Saturday, January 31, 2015

கண்ணன் கதைகள் (50) - கோபியர்களின் மதிமயக்கம்

கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள், கண்ணன் கதைகள் (50) - கோபியர்களின் மதிமயக்கம்

கோபிகைகள் கண்ணனையே கணவனாக அடைய வேண்டும் என்று காத்யாயனீ பூஜை செய்தார்கள். அந்தப் பூஜையின் முடிவில், முன்பே கோபியரிடம் கூறியபடி, நிலவொளியில், யமுனைக்கரையில் கண்ணன் குழலூதிக் கொண்டு நின்றான். அவன் புல்லாங்குழலில் இருந்து கிளம்பிய ஏழு ஸ்வரங்களால் உண்டான நாதம், உலகம் முழுவதையும் மயங்கச் செய்தது. அதைக் கேட்ட கோபியர்களும் சொல்லமுடியாத மதிமயக்கம் கொண்டனர்.வீட்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டும், குழந்தைகளை கவனித்துக் கொண்டும், கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டும் இருந்த கோபியர்கள், கண்ணனின் குழலோசையைக் கேட்டதும், மனம் மயங்கி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வந்தார்கள்.

சில கோபியர்கள் பாதி நகைகளைப் போட்டுக் கொண்டும், பாதி அலங்கரித்துக் கொண்டும் ஓடி வந்தார்கள். ஒரு பெண் தன் கழுத்தில் ஒட்டியாணத்தையும், இடுப்பில் ஹாரத்தையும் மாற்றி அணிந்துகொண்டு வந்தாள். மற்றொரு பெண், அதிக அன்பினால், ரவிக்கை அணிய மறந்து, மற்றவர்களுக்குத் தெரியாமல் ஓடி வந்தாள். அவள் ஓடி வந்தது, கண்ணனுக்கு அன்பாகிற பாரத்தை அபிஷேகம் செய்ய இரு குடங்களை எடுத்து வந்தது போலத் தோன்றியது. கணவர்களாலும் வீட்டிலுள்ளவர்களாலும் தடுக்கப்பட்ட சில பெண்கள், கண்ணனை மனதால் தியானம் செய்தார்கள். அவர்கள் உடலைவிட்டு ஆனந்த வடிவமான பரப்ரம்மத்தை அடைந்து மிகவும் புண்ணியம் செய்தவர்கள் ஆனார்கள்.அந்தப் பெண்கள் எவரும் கண்ணனைப் பரமாத்மா என நினைத்து வரவில்லை. காதலனாகவே நினைத்து வந்தனர். ஆயினும் நொடியில் துறவிகள் அடையக்கூடிய முக்தியை அடைந்தனர். கருணையான பார்வையாலும், புன்சிரிப்பினாலும் அழகாய் குழலூதிக் கொண்டு நிற்கும் கண்ணனை, கோபியர்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அவன் அருகே வந்த அந்த கோபியர்கள் மயங்கி நின்றார்கள்.

அவர்களின் எண்ணத்தை அறிந்திருந்தும், வானத்தில் கூடியிருக்கும் முனிவர்களும், உலக மக்களும் கேட்பதற்காக, குடும்பப் பெண்களின் தர்மத்தைப் பற்றி அப்பெண்களுக்கு கண்ணன் எடுத்துக் கூறினான். முன்பு கூறியதற்கு நேர்மாறான அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட கோபியர் மிகுந்த சோகம் அடைந்தனர். கண்ணா! எங்களைப் புறக்கணிக்காதீர்கள் என்று புலம்பினார்கள்.அவர்கள் புலம்பிக்கொண்டு அழுவதைப் பார்த்த கண்ணன், கருணை கொண்டு, யமுனைக் கரையின் மணல் குன்றுகளில் அவர்களுடன் விளையாடினான்.நிலவொளி வீசும் யமுனைக்கரையில், மணல் குன்றுகளில், கோபிகைகள் மேலாடையினால் ஆசனம் அமைத்து, கண்ணனை அமரச் செய்தார்கள். கண்ணன், அவர்களுடைய கைகளைப் பிடித்தும், முத்தமிட்டும், கட்டி அணைத்தும், இனிமையாகப் பேசியும், அந்த கோபிகைகளின் மனதை மயக்கி அவர்களை மகிழ்வித்தான். அழ்காகப் புன்னகைத்துக்கொண்டே அந்தப் பெண்களின் ஆடைகளை மறுபடி கவர்ந்தான். கண்ணனின் முகம் சிறு வியர்வைத் துளிகளால் நிறைந்து மூவுலகிலும் அழகு வாய்ந்ததாக இருந்தது. கோபியர்கள் கண்ணனைத் தழுவிக் கொண்டு அளவற்ற ஆனந்தம் அடைந்தார்கள். அளவற்ற ஆனந்தம் அடைந்ததால், மிகுந்த கர்வம் கொண்டார்கள்.உலகிலேயே அழகனான கண்ணன், என்னிடத்தில் மட்டும் அன்பு கொண்டிருக்கிறான் என்று ஒவ்வொரு கோபியரும் நினைத்தார்கள். அதனால் மிகுந்த கர்வம் கொண்டவர்களாக ஆனார்கள். அதையறிந்த கோவிந்தன், அந்த நொடியிலேயே மறைந்து போனான். ராதையென்ற கோபிகை மட்டும் கர்வமில்லாமல், அன்பு மிகுந்து இருந்தாள். .கண்ணன் அவளை அழைத்துக்கொண்டு வெகுதூரம் சென்று, அவளுடன் விளையாடினான்.

கண்ணன் மறைந்ததால், கோபியர் மிகுந்த துயரம் அடைந்தனர். அனைவரும் ஒன்றுகூடி கானகம் முழுவதும் தேடினார்கள். அவன் கிடைக்காததால் மிகுந்த வருத்தம் அடைந்தனர். மாமரமே, சம்பகமரமே, மல்லிகைக் கொடியே, எங்கள் கண்ணனைக் கண்டீர்களா? என்று மரங்களையும், கொடிகளையும் கேட்டு, கவலையுடன் புலம்பினார்கள்.கோபிகை ஒருத்தி, கற்பனையில் கண்ணனைக் கண்டு, மற்ற கோபியரிடம், கண்ணனை என் எதிரில் பார்த்தேன் என்று கூறினாள். அதைக் கேட்ட மற்றவர்களுடைய துன்பம் அதிகரித்தது. அவர்கள் எல்லாரும் கண்ணனையே நினைத்து, அவனுடைய செய்கைகளைப் பற்றியே பேசி வந்தார்கள்.

அப்போது ராதை கர்வம் கொண்டதால் அவளையும் விட்டு மாயமாய் ம
றைந்தான் கண்ணன். அனைவரும், ராதையுடன் கூட, இருட்டும்வரை கானகத்தில் தேடினார்கள். மனம் கலங்கி மீண்டும் யமுனைக் கரைக்கு வந்து புலம்பினார்கள். அவர்களது துன்பத்தைக் கண்டு கருணை கொண்டு, கோபியரின் முன், மன்மதனையும் மயங்கச் செய்யும் அழகுடன், மூவுலகங்களையும் மயக்கும் புன்சிரிப்புடன்மீண்டும் கண்ணன் தோன்றினான். அவனை நேரில் கண்ட கோபியர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். தங்கள் மகிழ்ச்சியை விதவிதமாக வெளிப்படுத்தினார்கள். சிலர் அசைவற்று நின்றார்கள். ஒரு கோபிகை, மயிர்க்கூச்சலுடன், கண்ணனது கையை எடுத்து, தனது மார்பில் வைத்துக்கொண்டு நின்றாள். மற்றொருத்தி அவன் கையை எடுத்து, தன் மூச்சே நின்றுவிடும்படி தனது கழுத்தில் இறுகச் சுற்றிக் கொண்டாள்.இன்னொரு கோபிகை, வெட்கத்தை விட்டு, கண்ணன் வாயிலிருந்து தாம்பூலத்தைப் பெற்று, அதை உண்டு, அனைத்தையும் அடைந்து விட்டதாய் நினைத்தாள். இரக்கமில்லாமல் என்னைக் காட்டில் விட்டுவிட்டுச் சென்ற உன்னை யாரும் தொடமாட்டார்கள் என்று ஒரு கோபிகை கண்ணில் நீர் வழிய கோபத்துடன் கூறினாள். ஆனந்தப் பரவசர்களாகி அக்கோபியர்கள், யமுனைக்கரையில் மீண்டும் தமது மேலாக்கினால் ஆசனம் செய்தார்கள். கண்ணனும் அதில் அமர்ந்தான்.

கண்ணன் அவர்களிடம், "பெண்களே! கல்நெஞ்சம் படைத்தவன் என்று என்னை சந்தேகப்படாதீர்கள். உங்கள் அதிக அன்பினால் பயந்து, உங்களுடைய மனம் என்னையே நாடவேண்டும் என்று நான் மறைந்து சென்றேன்" என்று கூறினான். மேலும்,"கோபியர்களே! உங்களைவிட என்னிடம் அன்பு கொண்டவர் எவரும் கிடையாது. ஆகையால், நிலவொளி வீசும் இந்த இரவில், என்னுடன் தடையின்றி விளையாடுங்கள்" என்று கூறினான். தேனினும் இனிய அந்த வார்த்தையால் மிகுந்த ஆனந்தம் அடைந்த கோபியர்கள், மகிழ்ந்து கண்ணனுடன் யமுனைக்கரையில் விளையாடினார்கள்.

Friday, January 30, 2015

கண்ணன் கதைகள் (49) - வருணன் நந்தனைக் கடத்திச் செல்லுதல்

கண்ணன் கதைகள் (49) - வருணன் நந்தனைக் கடத்திச் செல்லுதல்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு நாள் நந்தகோபர் ஏகாதசி விரதமிருந்து, துவாதசி விடியற்காலை என்று நினைத்து இரவில் யமுனையில் நீராடினார். வருணனின் வேலையாளான ஒரு அசுரன் அவரை இழுத்துச் சென்றான். நந்தனைக் காணாமல் அனைவரும் கதறி அழுதனர். கண்ணனிடம் சரணடைந்தனர். கண்ணன் தனது யோக சக்தியால் வருணனின் லோகத்தில் நந்தகோபர் இருப்பதை அறிந்து, உடனே வருணலோகம் சென்றான். 

கண்ணனைக் கண்ட வருணன் பக்தியுடன் தொழுது, பூஜை செய்தான். பிறகு, "ஹரியே! இன்று நான் பாக்கியம் செய்தவனானேன். பிறவிப் பிணி அகற்றுபவரே! எனது வேலையாள் செய்த  இந்தத் தவறை மன்னித்து அருளுங்கள். உம்முடைய தந்தையாரை அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறினான். அதே நொடியில் நந்தகோபரை அழைத்துக் கொண்டு கண்ணன் வீட்டிற்குச் சென்றான். நந்தகோபரும் தன் சுற்றத்தாரிடம் அதைப் பற்றிக் கூறினார். 

ஆயர்கள் கண்ணனை 'ஸ்ரீஹரி' என்று நிச்சயித்து, அவரது 
இருப்பிடமான வைகுண்டத்தைக் காண விரும்பினார்கள். எங்கும் நிறைந்திருக்கும் திருமாலான கண்ணன், யாராலும் அடைய முடியாத வைகுண்டலோகத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல அவர்களுக்குக் காண்பித்தான்வைகுண்டத்தைக் கண்ட கோபர்கள், ஆனந்த நிலையை அடைந்து, கைவல்யம் (மோக்ஷம்) என்ற சமுத்திரத்தில் மூழ்கினார்கள். அவர்களை மீண்டும் உலக உணர்வுக்கு அழைத்து வந்தான். மீண்டும் அவர்கள் பிருந்தாவனத்தில் இருந்தார்கள். இடையனாக வேடம் கொண்ட இந்த கிருஷ்ணாவதாரத்தில் பிரத்யக்ஷமாக வைகுண்டத்தைக்  காண்பித்து அதிசயத்தக்க லீலைகளைப் புரிந்து வந்தான்

Thursday, January 29, 2015

கண்ணன் கதைகள் (48) - கோவிந்த பட்டாபிஷேகம்


கண்ணன் கதைகள் (48) - கோவிந்த பட்டாபிஷேகம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

                                         கண்ணன் கதைகள் (48) - கோவிந்த பட்டாபிஷேகம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

தோல்வி அடைந்த இந்திரன், கர்வத்தை விட்டு, கண்ணனைப் புகழ்ந்து துதித்து, 'காமதேனு' என்ற தேவலோகத்துப் பசுவைப் பரிசாக அளித்தான். கண்ணனுடைய தாமரைப் பாதங்களில் தலை வைத்து வணங்கினான். காமதேனு என்ற அந்தப் பசு, "உலகிற்கெல்லாம் நாயகனே! தாங்கள் பசுக்களைக் காக்கும் குலத்தில் பிறந்தது எங்கள் பாக்கியம்! 'கோ'க்களைக் காக்கும் உமக்கு என் பாலைச் சொரிந்து, கோவிந்தன் எனப் பெயரிடுகிறேன் " என்று கூறி தனது பாலால் அபிஷேகம் செய்தது. இந்திரனும் 'ஐராவதம்' என்ற தனது யானை கொண்டு வந்த கங்கை ஜலத்தால் அபிஷேகம் செய்தான். இவ்வாறு கண்ணனுக்கு 'கோவிந்தன்' என்று பட்டாபிஷேகம் செய்ததும், ஆயர்பாடியில், வைகுண்டத்திலும் ஸ்வர்க்கத்திலும் கிடைக்காத ஐஸ்வர்யம் நிறைந்தது.

மலையைத் தூக்கியது போன்ற கண்ணனுடைய மகிமைகளைப் பார்த்த கோபர்கள், அவனை உலகிற்கெல்லாம் நாயகன் என்று உணர்ந்தனர். நந்தகோபனிடம் தங்கள் ஜாதகத்தின் பலனைக் கேட்டார்கள். அவர்களிடம் நந்தகோபர், முன்பு கர்க்க முனிவர் கூறியவற்றைச் சொன்னார். அவர்கள் அவன் மேல் அதிக அன்பும் பாசமும் கொண்டனர்.

Wednesday, January 28, 2015

கண்ணன் கதைகள் (47) - கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல்

கண்ணன் கதைகள் (47) - கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு முறை, இடையர்கள் இந்திரனைப் பூஜிப்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனுக்கு தான் மூவுலகங்களுக்கும் தேவன் என்ற மமதை அதிகரித்தது. அதனால் மும்மூர்த்திகளையும் வணங்காமல் அகம்பாவம் கொண்டிருந்தான். அவனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பிய கண்ணன், நந்தகோபரிடம்,"தந்தையே! இந்த ஏற்பாடுகள் எதற்கு?" என்று அறியாதது போல் கேட்டான். நந்தனும், “மகனே! இந்திரன், மழை பொழியச் செய்து நம் பூமியைச் செழிப்பாக வைக்கிறார். அதனால் அவருக்கு ஒவ்வொரு வருடமும் பூஜை செய்ய வேண்டும். அனைவரின் பிழைப்பும் மழை மூலம் ஏற்படுகிறது. பசுக்களும் நீரையும் புல்லையும் நம்பி இருக்கின்றன” என்று கூறினார். தந்தையின் சொல்லைக் கேட்டு, “இந்திரனால் மழை கிடைக்கிறது என்பது உண்மையல்ல. நாம் முன் ஜன்மத்தில் செய்த தர்மத்தால் மழை பெய்கிறது. காட்டில் உள்ள மரங்கள் இந்திரனுக்கு என்ன பூஜை செய்கின்றன?” என்று கண்ணன் கேட்டான். மேலும்,"இந்தப் பசுக்கள் நம் இடையர்களின் சொத்து. அவைகளுக்குப் புல்லையும், நீரையும் கொடுப்பது கோவர்த்தன மலை. அதனால், கோவர்த்தன மலைக்கும், தேவர்களைவிடச் சிறந்த முனிவர்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்" என்று கூறினான். அதைக் கேட்ட இடையர்கள், முனிவர்களையும், கோவர்த்தன மலையையும் பூஜித்தனர். பிறகு மலையை வலம் வந்து நமஸ்கரித்தனர். அனைத்து பூஜைகளையும் திருமாலான கண்ணனே மலை வடிவில் பெற்றுக் கொண்டான். கண்ணனுடைய திருவிளையாடல் ஆரம்பமானது. சிரித்துக் கொண்டே இடையர்களிடம், “நான் சொன்னதுபோல் இம்மலை பூஜையை ஏற்றுக்கொண்டது. அதனால் இந்திரன் கோபித்துக் கொண்டாலும், இம்மலையே நம் எல்லோரையும் காக்கும்” என்று சொன்னான். அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு சென்றனர்.

தனக்குச் சேர வேண்டிய பூஜையில் இடையூறு ஏற்பட்டதைக் கேட்ட இந்திரன் கோபம் கொண்டான். மிகுந்த அகங்காரத்தால் “இடையர்களின் சொத்துக்களை அழித்து நாசம் செய்கிறேன்” என்று இந்திரன் ஆர்ப்பரித்தான். 'ஐராவதம்' என்ற தன் யானையின்மீது ஏறிக்கொண்டு, வஜ்ராயுதத்தை எடுத்துக்கொண்டு, பிரளயகாலத்து மேகங்களை உருவாக்கி, இடையர்களின் இருப்பிடத்தை அழிக்கப் புறப்பட்டான்.

