின் நடுவே உள்ளதுமான அந்தப் புதிய துவாரகா நகரமானது, அவருடைய தேக காந்தியால் மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் விளங்கியது. பிரமனின் ஆக்ஞைப்படி, ரேவத நாட்டு அரசன், தன் பெண்ணான ரேவதியை, பலராமனுக்கு மணம் செய்து கொடுத்தான். கிருஷ்ணர், யாதவர்களோடு சேர்ந்து அந்தத் திருமணத்தில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விதர்ப்ப நாட்டு அரசனின் பெண்ணான ருக்மிணி, கிருஷ்ணரின் மீது அன்பு கொண்டாள். அவளுடைய அண்ணன் ருக்மி. சேதி நாட்டு அரசன் சிசுபாலன் அவனுடைய நெருங்கிய நண்பன். தீய எண்ணம் கொண்ட சிசுபாலனுக்கு, ருக்மிணியை மணம் செய்து கொடுக்க ருக்மி முடிவு செய்தான்.

ருக்மிணி கிருஷ்ணரிடம் வெகுநாட்களாகக் காதல் கொண்டிருந்தாள். தன் விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று அஞ்சினாள். தனக்கு ஏற்பட்ட துன்பத்தை கிருஷ்ணரிடம் தெரிவிக்குமாறு ஒரு அந்தணரை அவரிடம் தூது அனுப்பினாள். அந்த அந்தணர், விரைவாக துவாரகா நகரை அடைந்தார். கிருஷ்ணர் அந்த அந்தணரை வரவேற்று உபசரித்தார். அந்தணரும் மிகுந்த சந்தோஷமடைந்தார். அவர், “கிருஷ்ணா! குண்டின தேசத்து இளவரசியான ருக்மிணி தங்களிடத்தில் காதல் கொண்டுள்ளாள். நான் அவளுடைய தூதுவனாக, அவள் அனுப்பிய சேதியோடு இங்கு வந்திருக்கிறேன்” என்று கூறினார். பிறகு,“உலகிற்கெல்லாம் நாயகனே! உம்முடைய குணங்களால் கவரப்பட்டு உம்மையே கணவனாக வரித்துவிட்டேன். தற்போது, சிசுபாலன் என்னை அடைந்து விடுவானோ என்று அஞ்சுகிறேன். கருணைக்கடலே! என்னைக் காக்க வேண்டும்” என்று ருக்மிணி கூறிய சேதியை அந்தணர் கிருஷ்ணரிடம் தெரிவித்தார். “வேறு கதியில்லாத என்னைக் கைவிட்டீரானால் நான் உடனே என் ஜீவனை விட்டுவிடுவேன்” என்று ருக்மிணி கூறியதை அந்தணர் சொன்னதும், கிருஷ்ணருடைய மனத்திலும் மிக்க சஞ்சலம் உண்டானது. கிருஷ்ணர் அந்த அந்தணரிடம், “அவளுடைய வேதனையைக் காட்டிலும் என் மனதில் அதிகமான மன்மத வேதனை ஏற்பட்டுள்ளது. நான் சீக்கிரமாக வந்து, அரசர்களின் முன்னிலையில், கருவிழிகளையுடைய என் பிரியையான ருக்மிணியைக் கரம் பிடிக்கிறேன்” என்று கூறினார்.

பின்னர் கிருஷ்ணர் ரதத்தில் ஏறிக்கொண்டு, அந்தணருடன் சீக்கிரமாகக் குண்டின தேசத்தை அடைந்தார். பலராமன் சேனைகளுடன் பின் தொடர்ந்து வந்தார். அரசனான பீஷ்மகன் அவர்களை வரவேற்று உபசரித்தான். கிருஷ்ணர் வந்த செய்தியைக் கூறிய அந்தணருக்கு, ருக்மிணி மிகுந்த அன்புடன் நமஸ்காரம் செய்தாள். உலகிலேயே அழகான கிருஷ்ணருடைய திருமேனியைக் கண்டும், ருக்மி எடுத்த முடிவைக் கேட்டும், குண்டின தேசத்து மக்கள் துயரமடைந்தார்கள். இரவும் கழிந்தது.

மறுநாள் காலை, ருக்மிணி மங்களகரமான ஆடை ஆபரணங்களுடன், காவலர்கள் சூழ, பார்வதிதேவியை வணங்கக் கோவிலுக்குக் கிளம்பினாள். அவள் மனத்தை கிருஷ்ணரிடத்திலேயே அர்ப்பணித்திருந்தாள். உயர்குலப் பெண்களுடன் பார்வதி தேவியின் ஆலயத்திற்குள் சென்று, நன்கு வழிபாடு செய்து, அவள் பாதங்களில் நமஸ்கரித்தாள். கிருஷ்ணனையே கணவனாக அளிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வேண்டினாள். ருக்மிணியைக் காண வேண்டும் என்ற ஆவலில் பல நாட்டு அரசர்கள் கோவில் வாசலில் கூடியிருந்தார்கள். கிருஷ்ணரும் ருக்மிணியைக் கிரஹிக்க எண்ணம்கொண்டு காத்திருந்தார். அப்போது ருக்மிணி, மிகுந்த அழகுடன் எல்லா திசைகளையும் ஆனந்தமுறச் செய்துகொண்டு, ஆலயத்திலிருந்து வெளியே வந்தாள். அவள் அழகானது உலகையே மயங்கச் செய்வதாய் இருந்தது. அவளது தேககாந்தியால் எல்லா அரசர்களும் மயங்கினர். அவளது கடைக்கண் பார்வையால் கிருஷ்ணரும் மோஹித்தார். சந்திரன் போன்ற முகத்தை உடைய ருக்மிணியை நெருங்கினார். “நிலவைப் போன்ற முகமுடையவளே! எங்கே போகிறாய்?” என்று கேட்டு, நொடிப்பொழுதில் அவள் அருகே சென்று, அவளது நுனிக்கை விரல்களைப் பிடித்து, அவளைக் கைகளினால் அன்புடன் பற்றி, அவளை கிரஹித்தார். மனோவேகத்தில் செல்லும் தன்னுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டார். ருக்மிணியின் மனோரதமும் நிறைவேறியது.

உடனே, அனைத்து திசைகளில் இருந்தும் எதிரிகளின் கூச்சல் அதிகமானது. இந்த இடைச்சிறுவன் எங்கிருந்து வந்தான்? என்று கூடியிருந்த அரசர்கள் கோபமடைந்து போர்புரியத் தொடங்கினார்கள். யாதவர்கள் அவர்களை ஜயித்தார்கள். நாய்க்கூட்டங்களைப் பார்த்த சிங்கம் போல், அந்த அரசர்களைக் கண்ட கிருஷ்ணர் சிறிதும் அசையவில்லை. ருக்மி எதிர்த்துப் போர்புரிய வந்தான். அவனைக் கட்டி இழுத்து, அவன் தலையை மொட்டை அடித்து, மீசையைக் கத்தரித்து அவன் கர்வத்தை அடக்கினார். பலராமனின் வேண்டிக் கொண்டதன்பேரில் அவனை விடுவித்துக் கொல்லாமல் விட்டார்.

