Monday, July 24, 2017

தென்னாங்கூர் - ஸ்ரீ ரகுமாயி ஸமேத ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 31

TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
தென்னாங்கூர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில், காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது. தென்னாங்கூர் கிராமமே மிகவும் பசுமையாக இருக்கிறது. இயற்கை எழில் நிறைந்துள்ள இந்த கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே இந்தக் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ருக்மணி ஸமேத ஸ்ரீ பாண்டுரங்கர் திருக்கோவில்தான் என்றால் அது மிகையில்லை. மிகவும் அழகாக, தூய்மையாக இருக்கிறது.

ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகளின் சீடர் ஸ்ரீ ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் அமைக்கப்பட்ட இக்கோயில், மிகுந்த கலைநயத்துடன் வியக்கத்தகுந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் தென்னிந்திய பாணியில் கட்டப்பட்டுள்ளது. பூரி ஜகன்னாதர் கோவிலின் பாணியில் கருவறை கோபுரம் அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த கோபுரமும் அதன்மேல் தங்க கலசமும், அதன்மேல் சுதர்சன சக்கரமும், காவிக்கொடியும் பார்க்கும்போது பிரம்மாண்டமாய் இருக்கிறது. 
TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
மூலவர் ஸ்ரீ பாண்டுரங்கன் ஸ்ரீ ருக்மாயியுடன் நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அப்படி ஓர் அழகு!! தாயார் ரகுமாயியும் மீண்டும், மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகு!! கண்ணுக்கினியன கண்டோம்!! உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி ஸமேத வரதராஜ பெருமாள். அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இக்கோயிலில் பகவானைப் பார்க்கும்போது வைகுந்தத்தில் பகவானைப் பார்ப்பது போன்ற பிரமிப்பை எற்படுத்துகின்றது.

கண்ணன் என்றாலே அலங்காரப்ரியன். பாண்டுரங்கனுக்குத் தினமும் ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்கிறார்கள். ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீ குருவாயூரப்பன், ஸ்ரீ வேணுகோபாலன், ஸ்ரீ ராமர், வெண்ணை அலங்காரம், ராஜஸ்தான் தலைப்பாகையுடன் ராஜகோபாலன் அலங்காரம், காளிங்க நர்த்தனம் என்று ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரம்.

தல விருக்ஷம் தமால மரம். இந்த மரம் மிகவும் விசேஷமானது. ஸ்ரீ கிருஷ்ண பகவான்  இம்மரத்தின் கீழ் நின்று புல்லாங்குழல் வாசிப்பார் எனவும், கோபிகைகளும் ராதையும் அதைக் கேட்டு மயங்கியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. வடக்கே சாக்ஷி கோபால் என்னும் ஊரில் இந்த மரத்தினடியில்தான் ஸ்ரீ க்ருஷ்ணர் தன் பக்தனுக்கு சாக்ஷி சொன்னாராம்.  வட மாநிலங்களில் மட்டுமே காணப்படும் இந்த விருக்ஷம் தென்னாட்டில் இந்தத் தலத்தில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.  ப்ரார்த்தனை செய்துகொண்டு இம்மரத்தை 12 முறை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்தால் திருமணம், குழந்தைப்பேறு சித்திக்கின்றது என்று மரத்தினடியில் உள்ள குறிப்பு கூறுகின்றது.
TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
அர்த்தமண்டபம், மஹாமண்டபம் போன்ற மண்டபங்களும் இருக்கிறது. மண்டபங்களில் பைபர்கிளாசில் கலை வேலைப்பாடுகளுடன் கண்ணனின் லீலைகளை அழகிய வண்ண ஓவியங்களாக அமைத்திருக்கிறார்கள். முன் மண்டபத்தில் விதம் விதமான அலங்காரங்களைப் படங்களாக வைத்திருக்கிறார்கள். மேற்கூரைகளிலும் இதுபோன்று ஓவியங்கள் வரையப்பட்டிருக்கிறது. நந்தவனத்தை மிக நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். கோவிலும் மிகத் தூய்மையாக உள்ளது. 
TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,

TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
நாம சங்கீர்த்தனம் முக்தி அளிக்கும் வல்லமை பெற்றது என்பதால், இங்கு பெருமாளின் திருக்கல்யாணம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் கலந்த உற்சவமாக நடத்தப்படுகிறது.