கண்ணனது திருமேனிக்கு ஒப்பான கார்மேகங்கள் வானத்தில் சூழ்ந்தன. இடிமுழக்கம் அனைவரையும் நடுங்கச் செய்தது. அம்மேகங்களைப் பார்த்து அனைவரும் நடுங்கினார்கள். ஆனால், கண்ணன் சந்தோஷித்தான். பெரிய ஆலங்கட்டிகளுடன் கூடிய மழை பெய்தது. பிருந்தாவனம் நீரில் மூழ்கத் தொடங்கியது. இடையர்கள் பயந்து, “கண்ணா, இந்திரனின் கோபத்திலிருந்து எங்களைக் காக்க வேண்டும்” என்று கூக்குரலிட்டனர். இந்திரனால் நமக்கு ஒரு கெடுதலும் நேராது. முனிவர்களும், கோவர்த்தன மலையும் நிச்சயம் நம்மைக் காப்பார்கள் என்று இடையர்களுக்கு சமாதானம் கூறினான் கண்ணன். இந்த கோவர்த்தனமலை இந்திரனின் கொடுமையிலிருந்து அனைவரையும் காத்து, அழிவை நிச்சயம் தடுக்கும் என்று சொல்லிக்கொண்டே, புன்சிரிப்புடன் தனது இளம் கரங்களால் அம்மலையை வேரோடு பிடுங்கி இழுத்தான். தாமரைக் கரங்களால் மலையைக் குடைபோல உயரே தூக்கி, அதன் கீழ் இடையர்களின் உடைமைகளையும், பசுக்களையும், மக்களையும் இருக்கச் செய்தான். ஒரு கையால் மலையை தூக்கிக் கொண்டும், மறு கையால்அருகே வந்த பசுக்களைச் சொறிந்து கொண்டும், நண்பர்களுடனும், கோபியருடனும் விளையாட்டாய்ப் பேசிக்கொண்டு இருந்தான். இடையர்கள், “இவ்வளவு பெரிய மலையைக் கண்ணன் சிறு கரங்களால் தூக்கிக்கொண்டிருக்கிறார். ஆச்சர்யம்! இது மலையின் பெருமையாய் இருக்குமோ?” என்று அறியாது கூறினார்கள். இந்திரன், “இச்சிறுவனுக்கு என்ன தைரியம்? சிறிது நேரத்தில் மலையைத் தூக்க முடியாமல், கீழே போட்டுவிடுவான்” என்று நினைத்து ஏழு நாட்கள் கடுமையாக மழை பொழியச் செய்தான். ஆனால் கண்ணன் சிறிதும் நகரவில்லை. நீர் முழுவதையும் சொறிந்த மேகங்களைக் காற்று வெகுதூரம் தள்ளிச் சென்றது. இந்திரனும் பயந்து ஓடினான். மழை நின்றுவிட்டது. கண்ணன் அனைவரிடமும், "இப்போது நீங்கள் எல்லாரும் வெளியே வரலாம், இந்திரனால் இனிமேல் ஆபத்து வராது" என்று கூற, இடையர்களும், தங்களது உடைமைகளையும், பசுக்களையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். கண்ணன், மலையை மீண்டும் அதன் இடத்திலேயே வைத்தான். சந்தோஷமடைந்த கோபர்கள் அவனைக் கட்டித் தழுவினர். பெரியவர்கள் அவனை ஆசீர்வதித்தனர்!!

கிருஷ்ணன் தனிமையில் இருக்கும்போது, இந்திரனும் தன் தவற்றை உணர்ந்து மன்னிக்க வேண்டினான். கண்ணனும், "இந்திரனே! உன்னுடைய கர்வத்தைப் போக்கவே இவ்வாறு செய்தேன், உனக்கு இடப்பட்ட பணிகளை கர்வமின்றி செய்வாயாக" என்று கூறி இந்திரனை மன்னித்தான். லக்ஷ்மிநாதனே! வராக அவதாரத்தில் பூமியையே தூக்கிக்கொண்டிருந்த தங்களுக்கு, கோவர்த்தனமலையைத் தூக்குவதில் என்ன கஷ்டம்? என்று தேவர்கள் துதித்தனர்.

Tuesday, January 27, 2015

கண்ணன் கதைகள் (46) - அந்தணப் பெண்களை அனுக்ரஹித்தல்

கண்ணன் கதைகள் (46) -  அந்தணப் பெண்களை அனுக்ரஹித்தல்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு முறை, கண்ணன் பிருந்தாவனத்திலிருந்து வெகு தூரத்திலுள்ள காட்டிற்கு இடைச்சிறுவர்களுடன் பசுக்களை மேய்க்கச்சென்றான். மனித நடமாட்டமற்ற அக்காட்டில் சிறுவர்களும் பசுக்களும், பசியாலும் தாகத்தாலும் வாடினர். அதைக்கண்ட கண்ணன், அருகே யாகம் செய்து கொண்டிருக்கும் அந்தணர்களிடம் உணவு கேட்கச் சொல்லி அச்சிறுவர்களை அனுப்பினான். அவர்கள் அந்தணர்களிடம் சென்று யாசித்தார்கள். வேதமறிந்த அந்த அந்தணர்கள், காது கேட்காதவர்கள் போல் பேசாமல் இருந்தார்கள். உணவு கிடைக்காததால் சிறுவர்கள் வருந்தி, திரும்பி வந்தார்கள். கண்ணன், "அந்தணர்களின் மனைவியரிடம் சென்று நான் வந்திருப்பதாகக் கூறி உணவு கேளுங்கள், இரக்கம் மிகுந்த அவர்கள் அன்னம் கொடுப்பார்கள்" என்று சிறுவர்களிடம் கூறினான். அவ்வாறே குழந்தைகளும் அந்தப் பெண்களிடம் உணவு கேட்டனர். நெடுநாட்களாகத் கண்ணனைக் காண விரும்பிய அப்பெண்கள், கண்ணனுடைய பெயரைக் கேட்டவுடன், அவனை நேரில் காண ஆவல் கொண்டு, நான்கு விதமான அன்னங்களை எடுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் கணவர்கள் தடுத்தும்கூட வேகமாய் கண்ணன் இருக்குமிடம் வந்தார்கள்.

தலையில் மயில் பீலியுடன், ஒளிவீசும் குண்டலங்களுடன், மஞ்சள் பட்டணிந்து, நீல மேனியுடன், வனமாலையணிந்து, கருணை நிரம்பிய பார்வையுடன், நண்பனின் தோளில் கையை வைத்துக் கொண்டு, பலராமனுடன் நிற்கும் கண்ணனை அப்பெண்கள் கண்டார்கள்.அவர்களில் ஒரு பெண்ணுக்கு, அவளுடைய கணவன் தடுத்ததால் வரமுடியவில்லை. அவள் அங்கேயே கண்ணனை தியானம் செய்து அவனுடன் கலந்து மோக்ஷம் அடைந்தாள். அப்பெண்கள், உலகங்களின் தலைவனான கண்ணனையே விழிகளை இமைக்காமல் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மனம் முழுவதும் கண்ணனே நிறைந்திருந்தான். அவர்கள் கொண்டு வந்திருந்த உணவினை  கண்ணனிடம் கொடுத்தனர்.

கண்ணன், அந்தணப்பெண்கள் அளித்த உணவை ஏற்று அவர்களை அனுக்ரஹம் செய்தான். கண்ணனுக்கு சேவை செய்ய விரும்பிய அவர்களை, அவர்களுடைய கணவர்கள் செய்யும் யாகத்திற்கு உதவும்படி உத்தரவிட்டு, அவர்கள் கணவர்களையும் அவர்களிடம் அன்புடன் இருக்கப் பணித்தான். அவர்களும் தங்கள் தவறுகளை உணர்ந்து, தத்தம் மனைவியரின் பக்தியையும் உணர்ந்து, கண்ணனைத் துதித்தனர். பிறகு, கண்ணன் அந்தணப் பெண்கள் அளித்த உணவை, தன் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்தான்.

Monday, January 26, 2015

கண்ணன் கதைகள் (45) - கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல் / கோபிகா வஸ்த்ராபஹரணம்

கண்ணன் கதைகள் (45) - கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல் / கோபிகா வஸ்த்ராபஹரணம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கண்ணனின் அழகிய வடிவைக் கண்ட கோபிகைகள் மிகுந்த மோகத்தை அடைந்த கோபிகைகளின் மனம் சஞ்சலமுற்றது. அவர்கள் கண்ணனுக்கு சேவை செய்ய விரும்பி, யமுனா நதிக்கரையில் கூடி, மணலால் பார்வதிதேவியைப்போன்ற பிம்பம் செய்து பூஜித்தனர். கோபிகைகள், கண்ணனின் திருநாமத்தையும், கதைகளையும் கூறிக்கொண்டே யமுனாநதிக்கு வந்தார்கள். பிறகு, நந்தகோபனின் மகன் கோபாலனே கணவனாய் வரவேண்டும் என்று பூஜித்து வேண்டினார்கள். இவ்வாறு ஒரு மாதம் விரதமிருந்தார்கள்.

கண்ணன் அவர்களிடம் கருணை கொண்டு, அவர்களை ஆசீர்வதிக்க யமுனைக் கரைக்குச் சென்றான். விரதம் முடிந்ததும், கோபிகைகள், தங்கள் ஆடைகளைக் களைந்து, கரையின்மேல் வைத்துவிட்டு, யமுனையில் விளையாடத் தொடங்கினார்கள். யமுனைக் கரைக்குச் சென்ற கண்ணன் அந்த கோபிகைகளின் ஆடைகளை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மரத்தின் மீது ஏறினான்.

குளித்துவிட்டு வந்த கோபிகைகள், எதிரே கண்ணனைக் கண்டு, வெட்கத்துடன் தலைகுனிந்து நின்றார்கள். "பெண்களே! இங்கு வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று புன்சிரிப்புடன் கண்ணன் கூறினான். கோபிகைகள் வெட்கத்தினால் வெளியேவர முடியாமல் திகைத்தனர்.
‘செந்தாமரைக் கண்ணனே! தங்களுக்கு சேவை செய்ய வந்த எங்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்? எங்கள் ஆடைகளைக் கொடுக்கவேண்டும்’ என்று கோபிகைகள் வேண்டினார்கள். கண்ணனோ புன்சிரிப்பையே கோபிகைகளுக்குப் பதிலாகத் தந்தான்.

அவர்கள் கரையேறி, இரு கைகளையும் கூப்பி வணங்கினார்கள். தன்னை சரணடைந்ததால், கண்ணன் அவர்களுக்கு ஆடைகளை அளித்து, "நீங்கள் ஆடையில்லாமல் குளித்த பாபம் நீங்கவே இவ்வாறு செய்தேன்" என்று உபதேசமும் செய்தான். மேலும், "உங்கள் எண்ணத்தை அறிந்து கொண்டேன். நதியின் மணல்குன்றுகளில், நிலா வெளிச்சத்துடன் கூடிய இரவில் நீங்கள் வேண்டியது கிடைக்கும்" என்று கூறினான். தேனினும் இனிய அந்த சொற்களைக் கேட்ட கோபியர்கள், கண்ணனுடைய தாமரை முகத்தைத் திரும்பிப் பார்த்தபடியே மெதுவே வீடு சென்றார்கள். இவ்வாறு கருணையுடன் அனுக்ரஹம் செய்து கோபிகைகளுக்கு ஆனந்தத்தை அளித்தான்.

Sunday, January 25, 2015

கண்ணன் கதைகள் (44) - கண்ணன் காட்டுத்தீயை உண்ணுதல் / பிருந்தாவனத்தின் பருவங்கள் / குழலோசை


கண்ணன் கதைகள் (44) - கண்ணன் காட்டுத்தீயை உண்ணுதல் / பிருந்தாவனத்தின் பருவங்கள் / குழலோசை, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

பிரலம்பனை வதம் செய்தபின், ஆயர்களுடன் விளையாடிக்கொண்டு கண்ணன் மகிழ்ச்சியாய் இருந்தான். அப்போது, பசுக்கள் புல்லை மேய்ந்துகொண்டே 'ஐஷீகம்' என்னும் காட்டை அடைந்தன. வெப்பம் மிகுந்த காட்டில் கானல் நீரைத் தண்ணீர் என நினைத்த பசுக்கள் தாகத்தினால் தவித்தன. பசுக்களைத் தேடிக்கொண்டு வந்த சிறுவர்கள், வழிதப்பிய பசுக்களைப் பார்த்து, அவற்றை அழைத்துச் செல்ல அவைகளின் அருகே சென்றார்கள். அப்போது நாலாபுறமும் காட்டுத்தீ சூழ்ந்தது. அதனால் துன்பமடைந்த அவர்கள், காப்பாற்ற வேண்டும் என்று தீனமாய்க் கூக்குரலிட்டனர். காட்டுத்தீ வேகமாக சூழ்ந்தது. பசுக்களும், சிறுவர்களும் வெப்பம் தாங்க முடியாமல் கூச்சலிட்டனர். கண்ணன் அவர்களைக் காக்க எண்ணம் கொண்டான். கண்ணன் அவர்களிடம்," கவலைப்பட வேண்டாம், சிறிது நேரம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்" என்று கூற அனைவரும் அப்படியே செய்தனர். அப்போது தனது யோகசக்தியால், கண்ணன் அத்தீயை உண்டான்.

பின்னர் அவர்களிடம் கண்ணைத் திறக்கச் சொன்னான். என்ன ஆச்சர்யம்! கண்ணைத் திறந்தபோது மீண்டும் 'பாண்டீரம்' என்னும் ஆலமரத்தடியில் இருந்தனர். 'தீ எங்கு சென்றது?' என்று அதிசயித்தனர். அங்கே காட்டுத் தீ இல்லை. அங்கு பூத்திருந்த பாதிரி முதலிய மலர்களால் மட்டும் வெய்யில் காலம் என்று அறியப்பட்டது. ஆனால் வெயிலின் தாபம் தெரியவில்லை. அந்த இடமே மிகவும் குளிர்ந்ததாக இருந்தது. கோபர்கள் அளவற்ற ஆனந்தத்துடன் கண்ணனைத் துதித்து, வீடு திரும்பினார்கள். இவ்வாறு பலவிதமான அதிசயங்களைச் செய்துகொண்டு, சிறுவர்களுடன் அக்காட்டில் திரிந்து விளையாடினான்.ஆயர் சிறுவர்கள் கோடைக்காலத்தை யமுனையாற்றங்கரையிலேயே கழித்தார்கள்.

கண்ணன் கதைகள் (44) - கண்ணன் காட்டுத்தீயை உண்ணுதல் / பிருந்தாவனத்தின் பருவங்கள் / குழலோசை, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கோடைக்காலம் முடிந்தது. கண்ணனின் நிறத்துக்கோப்பான மேகங்கள் வானில் நிறைந்தது. மின்னல்கள் பிரகாசித்தன. எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் மழைக்காலம் வந்தது. சிறுவர்கள் மழைக்காலத்தை கோவர்த்தன மலைக்குகைகளில் கழித்தார்கள். அழகிய மயில்களின் அகவல்கள் கேட்டன. மரமல்லிகையும், நீபபுஷ்பங்களும் பூச்சொரிந்தன. தெளிந்த நீருள்ள ஓடைகள், சரத்காலத்தை அறிவித்தன. பசுக்களை நல்ல பசுமையான புற்களை மேய்ந்து மகிழ்ந்தன.

காயாம்பூ போன்ற நிறமுள்ள கண்ணனின் திருமேனி அனைவரையும் ஆனந்திக்கச் செய்தது. அவனது அழகிய வடிவைக் கண்ட கோபிகைகள் மிகுந்த மோகத்தை அடைந்தார்கள். கண்ணன் மாடுகளை மேய்க்கச் சென்றபொழுது, வெகு தூரத்தில் இருந்து கேட்கும் தங்கள் குழலோசையைக் கேட்டு மகிழ்ந்தனர். கண்ணனுடைய விளையாட்டுக்களைப் பற்றிய கதைகளையே பேசி ஆனந்தித்தனர். புல்லாங்குழல் அனுபவித்த தங்கள் அதர அம்ருதத்தின் மிச்சத்தை ஒரு தடவையாவது அனுபவிப்போமா? என்று ஏங்கித் தவித்தனர். இவ்வாறு கோபிகைகளின் மனம் கலக்கமுற்றது. கண்ணனிடம் வைத்த அன்பால் அவர்கள் தினமும் செய்யும் காரியங்களையும் அறியாதவர்களாக ஆனார்கள்.

கானகம் சென்றவுடன், மரத்தடியில், கால்களை மாற்றி நின்று கண்ணன் புல்லாங்குழலை ஊதுவான். அந்தக் குழலின் இனிமையான ஓசை வானில் உள்ள அப்சரஸ் கூட்டங்களை மயங்கச் செய்தது. பசுக்கள், பறவைகள் முதலியன செயலற்று நின்றன. கற்களையும் உருகச் செய்தது. கோபிகைகள் தொலைவில் கேட்கும் வேணுநாதத்தில் மெய்மறந்தனர். மிருகங்களையும், பசுக்களையும், தங்கள் தொடர்பு ஏற்பட்ட கானகத்தையும் மிக்க பேறு பெற்றவை என்று கோபியர்கள் எண்ணினார்கள்.