பிறகு, மஹாலக்ஷ்மியான ருக்மிணியுடன் துவாரகைக்குச் சென்றார். அனைவரும் அவர்களை வரவேற்றார்கள். துவாரகையில் முறைப்படி கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. துவாரகை நகரம் முழுவதும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்களின் ஒலிகளால் ஸ்வர்க்கம் போன்று விளங்கியது. நகரத்து மக்கள் அனைவரும் கிருஷ்ணரையும், ருக்மிணியையும் காண ஓடோடி வந்தார்கள். உத்தமமான அவர்களுடைய சேர்க்கையைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். கிருஷ்ணருடைய சேர்க்கையால் ருக்மிணி மிகுந்த நாணத்தை அடைந்தாள். புதிய காதல் அனுபவத்தால் மிகுந்த சந்தோஷமடைந்தாள். அவள் முகம் மந்தஹாஸப் புன்னகையுடன் விளங்கியது. கிருஷ்ணர் தனிமையில் ருக்மிணிக்குப் பலவகையில் ஆனந்தமளித்தார். இரவும் பகலும் விளையாட்டுப் பேச்சுக்களால் மகிழச் செய்தார். முன்பை விடப் பலவிதமாய் அரவணைத்து, அவளை சந்தோஷமடையச் செய்தார் . மக்களும் சுபிட்சமாக, பேரானந்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.

Friday, February 6, 2015

கண்ணன் கதைகள் (56) - கோபிகைகளுக்கு உத்தவர் சேதி சொல்லுதல்

கண்ணன் கதைகள் (56) - கோபிகைகளுக்கு உத்தவர் சேதி சொல்லுதல்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

பிறகு கிருஷ்ணர் பலராமனுடன், ஸாந்தீபனி முனிவரிடம் அறுபத்து நான்கு நாட்களிலேயே பல வித்தைகளையும், கல்விகளையும் கற்றார். குருதக்ஷிணையாக, இறந்த அவரது மகனை யமலோகத்திலிருந்து மீட்டு, அவரிடம் கொடுத்தார். பின்னர் மதுரா நகரத்தை அடைந்தார்.

பிருந்தாவனத்தில் கோபிகைகள், கிருஷ்ணரை நினைத்து மிகவும் துயரம் அடைந்தார்கள். அதனை அறிந்த கிருஷ்ணர், அவர்கள் மீது கருணை கொண்டு, தனது நண்பரும், சிறந்த பக்தருமான உத்தவரை அவர்களிடம் சேதி சொல்ல அனுப்பினார். எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் உத்தவருக்குக் காண்பிக்க நினைத்து, அவரை அங்கு அனுப்பினார். உடனே உத்தவர் புறப்பட்டு, கோகுலத்திற்கு மாலையில் சென்றார். கிருஷ்ணனைப் பற்றிய செய்திகளைக் கூறி நந்தகோபரையும், யசோதையையும் சந்தோஷமடையச் செய்தார். நந்தனுடைய வீட்டின் அருகில் தேர் நிற்பதைப் பார்த்த கோகுலத்துப் பெண்கள், உத்தவர் வந்திருப்பதை அறிந்து, எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு நந்தனின் வீட்டை அடைந்தனர். கண்ணனுடைய பல்வேறு செயல்களையும் விளையாட்டுக்களையும் மீண்டும் நினைத்துப் பேச முடியாமல் ஆனார்கள். தடுமாற்றத்துடன் தயங்கிக் கொண்டு உத்தவரிடம் பேச முயன்றார்கள். "உத்தவரே! இரக்கமற்ற அந்தக் கண்ணன், தன் பெற்றோரைப் பார்ப்பதற்காக உங்களை அனுப்பினானா? நகரத்துப் பெண்களால் கவரப்பட்ட அவன் எங்கிருக்கிறான்? நாதனே! காக்க வேண்டும். உமது முத்தங்களையும், தழுவல்களையும், பேச்சுக்களையும், அழகிய விளையாட்டுக்களையும் யாரால் மறக்க முடியும்?" என்று அரற்றினார்கள். இவ்வாறு பலவிதமாய்ப் புலம்பிய கோபிகைகளிடம், உத்தவர் தத்துவங்கள் பொதிந்த கண்ணனின் சேதியைக் கூறி, சமாதானம் செய்தார். அதனைக் கேட்ட கோபியர்கள் மகிழ்ந்தனர். உத்தவர், அவர்களோடு கிருஷ்ணனின் செய்கைகளையும், விளையாட்டுக்களையும் பற்றிப் பேசிக்கொண்டு சில தினங்களை அங்கே கழித்தார். கோகுலத்தில், எப்பொழுதும், எல்லாரும் கிருஷ்ணனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டு வேலைகள் செய்யும்போது கூட, அவருடைய லீலைகளையே பாடிக் கொண்டிருந்தார்கள். தூக்கத்திலும் கிருஷ்ணனைப் பற்றியே பேசினார்கள். அவர்களது செய்கைகள் யாவும் கிருஷ்ணனை அனுசரித்தே இருந்தன. அனைத்து செயல்களும் கிருஷ்ணமயமாக இருந்தது. இதைக் கண்ட உத்தவர் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தார்.

உத்தவர் ராதையிடம், “ராதையே! உன் கிருஷ்ணன் பூக்களைக் கண்டால், இது என் ராதைக்கு மிகவும் பிரியமானது என்பார். நான் பேசினால் ராதையும் இவ்வாறுதான் பேசுவாள் என்றும், நான் பேசாவிட்டால், கோபம் கொண்ட ராதையைப் போல் என் பேசாமல் இருக்கிறாய்? என்றும் என்னைக் கேட்பார்” என்று கூறி, தாமரைக்கண்களுடைய ராதையை ஆனந்தமடையச் செய்தார். “ நான் சீக்கிரமே திரும்பி வருவேன். மிகுந்த கார்யங்களினால் வரமுடியவில்லை. பிரிவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். என்னைப் பற்றிய நினைவுகள் எப்போதும் உங்களுக்கு இருப்பதால் வெகு விரைவில் உங்களுக்கு பிரும்மானந்த சுகம் கிட்டப் போகிறது. அப்போது உங்களுக்கு பிரிவும், சேர்க்கையும் சமமான ஆனந்தத்தை அளிக்கும்” என்று கிருஷ்ணன் கூறியதை, உத்தவர் கோபிகைகளிடம் கூறி சமாதானப் படுத்தினார். இவ்விதமான அன்பையும், பக்தியையும் எந்த உலகிலும் கண்டதில்லை, கேட்டதில்லை. தவம் செய்வதாலோ, வேதங்களைக் கற்பதாலோ என்ன பயன்? கோபிகைகளை நமஸ்கரித்துத் தொழுதாலே போதும் என்று எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் மெய்மறந்து, ஆனந்தத்துடன் கூறிக்கொண்டு உத்தவர் கோகுலத்திலிருந்து மதுரா திரும்பினார்