இந்த ஆலயத்திற்கு அருகிலேயே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும் உள்ளது. மலயத்வஜ பாண்டியன் குழந்தைப்பேறு வேண்டி இந்தத் தலத்தில் யாகம் செய்தபோது யாக குண்டத்திலிருந்து மீனாக்ஷி தோன்றியதாகவும், அவளை அழைத்துக்கொண்டு மன்னன் மதுரை சென்றதாகவும் ஐதீகம். அதனால் இந்தத் தலம் மீனாக்ஷியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.

கோவிலுக்குப் பின்புறம் ஞானாந்த சுவாமிகளின் மடம் உள்ளது. அங்கு ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகளுக்கு துளசி பிருந்தாவனமும் உள்ளது. 


உற்சவங்கள்/ திருவிழா: கருட சேவை, புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் வெள்ளித் தேர், கிருஷ்ண ஜெயந்தி,வைகுண்ட ஏகாதசி, விஷுக்கனி.

கோயில் திறந்திருக்கும் நேரம்:  6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

வழி:
பேருந்து வசதிகள் உள்ளன. காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் அனைத்து பேருந்துகளும் தென்னாங்கூர் வழியாகவே செல்லும். வந்தவாசியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாகவும் செல்லலாம். உத்திரமேரூரில் இருந்து 21 கி.மீ. தூரத்தில் உள்ளது.

முகவரி:
அருள்மிகு ரகுமாயி ஸமேத பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர் - 604 408. 
திருவண்ணாமலை மாவட்டம்.

Sunday, July 23, 2017

கண்ணன் கதைகள் (64) - திருமண அனுக்ரஹம்

கண்ணன் கதைகள் (64) - திருமண அனுக்ரஹம்
முன்னோரு சமயம் தெய்வ பக்தி நிரம்பிய ஓர் வைதீகர் இருந்தார். அவர் பெரிய சம்சாரி. மிகவும் ஏழ்மையில் இருந்த அவர், தன் பெண்ணிற்குத் திருமணம் செய்ய வேண்டுமே என்று மிகவும் கவலைப்பட்டார். ஜோதிடர்கள் அந்தப் பெண்ணிற்கு திருமணம் சற்று தாமதமாக நடக்கும் என்று கூறியதால் மிகுந்த கவலையுடன் இருந்தார்.

அவர் கவலையை அறிந்த அவர் நண்பர், அவரைத் தேற்றி, "நான் சொல்வது படி செய்யுங்கள், விரைவிலேயே திருமணம் நடக்கும். ஸ்ரீ குருவாயூரப்பனின் படத்தை வைத்து, தினமும் பூஜை செய்து, ஸ்ரீ நாராயணீயத்தைப் பாராயணம் செய்து வாருங்கள், உங்கள் பெண்ணுக்குத் திருமணம் நடக்கும். ஸ்ரீ நாராயணீயத்தைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கட்டாயம் அளிக்கும். தைரியமாக இருங்கள்" என்றார். அதன்படி வைதீகரும் தினந்தோறும் செய்து வந்தார். ஒரு வாரம் ஆயிற்று. ஒருநாள் பூஜை, பாராயணம் செய்துவிட்டு வந்தபோது அவரது நீண்ட நாள் நண்பர் தனது மனைவியுடன் அவர் வீட்டிற்கு வந்தார். க்ஷேமங்கள் பற்றி விசாரித்த அவர், உனக்கு ஒரு பெண் இருந்தாளே, அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்க, வைதீகரும் இன்னமும் ஆகவில்லை என்றார். உடனே நண்பர், தனக்குத் தெரிந்த ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பையன் இருப்பதாகவும், அவர்கள் வீட்டிற்குச் சென்று பேசி வரலாம் என்றும் கூறினார். உடனே வைதீகரும் மகிழ்ச்சியுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களைப் பார்த்துப் பேசி பெண் பார்க்க வர வேண்டும் என்று சொன்னார்கள். ஒரு நல்ல நாளில் அவர்கள் பெண் பார்க்க வந்து அன்றே நிச்சயதார்த்தமும் செய்து சென்றார்கள். வெளியூரில் இருந்த மகனுக்கு இந்த நல்ல விஷயத்தைப் பற்றிக் கடிதம் எழுதினார்.