Saturday, January 24, 2015

கண்ணன் கதைகள் (43) - பிரலம்பாசுர வதம்

கண்ணன் கதைகள் (43) - பிரலம்பாசுர வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

பலவித லீலைகளால் பிருந்தாவனத்திலுள்ள அனைவரையும் கண்ணன் மகிழ்வித்தான். ஒரு நாள் தன்னை மிக அழகாக அலங்கரித்துக்கொண்டு, பலராமனுடனும், இடைச்சிறுவர்களுடனும், பசுக்களுடனும் காட்டிற்குச் சென்றான். சிறுவர்கள் கையில் கோலுடன் நடக்க, பிருந்தாவனத்தின் அழகை ரசித்துக்கொண்டும், விளையாட்டாய்ப் பேசிக்கொண்டும் 'பாண்டீரகம்' என்னும் ஆலமரத்தடிக்குச் சென்றார்கள். அப்போது, கம்ஸனால் ஏவப்பட்ட 'பிரலம்பன்' என்ற அசுரன், கண்ணனைக் கொல்லும் நோக்கத்துடன், இடையன் வேடத்தில்அங்கே வந்தடைந்தான்.

அவன் எண்ணத்தை அறிந்த கண்ணன், அறியாதது போல் அவனுடன் நட்பு கொண்டான். அம்மரத்தடியில் இடையர்களுடன் விளையாட்டாக ஒருவருடன் ஒருவர் யுத்தம் செய்யத் தொடங்கினார்கள். கண்ணன் தலைமையில் ஒரு குழுவும், பலராமன் தலைமையில் ஒரு குழுவுமாக, இடையர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கொண்டார்கள். கண்ணன், பிரலம்பாசுரனைத் தன்னுடைய குழுவிலேயே இருக்குமாறு செய்தான்.

அந்த விளையாட்டில், தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தூக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி, ஸ்ரீதாமா என்ற கண்ணனின் நண்பனை, பக்தர்களின் அடிமையான கண்ணன் தூக்கினான். இவ்வாறு எல்லா இடையர்களும், தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தூக்கினார்கள். அப்போது, தோற்ற பிரலம்பாசுரன், ஜயித்த பலராமனைத் தூக்கிக் கொண்டு, வெகுதூரம் சென்றான். வெகுதூரத்திற்கப்பால் செல்லும்போது, பலராமன் தன் முழு பலத்தாலும் அவனை அழுத்தினார். உடனே அவன் பயங்கரமான அசுர உருவத்தை எடுத்துக்கொண்டான். அதைக் கண்டு பலராமனும் சிறிது பயந்து, பின்னர் வெகுதூரத்தில் தெரியும் கண்ணனின் முகத்தைக் கண்டு பயத்தை விட்டார். அசுரனின் தலையைத் தன் முஷ்டியால் அடித்து நொறுக்கினார். அசுரனைக் கொன்றுவிட்டு வரும் பலராமனைக் கண்ணன் தழுவிக் கொண்டான். இருவர் மீதும் தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 

Friday, January 23, 2015

கண்ணன் கதைகள் (42) - காளியமர்த்தனம், காளிங்கநர்த்தனம்

கண்ணன் கதைகள் (42) - காளியமர்த்தனம், காளிங்கநர்த்தனம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

முன்னொரு சமயம் ஸௌபரி என்ற முனிவர், திருமாலைத் தரிசிக்க ஆவல் கொண்டு, பன்னிரண்டு வருடம் காளிந்தி நதியின் உள்ளே நீரில் தவம் செய்தார். அப்போது நீரில் இருந்த மீன்கூட்டங்களிடம் அன்பு கொண்டார். ஒரு நாள் எதிரே கருடன் வருவதைக் கண்டார். கருடன் பசியால் மீன்களைத் தின்பதைக் கண்டார். துயரமடைந்த அவர் ‘இங்கு உள்ள ஏதாவது ஒரு ஜீவனைத் தின்றால் உடனே உயிரிழப்பாய்’ என்று கருடனைச் சபித்தார்.

காளியன் என்ற பாம்பு, கருடனுக்கு வைக்கப்பட்ட பாகங்களைத் தின்று வந்தது. கோபமடைந்த கருடன், தன் இறக்கைகளால் காளியனை அடித்து விரட்டினான். காளியனும் கருடன் வரமுடியாத அந்த காளிந்தி மடுவிற்குச் சென்றது. அந்த மடுவில் காளியன் புகுந்ததும், அதன் விஷமான மூச்சுக் காற்றால் மடுவின் கரையிலுள்ள மரங்கள் கருகின. மடுவிற்கு மேல் வானில் பறக்கும் பறவைகளும் இறந்து விழுந்தன.

ஒரு முறை, இடையர்களும், கண்ணனும், பலராமனை விட்டுத் தனியே யமுனை நதியின் கரையிலுள்ள காட்டிற்குச் சென்றார்கள். கடுமையான வெய்யிலினால் துன்பமடைந்த இடையர்களும், பசுக்களும் அந்த மடுவின் விஷ நீரைப் பருகினார்கள்.உடனே உயிரிழந்து கீழே விழுந்தார்கள். கண்ணன் கருணையுடன் அவர்கள் அருகே வந்து, அமிர்தமாகிற தன்னுடைய கடைக்கண் பார்வையால் அவர்களைப் பிழைக்கச் செய்தான். உயிர் பிழைத்த அவர்கள், இந்த ஆனந்தம் எங்கிருந்து உண்டாகிறது? என்று கூறிக் கொண்டு எதிரில் கண்ணனைக் கண்டார்கள். கண்ணனே காரணம் என்று உணர்ந்து அவனைக் கட்டித் தழுவினர். நொடிப்பொழுதில் பிழைத்த பசுக்களும், ஆனந்தமுடன் மெதுவாகக் குரல் கொடுத்துக் கொண்டே கண்ணனைச் சுற்றி வந்தன. ‘எங்கள் தேகத்தில் மயிர்க்கூச்சலுடன், சொல்லமுடியாத ஆனந்தம் உண்டாகிறது. இந்த விஷவேகம் ஆச்சர்யமாக உள்ளது’ என்று கூறி இடையர்கள் வணங்கினார்கள்.

கண்ணன், அந்தப் பாம்பின் கொடிய செயலைத் தடுக்க முடிவு செய்து, மடுவின் கரையில் விஷக்காற்றால் வாடி நின்ற கடம்பமரத்தின்மீது ஏறினான். சிவந்த மென்மையான பாதங்களால் மரத்தின் மீது ஏறி, அலைகள் நிறைந்த அந்த மடுவில் உயரத்திலிருந்து குதித்தான். கண்ணன் குதித்ததும், அவனுடைய பாரத்தால் அலைகள் உயரே கிளம்பி, மிகுந்த ஓசையுடன், கரைகளை மூழ்கடித்தது. அந்த ஓசையைக் கேட்ட காளியன் கோபத்துடன் நீரிலிருந்து வெளியே வந்தான். ஆயிரக்கணக்கான அவன் படங்களிலிருந்து கொடிய விஷம் பெருக்கெடுத்து ஓட, பெரிய மலை போலத் தோற்றமளித்தான். பயங்கரமான விஷ மூச்சை விட்டுக்கொண்டு, கண்ணனை அசையாமல் இருக்கும்படி சுற்றிக் கொண்டான். கரையில் நின்ற இடையர்களும், பசுக்களும், சிறுவர்களும் கண்ணனைக் காணாமல் துயரமடைந்தனர். கோபர்களும், பல கெட்ட சகுனங்களைக் கண்டு யமுனைக்கரைக்கு விரைந்து வந்தனர். கண்ணனுடைய நிலையைக் கண்ட அனைவரும் பிராணனை விட நினைத்தார்கள்.

அப்போது கண்ணன், அப்பாம்பின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, புன்சிரிப்புடன் ஆற்றிலிருந்து வெளியே வந்தான். மென்மையான சிறிய தன்னுடைய கால்களால் அப்பாம்பின் படங்களின் மேல் ஏறி நடனம் செய்தான். அவனுடைய கால்களில் அணிந்திருந்த கொலுசுகளும், கைவளைகளும் அந்த நடனத்திற்கு ஏற்றவாறு சப்தித்தன. காளியனுடைய படமெடுத்த தலைகளின் மீது ஏறி நடனம் செய்தான். காளியனுடைய தலை தொங்கியது. தொங்கிய தலைகளை விட்டுவிட்டு, மீண்டும் படமெடுத்த தலையின் மீது ஏறி, தனது தாமரைப் பாதங்களால் தாளமிட்டுக் கொண்டு நர்த்தனமாடினான். அந்த நடனத்தைக் கண்ட கோபர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆகாயத்தில், தேவ மங்கையர் துந்துபி வாசிக்க, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். முனிவர்கள் ஆனந்தத்துடன் துதித்தனர். இவ்வாறு கண்ணன் ஆடியதும், காளியனுடைய படமெடுத்த தலைகள் யாவும் தொங்கிவிட்டது. காளியன் உடலில் ரத்தம் வடிந்தது. அவன் சோர்ந்து விழுந்தான். அப்போது, மடுவின் உள்ளே இருந்த காளியனின் மனைவியர் கண்ணனை சரணடைந்து, "எங்கள் கணவரை விட்டுவிடுங்கள்" என்று கூறி, பலவிதமான ஸ்தோத்திரங்களால் கண்ணனைத் துதித்தனர். காளியனும் தலைவணங்கித் துதித்தான். கண்ணன் அவர்கள் மீது இரக்கம் கொண்டான். அவர்களிடம்," உங்களை நான் கொல்ல மாட்டேன்.இந்த மடுவில் குழந்தைகளும், பசுக்களும் நீர் அருந்த வருவதால், நீங்கள் இந்த மடுவை விட்டு சமுத்திரத்தில் இருக்கும் ரமணகம் என்னும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கு கருடன் உங்களைத் தொந்திரவு செய்ய மாட்டான்" என்று கூறினான். இவ்வாறு சொன்னதும், காளியன் மற்ற பாம்புகளுடன் ரமணகத்திற்குப் புறப்பட்டான். காளியனின் மனைவியர் கண்ணனுக்கு விலையுயர்ந்த ரத்தினங்களையும், ஜொலிக்கும் ஆபரணங்களையும், பட்டுத் துணிகளையும் கொடுத்தனர். அவற்றை அணிந்துகொண்டு ஆனந்தத்துடன் காளிந்தி மடுவின் கரையில் நிற்கும் சுற்றத்தாரிடம் வந்தான். தன்னுடைய அழகான கடைக்கண் கடாக்ஷத்தால், அங்குள்ளோரது தாபங்களைப் போக்கி மகிழ்வித்தான். கண்ணனைக் கண்ட ஆயர்கள், அவனைத் தோளில் சுமந்துகொண்டனர். பசுக்களும், ஆனந்தமுடன் மெதுவாகக் குரல் கொடுத்துக் கொண்டே கண்ணனைச் சுற்றி வந்தன. இடைச்சிறுவர்கள் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டு ஆடிப் பாடி ஆனந்தித்தனர்.

Thursday, January 22, 2015

கண்ணன் கதைகள் (41) - தேனுகாசுர வதம்

கண்ணன் கதைகள் (41) - தேனுகாசுர வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
குழந்தைப் பருவத்தைத் தாண்டி, பிள்ளைப் பருவத்தை அடைந்த கண்ணன், கன்றுகளை மேய்ப்பதை விட்டு, பசுக்களை மேய்த்து ரக்ஷிக்கத் தொடங்கினான். பூமியைக் காக்க அவதாரம் செய்த கண்ணன், ‘கோ’ எனப்படும் பசுக்களையும் காக்கத் தொடங்கினான்.

ஒரு முறை பலராமனுடன் காட்டின் அழகிய காட்சிகளில் மகிழ்ந்து செல்லும்போது, ஸ்ரீதாமன் என்ற நண்பன், "கண்ணா! இங்கு 'தாளவனம்' என்ற ஒரு பனங்காடு இருக்கிறது. ஆனால், தேனுகன் என்ற அசுரன் அதைக் காவல் காத்து வருகிறான், பறவைகளும் மிருகங்களும் கூட அங்கு செல்ல பயப்படும். அங்குள்ள பனம் பழங்கள் மிகுந்த சுவை உடையதாய் இருக்கும், அதை சுவைக்க வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் ஆசை" என்று சொன்னான். நண்பர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய விரும்பிய கண்ணனும் பலராமனும், இடைச்சிறுவர்களுடன் தேனுகன் என்ற அசுரனின் காட்டிற்குச் சென்றார்கள். கண்ணன் கூறியதால், பலராமன், அங்கு உயர்ந்திருந்த பனைமரங்களை வலுவாக அசைத்தார். பழுத்ததும், பழுக்காததுமான பழங்கள் கீழே விழுந்தன. சத்தத்தைக் கேட்ட தேனுகன் என்ற 
அசுரன், கழுதை வடிவம் எடுத்துக் கொண்டு, விரைந்து வந்து பலராமனின் நெஞ்சில் உதைத்தான். பலராமன் அசுரனின் பின்னங்கால்களைப் பற்றி, சுழற்றி எறிந்து அவனைக் கொன்றார். தேனுகனென்ற அசுரனும் உயிரிழந்து கீழே விழுந்தான்.

உடனே, அந்த அசுரனுடைய பணியாட்கள் தாக்க வந்தனர். கண்ணன், அவர்களை அனாயாசமாக, நாகப்பழங்களைப் போல பனைமரங்களில் எறிந்து,
அனைவரையும் கொன்றான். "தாங்கள் அவதரித்த பலன் கிடைத்துவிட்டது" என்று கூறி தேவர்கள் பூமாரி பொழிந்து துதித்தனர். ‘ஆம் பழம் கிடைத்துவிட்டது’ என்று சிரித்துக்கொண்டே, பெரிதாகவும், நிறைய சாறுடன் இனிமையாக உள்ள அந்தப் பழங்களை சிறுவர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்து, நிறைய பழங்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

தேனுகன் இறந்ததால், மக்கள் பயமின்றி 'தாளவனம்' சென்று பனம்பழங்களை சேகரித்து உண்டு மகிழ்ந்தார்கள். பசுக்களும், மிருகங்களும் பயமின்றி அந்த வனத்திலுள்ள புல்லை மேய்ந்து மகிழ்ந்தன.

Wednesday, January 21, 2015

கண்ணன் கதைகள் (40) - பிரம்மனின் கர்வ பங்கம்

கண்ணன் கதைகள் (40) - பிரம்மனின் கர்வ பங்கம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

திருமால், முன்பு செய்த அவதாரங்களில் காணப்படாத சில அதிசயங்கள், க்ருஷ்ணாவதாரத்தில், அகாசுர வதத்தில் காணப்பட்டது என்று தேவர்கள் கூறியதைக் கேட்ட பிரம்மா, கண்ணனைப் பரீட்சிக்க விரும்பி, தன் சக்தியால் மாடு கன்றுகளை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்தார். கோபகுமாரர்கள் கன்றுகளைக் காணாமல் துயரம் அடைந்தனர். இடைச்சிறுவர்களின் துயரத்தைக் கண்ட கண்ணன், பாதி உண்டுகொண்டிருக்கும்போது கையில் சாதத்துடன் கன்றுகளைத் தேடச் சென்றான். அப்போது பிரம்மா, உணவு உண்டு கொண்டிருக்கும் இடையர்களையும் மறைத்து வைத்தார்.

பிரம்மனின் இந்த செயலை, கண்ணன் தியானத்தால் அறிந்தான். பிரம்மனுக்குப் பாடம் கற்பிக்க எண்ணம் கொண்டான். உடனே, கன்றுகளாகவும், இடைச்சிறுவர்களாகவும் தானே உருவெடுத்து, மேலும், உறி, உறியில் உள்ள பாத்திரம், புல்லாங்குழல், முதலியவைகளாகவும் வேடம் பூண்டு காட்டில் வெகு நேரம் விளையாடிவிட்டு மாலையில் வீடு சென்றான். கன்றுகளாகவும், கோபகுமாரர்களாகவும் உருவம் கொண்ட கண்ணனை, தாய்மார்கள் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள். அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. தங்கள் பிள்ளைகள் என்றே நினைத்தார்கள். பரமாத்மாவையே குழந்தையாக அடைந்த தாய்மார்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேது?

இவ்வாறு ஒரு வருடம் கழிந்த பின்னரே, கன்றுகளும், சிறுவர்களும் கண்ணன் தான் என்பதை பலராமன் உணர்ந்தார். வருடத்தின் முடிவில், பிரம்மதேவன் கன்றுகளையும், சிறுவர்களையும் கண்டு, அவை தன்னால் மறைத்து வைக்கப்பட்டவையா அல்லது புதியனவா என்று திகைத்தார். அப்போது கண்ணன் புதிதாக உள்ள எல்லாவற்றையும் கிரீடம், தோள்வளைகளுடன், நான்கு கரங்கள் கொண்டவைகளாக பிரம்மனுக்குக் காண்பித்தான். பிரம்மா, ஒவ்வொருவரையும் லக்ஷ்மிதேவியுடன் ஆதிசேஷன்மேல் பள்ளி கொண்டிருப்பவர்களாகவும், அழகிய வடிவமுடனும், ஸனகாதியரும், முனிவர்களும் சேவித்துக்கொண்டிருக்கக் கண்டார். கணக்கற்ற வடிவங்களைக் கண்டார். எங்கும் தான் சேவகனாய் இருப்பதாகவும் கண்டார். மிகுந்த குழப்பத்தை அடைந்தார். அப்போது கண்ணன், கையில் பாதி அன்னக்கவளத்துடன் காட்சி அளித்தான்.