மதுராவில், ஸைரந்திரி கிருஷ்ணரைப் பற்றியே நினைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் அவருடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். தன் இல்லத்தையும், தன்னையும் நன்கு அலங்கரித்துக் கொண்டு காத்திருந்தாள். கிருஷ்ணன் உத்தவருடன் அவளது இல்லத்திற்குச் சென்றார். அவளது நீண்டநாள் எண்ணம் நிறைவேறியது. அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அவள், கிருஷ்ணனைப் பலவிதமாகப் பூஜித்தாள். கிருஷ்ணன் அவளிடம் வேண்டிய வரம் கேள் என்று கூற, அவளும், பல இரவுகள் கண்ணனோடு கழிக்கும் விஷய சுகத்தையே வரமாக வேண்டினாள். பிறகு, சில இரவுகள் அவளுடன் தங்கி அவளுக்கு ஆனந்தத்தை அளித்து அவளுக்கு உபஶ்லோகன் என்ற புத்திரனையும் அளித்தார். அந்த உபஶ்லோகன், நாரத முனிவரிடம் இருந்து பாஞ்சராத்ர ஆகமத்தை உபதேசம் பெற்று அதில் பிரசித்தனாக விளங்கினான். பின்னர், கிருஷ்ணர் பலராமருடனும், உத்தவரோடும் அக்ரூரரின் வீட்டை அடைந்தார். அவருடைய வரவால் மிகவும் மகிழ்ந்த அக்ரூரர், அவர்கள் அனைவரையும் நன்கு வரவேற்று உபசரித்து, பூஜித்துத் துதித்தார். அவரை நகரத்திற்கு அனுப்பி, குந்தியின் புத்திரர்களான பாண்டவர்கள் காட்டிலிருந்து நகருக்குத் திரும்பி வந்ததைப் பற்றியும், திருதராஷ்ட்ரனின் கெட்ட செயல்களைப் பற்றியும் அறிந்தார்கள்.

ஜராஸந்தன் என்பவன், தன் நண்பனும், மாப்பிள்ளையுமான கம்ஸனின் வதம் பற்றிக் கேள்விப்பட்டு, மிகுந்த கோபம் கொண்டு, மதுராநகரத்தை அழித்தான். சிறிய படையையுடைய கிருஷ்ணர், தேவலோகத்திலிருந்து பலராமனுக்குக் கிடைத்த தேர் முதலியவற்றால், அவனது இருபத்திமூன்று அக்ஷௌஹிணிப் படைகளை முறியடித்தார். பலராமன் ஜராஸந்தனைக் கட்டி வைத்தார். அவனோடு யுத்தம் செய்ய ஆசைகொண்ட கிருஷ்ணன் அவனை விடுவித்தார். ஏனெனில், அனைத்து அரசர்களையும் வென்று, அவர்களது சேனைகளையும் அடைந்த ஜராஸந்தனைப் போன்ற வீரன் அப்போது யாரும் இல்லை. தோல்வியடைந்த ஜராஸந்தன், மற்ற அரசர்களின் உதவியுடன் பதினாறு முறை கண்ணனோடு யுத்தம் செய்தான். அவனது முன்னூற்று தொண்ணூற்று ஒன்று அக்ஷௌஹிணிப் படைகளையும் கிருஷ்ணர் அடித்துக் கொன்றார். அவனுடன் பதினெட்டாவது முறை யுத்தம் ஆரம்பிக்கும்முன், மூன்று கோடி யவனர்களுடன் ஒரு யவனன் படையெடுத்து வருவதை அறிந்த கண்ணன், உடனே, விஸ்வகர்மாவைக் கடலின் நடுவில் ஒரு நகரை உருவாக்கச் சொல்லி, அதில் மக்கள் அனைவரையும் குடியேறச் செய்தார். பிறகு, தாமரை மாலையணிந்து, நகரத்திலிருந்து வெளியே வந்தார். யவனர்களின் தலைவன் பின்தொடர்ந்து வந்தான். உடனே கிருஷ்ணர் ஒரு மலைக்குகையில் மறைந்தார். தொடர்ந்து வந்த யவனன், கிருஷ்ணன் என்று நினைத்து, குகையில் தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் என்ற அரசனைக் காலால் உதைத்தான். விழித்த முசுகுந்தன், அந்த யவனனை, தன் பார்வையால் சாம்பலாக்கினான். அப்போது கிருஷ்ணன், குகையில், பக்தனான முசுகுந்தனுக்கு காட்சி கொடுத்தார். "எனக்கு அரச வாழ்வில் விருப்பம் இல்லை. தங்கள் அனுக்ரஹம் ஒன்றே வேண்டுகிறேன்" என்று முசுகுந்தன் துதித்ததைக் கேட்ட கிருஷ்ணன் மகிழ்ந்து, எல்லா துக்கங்களையும் போக்கும் பக்தியையும், அதன்பின் முக்தியையும் அவனுக்கு வரமாக அளித்தார். வேட்டையாடி உயிரினங்களைக் கொன்ற தோஷம் நீங்க அவனைத் தவம் செய்யச் சொன்னார்.

பிறகு கிருஷ்ணர் மதுராநகரம் சென்றார். யவனன் அழைத்து வந்த சேனைகளை அழித்தார். வழியில், ஜராஸந்தன் தடுத்தான். அவனுக்குக் கடைசியான வெற்றியைக் கொடுத்து, ஓடி ஒளிந்து கொள்வதுபோல் பாவனை செய்து, கடலின் நடுவே உள்ள துவாரகா நகரை அடைந்தார்.