வைதீகருக்கு இதில் மிகவும் மகிழ்ச்சி என்றாலும், கல்யாணத்திற்குச் சில நாட்களே இருந்த நிலையில், அதற்குத் தேவையான பணம் இல்லாததால் மிகுந்த கவலையுடன் குருவாயூரப்பன் படத்தின்முன் சென்று மனதார வேண்டினார். அப்போது வாசலில் தபால்காரர் வந்து ஒரு தபால் கொடுத்தார். அவர் மகனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. நீண்ட நாட்களாக அவனிடமிருந்து கடிதம் வராமல் இப்போது வந்ததில் ஆனந்தமடைந்து அதைப் படித்தார். அதில், “அப்பாவுக்கு அனேக நமஸ்காரம். உங்கள் கடிதம் கண்டேன். இத்துடன் தங்கையின் கல்யாணத்திற்காக நான் சேர்த்து வைத்திருந்த பணம் இருக்கிறது, அதை வைத்து வேண்டிய செலவுகளைச் செய்து கொள்ளுங்கள், நானும் புறப்பட்டு வந்து விடுகிறேன், கவலை வேண்டாம்" என்று எழுதியிருந்தான். பிறகு, குறிப்பிட்ட தேதியில் அவர் பெண்ணின் திருமணமும் நல்லவிதமாக நிறைவேறியது. வைதீகர், குருவாயூரப்பனின் திருவருளை நினைத்து ஆனந்தத்துடன் மெய்சிலிர்த்து குருவாயூரப்பனுக்கு நன்றி கூறி மிக மகிழ்ந்தார்.

Saturday, July 22, 2017

பூவிருந்தவல்லி - திருக்கச்சி நம்பிகள் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் / கண்ணுக்கினியன கண்டோம் - 30

பூந்தமல்லி என்னும் பூவிருந்தவல்லி, சென்னையில் இருந்து மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . இங்கு அமைந்துள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருக்கச்சி நம்பிகளுக்காக, வரதராஜரும் , ரங்கநாதரும், திருவேங்கடத்தானும் ஒரே இடத்தில் எழுந்தருளிய திருத்தலமாகும். 
புஷ்பபுரி க்ஷேத்ரம். ஐந்து நிலை ராஜகோபுரம். ஸ்வேதராஜ புஷ்கரிணி. ஸ்ரீதேவி பூதேவி ஸமேத வரதராஜப் பெருமாள். தாயார் ஸ்ரீ புஷ்பவல்லி. இந்த தலத்தில் பெருமாள் வரதராஜ பெருமாள் என்ற திருநாமத்துடனேயே எழுந்தருளியுள்ளார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸமேதராக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இங்குள்ள வரதராஜப்பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின்தலையில் சூரியனுடன் சேவை சாதிக்கிறார். தாயார் புஷ்பவல்லி என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். தாயார் மல்லிகைப் பூவில் இருந்து தோன்றியதால், பூவிருந்தவல்லி என்ற பெயர் இந்த ஸ்தலத்திற்கு ஏற்பட்டதாம். தனிக் கோயில் நாச்சியார். தலவிருக்ஷம் மல்லிவனம். திருக்கச்சி நம்பிகள் இங்கு நந்தவனம் அமைத்து மலர் தொண்டு செய்ததால், புஷ்பமங்கலம் என்றும், தற்போது பூவிருந்தவல்லி என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள். ஸ்ரீனிவாச பெருமாளும் ஆண்டாளும் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். அருகிலேயே கோசாலை அமைந்துள்ளது. ஒய்யாளி மண்டபமும் உள்ளது. அதில் அழகான ஓவியங்கள் உள்ளது. இத்தலத்தில் அரச மரம், வேப்பமரமும் பின்னிப் பிணைந்த பீடம் உள்ளது. அதில் நாகரும், அருகில் காளிங்க நர்த்தன கிருஷ்ணன் சன்னிதியும் உள்ளது. இந்தக் கிருஷ்ணனை அஷ்டமி தினங்களில் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நாக தோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கை. திருக்கோயிலின் உள்ளே ரங்கநாதருக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் தனிச் சன்னிதி இருக்கிறது. ஆஞ்சநேயர் கைகூப்பிய வண்ணம் சிறிய கற்சன்னதியில் தரிசனம் தருகிறார். பெருமாளை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். 