பிரம்மன் கர்வம் நீங்கி, கிருஷ்ணனைத் துதித்துப் பாடி, நமஸ்கரித்து, பிரதக்ஷிணம் செய்து, சத்யலோகம் சென்றார். புதிய உருவம் கொண்ட சிறுவர்களும், கன்றுகளும் மறைந்தார்கள். இடைச்சிறுவர்களும், யமுனைக் கரையில் உணவு உண்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு வருடம் சென்றதைக் கூட உணரவில்லை. கண்ணன் கன்றுகளுடன் யமுனைக் கரைக்கு வந்தான். சிறுவர்கள், கண்ணன் கன்றுகளை மேய்த்துவிட்டு மெதுவே வருகிறான் என்று நினைத்து, "கண்ணா! சீக்கிரம் வா! உணவு உண்ணலாம்" என்று கூறினார்கள். கண்ணனும் சிரித்துக் கொண்டேஉணவு உண்டுவிட்டு, மகிழ்ச்சியாக மற்ற சிறுவர்களுடன் வீடு திரும்பினான்.

Tuesday, January 20, 2015

கண்ணன் கதைகள் (39) - அகாசுர வதம்

கண்ணன் கதைகள் (39) - அகாசுர வதம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு முறை கண்ணன், ஆயர் சிறுவர்களுடன் வனபோஜனம் செய்ய விருப்பம் கொண்டான். சிறுவர்களைக் கூப்பிட்டு தனது விருப்பத்தைக் கூறினான். சிறுவர்கள் அனைவரும் காய், கறி, குழம்பு முதலியவைகளுடன் கூடிய அன்னத்தை எடுத்துக்கொண்டு, கன்றுகளுடனும் கோபர்களுடனும், குதூகலத்துடன் காட்டுக்குச் சென்றார்கள். உல்லாசமாக விளையாடிக்கொண்டும், ஆடிப்பாடிக் கொண்டும் இருந்தார்கள். 

அப்போது, அகன் என்ற அசுரன், மலைப்பாம்பின் உருவெடுத்து வழிமறித்தான்.
அப்பாம்பு பெரிய மலை போலவும், திறந்திருந்த அதன் வாய் பெரிய குகை போலவும் தோற்றமளித்தது. ஆயர்சிறுவர்கள் அதை நிஜமான குகையென்று நினைத்து அதன் வாயில் புகுந்தனர். தவறுதலாகப் புகுந்த அவர்கள் மிக்க தாபத்தை அடைந்து மயங்கினார்கள். ஆதரவற்ற நண்பர்களைக் காப்பதற்காக கண்ணன் அப்பாம்பின் வாயில் நுழைந்தான். அதன் வாயில் இருந்துகொண்டு உருவத்தை மிகப் பெரியதாகச் செய்துகொண்டான். அந்தப் பாம்பு மூச்சு விட முடியாமல் புரண்டது. அதனுடைய கழுத்து கிழிந்து, உயிரை விட்டது. உடனே தன்னுடைய ஒரு பார்வையால், கோபகுமாரர்களையும், மாடு கன்றுகளையும் மயக்கம் தெளிய வைத்து, வெளியில் வந்தான். அகாசுரன் இறந்ததும், அவனுடைய உடலிலிருந்து புறப்பட்ட ஒளி, வானில் காத்திருந்து, கண்ணன் வெளியே வந்ததும் அவனுடன் கலந்து மறைந்தது. தேவர்கள் கண்ணனுடைய புகழ் பாடி ஆடினார்கள்.

உச்சிப் பொழுது ஆகிவிட்டதால் அனைவருக்கும் பசித்தது. கொம்பையும், புல்லாங்குழலையும் இடுப்பில் சொருகிக்கொண்டு, கையில் அன்னத்துடன், வேடிக்கையாகப் பேசி, சிறுவர்களைச் சிரிக்கச் செய்து கொண்டு, இடைச்சிறுவர்களுடன் வனபோஜனம் செய்தான். மகிழ்ச்சியுடன் சிறுவர்கள் அனைவரும் உணவு உண்டார்கள். அதைக் கண்ட பிரமனும், தேவர்களும்,"நாம் யாகத்தில் தரும் ஹவிர்பாகத்தை சாப்பிடுவதைவிட, இங்கு இடைச்சிறுவர்களோடு உண்பதில் அதிக ஆனந்தம் அடைகிறார்" என்று ஆச்சர்யத்துடன் கூறி
த் துதித்தனர்.

Monday, January 19, 2015

கண்ணன் கதைகள் (38) - பகாசுர, வத்ஸாசுர வதம்

கண்ணன் கதைகள் (38) - பகாசுர, வத்ஸாசுர வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
வண்டுகள் ரீங்காரம் செய்யும் பிருந்தாவனத்தின் வனங்களில், கொம்பு, புல்லாங்குழல், பிரம்பு முதலியவற்றை எடுத்துக்கொண்டு, பலராமனோடும், ஆயர் சிறுவர்களோடும் கன்றுகளையும், பசுக்களையும் மேய்த்துக் கொண்டு, கண்ணன் திரிந்து மகிழ்ந்தான். அவனுடைய பிஞ்சுப் பாடங்கள் பட்டதால், அங்கு உள்ள மரங்கள், கொடிகள், நீர், பூமி, மலை, வயல்கள் முதலிய யாவையும் பெருமை உடையதாய் செழித்து விளங்கின.

பச்சைப் புல்வெளியிலும், கோவர்த்தன மலையிலும் குழலூதிக்கொண்டு கன்றுகளை மேய்த்துக் கொண்டிருந்த கண்ணன், ஒரு நாள், கன்றின் வடிவில் இருந்த வத்ஸாசுரனைப் பார்த்தான். அசுரன் வேகமாக வாலை அசைத்துக் கொண்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டு, கண்ணனை நெருங்க சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தான். அப்போது கண்ணன், அவன் கால்களைப் பிடித்து வேகமாகச் சுற்றி, அவனை ஒரு மரத்தின் மீது எறிந்து கொன்றான். அவன் இறந்து கீழே விழுந்தான். அவன் விழுந்த வேகத்தில் பல மரங்கள் சாய்ந்து விழுந்தன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இடைச்சிறுவர்கள், கண்ணனின் தலையில் விழுந்த பூக்களைப் பார்த்து, “மிகவும் மணம் நிரம்பிய இந்தப் பூக்கள் எங்கிருந்து விழுகின்றன?” என்று கேட்டனர். கண்ணனும், “அசுரனை மரத்தில் எறிந்தபோது அம்மரத்திலிருந்த பூக்கள் உயரே கிளம்பி, மெதுவே கீழே விழுகிறது” என்று விளக்கம் அளித்தான்.

ஒரு நாள், வெயில் மிகவும் அதிகமாக இருந்தது. அதிக வெயிலால் தாபமடைந்த ஆயர் சிறுவர்களுடன், பலராமனும் கண்ணனும் யமுனை நதிக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றார்கள். தண்ணீரைக் குடித்துவிட்டு வரும்போது அங்கே, இறக்கைகளை அசைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கொக்கைக் கண்டார்கள். அந்தக் கொக்கு பெரிய மலையைப் போன்றதாய் இருந்தது.  சிறுவர்கள் மிகவும் பயந்தார்கள். கொக்கு கண்ணனை விழுங்கியது. கண்ணன் அதற்கு நெருப்பைப் போன்றதாய் ஆனான். அவனுடைய உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் வெளியே உமிழ்ந்தது.  மீண்டும் 
அந்தக் கொக்கு வேகமாக வந்து கண்ணனைக் கொத்தியது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணன், அதன் அலகினைப் பற்றி, இரு கூறாகக் கிழித்துக் கொன்றான். தேவர்கள் பூமழை பொழிந்தனர். சிறுவர்களும் பிருந்தாவனத்திலிருந்து வீடு திரும்பினார்கள்.

கண்ணனின் குழலோசையைக் கேட்ட கோபியர்கள் சந்தோஷத்துடன் அருகே ஓடி வந்தனர். இடைச்சிறுவர்கள்  நடந்தவற்றைக் கூறினார்கள். அதை நம்பாமல், தந்தை நந்தகோபனும், தாய் யசோதையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்ணனை அணைத்துக் கொண்டார்கள். 

Sunday, January 18, 2015

கண்ணன் கதைகள் (37) - கோகுலத்திலிருந்து பிருந்தாவனம் செல்லுதல்

கண்ணன் கதைகள் (37) - கோகுலத்திலிருந்து  பிருந்தாவனம் செல்லுதல்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு நாள் கிருஷ்ணனும் பலராமனும், இடைச்சிறுவர்களுடன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வாசலில் ஒரு வயதான பெண்மணி,"பழம்! நாவல் பழம்" என்று கூவிக் கொண்டு சென்றாள். கிருஷ்ணனுக்கு உடனே அதைச் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது, ஆனால் அவனிடம் கொடுப்பதற்குப் பணம் இல்லை. அருகில் தானியங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அவன், தன் பிஞ்சுக் கை நிறைய தானியங்களை அள்ளிக் கொண்டு, வாசலுக்கு ஓடினான். வழியெல்லாம் தானியம் இறைந்தது. வாசலில் நாவல் பழம் விற்றுக் கொண்டிருந்த பெண்மணியை அழைத்து, "இந்த தானியத்தைப் பெற்றுக் கொண்டு எனக்கு பழங்களை தருவாயா?" என்று கெஞ்சலாகக் கேட்டான். கண்ணனின் அழகும், துறுதுறுப்பும் அந்தப் பெண்ணின் மனதைக் கொள்ளை கொண்டன. அவனது கால் கொலுசின் சத்தம் அவள் காதில் இசையைப் போன்று ஒலித்தது. அவள் உடனே, "குழந்தையே! நீ வேண்டிய பழங்களை எடுத்துக் கொள்" என்று கூறினாள். பிறகு, கண்ணன் கொடுத்த, மீதி இருந்த கொஞ்சம் தானியங்களை பெற்றுக் கொண்டு, கண்ணனின் கை நிறைய பழங்களை அன்புடன் கொடுத்து மகிழ்ந்தாள். குடிசைக்கு சென்றதும் தன் கூடையைப் பார்த்த அவள் திகைத்துப் போனாள். கண்ணன் செய்த மாயத்தால், தானியங்கள் மிக உயர்ந்த ரத்தினங்களாகவும், தங்கமாகவும் மாறியிருந்தது. அன்புடன் கொடுத்தால், கண்ணன் அதைப் போல் பல மடங்கு அளிப்பான் என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த அதிசயத்தை நிகழ்த்தினான். 

கண்ணனின் பெருமையை உணராத இடையர்கள், மரங்கள் முறிந்ததை கெட்ட சகுனமாக எண்ணினார்கள். வேறு இடத்திற்குச் செல்லத் தீர்மானித்தார்கள். உபநந்தன் என்ற வயது முதிர்ந்த இடையர், "மேற்கே பிருந்தாவனம் என்ற அழகிய காடு உள்ளது, பசுக்களுக்கும், ஆயர்குல மக்களுக்கும் வசிக்கத் தகுதியான இடமாக அது இருக்கும்" என்று கூறினார்.

நந்தனும், மற்ற இடையர்களும் கோகுலத்தை பசுக்கொட்டிலாகச் செய்தனர். தங்களது உடைமைகளை வண்டிகளில் ஏற்றினார்கள். வயதானவர்களும், பெண்களும், குழந்தைகளும் வண்டிகளில் ஏறினார்கள். யசோதையும் கண்ணனைத் தூக்கிக்கொண்டு வண்டியில் ஏறினாள். மற்ற கோபர்கள் பின்தொடர்ந்தனர். வழி நெடுக இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு சென்றனர். வண்டிகளின் சத்தத்திலும், பசுக்களின் குளம்புச்சத்தத்திலும், கண்ணனின் அழகான பேச்சுக்களிலும் மனமகிழ்ந்த கோபியர்கள், அந்த நீண்ட வழியைக் கடந்ததைக்கூட அறியவில்லை. பிருந்தாவனத்தை அடைந்தார்கள். அங்கு, பச்சை மணிகளை வாரி இரைத்தது போன்ற புல்வெளிகளையும், பூத்துக் குலுங்கிய குந்த மரங்களால் நிறைந்திருந்த அழகான வனத்தையும் கண்டார்கள். 
பிருந்தாவனத்தில், அன்னங்களின் சப்தத்துடன், தாமரைப்பூ போன்ற முகத்துடனும் சுத்தமான நீருடனும், களிந்தனின் பெண்ணான யமுனை, வளைந்து வளைந்து சென்றாள். அழகாக அகவும் மயில்கள் நிறைந்திருந்தன. வானுயர்ந்த சிகரங்களுடன் கூடிய கோவர்த்தனம் என்னும் மலை இருந்தது. கண்ணனும், மற்றவர்களும் மிக்க ஆனந்தமடைந்தார்கள். புது வீடுகள் கட்டிக்கொண்டு இடையர்கள் அங்கு குடியேறினர்.

கண்ணனும் பலராமனும் சற்றே வளர்ந்ததும், கன்றுகளை மேய்க்கத் தொடங்கினார்கள். கண்ணன் இடைச்சிறுவர்களோடு பிருந்தாவனத்தின் அழகைக் கண்டு களித்தான். கண்ணன் இடைச்சிறுவர்களுடன் எங்கெங்கு செல்கிறானோ, அங்கெல்லாம் வளைந்து வளைந்து, ஆசை கொண்டவள்போல் வரும் யமுனையைப் பார்த்தான். வானை முட்டும் உயர்ந்த உச்சிகளோடு, பல்வேறு நிறங்களுடன் ஒளிவீசிக்கொண்டிருக்கும் கோவர்த்தனம் என்னும் மலையைக் கண்டான். அந்தக் காடு, பசுமையான புல்வெளிகளுடன், பசுக்களுக்கு மிகவும் ஏற்றதாய் இருந்தது. கண்ணன், பலராமனோடும் ஆயர் சிறுவர்களோடும், கன்றுகளை மேய்த்துக் கொண்டு, மகிழ்ச்சியாய் இருந்தான். 

Saturday, January 17, 2015

கண்ணன் கதைகள் (36) -நளகூபர, மணிக்ரீவ சாப விமோசனம்

கண்ணன் கதைகள் (36) -நளகூபர, மணிக்ரீவ சாப விமோசனம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

'தாமோதரன்' என்று தேவர்களால் துதிக்கப்பட்ட கண்ணன், உரலில் கட்டப்பட்டபடியே, உரலுடன் மெல்லத் தவழ்ந்து சென்றான். அருகில் இரண்டு மரங்களைக் கண்டான். 


முன்னொரு சமயம், குபேரனுடைய மகன்களான நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் சிவனைத் தொழுது, மிகுந்த ஐஸ்வர்ய செருக்குடன், உலக ஆசைகளில் ஈடுபட்டிருந்தனர். மது அருந்திவிட்டு, கங்கையில் அனேகப் பெண்களுடன் வஸ்திரம் இல்லாமல் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்தனர். இதை நாரதர் பார்த்தார். நாரதரைக் கண்டவுடன் அந்தப் பெண்கள் தம்முடைய ஆடைகளை எடுத்துக் கொண்டனர். அப்பொழுது கூட, நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் மயங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். நாராயணனிடத்தில் அவர்களுக்கு பக்தி உண்டாக வேண்டுமென்பதற்காக, நாரதர் அவர்களை சபித்தார். “நீங்கள் இருவரும் நெடுங்காலம் மராமரங்களாக இருந்து, பின்னர் ஸ்ரீஹரியைத் தரிசனம் செய்தவுடன் பழைய நிலையை அடைவீர்களாக” என்று சபித்தார். அவ்விருவரும், கண்ணனான ஸ்ரீஹரியைத் தரிசிக்க ஆவலுடன் மரங்களாகக் காத்துக் கொண்டிருந்தனர்.

கண்ணன் மெதுவாக அந்த மருதமரங்களின் அருகே சென்று, மரங்களின் குறுக்கே உரலை இழுத்துக் கொண்டு போனான். உடனே அவ்விரு மரங்களும் முறிந்து விழுந்தன. மரங்கள் விழுந்ததும், அதிலிருந்து இரண்டு யக்ஷர்கள் தோன்றினார்கள். கிருஷ்ணனைத் துதித்து நமஸ்கரித்தனர். சாப விமோசனம் பெற்று, பக்தியையே வரமாகப் பெற்றுச் சென்றனர்.

மரம் முறிந்த சத்தத்தைக் கேட்ட இடையர்கள் ஓடி வந்தனர். நந்தகோபர், கண்ணனைக் கயிற்றிலிருந்து விடுவித்தார். “தெய்வ அருளால் மரங்களுக்கு நடுவே அகப்பட்ட குழந்தை தப்பியது” என்று கூறிக்கொண்டே இடையர்களும், நந்தகோபனும் கண்ணனை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

Friday, January 16, 2015

கண்ணன் கதைகள் (35) - யசோதை கண்ணனை உரலில் கட்டி வைத்தல்

கண்ணன் கதைகள் (35) - யசோதை கண்ணனை உரலில் கட்டி வைத்தல், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்
யசோதை ஒரு முறை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். கண்ணன் தூங்கிக் கொண்டிருந்தான். கண்ணனுடைய விஷமங்களை நினைத்து மிகவும் பெருமிதத்துடன், பாட்டிசைத்துக் கொண்டு தயிர் கடைந்தாள். சிறிது நேரத்தில் விழித்துக் கொண்ட கண்ணனுக்கு, பால் குடிக்க ஆசை ஏற்பட்டது. உடனே யசோதையின் மடிமீது ஏறி, தயிர் கடைவதைத் தடுத்து, பால் குடித்தான். தாமரைமொட்டுக்கள் போன்ற மார்பில், தாமரை முகத்துடன் அவன் பால் குடித்துக் கொண்டிருந்தபொழுது, அடுப்பில் பால் பொங்கியதால் யசோதை அவனைக் கீழே இறக்கிவிட்டு உள்ளே சென்றாள்.