Thursday, February 5, 2015

கண்ணன் கதைகள் (55) - கம்ஸ மோக்ஷம் / கம்ஸ வதம்

கண்ணன் கதைகள் (55) - கம்ஸ மோக்ஷம் / கம்ஸ வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

கண்ணனின் அவதார நோக்கம் நிறைவேறும் அந்த நாளும் வந்தது. மறுநாள் அதிகாலையில், கம்ஸனின் ஆணைப்படி, மல்யுத்தத்திற்கான போட்டிகள் முரசொலி செய்து அறிவிக்கப்பட்டது. அதனைக் காண, பல அரசர்கள் வந்தனர். நந்தகோபரும் உப்பரிகைக்குச் சென்றார். கம்ஸனும் உப்பரிகைக்குச் சென்றான். கிருஷ்ணனும் பலராமனும் அழகிய ஆடை அலங்காரங்களுடன் மல்யுத்த களத்தை அடைந்தார்கள். அங்கு 'குவாலயாபீடம்' என்ற யானை அவர்களை வழிமறித்து நின்றது. வழிவிட்டுச் செல் என்று அந்த யானையைப் பணித்தார் கிருஷ்ணன். அப்போது யானைப் பாகனான 'அம்பஷ்டன்', கிருஷ்ணனைத் தாக்க யானையை ஏவினான். அந்த யானை, விரைந்து கிருஷ்ணனைப் பிடித்தது. அதனிடமிருந்து லாவகமாகத் தன்னை விடுவித்துக்கொண்ட கிருஷ்ணன், அதன் மத்தகத்தில் அடித்தார். பின்னர் அதன் காலடியில் மறைந்து, பிறகு சிரித்துக்கொண்டு வெளியே வந்தார். யானைக்கு அருகில் இருந்தாலும், அதன் பிடியில் அகப்படாமல் நழுவி, வெகுதூரம் ஓடி, விளையாட்டாய் விழுவது போல் கீழே விழுந்தார். அந்த யானையும் கிருஷ்ணனைத் தாக்க எதிரே வந்தது. உடனே கிருஷ்ணன், அதன் தந்தங்களை வேருடன் பிடுங்கி எறிந்தார். யானையைக் கீழே தள்ளி, அந்த தந்தங்களால் யானையைக் குத்திக் கொன்றார். தந்தத்தின் அடிப்பகுதியிலுள்ள உயர்ந்த முத்துக்களை எடுத்து, ஸ்ரீதாமனிடம் கொடுத்து, "இவற்றை அழகிய முத்து மாலையாகச் செய்து ராதையிடம் கொடு" என்று கூறினார். பிறகு, யானையின் இரு தந்தங்களையும், கிருஷ்ணனும் பலராமனும் தங்களுடைய தோளில் சுமந்துகொண்டு, மல்யுத்த களத்திற்குச் சென்றார்கள். அவர்களைக் கண்ட மக்கள், அவர்களுடைய தேககாந்தியால் அபகரிக்கப்பட்டு, ஆச்சர்யம்! என்றும், நந்தகோபன் மஹாபாக்கியசாலி என்றும், சிலர் யசோதை பாக்கியசாலி என்றும், வேறு சிலர், இல்லை இந்த நகரத்து மக்களாகிய நாம்தான் பாக்கியம் செய்தவர்கள், என்றும் உவகையுடன் கூவினார்கள். அந்நகர மக்கள் கண்ணனைப் பரப்ரம்மமாக அறியவில்லை. ஆயினும், முதன்முதலாய் அவரைப் பார்த்த அவர்கள், உடனேயே பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள். கிருஷ்ணனுடைய செய்கைகளைப் பற்றிப் போற்றிப் பாடினார்கள்.

கம்ஸனுடைய ஆணையின்படி, மல்யுத்தத்தில் சிறந்த சாணூரன் என்ற மல்லன் கிருஷ்ணனையும், முஷ்டி யுத்தத்தில் சிறந்த முஷ்டிகன் என்பவன் பலராமனையும் சவாலுக்கு அழைத்தார்கள். பலவிதமான தாக்குதல்களுடன் யுத்தம் தொடங்கியது. "இது என்ன போட்டி? ஒரு புறம் அழகான சிறுவர்கள். மல்லர்களோ கடினமானவர்கள். இந்த யுத்தத்தை நாம் பார்க்க வேண்டாம், போய்விடுவோம்" என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது கிருஷ்ணன், சாணூரனைத் தூக்கிச் சுற்றி உயிரிழக்கச் செய்தார். உயிரிழந்த அவனை பூமியிலே ஓங்கி அடித்தார். பலராமனும் முஷ்டிகனை அடித்துக் கொன்றார். மீதமிருந்த மல்லர்கள் அங்கிருந்து ஓடினர். திகைத்த கம்ஸன், முரசுகளையும், வாத்தியங்களையும் முழங்க விடாமல் தடுத்தான். உக்ரசேனன், நந்தகோபன், வசுதேவன் ஆகியோரைக் கொல்லும்படியும், கண்ணனையும் பலராமனையும் வெகுதூரத்திற்கப்பால் விரட்டும்படியும் காவலர்களுக்கு உத்தரவிட்டான். இதைக் கேட்டுக் கோபமடைந்த கண்ணன், உப்பரிகையில் வீற்றிருந்த கம்ஸனை நோக்கி சிங்கம்போலப் பாய்ந்து சென்றார். கம்ஸன் வாளெடுத்துச் சுழற்றினான். அவனை அசையவிடாமல் வலுவாகப் பிடித்து, அவனுடைய கேசங்களைப் பிடித்து இழுத்து, சிம்மாசனத்திலிருந்து தலைக்குப்புற கீழே சாய்த்துத் தள்ளினார். பூமியில் தள்ளி, அவன் மார்பு மேல் அமர்ந்து, அவனுடைய அங்கங்களை அடித்து நொறுக்கினார். கம்ஸனுடைய கிரீடம் சிதறுண்டு தரையில் உருண்டது. மயங்கி விழுந்த கம்ஸன் மாண்டு போனான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். கம்ஸன் எப்போதும் கிருஷ்ணனையே மனதில் நினைத்திருந்தபடியால் மோக்ஷத்தை அடைந்தான்.

பிறகு கிருஷ்ணன், பெற்றோரான வசுதேவரையும், தேவகியையும் சிறையிலிருந்து மீட்டு, அவர்களை நமஸ்கரித்தார். கம்ஸனின் தந்தையான உக்ரசேனனை அந்த நாட்டிற்கு அரசனாக ஆக்கினார். யாதவ குலத்தினர் மிகவும் மகிழ்ந்தார்கள். தேவர்களின் குருவான பிருகஸ்பதியிடமிருந்து வித்தைகளைக் கற்ற உத்தவரை நண்பராக ஏற்றுக் கொண்டார். மிக்க மகிழ்ச்சியுடன் மதுரா நகரில் வசித்து வந்தார். 