திருக்கச்சி நம்பிகள் வைசிய குலத்தைச் சேர்ந்தவர். வீரராகவர், கமலாயர் தம்பதிகளுக்கு நான்காவதாக பிறந்தவர் கஜேந்திரதாசர். இவர்தான் பிற்காலத்தில் திருக்கச்சி நம்பிகள் என்று பெயர் பெற்றார். திருமாலின் மீது பக்தி கொண்டவராய் வளர்ந்து வந்தார். இவர் தந்தை தன் பிள்ளைகள் நால்வருக்கும் தனது ஆஸ்தியைப் பங்கிட்டுக் கொடுத்தார். முதல் மூன்று பிள்ளைகளும் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டு வாழ்ந்தனர். கஜேந்திரதாசர் மட்டும் செல்வத்தைப் பற்றி எண்ணாமல் திருமாலுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே காலத்தைக் கழித்தார். தந்தையார் அது பற்றிக் கேட்டபோது,"கலங்காப் பெருநகரில் சேகரித்து வைத்தேன்" என்றார். அதாவது பரமபதத்தில் மறுமை செல்வம் சேர்த்து வைத்தார் என்று பொருள். பரம்பொருளின் திருவடி கைங்கர்யத்திலேயே எண்ணம் கொண்டவராக விளங்கினார்.

பூவிருந்தவல்லியில் தந்தை கொடுத்த நிலத்தில் நந்தவனம் அமைத்தார். பலவித பூச்செடிகளை நட்டு வளர்த்து வந்தார். அங்கு பூக்கும் பூக்களைப் பறித்து மாலையாக்கி, பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு நடந்தே சென்று வரதராஜருக்கு மாலை அணிவித்து அழகு பார்த்தார். இவர் காஞ்சி வரதருக்கு ஆலவட்டக் கைங்கர்யம் தவறாது செய்து வந்தார். இவரது கைங்கர்யத்தில் மகிழ்ந்த வரதராஜ பெருமாள், தன்னுடன் நேரில் பேசும் பாக்கியத்தை நம்பிகளுக்குத் தந்தருளினார். எவருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம் கிடைத்ததில் நம்பிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

நம்பிகளுக்கு வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் தளர்ச்சியினால், காஞ்சிபுரம் சென்று வரதராஜ பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் கவலையுற்றார். அப்போது வரதராஜ பெருமாள், அவர்முன் காட்சி தந்து அருள்புரிந்தார். அப்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதரும், திருமலை வேங்கடத்தானும் காட்சி கொடுத்து, பூவிருந்தவல்லியில் நிரந்தரமாக எழுந்தருளி நித்திய சேவை சாதிப்பதாக அருளினார்கள்.

உற்சவங்கள்/ திருவிழா: ஒவ்வொரு பெருமாளுக்கும் தனிதனி பிரம்மோற்சவம், விசேஷ திருமஞ்சனங்கள், வைகுண்ட ஏகாதசி, திருக்கச்சிநம்பியின் அவதார விழா

கோயில் திறந்திருக்கும் நேரம்: 6.30 am - 4.30 pm - 8.30 pm. திருவிழாக் காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டது

பேருந்து: சென்னையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

முகவரி:
அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில்
பூந்தமல்லி, 

சென்னை - 56

Friday, July 21, 2017

ஆவணியாபுரம் - ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 29ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 
திருமண தடை நீக்கும் நவ நரசிம்மர்

ஆரணியிலிருந்து 15 கி.மீ, வந்தவாசியிலிருந்து 30 கி.மீ , சேத்துப்பட்டிலிருந்து 15 கி.மீ, செய்யாறிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது.

தட்சிண சிம்மாசலம் என்றும் தட்சிண அகோபிலம் என்றும் சொல்லப்படும் இந்த நவநரசிம்ம ஸ்தலம் சிறிய மலைமேல் உள்ளது. சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றும் பின்னர் மருவி ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். 

சிறிய பர்வதம். மலை சிங்கத்தைப் போன்று கம்பீரமாக இருக்கின்றது.   மலை ஏறும் வழியில் நிறைய குரங்குகள் இருக்கின்றன. அதில் ஒரு குரங்கு குழாயைத் திறந்து தண்ணீர் அருந்தும் காட்சியை ரசித்துக் கொண்டே ஏறினோம். 
ஆவணியாபுரம் பஞ்ச திருப்பதி என பக்தர்களால் போற்றப்படுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி, திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், சோளிங்கர் யோக நரசிம்மர், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் ஆகிய ஐந்து மூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். 