பாதி பால் குடித்துக் கொண்டிருக்கும்போது தடை ஏற்பட்டதால், கோபம் கொண்ட கண்ணன், மத்தை எடுத்து தயிர்ப் பானையை உடைத்தான். பானை உடைந்த சத்தம் கேட்டு வேகமாக வந்த யசோதை, கீழே சிதறிக் கிடந்த தயிரைக் கண்டாள். கண்ணனைத் தேடினாள். அவனைக் காணவில்லை. தயிரில் தோய்ந்த கண்ணனின் காலடித் தடத்தைப் பின்பற்றி மெதுவே சென்றாள். அங்கே, அவன் உரலில் அமர்ந்துகொண்டு பூனைக்கு வெண்ணை கொடுத்துக்கொண்டிருந்தான்.

பயந்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்த அவனைக் கோபத்துடன் கையில் பிடித்து, " உன் விஷமம் எல்லை கடந்து போய்விட்டது, கட்டிப் போட்டால்தான் சரியாகும்" என்று கூறி, அவனை உரலில் கட்டிப்போட கயிற்றை எடுத்தாள். பல கயிறுகளை ஒன்றாக இணைத்தும், கட்டுவதற்கு இரண்டு அங்குலம் கயிறு குறைவாக இருந்தது. வீட்டிலுள்ள எல்லா கயிறுகளையும் இணைத்தும் அவளால் கட்ட முடியவில்லை. கயிறு சற்று குறைந்தே இருந்தது. அவள் முகம் வியர்த்தது. இடைப் பெண்கள் அவளைப் பரிகாசமாய்ப் பார்த்தார்கள். அதைக் கண்ட கண்ணன், அவள்மேல் கருணை கொண்டு, அவள் கயிற்றால் உரலில் கட்ட உடன்பட்டான். யசோதை, “துஷ்டனே! இந்த உரலிலேயே கட்டுப்பட்டு இரு” என்று சொல்லி வீட்டிற்குள் சென்றாள். அவ
ள் சென்றவுடன், மறுபடி முன்பே உரலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெண்ணையைத் தின்னத் தொடங்கினான். தேவர்கள் கிருஷ்ணனை  “தாமோதரன்” (கயிற்றால் இடுப்பில் கட்டப்பட்டவன்) என்ற பெயரால் துதித்தனர். 

Thursday, January 15, 2015

கண்ணன் கதைகள் (34) - யசோதை கண்ணன் வாயில் பிரபஞ்சம் கண்டது

கண்ணன் கதைகள் (34) - யசோதை கண்ணன் வாயில் பிரபஞ்சம் கண்டது, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு சமயம், யசோதையிடம் பாலருந்திவிட்டுப் படுத்துக் கொண்டிருந்தபோது கொட்டாவி விட்டபோது , யசோதை கண்ணன் வாயில் அனைத்து உலகங்களையும் கண்டாள். மாயையால் அதை அவள் மறந்தாள். கண்ணன், இடைச்சிறுவர்களுடன் விளையாடும்போது, அவர்களுக்குப் பழம் தருவதாகச் சொல்லி, தராமல் ஏமாற்றினான். அதனால், கோபம் கொண்ட அவர்கள், யசோதையிடம் அவன் மண் தின்றதாகக் கூறினர்.

பிரளய காலத்தில் பூமி மற்றும் அனைத்தையும் உண்ணும் மாயக் கண்ணனுக்கு, மண் தின்றதால் வியாதி வரும் என்று யசோதை பயந்து கோபம் கொண்டாள். “ மண் தின்றாயா?” என்று யசோதை கேட்டாள். கண்ணன் சிரித்துக்கொண்டே இல்லையென்று சத்தியம் செய்தான். “உன் நண்பர்கள் சொல்வது பொய் என்றால், உன் வாயைத் திறந்து காட்டு” என்று சொன்னாள். உடனே, மலர்ந்த தாமரை மலரைப் போன்ற தன் திருவாயைத் திறந்து காட்டினான். அவனது சிறிய வாயில் மண் இருக்கிறதா என்று பார்க்க விரும்பிய யசோதைக்கு, இந்த பூமி மட்டுமல்லாமல் அனைத்து உலகங்களையும் வாயில் காண்பித்தான்.

கண்ணனது வாயில், காடுகளையும், கடல்களையும், மேகத்தையும், பாதாளத்தையும் கண்டாள். மனிதர்கள், அசுரர்கள், தேவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து ஜீவன்களையும் கண்டாள். பாற்கடலில் பள்ளி கொண்டவராகக் கண்டாள். வைகுண்டத்தில் இருப்பவராகக் கண்டாள். தன் முன்னே தன் குழந்தையாகவும் நிற்பதைக் கண்டாள். உலகங்கள் அனைத்தையும் கண்டாள். கோகுலத்தில் கண்ணனாகவும், அவன் முன் அனைத்து உலகங்களையும் வரிசையாகக் கண்டாள். 'இவன் பரமாத்மா' என்று ஒரு நொடிப்பொழுது நினைத்தாள். மீண்டும் மாயை அகன்று, அன்பினால் அவன் தன் மகன் என்ற நினைவினை அடைந்தாள். கனவினைப் போல நடந்த அனைத்தையும் மறந்தாள். 'பசிக்கிறது, எனக்குப் பால் கொடு' என்று கேட்டு அவள் மடிமீது ஏறி அமர்ந்த கண்ணனுக்கு ஸ்தன்யபானம் செய்தாள்.

Wednesday, January 14, 2015

கண்ணன் கதைகள் (33) - பால லீலை

கண்ணன் கதைகள் (33) - பால லீலை,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

இப்பொழுது பலராமனும், கிருஷ்ணனும் நந்தனின் வீட்டில் தவழ்ந்து விளையாட ஆரம்பித்தார்கள். தாமரை போன்ற பாதங்களில் உள்ள சலங்கைகளின் சத்தத்தைக் கேட்க ஆசை கொண்டு வேகமாகவும், அழகாகவும் தவழ்ந்தார்கள். இருவரும் சிரித்தபோது தெரிந்த பற்கள் மிக அழகாக இருந்தது. கைகளில் இருந்து நழுவி மணிக்கட்டில் விழுந்த கங்கணங்கள் அழுந்தியதால் உண்டான வடுக்களுடன் இருவரும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்கள்.

கிருஷ்ணன், தாமரை போன்ற பாதங்களுடனும், முன் நெற்றியில் கலைந்து விழுந்த கேசங்களுடனும் மிக அழகாக விளங்கினான். அனைவரும் ஆசை கொண்டு அவனைப் பின்தொடர்ந்தனர். அதைப் பார்த்து, இனிமையான சப்தத்துடன் சிரித்துக்கொண்டு ஓடினான். பிறகு நின்று, திரும்பிப் பார்த்து அனைவருக்கும் ஆனந்தத்தை அளித்தான். இருவரும் வேகமாக ஓடி சேற்றில் விழுந்து, சேற்றை உடம்பில் பூசிக் கொண்டார்கள். ஆகாயத்திலிருந்து முனிவர்கள் துதித்தனர். ஓடி வந்த தாய்மார்கள், கருணையோடு வாரி அணைத்து முத்தமிட்டார்கள். யசோதை, பெருகிய அன்புடனும், பால் நிரம்பிய கொங்கைகளுடனும், கண்ணனை எடுத்துப் பாலூட்டினாள். பாலூட்டும்போது புன்சிரிப்புடன் கூடிய அவனது பற்களைப் பார்த்து ஆனந்தமடைந்தாள். இவ்வாறு தெய்வக் குழந்தைக்குப் பாலூட்டி, மிகவும் பேறு பெற்றவளானாள். இப்போது தளிர்நடைப் பருவம் வந்தது. கண்ணன் தன் பிஞ்சுக் கால்களால், தளிர்நடை நடந்து, மற்ற இடைச்சிறுவர்களுடன் அருகே உள்ள வீடுகளில் விளையாடினான். வீடுகளில் உள்ள கிளி, பூனை, கன்றுகளை அவிழ்த்துவிட்டு அவற்றின் பின்னே ஓடினான். இடைச்சிறுவர்கள் சிரித்துக் கொண்டு அவனைத் தொடர்ந்தனர். 

பலராமனுடன் கண்ணன் சென்ற இடங்களில் எல்லாம், கோபிகைகள் அவர்களைக் கண்டு களித்தனர். வீட்டு வேலைகளையும், குழந்தைகளையும் மறந்து கண்ணனையே நினைத்து, பரவசமாக ஆனார்கள். கண்ணன், கோபிகைகள் கொடுக்கும் புதிய வெண்ணைக்கு ஆசைப்பட்டு இனிமையாய்ப் பாடினான். அழகாய் ஆடினான். அவர்கள் கருணையோடு கொடுத்த வெண்ணையை உண்டான். சில இடங்களில் புதிதாய்க் காய்ச்சிய பாலைக் குடித்தான்.

ஒரு நாள், மரத்தின் கிளைகள் மேலே பிரகாசிக்கும் நிலவினைப் பார்த்து, பழம் என்று நினைத்து, பெற்றோரிடம் கேட்டான். அவர்கள் வேடிக்கையாக "நீயே கூப்பிடு, அது வரும்" என்றார்கள். கண்ணனும் கூப்பிட, நிலவு நேராக அவனது கைகளில் வந்தது. அப்போது அவன் மேனி முழுவதும் நட்சத்திரக் கூட்டங்களுடன் அண்டங்களின் வடிவாகத் தோன்றினான். திகைப்புடன் நந்தகோபர் நோக்கும்போது, அவரை பேரின்பக்கடலில் மூழ்கச் செய்து, மறுபடியும் மாயையால், தான் அவரின் மகன் என்ற நினைவை ஏற்படுத்தினான். 

வாமனாவதாரத்தில் மகாபலியிடம் யாசித்துவிட்டேன். மறுபடி யாசிக்கமாட்டேன் என்று முடிவு செய்தவனைப் போல, யாசிக்காமல் அழகாய்த் திருடத் தொடங்கினான். ஒவ்வொரு நாளும் கோபிகைகள் யசோதையிடம் வந்து புகார் கூறத் தொடங்கினார்கள். ஒரு பெண், "இன்று காலை கண்ணன் என் வீட்டிற்கு வந்து, கன்றினை அவிழ்த்துவிட்டதால், அது மாட்டின் எல்லா பாலையும் குடித்துவிட்டது" என்று சொன்னாள். வேறொருத்தி, "அவன் வெண்ணை திருட ஆயிரம் வழி வைத்திருக்கிறான், உயரே உரியில் வைத்தாலும், ஒருவர் மீது ஒருவர் ஏறிக் கொண்டு வெண்ணையைத் திருடுகிறான்" என்று சொன்னாள். மற்றொருத்தி, "பாதி வெண்ணையை அவன் உண்டுவிட்டு மீதியை குரங்குகளுக்குக் கொடுக்கிறான்" என்றாள். ஒரு பெண், உயரே இருக்கும் பானையில் கல்லெறிந்து உடைத்துவிட்டு, அடியில் வாயைத் திறந்து தயிரைக் குடிக்கிறான்" என்று புகாரிட்டாள். அவர்கள் கூறும் புகாரைக் கேட்ட யசோதை, கோபமாகக் கண்ணனைப் பார்க்கும்போது, அவன் கண்களில் நீருடன் நிற்பான். அதைக் கண்டு மனம் பொறுக்காமல், அவனை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொள்வாள். இவ்வாறு கோகுலத்தில், தயிர், நெய், வெண்ணையை அவன் திருடினாலும், இடைப்பெண்கள் அவனிடம் கோபம், வருத்தம் கொள்ளவில்லை. வெண்ணையுடன், அவர்கள் மனதையும் திருடி, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தான். 

Tuesday, January 13, 2015

கண்ணன் கதைகள் (32) - நாமகரணம் செய்தல் (பெயர் சூட்டுதல்)

கண்ணன் கதைகள் (32) - நாமகரணம் செய்தல் (பெயர் சூட்டுதல்), கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

வசுதேவர் குழந்தைக்குப் பெயர் சூட்ட விரும்பினார். வசுதேவர் வேண்டிக் கொண்டதன் பேரில் கர்க்க முனிவர், நாமகரணம் செய்ய, நந்தனது வீட்டிற்கு வந்தார். சந்தோஷமடைந்த நந்தகோபன், அவரை வரவேற்றுப் பூஜித்தார். யசோதையும், நந்தனும் கர்க்கரை நமஸ்கரித்தார்கள். புன்முறுவலுடன் விழாவிற்கு வேண்டியவற்றைச் செய்யச் சொன்னார். கர்க்கர் நந்தகோபனைப் பார்த்து,"நான் யதுகுலத்தின் குரு. இந்த விழாவை மிகவும் ரகசியமாகச் செய்ய வேண்டும்" என்று கூறினார். ஏனெனில், ஆடம்பரமாகச் செய்தால், கம்ஸனுக்குத் தெரிந்துவிடும் என்பதால் அப்படிச் சொன்னார். நந்தகோபனும் அதற்கு சம்மதித்தார். 

பிறகு கர்க்கர், ரோஹிணியின் குழந்தையை எடுத்து வரச் சொன்னார்.  அந்தக் குழந்தை, நல்லொழுக்கம் மிகுந்த  குழந்தையாக இருந்ததால், 'ராமன்' என்றும், பலசாலியாக இருந்ததால் 'பல' என்பதையும் சேர்த்து, "பலராமன்" என்று பெயரிட்டார்.  வசுதேவன், நந்தன் ஆகியோரின் இரு குடும்பங்களையும் இணைத்ததால், 'ஸங்கர்ஷணன்' என்றும் பெயரிட்டார். 

பிறகு, யசோதையின் குழந்தையை எடுத்து வரச் சொன்னார். கணக்கிலடங்கா ஆயிரக்கணக்கான பெயர்கள் கொண்ட இவருக்கு எந்த பெயர் சூட்டுவது? என்று கவலையடைந்தார். பிறகு ரகசியமாகப் பெயர் வைத்தார். மங்கலமாகவும், ஆனந்தமாகவும் இருப்பதைச் சொல்வதும், கருமையானதும், உலகத்தின் பாபத்தைப் போக்கும் தன்மை உடையதுமான “கிருஷ்ணன்” என்ற பெயர் வைத்தார். வசுதேவனின் குழந்தை என்பதால், "வாசுதேவன்" முதலிய பெயர்களையும் சூட்டினார். இந்தக் குழந்தைதான் ‘ஸ்ரீஹரி’ என்று சொல்லாமல், ஸ்ரீஹரியின் பெருமையை எடுத்துச் சொன்னார். மேலும் நந்தகோபனிடத்தில், "உன் மகனிடத்தில் பக்தி கொண்டவன் துன்பப்படுவதில்லை. உன் மகனுக்குத் துன்பம் தருபவன் நாசமடைவான்" என்று கிருஷ்ணனின் பெருமையை எடுத்துச் சொன்னார். மேலும், “இவன் அசுரர்களைக் கொல்வான். பந்துக்கள் நல்ல ஸ்தானத்தை அடையும்படி செய்வான். உன் மகனுடைய புகழைக் கேட்டு மகிழ்வீர்கள்” என்று கூறினார். பிறகு கர்க்கர், வெளிப்படையாக இக்குழந்தை ‘ஸ்ரீஹரி’ என்று சொல்லாமல், "இக்குழந்தையின் மூலம் அனைவரும் அனைத்துக் கஷ்டங்களையும் கடக்கப் போகிறீர்கள்" என்று கூறினார்.

பெயர் சூட்டும் விழா இனிதே நிறைவேறியது. அனைவரையும் ஆசீர்வதித்த பின்னர், கர்க்கர் தனது இருப்பிடம் சென்றார். நந்தகோபனும், மற்றவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன், குழந்தை கிருஷ்ணனை சீராட்டினர். 

Monday, January 12, 2015

கண்ணன் கதைகள் (31) -த்ருணாவர்த்த வதம்

கண்ணன் கதைகள் (31) -த்ருணாவர்த்த வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
ஒரு நாள் யசோதை குழந்தையான கண்ணனை, மடியில் வைத்திருந்தாள். குழந்தையின் எடை அதிகமாக இருந்ததால், அவளால் அதிக நேரம் மடியில் வைத்திருக்க முடியவில்லை. உடனே கண்ணனைப் படுக்கையில் கிடத்திவிட்டு, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள். 

அப்போது, கம்ஸனால் அனுப்பப்பட்ட, த்ருணாவர்த்தன் என்ற மற்றொரு அசுரன் காற்று ரூபத்தில், புழுதி பறக்க, பெரும் சத்தத்துடன் வந்தான். குழந்தையையும் எடுத்துச் சென்றான்.  கோகுலம் முழுவதும் புழுதியால் இருண்டது. எதையும், பார்க்க முடியாத அந்த இருளில், யசோதை குழந்தையைக் காணாமல் கதறி அழுதாள்.  அவள் அழுத சத்தம் எங்கும் பரவியது. யசோதையின் அழுகையைக் கேட்ட இடையர்கள், நந்தகோபனின் வீட்டிற்கு வந்தனர். குழந்தையைக் காணாமல் அனைவரும் அழுதனர். 