Wednesday, February 4, 2015

கண்ணன் கதைகள் (54) - மதுரா நகரப்ரவேசம்

கண்ணன் கதைகள் (54) - மதுரா நகரப்ரவேசம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கிருஷ்ணன் நண்பகலில் மதுராநகரம் அடைந்தார். அருகிலுள்ள தோட்டத்தில் உணவுண்டு, நண்பர்களுடன் நகரைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்தார். அந்த நகரிலுள்ளவர்கள் .கண்ணனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் அவரை நேரில் காண ஆவல் கொண்டனர். கிருஷ்ணன் இப்போது ராஜவீதியை அடைந்தார். அவரைக் காண வந்த பெண்கள், எப்பொழுதும் கண்ணனையே மனதால் நினைத்துக் கொண்டிருந்ததால் அவரை நேரில் காண ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அப்பெண்கள் கள்ளமில்லாத தூய்மை உள்ளம் படைத்தவர்களாய் இருந்தார்கள். தனது கடைக்கண் பார்வையால், கிருஷ்ணன் அப்பெண்களை ஆனந்திக்கச் செய்தார். மக்களும் மகிழ்ச்சியுடன் கிருஷ்ணனைக் காணக் கூடினார்கள். அப்போது எதிரே வந்த கம்ஸனுடைய வண்ணானிடம் உடைகள் வேண்டும் எனக் கிருஷ்ணன் கேட்க, அவன், "ராஜாவின் உடைகளை உனக்கு எவன் கொடுப்பான்? தள்ளிப்போ" என்று கேலியாகக் கூறினான். உடனே கிருஷ்ணன் அவன் தலையைக் கிள்ளி எறிந்தார். அவனும் நற்கதியை அடைந்தான்.

அப்போது, ஒரு துணி நெய்பவன் கண்ணனுக்குப் பொருத்தமான ராஜஉடைகளைக் கொண்டு வந்து கொடுத்தான். அவற்றை அணிந்தார். மாலை கட்டும் 'சுதாமா' என்பவன், கண்ணனுக்கு மலர் மாலைகளை அணிவித்துப் போற்றித் துதித்தான். அவனுக்கு அவன் விரும்பிய பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் வரமாகஅளித்தார். இவ்வாறு செல்லும்போது, வழியில், அழகான கண்களை உடையவளும், முதுகில் கூன் உடையவளுமான 'திரிவிக்ரா' என்ற ஒரு பெண்ணைக் கண்டார். அவள் கிருஷ்ணருக்கு சிறந்த சந்தனத்தையும், வாசனைத் திரவியங்களையும் பூசினாள். மனமகிழ்ந்த கண்ணன், அவளிடம் அன்பு கொண்டு, தனது கால் விரலால் அவள் காலை அழுத்திக் கொண்டு, அவளைக் கையினால் மெதுவாகப் பிடித்து அவள் கூனை நிமிர்த்தினார். அவள் உலகிலேயே அழகானவளாக ஆனாள். பரிசுத்தமான, பாபமற்ற அந்நகர மக்கள், கண்ணன் வரும் வழி நெடுக நின்றுகொண்டு, பூமாலை, தாம்பூலம் முதலிய தமது சக்திக்குத் தகுந்த ஏதாவது ஒரு பொருளை கண்ணனுக்குக் கொடுத்தார்கள். கண்ணன் கோட்டைவாயிலில் நுழைந்தார். மக்களின் ஆரவாரத்தினால் கிருஷ்ணனுடைய வருகையை அறிந்த தேவகி, மிகுந்த குதூகலம் அடைந்தாள். அவளது ஸ்தனங்களிலிருந்து பால் சுரந்தது.

கிருஷ்ணன் மதுரா நகருக்குள் பிரவேசித்தபோது காவலர்களும், மக்களும் அவருடைய அழகைக் கண்டு மயங்கி வழி விட்டார்கள். தனுர்யாகம் நடந்து கொண்டிருக்கும் இடத்தை அடைந்தார். அங்கே அந்த வில்லானது, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு ஒரு அறைக்குள் வைக்கப்பட்டிருந்தது. அந்த வில் வைத்திருந்த அறைக்குள் பிரவேசித்த கண்ணன், நொடிப்பொழுதில் அந்த வில்லை எடுத்து நாணேற்றி முறித்தார்.

வில் முறிந்த பெரிய ஒலியைக் கேட்டு தேவர்கள் மெய்சிலிர்த்தனர். அந்த ஓசையானது கம்ஸ வதத்திற்கு முன் வாசிக்கப்படும் மங்கள வாத்தியம் போல் இருந்தது. அந்த ஓசையைக் கேட்ட கம்ஸனுக்கும் நடுக்கம் ஏற்பட்டது. முறிந்த வில்லினால் அடிபட்ட காவலர்களின் கூக்குரல் கம்ஸனுடைய பயத்தை அதிகரித்தது. சிஷ்டர்களைப் பரிபாலனம் செய்யவும், துஷ்டர்களை நிக்ரஹம் செய்யவும் அவதரித்த கிருஷ்ணன், நகரத்தின் அழகைப் பார்த்துக் கொண்டே மாலையில், பூந்தோட்டத்தில் உள்ள தனது கூடாரத்தை அடைந்தார். அன்று இரவு, தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீதாமாவிடம், ராதையின் பிரிவால் ஏற்பட்ட துயரத்தைக் கூறிக் கொண்டு, பல கதைகளைப் பேசிக் கொண்டு அங்கு தங்கினார். அவதார நோக்கம் நிறைவேறும் அந்த நாளும் வந்தது.

Tuesday, February 3, 2015

கண்ணன் கதைகள் (53) - அக்ரூரர் தூது, மதுரா நகரப் பயணம்

கண்ணன் கதைகள் (53) - அக்ரூரர் தூது, மதுரா நகரப் பயணம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

கம்ஸன் அனுப்பிய அத்தனை அசுரர்களையும் கண்ணன் கொன்றுவிட்டான். கம்ஸன் மிகவும் பயந்தான். நாரதர் மூலம் கண்ணன் கோகுலத்தில் வசிப்பதை அறிந்த கம்ஸன், கண்ணனையும், பலராமனையும் கொல்லத் திட்டம் தீட்டினான். தனுர் யக்ஞம் என்ற வில் பூஜையில் கலந்து கொள்ள கிருஷ்ணனை அழைத்து வருமாறு பண்பில் சிறந்த அக்ரூரரை அனுப்பினான்.