சன்னதிகள் மலையின் இருநிலைகளாக அமைந்துள்ளன. மலை உச்சியில் ஸ்ரீ ரங்கநாதரும்,  ஸ்ரீ வெங்கடாஜலபதியும், ஸ்ரீ வரதராஜபெருமாளும், ஸ்ரீ யோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர். கீழே குகை போன்ற கர்ப்பக்ருஹத்தில் ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது இடதுபுறம் எழுந்தருளி உள்ள தாயாருக்கும் சிம்மமுகம். உற்சவர் நின்ற திருக்கோலத்தில் சிம்ம முகத்துடன் சேவை சாதிக்கிறார். சன்னதியின் எதிரில் எழுந்தருளியுள்ள கருடாழ்வாருக்கும் சிம்ம முகம். இச்சிறப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காதது. நவநரசிம்மரை சேவித்த பலனை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெறுகின்றனர். லட்சுமி நரசிம்மர் கர்ப்பக்ருஹத்தில் மூன்று நரசிம்மரும், தாயார் சன்னதி அருகே பஞ்ச நரசிம்மரும்,  மலை உச்சியில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மர் என்று நவ நரசிம்மராக சேவை சாதிக்கிறார். கீழ்மலையில் உள்ள சன்னதியின் மேற்கு திசையில், வில் ஏந்திய நிலையில் வீர ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.
கீழ்மலையில், லட்சுமி நரசிம்மர் சன்னதியும், அலர்மேல்மங்கை தாயாருக்கு தனி சன்னதியும், தாயார் சன்னதி அருகே பஞ்சநரசிம்மர் சன்னதியும், அழகிய கண்ணாடி அறையில் உற்சவ மூர்த்திகளும் காட்சியளிக்கின்றனர். மேல் மலையில், வெங்கடாசலபதி பெருமாளுக்கு தனி சன்னதியும், ரங்கநாதர், வரதராஜர், யோக நரசிம்மர்,  அமிர்தவல்லி தாயார் சன்னதியும் உள்ளது. 

பக்தர்கள், திருமண தடை நீங்கவும், புத்திர பாக்கியம் பெறவும் நவநரசிம்மரை வழிபட்டுப் பிரார்த்திக்கின்றனர். அவ்வாறு குழந்தைப்பேறு பெற்ற பக்தர்கள் துலாபாரம் செலுத்துகின்றனர். பக்தர்கள் தங்களின் நிலத்தில் பயிரிட்ட தானியங்களின் முதல் அறுவடையினை லட்சுமி நரசிம்மருக்கு நேர்த்திக் கடனாக சமர்ப்பிக்கின்றனர். இப்பெருமாளின் சன்னதியில் நெய்தீபமேற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை.   

உற்சவங்கள்/ திருவிழா: திருக்கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம், மாதந்தோறும் சுவாதி நட்சத்திர தினத்தில் ஊஞ்சல் உற்சவம், நரசிம்ம ஜெயந்தி, விசேஷ திருமஞ்சனங்கள், வைகுண்ட ஏகாதசி

கோயில் திறந்திருக்கும் நேரம்: 6AM–12 PM; 3–8 PM

பேருந்து: சேத்துப்பட்டு, செய்யாறு, ஆரணி, வந்தவாசி முதலிய  இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. 

முகவரி:
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்
ஆவணியாபுரம், திருவண்ணாமலை-604504.

Thursday, July 20, 2017

கண்ணன் கதைகள் (63) - எது மதுரம்?

ஓர் ஊரில் ஒரு வயதான நம்பூதிரிப் பெண் இருந்தாள். அவள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று குருவாயூர் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பகவானுக்கு திரிமதுரம் சமர்ப்பிப்பது வழக்கம். ஒரு சமயம் அவள் கால்கள் வீங்கி வலியும் வேதனையும் இருந்ததால் அவளால் செல்ல முடியாமல் இருந்தது. மேலும் மாதக் கடைசியானதால் அவளிடம் அதற்கான பணமும் இருக்கவில்லை. அதனால் பஸ்ஸிலும் செல்ல முடியாது, திரிமதுரம் சமர்ப்பிக்கவும் முடியாது. அடுத்த நாள் முதல் தேதி. தன்னால் செல்ல முடியாததை நினைத்து அவள் மிகவும் வருந்தினாள். 