அதே சமயம், த்ருணாவர்த்தன் கண்ணனைத் தோளில் சுமந்து கொண்டு வானில் உயரப் பறந்தான். அப்போது கண்ணன், தன்னுடைய எடையை மிகவும் அதிகமாக்கிக் கொண்டான். அவனுடைய பாரம் தாங்க முடியாமல், த்ருணாவர்த்தன் வேகம் குறைந்தவனானான். அவனுக்குக் கண்ணன் மலையைப் போல் கனத்தான். புழுதியும், சத்தமும் ஓய்ந்தது. இப்போது அசுரன் குழந்தையை விட்டுவிட நினைத்தான். ஆனால் கண்ணன் அவனை விடவில்லை. அவனுடைய  கழுத்தை இறுகப் பிடித்தான். அசுரன், உயிரிழந்து பூமியில் விழுந்தான். அவனுடைய உடல் ஒரு பாறை மீது விழுந்தது. அழுதுகொண்டு வந்த அனைவரும், அசுரனுடைய உடல் மேல், சிரித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டனர்.

அசுரன் கல்லின்மீது விழுந்து உயிரிழந்து கிடந்தான். குழந்தையான கண்ணனோ, தன்னுடைய தாமரைக் கைகளினால் அவனை அடித்து விளையாடிக் கொண்டிருந்தான். இவ்வாறு, சூறாவளிக் காற்றாய் வந்த அசுரனையும் அழித்தான். மலைமேல் இருக்கும் ஒரு நீலமணியைப் போல் இருந்த குழந்தையைத் தூக்கி எடுத்து வந்தார்கள். 

நந்தகோபனும், மற்றவர்களும் சந்தோஷமடைந்தனர். அனைவரும் குழந்தையை அணைத்து முத்தமிட்டனர். தன்னைத் தூக்க வேண்டும் என்ற கோபியர்களின் எண்ணத்தை அறிந்து, கண்ணன் தானாகவே தாவிச் சென்று அவர்களுடைய கைகளில் விளையாடினான். யசோதையும், நந்தனும், மற்றவர்களும், “ஸ்ரீ ஹரியே! எங்கள் குழந்தையைக் காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார்கள். மேலும், "நாம் பூர்வ  ஜன்மத்தில் நிறைய புண்ணியங்கள் செய்திருக்கிறோம், அதனால்தான் அந்த பகவான் நம் குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். குழந்தையை அசுரன் எடுத்துச் சென்றும், எந்த ஆபத்துமில்லாமல் தங்களுக்குக் கிடைத்ததை எண்ணி, குழந்தையை உச்சி மோர்ந்து புளகாங்கிதமடைந்தனர். 

Sunday, January 11, 2015

கண்ணன் கதைகள் (30) - சகடாசுர வதம்

கண்ணன் கதைகள் (30) - சகடாசுர வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

குழந்தை கண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அவன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. குப்புறக் கவிழ்ந்து கொள்ள ஆரம்பித்தான். யசோதை, அதைக் கொண்டாட ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தாள்.

இதற்கிடையே கம்ஸன் அனுப்பிய சகடாசுரன் என்ற மற்றொரு ராக்ஷஸன், வண்டியின் உருவெடுத்து, கோகுலத்தில் யசோதையின் வீட்டிற்கு அருகே. குழந்தையைக் கொல்வதற்காகக் காத்திருந்தான்.

விழாவிற்கு, யசோதையும் நந்தகோபரும், கோகுலத்தில் உள்ள அனைவரையும் அழைத்திருந்தார்கள். யசோதை, குழந்தையை நன்கு குளிப்பாட்டி, அலங்கரித்து விட்டாள். குழந்தைக்குத் தூக்கம் கண்ணைச் சொருகியது. அதனால், அருகில் இருந்த அந்தப் பெரிய வண்டியின் அடியில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து, சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் கண் விழித்த குழந்தை கண்ணன் ஆழ ஆரம்பித்தான். வேலையின் மிகுதியாலும், கூடியிருந்தவர்களின் பேச்சு சத்தத்தாலும் யசோதைக்கு, குழந்தையின் அழுகைக் குரல் கேட்கவில்லை. குழந்தை கால்களை வேகமாக உதைத்துக் கொண்டு அழுதது. அப்போது, அருகே மரங்கள் முறியும் சப்தமும், குழந்தையைப் பார்த்துக் கொள்ள நியமித்திருந்த இடைச்சிறுவர்களின் கூக்குரலும் கேட்டது. அந்தப் பெருஞ்சத்தத்தைக் கேட்டு, இடைப்பெண்கள் உடல் குலுங்க ஓடி வந்தனர். அங்கே, வண்டி முறிந்து கிடக்க, அதன் நடுவே குழந்தையைக் கண்டனர்.


பெரியோர்களும், இடையர்களும், நந்தகோபனும், குழந்தைக்கு என்ன நேர்ந்ததோ என்று பயந்து ஓடி வந்தனர். யசோதை குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சமாதானம் அடைந்தனர். "இந்த வண்டி எப்படி முறிந்தது? ஒன்றும் புரியவில்லையே"! என்று அதிசயித்தனர். அப்போது, கண்ணனைப் பார்த்துக் கொள்ள நியமித்திருந்த இடைச்சிறுவர்கள், “இக்குழந்தை பால் சாப்பிட அழுதுகொண்டு காலை உதைத்துக் கொண்டது, அதன் கால் பட்டு இந்த வண்டி உடைந்தது, நாங்கள் பார்த்தோம்” என்று கூறினார்கள். "குழந்தையின் கால் பட்டு வண்டி முறியுமா? இருக்காது" என்று இடையர்கள் அதை நம்ப மறுத்தனர். பூதனையின் முடிவை நேரில் கண்டிருந்த சிலர் அப்படியும் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர். இவ்வாறு, வண்டியின் உருவில் வந்த சகடாசுரன், கண்ணனால் வதம் செய்யப்பட்டதால், ஸத்வவடிவான பரந்தாமனுடன் ஐக்யமடைந்துவிட்டான். அவனுடைய உடலின் சிறு பாகம்கூட அங்கு காணப்படவில்லை!!!

தாமரைப் பாதங்களில் காயம் பட்டதா? பிஞ்சுக் கைகளில் அடி பட்டதா? என்று இடைப்பெண்கள் கண்ணனைத் தூக்கித் தடவிப் பார்த்தனர். அந்தக் குழந்தைதான் 'ஹரி' என்று அறியாமல், " உலகத்தைக் காக்கும் ஹரியால் என் குழந்தை காக்கப்பட்டது" என்று கூறிய நந்தகோபர், மயிர்க்கூச்சலுடன் குழந்தையைத் தூக்கித் தழுவிக் கொண்டார். பிறகு வேதமறிந்தவர்கள் குழந்தையை ஆசீர்வதித்தார்கள். கண்ணனும் தனது லீலைகளால் கோகுலத்தை மகிழ்வித்தான்.

Saturday, January 10, 2015

கண்ணன் கதைகள் (29) - பூதனை மோக்ஷம் / பூதனா மோக்ஷம்

கண்ணன் கதைகள் (29) - பூதனை மோக்ஷம் / பூதனா மோக்ஷம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

நந்தகோபன், கப்பம் கட்டுவதற்காக மதுரா நகரம் சென்றார். அசுரர்களின் முயற்சியை அறிந்த வசுதேவர், அதுபற்றி நந்தகோபனிடம் கூறினார். மேலும்,“உனக்குப் பிள்ளை பிறந்ததைக் கேட்டு எனக்குப் பிறந்ததைப் போல மகிழ்ச்சி அடைகிறேன். சில கெட்ட சகுனங்கள் காணப்படுகிறது, ஆகையால் நீ விரைந்து கோகுலத்திற்குச் செல்” என்று கூறினார். நந்தகோபனும் கண்ணனுக்கு ஆபத்து வருமோ என்று கவலை கொண்டு விரைந்து சென்றார்.


அதே சமயம், கம்ஸனால் ஏவப்பட்ட பூதனை என்கிற கோர ரூபமுள்ள ராக்ஷஸி, தன்னை மிக அழகிய பெண்ணாக மாற்றிக் கொண்டு, கோகுலத்திற்கு வந்தாள். 
தன் நடவடிக்கைகளால் அனைவரின் மனதையும் கவர்ந்தாள். எல்லாக் குழந்தைகளுடைய உள்ளத்தையும் கவரும் அவளைக் கண்டு கோபியர்கள் “இவள் யார்?” என்று யோசித்தனர். ஒய்யாரமாக நடந்து வந்து கண்ணனைக் கையில் எடுத்தாள். பின்னர், வீட்டின் உள்ளே அமர்ந்து, கண்ணனை மார்போடணைத்து விஷப் பாலூட்டினாள். பயமின்றி அவள் மடிமீது ஏறிய கண்ணன், விஷம் நிறைந்த அவளுடைய முலையில் வாய் வைத்து, பெரிய மாம்பழத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சத் தொடங்கினான்.

ஏற்கனவே, அவள் பல குழந்தைகளைக் கொன்றதால், கண்ணன் அவள் மீது கோபமுற்றிருந்தான். பால் சாப்பிடுவது போல அவளுடைய உயிரையும் சேர்த்துக் குடித்தான். அவள், இடிபோலக் கூச்சலிட்டுக் கொண்டு, ராக்ஷஸ உருவத்துடன், இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு, கண்கள் பிதுங்கி, உயிரற்றுக் கீழே விழுந்தாள். அக்குரலைக் கேட்ட அனைவரும் நடுங்கினர். பகவானான கண்ணன், அவளுடைய மார்பில் பயமே இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்தான்உயிரற்ற அவள் மார்பின்மீது விளையாடிக் கொண்டிருந்த கண்ணனை, கோபிகைகள் வாரி எடுத்துத் தூக்கினார்கள். அவன்தான் திருமால் என்று அறியாமல், மங்கலங்களைக் கொடுக்கும் திருமாலின் நாமங்களைக் கூறிக்கொண்டே, ரட்சை செய்து அவனுக்கு அணிவித்தார்கள். 

வசுதேவர் கூறியதைக் கேட்ட நந்தகோபர் விரைந்து கோகுலத்திற்குத் திரும்பினார். வழியில் மரங்களை எல்லாம் வேரோடு சாய்த்து, வீழ்ந்து கிடந்த ஒரு பெரிய உருவத்தைக் கண்டு பயந்து, குழந்தையைக் காக்க வேண்டும் என்று திருமாலை வேண்டினார். கோபியர்கள் மூலம் விஷயம் அறிந்த இடையர்கள், பயத்தாலும், ஆச்சரியத்தாலும் பேச்சற்று இருந்தனர். பிறகு, கீழே கிடந்த அந்த பயங்கரமான ராட்சத உருவத்தைக் கோடாரியால் துண்டு துண்டாக வெட்டி, வெகுதூரத்திற்கப்பால் கொண்டு சென்று எரித்தார்கள். அப்போது, குழந்தையான கண்ணன் பால் அருந்தியதாலும், மடியில் அமர்ந்ததாலும், தூய்மை அடைந்த அந்த ராக்ஷஸியின் உடலிலிருந்து, சந்தனம், குங்கிலியம் போன்ற உயர்ந்த வாசனையுடைய புகை உண்டானது. 
என்ன ஆச்சர்யம்!!

இந்த தெய்வக் குழந்தையைத் தொடுகிறவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் மோக்ஷம் உடனேயே கிடைக்கும், காத்திருக்க வேண்டியதில்லை என்பதை இடையர்களுக்குச் சொல்வதுபோல், பூதனையை மணமுள்ளவளாகக் கண்ணன் செய்தான்.

வசுதேவனுக்கு இது எப்படி முன்னமேயே தெரிந்தது என்று நந்தகோபன் வியந்தார். "இது என்ன அதிசயம்!! இந்த அரக்கியால் குழந்தை கொல்லப்படவில்லையே!! ஆச்சர்யம்" என்று கோபர்கள் பேசிக் கொண்டார்கள். கண்ணனின் அழகிய திருமுகத்தைப் பார்த்து ஆனந்தத்தில் மூழ்கினார்கள்.

கண்ணனின் பிறப்பால், கோகுலத்தில் வாழ்ந்தவர்கள் செல்வங்கள் நிரம்பப் பெற்று, மங்கள காரியங்கள் செய்தனர். கோகுலம் முழுவதும் ஆனந்தத்தில் மூழ்கியது. கோபியர்கள் வீட்டில் வேலை செய்யும்போது கூட கண்ணனின் அழகைப் பற்றியும், புன்சிரிப்பைப் பற்றியும் பேசி மகிழ்ந்தனர். வேலை முடிந்ததும் கண்ணனைக் காண தினமும் நந்தகோபர் வீட்டிற்குச் சென்றனர். இடைப்பெண்கள் ஒவ்வொருவரும், “குழந்தை என்னைப் பார்க்கிறது, என்னைப் பார்த்து சிரிக்கிறது, என்னிடம் வா” என்று கூறி மகிழ்ந்து குழந்தையிடம் அன்பைப் பொழிந்தார்கள். கண்ணனைத் தொட வேண்டும் என்ற ஆசையால், மாற்றி மாற்றித் தூக்கிக்கொண்டு மகிழ்ந்தார்கள்.
நந்தகோபன், பரவசத்துடன் கண்ணனைக் கைகளில் எடுத்து, உச்சிமுகர்ந்து மகிழ்ந்தான். யசோதை, கண்ணனை மடியில் கிடத்தி, பாலூட்டி, அவன் முகத்தைப் பார்த்துச் சிரித்து ஆனந்தத்தை அடைந்தாள். 

கண்ணனால், பூதனையின் உயிர் மாத்திரம் உறிஞ்சப்படவில்லை; அவளுடைய பாபங்களும் சேர்த்து உறிஞ்சப்பட்டன. அதனால். அவள் மோக்ஷம் அடைந்தாள்.  இந்த பூதனா மோக்ஷத்தை, படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் மீண்டும் ஒரு தாயின் பாலைக் குடிக்கும் நிலைமை உண்டாகாது என்று அறிந்தோர் சொல்வார்கள். அதாவது, இவ்வுலகில் மீண்டும் பிறக்கமாட்டார்கள் என்று அர்த்தம்.  

ஸ்வாமி தேசிகன், 'யாதவாப்யுதயம்' என்னும் காவியத்தில், 
"ஸ்தன்யேந க்ருஷ்ண: ஸஹ பூதநாயா:
ப்ராணாந் பபௌ லுப்த புநர்ப4வாயா:
யத் அத்3பு4தம் பா4வயதாம் ஜநாநாம்
ஸ்தநந்த4யத்வம் ந புநர் ப3பூ4வ"
என்று கூறுகிறார். 
 பூதனையின் பாலைக் கண்ணன் உறிஞ்சினான். பாலை மட்டுமல்ல, அவள் உயிரையும் உறிஞ்சினான். உயிரை மட்டுமல்ல, அவள் பாபங்களையும் சேர்த்து உறிஞ்சினான். அவள் மீண்டும் பிறவாதபடி செய்தான். அவளுக்கு மோக்ஷத்தை அளித்தான். கண்ணனின் இந்த லீலையைப் படிப்பவர்களும், கேட்பவர்களும்,  பிறப்பு, இறப்பு அற்ற பேரின்ப நிலையை அடைவார்கள் என்று கூறுகிறார். 

Friday, January 9, 2015

கண்ணன் கதைகள் (28) - கிருஷ்ணாவதாரம் / க்ருஷ்ணாவதாரம் / ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்

கண்ணன் கதைகள் (28) - கிருஷ்ணாவதாரம்,  கிருஷ்ணாவதாரம் / க்ருஷ்ணாவதாரம் / ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்

நந்தகோபரும், யசோதையும் மிகுந்த சந்தோஷமடைந்தனர். தேவகியும் வசுதேவரும் ஒரு புறம் மகிழ்ச்சியுடனும், மறுபுறம் கம்ஸன் குழந்தை பிறந்தால் கொன்றுவிடுவானே என்று கலக்கமும் அடைந்தனர். ஆவணி மாதம், கிருஷ்ணபட்சம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில், விருச்சிக லக்கினத்தில், நடு இரவில், மூவுலகங்களின் துன்பங்களையும் போக்க எண்ணம்கொண்டு, ஆனந்த வடிவான திவ்யமேனியுடன், வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகனாக கிருஷ்ணன் சிறையில்அவதரித்தான். அப்போது,வானம் மழைக்கால மேகங்களால் மூடியிருந்தது. கண்ணனின் நீலநிற மேனியில் இருந்து தோன்றிய ஒளியால் அவ்வாறு மூடியிருந்ததுபோல் தோன்றியது. கருமேகங்கள் மழைநீரைக் கொட்டித் தீர்த்தன. மழைநீரால் அனைத்து திசைகளும் குளிர்ந்திருந்தது. வேண்டிய வரம் கிடைத்ததால் தேவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.

குழந்தை ரூபத்தில் இருந்த கண்ணன், தனது திருமேனியில், கிரீடம், கடகம், தோள்வளை, ஹாரம் ஆகியவற்றோடும், சங்கு, சக்கரம், தாமரை, கதை தரித்த கைகளுடனும் காட்சி அளித்தா
ன். அவது நீலமேனி இந்த எல்லாச் சின்னங்களையும் தரித்து பிரசவ அறையில் விளங்கியது. கம்ஸனுடைய அந்த அறை சோபையற்று இருந்தாலும், அவது மார்பில் நிரந்தரமாக வசிக்கும் மகாலக்ஷ்மியின் பார்வையால் அந்த அறை லக்ஷ்மிகரமாக விளங்கியது.