அக்ரூரர் கிருஷ்ணனிடத்தில் பரம பக்தி கொண்டவர். கம்ஸனிடம் இருந்த பயத்தால் கிருஷ்ணனைத் தரிசிக்காமல் இருந்து வந்தார். கம்ஸனே கிருஷ்ணனை அழைத்து வரக் கட்டளையிட்டதும் மிகவும் மகிழ்ந்தார். ரதத்தில் ஏறி, கோகுலம் நோக்கிப் புறப்பட்டார். கிருஷ்ணனையே நினைத்து, அந்த நினைவுகளை அனுபவித்து, அவரை சந்திப்பதில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று வேண்டிக்கொண்டே சென்றார். "பரமனை நான் தரிசிப்பேனா? தொட்டுத் தழுவுவேனா? அவர் என்னுடன் பேசுவாரா? அவரை எங்கு காண்பேன்?" என்று எண்ணியவாறே கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே வழியைக் கடந்தார். கண்ணனின் பாதம் பட்டதால் புனிதமானதும், சிவனும், பிரமனும், தேவர்களும் வணங்கத் தகுந்ததுமான பிருந்தாவனத்திற்குள் நுழைந்தார். எல்லையில்லா ஆனந்தத்தில் மூழ்கி, உணர்ச்சி மிகுந்த நிலைமைகளை அடைந்தார். கண்ணன் விளையாடிய இடங்களைப் பார்த்து வணங்கினார். கண்ணனின் பாதம் பட்ட புழுதியில் புரண்டார். அவர், கோபிகைகளின் வீடுகளைப் பார்த்துக் கொண்டும், அவர்கள் பாடும் தங்கள் புகழைக் கேட்டுக் கொண்டும், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி, மாலையில் நந்தகோபரின் வீட்டு வாசலை அடைந்தார். பசுவிடமிருந்து பால் கறப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணனையும் பலராமனையும் கண்டார். தான் உள்ளே அனுபவித்த ப்ரும்மானந்தத்தை வெளியில் பார்ப்பதுபோல் உணர்ந்தார். 

பீதாம்பரம், நீலாம்பரம் இவற்றை அணிந்து மிக அழகுடன் விளங்கும் கிருஷ்ணனையும், பலராமனையும் கண்டார். சில ஆபரணங்களை மட்டுமே அணிந்து, புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருக்கும் இருவரையும் கண்டார். அவர்களைக் கண்டவுடன், வெகு தூரத்திலேயே ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கி, தரையில் விழுந்து வணங்கினார். கிருஷ்ணன் அவரை எழுப்பித் தழுவிக் கொண்டான் . நலன்களைப் பற்றி விசாரித்து, கையைப் பிடித்துக் கொண்டு பலராமனுடன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். யதுகுலத்தில் பிறந்த அக்ரூரரை, நந்தகோபரும், கிருஷ்ணனும், பலராமனும் நன்கு உபசரித்தார்கள். கம்ஸனுடைய அழைப்பைப் பற்றி அக்ரூரர் தெரிவித்தார். அதைக் கேட்ட கிருஷ்ணன், கோபர்களிடம் அதை அறிவித்தார். இரவு முழுவதும் அக்ரூரருடன் பல கதைகளைப் பேசிக்கொண்டு கழித்தார். கிருஷ்ணனைக் காணாததால், இன்று கிருஷ்ணன் சந்திரை, சந்திரபாகை, ராதை அல்லது மித்திரவிந்தையின் வீட்டில் தங்கியிருக்கிறான் என்று கோபிகைகள் மற்ற கோபிகைகளை சந்தேகித்தார்கள்.

அக்ரூரருடன் கிருஷ்ணன் மதுரா நகரம் செல்லப் போவதை அறிந்த கோபியர்கள் மிகவும் துயரமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கவலையுடன் புலம்பினார்கள். அவனைத் தவிர வேறு கதியற்ற நம்மை எப்படி விட்டுப் போகிறான்? இதுதான் தெய்வம் நமக்கு விதித்ததோ? என்று வருந்தி, அழுது புலம்பினார்கள். கிருஷ்ணன், கோபியர்களின் துயரைத் தீர்க்க, அங்கு ஒரு தோழனை அனுப்பினார். கிருஷ்ணன் அந்த இரவின் முடிவில் நந்தனுடனும், நண்பர்களுடனும் கலந்து பேசி, மதுரா நகரம் செல்லத் தீர்மானித்து பலராமனை கூட்டிக் கொண்டு அக்ரூரருடன் மதுரா புறப்படும் ஏற்பாடுகள் தொடங்கின. “நான் விரைவிலேயே தங்களிடம் திரும்பி வருவேன். என்னோடு உல்லாசமாய் இருக்கும் தருணமும் விரைவிலேயே ஏற்படும். ஆனந்தமயமான அம்ருத வெள்ளத்தில் மூழ்கடிப்பேன்” என்று கோபியர்களை சமாதானம் செய்தார். அவர்களும் மிகுந்த வருத்தத்துடன், வெகுதூரம் போகும்வரையில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைக்கண்ணால் அவர்களைப் பார்த்துக்கொண்டே பலராமனுடனும், அக்ரூரனுடனும் தேரில் ஏறிப் புறப்பட்டார். கோபர்களின் எண்ணற்ற தேர்களும் பின்தொடர்ந்தன. கானகத்திலுள்ள மிருகங்கள் வருந்தின. மரங்கள் வாடின. 
அனைவரும் யமுனைக் கரையை அடைந்தார்கள். 

அக்ரூரர், நித்ய அனுஷ்டானம் செய்வதற்காக யமுனையில் மூழ்கினார். பரப்ரம்மமான கிருஷ்ணனை நீரினுள்ளேயும், வெளியே எழுந்ததும் தேரிலும் இருக்கக் கண்டார். இரண்டு இடங்களிலும் கண்ணனது தரிசனம் ஏற்படுகிறதே, என்ன ஆச்சர்யம்! என்று மெய்சிலிர்த்தார். மீண்டும் நீரில் மூழ்கினார். அங்கு அவரைப் பாம்பணையின்மேல் பள்ளி கொண்டிருப்பவராகவும், கரங்களில் சங்கு, சக்ரம், கதை, தாமரை ஏந்தியிருப்பவராகவும் கண்டார். தேவர்களும், சித்தர்களும் சூழ்ந்திருக்கக் கண்டார். அளவற்ற ப்ரும்மானந்த வெள்ளத்தில் திளைத்தார். பிரமனாகவும், சிவனாகவும், விஷ்ணுவாகவும் கண்டு ஸ்தோத்திரம் செய்தார். வைகுண்ட ஸ்வரூப காட்சியும் மறைந்தது. அனுபவித்த ஆனந்தத்தினால் மயிர்க்கூச்சலடைந்து தேரின் அருகே வந்தார். அவரிடம் கிருஷ்ணன், “ இந்த யமுனையின் ஜலம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறதா? உனக்கு ரோமாஞ்சம் உண்டாகியிருக்கிறதே” என்று அறியாதவர்போல் கேட்க, அக்ரூரரோ வைகுண்ட ஸ்வரூபத்தைக் கண்டதால் ஏற்பட்ட ஆனந்தத்தில் பேசமுடியாமல், பதில் கூறாமல் இருந்தார்.