ஞானிகளின் மனதிற்கும் எட்டாத அந்த திவ்யஸ்வரூபத்தை வசுதேவர் கண்களால் தரிசித்தார். மயிர்க்கூச்சலுடன், ஆனந்தக் கண்ணீர் வடித்துத் துதித்தார்.“தேவனே! துன்பங்களை அறுப்பவனே! மாயையினால் லீலைகளைச் செய்கிறவனே! தங்கள் கடைக்கண் பார்வையால் என் துக்கங்களைப் போக்கி அனுக்ரஹிக்கவேண்டும்” என்று துதித்தார். தாயான தேவகியின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அவளும் துதித்தாள். கருணை வடிவான குழந்தைக் கண்ணன், அவர்கள் இருவருக்கும், அவர்களது முந்தைய இரண்டு ஜன்மங்களைப் பற்றிச் சொன்னார். "நீங்கள் இருவரும், முன்பு திரேதாயுகத்தில், 
பன்னீராயிரம் ஆண்டுகள் தவம் செய்ததால், பிரஸ்னிகர்ப்பன் என்ற பெயருடன் உங்களுக்கு மகனாகப் பிறந்தேன். அதன்பிறகு அடுத்த பிறவியில் நீங்கள் காசியபராகவும் அதிதியாகவும் பிறந்தீர்கள். நான் உங்களிடத்தில் வாமனனாக அவதாரம் செய்தேன். தற்போது மீண்டும் உங்களுக்கு மகனாகப் பிறந்திருக்கிறேன்" என்று கூறினார். இவ்வாறு, மூன்று பிறவிகளிலும் பகவானையே மகனாக அடைந்த அவர்கள் மிகுந்த பேறு பெற்றவர்கள் ஆனார்கள். பின்னர், சங்கு சக்ரங்களைத் தரித்து விளங்கிய அக்குழந்தை, தாயின் வேண்டுகோளுக்கிணங்க மனித உரு எடுத்தார். 

பிறகு, வசுதேவரிடம், " என்னை கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் விட்டுவிட்டு, அவரது பெண் குழந்தையை எடுத்து வா" என்று ஆணையிட்டார். ஞானிகள் மனதில் இருப்பவரும், தாமரை மலரில் இருக்கும் அன்னக்குஞ்சு போல் அழகானவருமான அந்தக் கண்ணனை வசுதேவர் கையில் எடுத்துக்கொண்டார். திருமாலின் ஏவுதலால், கோகுலத்தில் யோகநித்ரையானவள், நந்தகோபர் வீட்டில் யசோதையிடத்தில் அவதரித்தாள்.

நகரமக்கள் அனைவரும் மாயையினால் தூங்கினர். அறிவற்ற கதவுகள் கூட 
திருமாலின் கட்டளையால் தாமே திறந்து கொண்டன! ஆச்சர்யம்!

பாக்யசாலியான வசுதேவர், கண்ணனை ஒரு துணியில் சுற்றி, கூடையில் சுமத்து, கோகுலம் எடுத்துச் சென்றார். ஆதிசேஷன் தன் படங்களால் மழையைத் தடுத்துக் குடை பிடித்தான். அவன் தலைகளில் இருந்த ரத்னமணிகளின் ஒளியால், இருட்டில் வழிகாட்டிக் கொண்டு வந்தான். யமுனை உயர்ந்த அலைகளுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வசுதேவர் அருகே சென்றதும், மாயவித்தையைப் போல் வடிந்து கணுக்கால் அளவாக ஓடியது. ஆச்சர்யம்!

கோகுலத்தில் எல்லாரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கதவுகள் திறந்திருந்தன. குழந்தை அழும் சத்தம் கேட்ட வீட்டிற்குள் வசுதேவர் சென்று, யசோதையின் அருகே கண்ணனைப் படுக்க வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையான யோகமாயாவை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.

சிறையில், குழந்தையின் அழுகுரல் கேட்டு காவற்காரர்கள் எழுந்தனர். அரசனிடம் சென்று தகவல் கூறினர். அவிழ்ந்த தலையுடன் கம்ஸன் விரைந்தோடி வந்தான். தேவகியின் கைகளில் பெண் குழந்தை இருப்பதைக் கண்டு சந்தோஷப்படுவதற்குப் பதில் கலக்கமடைந்தான்.  இது நாராயணனின் மாயை என்று நினத்த கம்ஸன், அந்தக் குழந்தையை, தேவகியின் கரத்திலிருந்து வலுவாகப் பிடுங்கி இழுத்து, கற்பாறையில் அடித்தான். 

யமனுடைய பாசக்கயிற்றில் இருந்து விடுபடும் நாராயண பக்தர்கள் போல, அக்குழந்தை கம்ஸனுடைய கையிலிருந்து விடுபட்டு, வேறு உருவத்துடனும், ஆயுதம் ஏந்திய எட்டுக் கரங்களுடனும் வானில் பரந்து விளங்கினாள்.
“கொடிய கம்ஸனே! உன்னைக் கொல்லப் பிறந்தவன் வேறு எங்கோ இருக்கிறான், அதை நீயே தேடி அறிந்து கொள்” என்று சொன்னாள். பின்னர், தேவர்கள் துதிக்க பூவுலகில் உள்ள அனைத்து ஆலயங்களையும் அடைந்தாள்.
மாயை கூறியவற்றை கம்ஸன் அசுரர்களுக்குச் சொன்னான். அதை கேட்ட பிரலம்பன், பகன், பூதனை முதலிய அசுரர்கள், பிறந்த அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று குவித்தார்கள். கருணையில்லாதவர்களுக்கு செய்யக் கூடாதது என்று எதுவும் இல்லை.

நந்தகோபன் வீட்டில் யசோதையின் பக்கத்தில் கால்களை அசைத்துக் கொண்டு கண்ணனும் அழுதான். கண் விழித்த யசோதையும், கோபியர்களும் செய்தியை நந்தகோபனிடம் கூறினார்கள். கோகுலம் முழுவதும் ஆனந்தக் கடலில் மூழ்கியது. காயாம்பூ போன்ற குழந்தையின் மேனியைக் கண்டு யசோதை மகிழ்ந்தாள். சந்தோஷத்துடன் பாலூட்டினாள். தொட்டுப் பார்த்து ஆனந்தமடைந்தாள். இத்தகைய பேற்றைப் புண்ணியசாலிகளும் அடையவில்லை!!  நந்தகோபனும் மிக்க மகிழ்ச்சி அடைந்து, அனைவருக்கும் தானங்கள் செய்தார். எல்லா இடையர்களும் மங்கள காரியங்கள் செய்தனர். கண்ணனைக் கண்டு, கோகுலத்தில் அனைவரும், அளவற்ற மகிழ்ச்சியில் ஆடிப் பாடி கண்ணன் பிறந்ததைக் கொண்டாடினார்கள். 

Thursday, January 8, 2015

கண்ணன் கதைகள் (27) - கிருஷ்ணாவதாரத்தின் காரணம் / கிருஷ்ணாவதார நோக்கம்

கண்ணன் கதைகள் (27) - கிருஷ்ணாவதாரத்தின் காரணம் / கிருஷ்ணாவதார நோக்கம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

முன்பு தேவாசுர யுத்தம் நடந்தபோது பல அசுரர்கள் மோக்ஷமடைந்தனர். சிலர் கர்மவசத்தால் கம்ஸன் முதலிய அசுரர்களாகப் பிறந்தார்கள். அவர்களின் பாரத்தால் பூமாதேவி துன்பமடைந்து, தேவர்களுடன் பிரமனை அண்டினாள்.

“பிரம்மதேவனே! அசுரர்களின் பாரத்தால் நான் கடலில் மூழ்கிவிடும் நிலையில் உள்ளேன்"என்று அழுத பூமாதேவியையும், தேவர்களையும் பார்த்த பிரமன், அவர்களிடம் பரிதாபப்பட்டு, “தேவர்களே! பூமாதேவியே! உங்கள் கவலையை அறிந்தேன். உங்கள் அனைவரையும் காக்கும் சக்தி விஷ்ணுவுக்கே உள்ளது, நாம் அனைவரும் பாற்கடல் செல்வோம்" என்று கூறினார். பிறகு அனைவரும் பரமசிவனுடன் சேர்ந்து, குளிர்ந்த காற்றுடன் இருக்கும் பாற்கடலின் கரையை அடைந்தனர். அனைவரும் மகாவிஷ்ணுவைத் தியானித்தனர்.

தியானத்தின்போது பிரமன் மகாவிஷ்ணுவினுடைய சொற்களை உள்ளத்தில் கேட்டார். “ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் ஸ்ரீமன் நாராயணன் கூறிய சொற்களைக் கூறுகிறேன், கேளுங்கள்” என்று ஆனந்தமளிக்கும் அந்த சொற்களைக் கூறத் தொடங்கினார். “பூமாதேவிக்கும், தேவர்களுக்கும் அசுரர்களால் ஏற்படும் துன்பத்தை அறிவேன். அதைப் போக்க யாதவ குலத்தில், வசுதேவருக்கும்,தேவகிக்கும் மகனாக அவதரிக்கிறேன். தேவர்களும், தேவப்பெண்டிரும் என்னைப் பூஜிக்க பூமியில் பிறப்பார்கள்” என்று விஷ்ணு கூறியதை பிரமன் கூறினார். அதைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்து திரும்பிச் சென்றனர்.

திருமால், யாதவ குலத்தில், வசுதேவருக்கும்,தேவகிக்கும் மகனாக அவதரிப்பதாக வாக்களித்துவிட்டார். யார் அவர்கள்? சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு, அரசன் யதுவின் வம்சத்தில், அரசனாக இருந்தவர் சூரசேனன். இவரது புத்திரன் வசுதேவர். யது வம்சத்தில் போஜகுலத்தில் தோன்றிய உக்ரசேனன், யமுனைக்கரையில் இருந்த, யாதவர்களின் தலைமையிடமான மதுராவை ஆண்டான். அவனுக்கு கம்ஸன் என்ற ஒரு மகன் இருந்தான். அவன், தனது சொந்தத் தந்தையான உக்ரசேனனையே சிறையிலிட்டு, அப்பாவி ஜனங்களைக் கொடுமை செய்து, கொடுங்கோலாட்சி நடத்தி வந்தான். உக்ரசேனனின் தம்பியான தேவகனுக்கு, தேவகி என்ற மிக அழகு வாய்ந்த ஒரு பெண் இருந்தாள். கம்ஸனுக்கு, தன் தங்கை தேவகியின் மீது மிகுந்த பாசம்.

சூரசேனனின் மகன் வசுதேவனுக்கு, தேவகன் மகள் தேவகியைத் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமணமும் நடந்து முடிந்தது. யாதவ குலத்தில் அனைவரும் மிக்க மகிழ்ச்சியில் இருந்தார்கள். கம்ஸன், தங்கையின் மீதுள்ள பாசத்தால், தம்பதியர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், அவளைப் புகுந்த வீட்டில் கொண்டு விடுவதற்காக, அவர்கள் அமர்ந்திருந்த ரதத்தைத் தானே ஓட்டிச் சென்றான். அப்போது, “மூடனே! இவளுடைய எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்வான்” என்ற அசரீரி வாக்கு கேட்டது. பயந்த கம்ஸன், தேவகியைக் கொல்ல வாளை எடுத்தான். தேவகியின் கூந்தலைப் பற்றி இழுத்தான். வசுதேவர் சமாதானப்படுத்தி, குழந்தைகள் பிறந்தவுடன், தன் குழந்தைகளை அவனிடம் தந்து விடுவதாகச் சொன்னார். அதனால் அவளைக் கொல்லாமல் விட்டான். ஆனால், அவர்கள் இருவரையும் சிறை வைத்தான்.

காலம் ஓடியது. தேவகி முதல் குழந்தையைப் பெற்றாள். முதல் குழந்தையை வசுதேவர் கொடுத்தும், கம்ஸன் கருணையால் கொல்லவில்லை. துஷ்டர்களிடமும் சில சமயம் கருணை இருக்கிறது!

வசுதேவர் சென்றதும், நாரதர் கம்
னைக் காண வந்தார். நாரதர் கம்ஸனிடம், “அரசனே! நீங்கள் அசுரர்கள். யாதவர்களோ தேவர்கள். இது நீ அறியாததா? மாயாவியான விஷ்ணு உன்னைக் கொல்ல அவதாரம் செய்யப் போகிறான்” என்று சொன்னார். அதைக் கேட்ட கம்ஸன் குழப்பமடைந்தான். யாதவர்களை நகரத்தை விட்டு விரட்டினான். வசுதேவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான்.

இவ்விதமிருக்க, மகாவிஷ்ணுவின் சித்தப்படி, ஆதிசேஷன் தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை அடைந்தான். திருமாலின் சக்தியான மாயையானவள், திருமாலின் கட்டளைப்படி அந்த கர்ப்பத்தை, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியிடம் கொண்டு சேர்த்தாள். மாயையிடம் விஷ்ணு, " நீ செய்த இந்த உதவியால், உலகில் உள்ளோர், உன்னை என் தங்கையாகவும், துர்க்கா என்றும் பெயரிட்டு அழைப்பார்கள்" என்று வரமளித்தார். தேவகி தனது ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டது என்று கம்ஸனிடம் கூறினாள். தேவகிக்குப் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தைக்காக கம்ஸன் காத்திருந்தான்.

கோகுலத்தில், ரோகிணி அழகு மிக்க ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு, 'பலராமன்' என்று பெயரிட்டனர். இவ்வாறு பலராமன் அவதரித்து, கோகுலத்தில் வளர்ந்து வந்தார். 
பூமாதேவிக்கும், தேவர்களுக்கும் கொடுத்த வாக்கின்படி, திருமால் தேவகியின் வயிற்றில் எட்டாவது கருவாக வந்து அடைந்தார். திருமாலின் கட்டளைப்படி, மாயையும் யசோதையின் வயிற்றில் கருவாக வந்து அடைந்தாள்.

Wednesday, January 7, 2015

கண்ணன் கதைகள் (26) - போதணா

கண்ணன் கதைகள் (26) - போதணா என்கிற துவாரகா ராமதாசர், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
துவாரகைக்கு அருகில் டாகோர் என்ற கிராமம் உள்ளது. சில காலம் முன்பு அங்கு 'போதணா' என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். எப்போதும் துவாரகையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனையே எண்ணித் துதித்து, அவரைக் காண மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருப்பார். அதனால் அவரை அனைவரும் "துவாரகா ராமதாசர்" என்று கூப்பிட்டனர். தினந்தோறும் உஞ்சவிருத்தி எடுத்து வந்து மனைவியிடம் கொடுப்பார். அவள் அதை சமைத்து, இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு பிறகு சாப்பிடுவார்கள்.

ஒவ்வாறு ஏகாதசிக்கும் விரதமிருந்து, இறைவனைப் பாடி மறுநாள் துவாதசியன்று தன்னால் முடிந்த அளவு உணவளித்து, பின் உணவு உண்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அதேபோல, ஆடி மாதம் ஏகாதசியன்று, டாகோரிலிருந்து பாதயாத்திரையாக துவாரகை சென்று, துவாரகாநாதனைத் தொழுது, மறுநாள் துவாதசியன்று தரிசித்துத் திரும்புவார். இவ்வாறு காலம் சென்றது. அவருக்கும் வயதாகிவிட்டது. தள்ளாமையால், முன்பு போல துவாரகைக்குச் செல்ல கஷ்டமாக இருந்தாலும், விடாமல் விரதத்தைப் பின்பற்றினார். ஒரு ஆடி மாதம் ஏகாதசியன்று துவாரகை புறப்பட்டார். அவரால் நடைப் பயணத்தைத் தொடர முடியவில்லை. ஒரு மரத்தடியில் அமர்ந்து,"கண்ணா! எனக்கு வயதாகிவிட்டது, முன்பு போல் என்னால் உன்னைத் தரிசிக்க வர முடியுமா தெரியவில்லை. என்னால் முடியாவிட்டாலும், நீ எனக்கு எப்படியாவது தரிசனம் தர வேண்டும்" என்று வேண்டிக் கொண்டு, அழுதுகொண்டே அசதியில் உறங்கிவிட்டார். அவர் கனவில் கண்ணன் தோன்றி, கவலைப்படாதே! உன் முன் ஒரு தேர் வரும், அதில் நான் இருப்பேன், என்னை நீ உன் ஊருக்குஅழைத்துச் செல்லலாம்" என்று கூறி மறைந்தார். கண் விழித்தபோது, எதிரே தேரும், அதில் துவாரகாநாதனும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து, தேரில் ஏறி டாகோர் சென்றார். விக்ரஹத்தைப் பூஜை அறையில் வைத்து, தான் இல்லத்தையே கோவிலாக்கி,  நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினார்.

அதே சமயம், துவாரகையில் கண்ணனின் மூலவிக்ரஹத்தைக் காணாமல் அர்ச்சகர்கள் திகைத்தனர். டாகோரில் ராமதாசரின் வீட்டில் கண்ணன் விக்ரஹம் இருக்கும் தகவலறிந்து, அவர்கள் டாங்கேர் சென்றனர். ராமதாசரின் வீட்டிற்குச் சென்று கண்ணனை எடுத்துக் கொண்டு செல்லத் தொடங்கினர். ராமதாசர், "கண்ணா! உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது" என்று அழுது அரற்றினார். அப்போது கண்ணன் அவரிடம், "என் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்" அவர்கள் கொடுத்து விடுவார்கள்" என்று சொன்னார். அவரும் அவ்வாறே சொன்னார். உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் அவர் எங்கே பொன் தரப் போகிறார்? என்று நினைத்த அர்ச்சகர்கள், அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

ஒரு தராசில் துவாரகாநாதனின் விக்ரகத்தை வைத்தனர். ராமதாசர் வீட்டிற்குள் சென்று, அவரிடம் இருந்த ஒரே ஒரு பொன்னாலான, தனது மனைவியின் மூக்குத்தியை எடுத்து வந்து, இன்னொரு தட்டில் வைத்தார். தனது மனைவியுடன் தராசை பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்தார். பின்னர், கண்களை மூடிக் கண்ணனைத் தியானித்தார். என்ன ஆச்சர்யம்!!! தராசின் இருதட்டுகளும் சரிசமமாக நின்றது. அர்ச்சகர்களும், மற்றவர்களும் 
ராமதாசரின் பக்தியைக் கண்டு அதிசயித்து, ராமதாசரை வணங்கி, துவாரகாநாதனை அவரிடமே கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றனர். மெய்சிலிர்த்த ராமதாசரும், தினமும் நாமசங்கீர்த்தனத்தால் கண்ணனைப் பாடி, தொழுது வணங்கினார். இன்றும் அவர் பாடிய அந்தப் பாடல்கள் துவாரகையில் பாடப்படுகின்றது. தன்னலமில்லாத பக்தியுடன் இறைவனை வழிபட்ட பக்தனின் கோரிக்கையை ஏற்று, பகவானே வந்ததற்கு இதை விட வேறு வரலாறு வேண்டுமோ? 
கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,கண்ணன் கதைகள் (26) - போதணா என்கிற துவாரகா ராமதாசர்

டாகோர் கோவிலில் உள்ள கண்ணனை 'ராஞ்சோட்ஜி' என்று அழைக்கின்றனர். கண்ணன் போதருடன் டாகோருக்கு மாட்டு வண்டியில் வந்தான் என்றும் சிலர் கூறுகின்றனர். அங்குள்ள ஒரு வேப்பமரத்தில், ஒரு கிளையில் உள்ள இலைகள் இனிப்பாகவும், மற்ற கிளைகளில் உள்ள இலைகள் கசப்பாகவும் இருக்குமாம். கண்ணன் வரும் வழியில் அந்த மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றான் என்றும், அதனால் அந்தக் கிளைகளில் உள்ள இலைகள் இனிக்கிறது என்றும் கூறுகின்றனர். அவன் அருள் இருந்தால்தான் அவனைத் தரிசிக்க முடியும். தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Tuesday, January 6, 2015

கண்ணன் கதைகள் (25) - திட நம்பிக்கை

கண்ணன் கதைகள் (25) - திட நம்பிக்கை,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

ஒரு கிராமத்தில் திருவிழா. அங்கிருந்த கிருஷ்ணன் கோவிலில், 'கண்ணன் பெருமை' என்ற தலைப்பில் உபன்யாசம் ஏற்பாடு செய்திருந்தார்கள். 

அப்போது திருடன் ஒருவன் ஊருக்குள் வந்தான். அனைவரும் உபன்யாசம் கேட்கச் சென்றுவிட்டதால், திருட ரொம்ப சௌகர்யமாகப் போய்விட்டது. ஒவ்வொரு வீடாகத் தேடியும் விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. சரி, உபன்யாசத்தில் நிறைய கும்பல் இருக்கும், அதனால் அங்கு சென்றால் பணம் திருடலாம் என்று நினைத்து, கதை நடக்கும் இடத்திற்குச் சென்றான்.

உபன்யாசகர், கண்ணனுடைய பெருமையைக் கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பொன்னில் கோர்த்த ஐம்படைத்தாலி, அழகிய ரத்தினங்களாலும், வைரங்களாலும் ஆன ஆபரணங்கள், ஹாரம், வளை, தங்க அரைஞாண், மாணிக்கமும், முத்தும் கோர்த்து செய்யப்பட்ட வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை அணிந்து கண்ணன் வரும் அழகை வர்ணித்துக் கொண்டிருந்தார்.

திருடனுக்கு ஏக சந்தோஷம். அவனுக்குக் கண்ணனைப் பற்றியெல்லாம் தெரியாது. சரியான பணக்காரப் பையன் போலிருக்கிறது என்று நினைத்து, கதை முடிந்ததும் அவரிடம் அவனைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தான்.

கதை முடிந்தது, கும்பல் கலைந்தது, உபன்யாசகரிடம் சென்று, "அந்தப் பையன் யார், எங்கிருக்கிறான், சொல்லாவிட்டால் கொன்றுவிடுவேன்" என்று மிரட்டினான். கண்ணனைப் பற்றிக் கூறியதை உண்மையென்று நினைத்துக் கேட்கிறான் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. சட்டென்று, தூரத்தில் தெரிந்த பூஞ்சோலையைக் காட்டி, அங்கேதான் அவன் விளையாட வருவான் என்று சொன்னார்.

திருடனும் அவர் சொன்னது உண்மையென்று நம்பி, அந்தப் பூஞ்சோலைக்குச் சென்று கண்ணனிடம் திருடுவதற்காகக் காத்திருந்தான். அவன் நினைவு முழுவதும் கண்ணனைப் பற்றியே இருந்தது. சிறிது நேரத்தில் கண்ணன் வந்தான். உபன்யாசகர் சொன்னபடி எல்லா நகைகளும் போட்டுக் கொண்டிருந்தான். சின்னப் பையனாக இருந்ததால், மிரட்டாமல்,"குழந்தையே! உன் நகையெல்லாம் எனக்குத் தருகிறாயா?" எனக் கேட்டான். குழந்தையும் அனைத்தையும் கழற்றிக் கொடுத்தது!!!! எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு உபன்யாசகரை தேடிச் சென்று நன்றி சொன்னான். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. "நீங்கள் சொன்னமாதிரியே அந்தப் பணக்காரப் பையன் ரொம்ப அழகு, கேட்டவுடன் எல்லா நகையையும் கழற்றிக் கொடுத்துவிட்டான்" என்று சொன்னான்.

அவரால் நம்ப முடியவில்லை. "உண்மையாகச் சொல்கிறாயா?" என்று கேட்டார். "வாருங்கள், காட்டுகிறேன்" என்று கூறி, அவரை அழைத்துக் கொண்டு அந்தப் பூஞ்சோலைக்குச் சென்றான். அவரிடம், "அங்கே பாருங்கள்! அவன் விளையாடிக் கொண்டிருக்கிறான்" என்று காட்டினான். அவருக்கு ஒன்றும் தெரியவில்லை, ஆனால் சிரிப்பு மட்டும் கேட்டது.

இத்தனை நாள் கண்ணனின் திவ்ய ரூபத்தைக் கதையாகச் சொல்லும் எனக்கு அவன் தெரியவில்லையே! இந்தத் திருடனுக்குக் காட்சி அளித்திருக்கிறானே! என்று கண்ணீர் விட்டார். வருந்தும் அவரைக் கண்டு கண்ணன் கருணை கொண்டான். "அந்தத் திருடனின் கையைப் பிடித்துக்கொள்" என்று ஒரு குரல் ஒலித்தது. அவ்விதமே பிடித்துக் கொண்டு நோக்கினார். கண்ணன் அவர் கண்களுக்குத் தெரிந்தான். உபன்யாசகர், "உன் கதையைச் சொல்லும் எனக்குக் காட்சி தராமல், திருடனுடைய கையைப் பிடித்ததும் காட்சி அளிக்கிறாயே! கண்ணா, இது நியாயமா?" என்று கண்ணனிடம் கேட்டார்.

அப்போது மாயக்கண்ணன்," நீ இவ்வளவு காலம் என் கதையைக் கூறினாலும், நான் வருவேன் என்று நம்பவில்லை, ஆனால், இந்தத் திருடன் நான் வருவேன் என்று திடமாக நம்பினான். அதனால் அவன்முன் வந்தேன். இறை சிந்தனையில் பற்றுடன், இதயத்தின் ஆழத்திலிருந்து மிகுந்த நம்பிக்கையுடன் பிரார்த்தித்தால், என்னைத் தரிசிப்பது உறுதி" என்று கூறிவிட்டு மறைந்தான்.  திருடனும், திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு கிருஷ்ண பக்தன் ஆனான். 


Monday, January 5, 2015

கண்ணன் கதைகள் (24) - கட்டுசாதம்

கண்ணன் கதைகள் (24) - கட்டுசாதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு ஊரில் ஒரு இளைஞன், சோம்பேறியாய்த் திரிந்து கொண்டிருந்தான். அவனுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஏதாவது சொன்னால் தர்க்கம் செய்வான். படித்திருந்தும், வேலைக்குப் போகாமல் சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு சமயம் அந்த ஊர்க்கோவிலில் ஒரு திருவிழா நடந்தது. இடைவிடாத 'கிருஷ்ண நாம ஜபம்' என்று ஒரு நாள் ஏற்பாடாகி இருந்தது. "கிருஷ்ண நாம ஜபத்தில்" தம்மை ஈடுபடுத்திக் கொள்ள, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

இந்த இளைஞனோ, " இந்த கிருஷ்ண நாமத்தில் அப்படி என்னதான் இருக்கிறதோ?" என்று நினைத்தான். அருகிலிருந்த பெரியவர் ஒருவரிடம் இது பற்றிக் கேட்டான். அவரும், "அது மிகவும் உன்னதமான நாமம்" என்று கூறினார். அந்த இளைஞன், " இதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை, உங்கள் கிருஷ்ணனால் என் பசிக்குச் சோறு தர முடியுமா?" என்று கேட்டான். பெரியவரும், " கிருஷ்ண நாமம் சோறு மட்டுமல்ல, வேண்டிய அனைத்தையும் கொடுக்கும், மனதை ஒரு நிலைப்படுத்தி அந்த நாமத்தை ஜபித்துப் பார்" என்று கூறினார்.

அவனுக்கு அதில் துளியும் நம்பிக்கையில்லை. இருப்பினும், அருகிலுள்ள ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்று, ஒரு மரத்தடியில் தனியே அமர்ந்து, "கிருஷ்ண, கிருஷ்ண" என்று ஜபிக்க ஆரம்பித்தான். அப்போது ஏதோ சத்தம் வரவே, சிங்கம், புலி என்று பயந்து மரத்தின் மீது ஏறிக் கொண்டு மீண்டும் "கிருஷ்ண, கிருஷ்ண" என்று சொல்லத் தொடங்கினான்.

ஒரு வழிப்போக்கன் அந்த வழியே வந்து, மரத்தடியில் அமர்ந்து, தான் கொண்டு வந்த கட்டு சாதத்தைத் தின்று விட்டு, இளைப்பாறிவிட்டுச் சென்றான். கீழே இறங்கி வந்தவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த வழிப்போக்கன் இன்னொரு கட்டு சாதத்தை மறந்து விட்டுச் சென்றிருந்தான். கிருஷ்ண நாம மகிமையால் தான் பசிக்குச் சோறு கிடைத்தது என்று மகிழ்ந்து, அதை உண்ணப் போனான். அவனது தர்க்கஅறிவு அப்போது எட்டிப் பார்த்தது. உண்மையிலேயே கிருஷ்ண நாமத்திற்கு மகிமை உண்டென்றால், இந்த சாதத்தை சாப்பிடும்படி நிர்ப்பந்தம் ஏற்படட்டும், அது வரை சாப்பிடக் கூடாது, பசித்தாலும் பரவாயில்லை என்று எண்ணினான். அப்போது மீண்டும் ஏதோ சத்தம் வரவே, சாதத்தைக் கீழே வைத்துவிட்டு அவசர அவசரமாக மரத்தின் மீது ஏறி மீண்டும், 'கிருஷ்ண, கிருஷ்ண' என்று ஜபிக்கத் தொடங்கினான்.

இப்போது அங்கே ஒரு கொள்ளைக்கூட்டம் வந்தது. மரத்தடியில் அவர்கள் அமர்ந்தனர். அவர்கள் கொள்ளையடித்த பொருட்களைக் கீழே இறக்கி வைத்தனர். பின்னர், யாராவது இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தனர். பின்னர் மரத்தின்மேல் பார்த்தனர். அங்கே இந்த இளைஞன் அமர்ந்திருந்தான். அவனைக் கீழே இறக்கி மரத்தில் கட்டி வைத்தனர்.

பசியுடன் இருந்த ஒரு கொள்ளையன், அங்கு இருந்த கட்டுசாதத்தைப் பார்த்து, எடுத்து அதைத் தின்னப் போனான். மறவர்கள் தடுத்து, "தின்னாதே! நம்மை வேவு பார்க்க வந்த இவன்தான் இதை வைத்திருப்பான். இதில் ஏதாவது விஷம் கலந்திருப்பான். அதை முதலில் அவன் சாப்பிடட்டும்" என்று கூறி வலுக்கட்டாயமாக அதை அவனுக்குக் கொடுத்தனர். அவனும் சாப்பிட்டான். அதற்குள் தூரத்தில் குளம்புச் சத்தம் கேட்டது. கொள்ளையர்கள், அவனை அப்படியே விட்டுவிட்டு, அவர்கள் கொள்ளையடித்த பொருட்களுடன் விரைந்து சென்றனர். அவசரத்தில் சிறிது தங்கக் காசுகள் கீழே சிதறின.

நம்பிக்கையில்லாமல் "கிருஷ்ண நாமம்" சொன்னதற்கே இவ்வளவு பலனா!! என்று ஆச்சர்யமடைந்த அந்த சோம்பேறி இளைஞன், இனிமேல் உழைக்க வேண்டும், தர்க்கம் செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வந்தான். ஊருக்குத் திரும்பிச் சென்று, உண்மையான செல்வம் கிருஷ்ண நாமம் தான் என்பதை உணர்ந்து, கோவில் உண்டியலில் அந்தத் தங்கக் காசுகளைப் போட்டான். இனிமேல் பக்தியுடன் இருப்பேன், உழைத்து சாப்பிடுவேன் என்று கிருஷ்ணன் முன் பிரதிக்ஞை செய்தான். வாழ்க்கையில் நன்கு முன்னேறி, நல்ல நிலைமையையும் அடைந்தான்.

Sunday, January 4, 2015

கண்ணன் கதைகள் (23) - திருமாங்கல்யம்

கண்ணன் கதைகள் (23) - திருமாங்கல்யம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு சமயம் ஒரு அந்தணருக்கு வயிற்று வலி வந்தது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போன வலி, எந்த வைத்தியத்துக்கும் கட்டுப்படவில்லை. மனம் கலங்கிய அவரது மனைவி, .குருவாயூரப்பனிடம்,
"கண்ணா, என் கணவருக்கு வயிற்று வலி  நீங்கவும், எங்கள் துன்பம் தீரவும் அனுக்ரஹிக்க வேண்டும். அவ்வாறு நீங்கினால், நான் என்னுடைய திருமாங்கல்யத்தை உனது திருவடியில் ஸமர்ப்பித்து, மஞ்சள் சரடைக் கட்டிக் கொள்கிறேன். எனக்கு மாங்கல்யப் பிச்சை தா கண்ணா" என்று மனமுருகி வேண்டிக் கொண்டாள். சில நாட்களிலேயே வயிற்று வலி மட்டுப்பட்டு, சரியாகி அவளது  கணவர் பூரண குணமடைந்தார். 

வேண்டிக்கொண்டபடி குருவாயூர் சென்று, ன்னிதியில் நமஸ்கரித்து, தனது திருமாங்கல்யத்தை அப்பனது திருவடிகளில் ஸமர்ப்பித்துவிட்டு, மஞ்சள் சரடைக் கட்டிக் கொண்டாள். பின் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தார்கள். சுற்றி வரும்போது அந்தப் பெண்மணியின்  கழுத்தில் திருமாங்கல்யம் முன்புபோலவே இருந்தது. மறுபடியும் அப்பனது திருவடிகளில் ஸமர்ப்பித்துவிட்டு, மீண்டும் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தார்கள். மீண்டும் அவள் கழுத்தில் திருமாங்கல்யம் மின்னியது. இவ்வாறு  பத்து தடவை ஸமர்ப்பித்தும் மாங்கல்யம் அவளது  கழுத்திலேயே இருக்கக் கண்டார்கள். ஏதோ அபசாரம் செய்துவிட்டோம் என்று அவர்கள் மிகவும் கலங்கினார்கள். 

அதே நேரம் ஸன்னிதியில் மேல்சாந்தி தியானித்துக் கொண்டிருக்கும்போது, அப்பன் அவரது தியானத்தில் வந்து, "அந்தப் பெண்ணின்  திருமாங்கல்யத்தை வாங்க எனக்கு இஷ்டமில்லை, மறுபடி அவள் வரும்போது அதை ஸமர்ப்பிக்க வேண்டாம் என்று சொல்லிவிடு" என்று உத்தரவானது. மேல்சாந்தியும் அவ்வாறே சொன்னார். அப்பனின் கருணையைக் கண்டு அதிசயித்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் ஊருக்குத் திரும்பினார்கள். இதிலிருந்து, வேண்டுதலாக இருந்தாலும், சுமங்கலிகளின் இன்றியமையாத ஆபரணமாகிய திருமாங்கல்யத்தை, குருவாயூரப்பன் ஏற்றுக் கொள்ள விரும்ப மாட்டார் என்று தெரிகிறது. - (சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் நாராயணீய உபன்யாஸத்தில் கேட்டது)