Monday, February 2, 2015

கண்ணன் கதைகள் (52) - சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்

கண்ணன் கதைகள் (52) - சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கோபியர்களுடன் ராஸக்ரீடை முடிந்தது. ஒரு நாள், கோபர்கள் அனைவரும் அம்பிகா வனத்தில் உள்ள சிவனைத் தொழுவதற்காகச் சென்றார்கள். சரஸ்வதி நதியில் நீராடிவிட்டு, அம்பிகையையும், சிவனையும் விரதமிருந்து தொழுதார்கள். தொழுது முடித்ததும் நதிக்கரையிலேயே கோபர்கள் கண்ணயர்ந்தார்கள். அப்போது ஒரு பெரிய மலைப்பாம்பு நந்தகோபனை விழுங்கியது. கொள்ளிக்கட்டைகளால் அடித்தும் அந்தப் பாம்பு பிடியை விடவில்லை. கோபர்கள் கதறினார்கள். அந்த சத்தத்தைக் கேட்டு அங்கே வந்த கிருஷ்ணன், அப்பாம்பின் அருகே சென்று அதைக் காலால் உதைத்தான். உடனே அப்பாம்பு, வித்யாதர உருவம் எடுத்தது. அந்த வித்யாதரன்," சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தியவரே! என் பெயர் சுதர்சனன். நான் வித்யாதரனாய் இருந்தபொழுது, முனிவர்களைப் பழித்தேன். அவர்கள் என்னை மலைப்பாம்பாக ஆகும்படி சபித்தனர். தங்கள் பாதம் பட்டு சுய உருவத்தை அடைந்தேன்" என்று கூறி, நமஸ்கரித்து வானுலகம் அடைந்தான். கோபர்களும் மகிழ்ந்து வீடு சென்றனர்.

கண்ணன் கதைகள் (52) - சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு சமயம், கிருஷ்ணன் பலராமனோடும், கோபியர்களோடும் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். கண்ணனுடைய குழலோசையில் கோபியர்கள் லயித்திருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற குபேரனுடைய வேலையாளான சங்கசூடன் என்பவன் கோபிகைகளின் அழகில் மயங்கி அவர்களைக் கவர்ந்து சென்றான். கிருஷ்ணனும், பலராமனும் அவனைப் பின்தொடர்ந்தார்கள். அதைக் கண்ட அவன், கோபிகைகளை விட்டுவிட்டுத் தப்பி ஓடினான். பலராமன் பயத்திலிருந்த கோபிகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள, கிருஷ்ணன் சங்கசூடனைத் தொடர்ந்து சென்று, அவனுடைய தலையில் அடித்து அவனை வதம் செய்து, அவனுடைய தலையில் அணிந்திருந்த ரத்தின சூடாமணியை எடுத்து பலராமனிடம் கொடுத்தார்.


கண்ணன் கதைகள் (52) - சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கிருஷ்ணன், பகலில் நண்பர்களுடன் காட்டில் விளையாடி, மனதைக் கவரும் திருமேனியுடன் குழலூதிக் கொண்டிருந்தான். அப்போது, கம்ஸனின் வேலையாளான அரிஷ்டன் என்ற அசுரன், காளைமாடு உருவம் எடுத்துக்கொண்டு, பயங்கரமாய் சத்தமிட்டுக்கொண்டு அங்கே வந்தான். அனைவரையும் நடுங்கச் செய்துகொண்டு, பெரிய உருவத்துடன் பசுக்கூட்டங்களை விரட்டினான். பிறகு, நீண்ட கொம்புகளால் மரங்களை முட்டித் தள்ளினான். சிறுவர்கள் பயந்து அலறினார்கள். பிறகு கிருஷ்ணனின் எதிரே வந்தான். உடனே கிருஷ்ணன் அந்த அரிஷ்டாசுரனின் கொம்பைப் பற்றிப் பிடித்து, ஒரு கொம்பைப் பிடுங்கி, சுழற்றி வீசி எறிந்து கொன்றார். தேவர்கள் மகிழ்ந்தனர். இடைச்சிறுவர்கள் கிருஷ்ணனைத் துதித்துப் போற்றினர். இடையர்கள் சிரித்துக்கொண்டு, “காளைகளே! வ்ருஷபாசுரனைக் கொன்ற கிருஷ்ணன் இங்கே இருக்கிறான், நீங்கள் வெகுதூரம் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்” என்று கூறினர். பிறகு, இடையர்கள் வீடு திரும்பினார்கள். 



கண்ணன் கதைகள் (52) - சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கேசீ என்பவன் கம்ஸனுடைய உறவினன். எந்த முயற்சியிலும் அவன் தோல்வியடைந்ததில்லை. அந்த அசுரன் குதிரை வடிவில் பிருந்தாவனத்தை வந்தடைந்தான். அந்த அசுரன் குதிரை வடிவம் எடுத்து வந்தாலும், அவனது குரல் அனைவரையும் நடுங்கச் செய்வதாய் இருந்தது. ஆயர்பாடியில் உள்ள அனைவரையும் துன்புறுத்தினான். பிறகு கிருஷ்ணனிடம் வந்தான். கிருஷ்ணனுடைய மார்பில் குதிரை எட்டி உதைத்தது. அந்த அசுரனுடைய கால்களின் உதையிலிருந்து விலகி, கிருஷ்ணன் அவனை வெகுதூரத்தில் வீசி எறிந்தார். அதனால் அவன் மயக்கம் அடைந்தாலும், மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் அதிகக் கோபத்துடன் கண்ணனிடம் ஓடி வந்தான். அந்தக் குதிரையைக் கொல்லத் தீர்மானம் செய்த கிருஷ்ணன், தன்னுடைய கைகளை அவன் முகத்தில் வைத்து அழுத்தினார். அதனால், அந்த குதிரை வடிவெடுத்த அசுரன் மூச்சுத் திணறி உயிரிழந்தான். கேசீ என்ற குதிரையைக் கொன்றதால், தேவர்கள் மகிழ்ந்து கிருஷ்ணனைக் ‘கேசவன்’ என்று பெயரிட்டுப் போற்றித் துதித்தனர். அங்கு வந்த நாரதர், அசுரனான கேசீ வதம் செய்யப்பட்டதும் கிருஷ்ணனைத் துதித்து நமஸ்கரித்தார். பின்னர், கம்ஸனின் முயற்சிகளை கண்ணனிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.


கண்ணன் கதைகள் (52) - சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு நாள் இடையர்களுடன் கண்ணன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தேவர்களைத் துன்புறுத்துபவனும், அளவற்ற மந்திர சக்திகள் கொண்டவனும், மயனுடைய பிள்ளையுமான வ்யோமன் என்ற அசுரன், அங்கு வந்தான். திருடர்களும், காப்பாற்றுகிறவர்களும் என்ற விளையாட்டில் வ்யோமாசுரன் திருடனாய்க் கலந்து விளையாடினான். இடைச்சிறுவர்களையும், பசுக்களையும், திருடி குகையில் அடைத்து வைத்து, குகையின் வாயிலைப் பெரிய கல்லால் அடைத்து மூடினான். இதையறிந்த கிருஷ்ணர் அவனைப் பிடித்தார். வ்யோமாசுரன் மலையைப் போன்று தனது உருவத்தைப் பெரிதாக்கிக் கொண்டான். ஆனால் கிருஷ்ணன் அவனைத் தரையில் தள்ளி நொறுக்கிக் கொன்றார். கிருஷ்ணர், இவ்வாறு அதிசயக்கத்தக்க, நிகரற்ற பல விளையாட்டுக்களால் ஆயர்பாடி மக்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தினார்.

Sunday, February 1, 2015

கண்ணன் கதைகள் (51) - ராஸக்ரீடை

 கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள், கண்ணன் கதைகள் (51) - ராஸக்ரீடை

கோபியர்கள் மிகுந்த ஆனந்தமாக யமுனைக்கரையில் கண்ணனுடன் விளையாடினார்கள். தலையில் மயில் பீலியுடனும், காதுகளில் மீன் குண்டலங்களும், கழுத்தில் முத்து மாலைகளும், வனமாலையும் அசைய, பீதாம்பரமும், ஒட்டியாணமும், ரத்தினங்கள் இழைக்கப்பட்ட கொலுசுகளும் அணிந்து, வாசனைப் பொடிகள் முதலியவற்றால் மணம் வீசும் சரீரத்துடன், அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணன் அனைவரின் மனம் மயங்கும்படியான அழகுடன் விளங்கினான். அப்போதே, மார்புக்கச்சைகளை இறுக்கிக் கட்டிக்கொண்டு, தங்களை அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு கோபியர்கள் அவனைச் சுற்றி வட்டமாய் நின்றார்கள். கிருஷ்ணனும் அப்பெண்களுக்கிடையில், (இரு கோபிகைகளுக்கிடையில் ஒரு கிருஷ்ணன், இரு கிருஷ்ணனுக்கு இடையில் ஒரு கோபிகை) நின்று கொண்டு, நர்த்தனம் செய்துகொண்டு, தனது யை ஆரம்பித்தான்.

நாரதர் கிருஷ்ணனுடைய ராஸக்ரீடையின் அழகைக் கூறக் கேட்ட தேவர்கள், தேவ மங்கையருடன் வேகமாய் வந்து ஆகாயத்தில் சூழ்ந்து நின்றனர். கண்ணனின் புல்லாங்குழலிலிருந்து இனிய ஓசை உண்டானது. அழகிய ஸ்வரங்களுடன், சிறப்பான ராகங்களுடன், மனோகரமான ஆலாபனங்களுடன் இனிமையான இசை உண்டானது. இசைக்கு ஏற்றவாறு அவனுடைய கால்கள் தாளமிட்டன. கைவளைகள் ஒலியெழுப்பின. இடுப்பிலுள்ள ஆடைகள் அசைய, தாமரை போன்ற கைகளைத் தோளில் வைத்துக் கொண்டிருக்கும் இந்த ராஸக்ரீடையின் காட்சி மிக்க மனோகரமாய் இருந்தது. இனிமையான இசையை மேல் ஸ்தாயியில் பாடிக்கொண்டு, பின்னணிக் கொத்து என்ற நடனம் ஆரம்பித்தது. நடனத்தின் அசைவின்போது, அனைவரும் அணிந்திருந்த ஆபரணங்கள் இடம் மாறி நகர்ந்து மிக அழகாய் இருந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்து, மனம் மயங்கினர். தேவமங்கையரும் மனம் மயங்கினர். வியர்த்துக் களைத்த அழகான கோபிகை ஒருத்தி, சோர்வுடன் நடனம் செய்ய முடியாமல், கிருஷ்ணனுடைய தோளைப் பிடித்துக் கொண்டு தொங்கினாள். முன் நெற்றிக்குழல்கள் கலைந்த ஒரு கோபிகை மயிர்க்கூச்சலுடன், சந்தன மணம் வீசும் அவனுடைய கைகளை முத்தமிட்டாள். அதிர்ஷ்டசாலியான ஒரு கோபிகை, குண்டலங்கள் ஆடும் தன்னுடைய கன்னத்தை, அவனுடைய கன்னங்களுடன் இணைத்து, அவன் வாயிலிருந்து தாம்பூலத்தைப் பெற்று, அதை உறிந்து சுவைத்தாள். அப்பெண்கள், நர்த்தனத்தின் போது, பல வித சுகமான நிலைகளை அடைந்தார்கள். பாட்டு நின்றது. வாத்தியங்களும் ஓய்ந்தன. பிரும்மானந்த ரஸத்தில் மூழ்கிய கோபிகைகள் மட்டும் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள், மேலாடை கலைந்ததையோ, ரவிக்கை அவிழ்வதையோ, கச்சத்தின் முடிச்சு அவிழ்வதையோ அறியவில்லை. வானில் நட்சத்திரக் கூட்டமும் நின்று விட்டன. கிருஷ்ணன், அகில உலகங்களையும் பிரும்மானந்த ரஸத்தில் மூழ்கச் செய்து, தனது ராஸலீலையை முடித்தான். நடனமாடியதால் உண்டான வியர்வைத் துளிகளுடன் கோபிகைகள் மனம் மயங்கி நின்றிருந்தனர். அங்கு, எத்தனை கோபிகைகள் இருந்தார்களோ அத்தனை கிருஷ்ணனாக வந்து அவர்களைக் களிக்கச் செய்தான்.

மிகவும் அழகான சரீரமுள்ளவர்களும், சோர்வை அடைந்தவர்களுமான அப்பெண்களோடு விளையாடினான். அக்காட்டில், மந்தமாருதம் வீசும் போது வந்த பூக்களின் வாசனையால் அப்பெண்கள் மயங்கி நின்றார்கள். யோகிகள் மட்டுமே அடையக்கூடிய பரமானந்த வெள்ளத்தில் அப்பெண்கள் மூழ்கினார்கள். இந்த கோபிகைகள் மிகுந்த பேறு பெற்றவர்கள், இவர்களால் நாம் ராஸக்ரீடையைக் காணும் பாக்கியம் பெற்றவர்கள் ஆனோம் என்று ப்ரம்மா, பரமசிவன், தேவர்கள் யாவரும் அதிசயித்தார்கள்.