தனது விதியை நொந்து தனது சினேகிதியிடம் சொல்லிவிட்டு படுக்கச் சென்றாள். படுக்கும்போது பகவானின் நாமங்களைச் சொல்லிக் கொண்டே தூங்கிவிட்டாள். அப்போது அவளுக்கு ஓர் கனவு வந்தது. சொப்பனத்தில் குருவாயூரப்பன் அவள் முன்பு தோன்றி, “உன்னுடைய பையில் செலவுக்குப் பணம் இருக்கிறது. நீ வழக்கம்போல் குருவாயூருக்கு வரலாம். திரிமதுரம் எனக்குப் பிடிக்கும். ஆனால், என் பக்தர்கள் எனது நாமத்தை ஜபிப்பதைக் கேட்பது அவர்கள் அளிக்கும் நெய்வேத்தியத்தைவிட மதுரமானது” என்று கூறி மறைந்தார்.   கனவு கலைந்து பகவானின் அருளை நினைத்து மிகவும் மகிழ்ந்தாள். காலையில் அவளது கால் வீக்கமும் வடிந்திருந்தது. சந்தோஷத்தோடு, எந்தவித சிரமமும் இல்லாமல் குருவாயூர் சென்று தரிசனம் செய்தாள்.

பகவானிடம், அவன் நாமங்களைத் தொடர்ந்து சொல்வதையே வரமாகக் கேட்டாள். பகவானுடைய திருவருளை நினைத்து, தனது அன்புக்குரலுக்கு ஓடோடி வந்ததையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.  

Wednesday, July 19, 2017

கண்ணன் கதைகள் (62) - மீனவன்

குருவாயூரில் இருந்த ஒரு வியாபாரியின் மகன் கல்லூரியில் படித்து வந்தான். வாலிபனாக இருப்பினும் தீவிர பக்தனாக இருந்தான். நாள்தோறும் பகவானின் நாமஜபம் செய்து வந்தான். ஓய்வு நேரத்தில் பாகவதம் படிப்பான். ஒரு நாள் எட்டமனூரில் இருந்த தன் சகோதரிக்குத் துணையாக எட்டமனூரில் இருந்து குருவாயூர் சென்றான். படகுப் பயணம். பொதுவாக படகுப் பயணம் பச்சைப்பசேலென்ற மனதைக் கொள்ளைக் கொள்ளும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு செல்வதால் மிகவும் உல்லாசமாக இருக்கும். அன்று வானம் இருண்டிருந்தது. ஒரே புயல் காற்று வேறு. அவர்கள் சென்ற படகில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. படகு தண்ணீரில் மூழ்கிவிடும் அபாயம் அதிகரித்தது. இந்தப்பையனும் அவன் சகோதரியும் விடாது நாமஜபம் செய்தார்கள். 

அந்தப் படகு நீரில் சிறிது சிறிதாக மூழ்கிக் கொண்டிருந்தது. படகிலிருந்த அனைவரும் பீதியடைந்து கூச்சலிட்டார்கள். இவர்கள் இருவரும் நாமஜபம் செய்வதை நிறுத்தவே இல்லை. அப்போது யாரோ அவர்களை இழுத்துத் தண்ணீரில் வீசி எறிவதைப் போல் உணர்ந்தார்கள். அவர்கள் சுயநினைவு தப்பியது. சுயநினைவுக்கு வந்தபோது கரையில் பாதுகாப்பான இடத்தில் இருப்பதை அறிந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்த மக்கள், அந்தப் படகு மூழ்கியதைப் பற்றியும், அதிலிருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும், இவர்கள் இருவரை மட்டும் ஒரு மீனவன் காப்பாற்றியதாகவும் சொன்னார்கள்.

அன்றிரவு பகவான் அவர்கள் கனவில் தோன்றி, "மீனவனாக வந்து உங்களைக் காப்பாற்றியது நான்தான்" என்று திருவாய் மலர்ந்தருளினார். பகவான் ஸ்ரீஹரியை எப்போதும் நினைவில் கொண்டு ஜபிப்பவர்கள் எப்பேற்பட்ட ஆபத்திலிருந்தும் காப்பாற்றப்படுவார்கள் என்று அவன் பாகவதத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. அவன் பகவானுக்கு நன்றி செலுத்தி மேலும் சிறந்த பக்தனாக விளங்கினான்.

Tuesday, July 18, 2017

கண்ணன் கதைகள் (61) - சீசாவயதான நம்பூதிரிப் பெண் ஒருத்தி தனியே வசித்து வந்தாள். அவள் பலகாலமாகத் தாங்க முடியாத தலைவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தாள். பல சிகிச்சைகள் செய்தும் அவள் தலைவலி குணமாகவில்லை. அவள் எப்போதும் குருவாயூரப்பனையே தியானித்துத் தலைவலி சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருப்பாள்.

ஒரு நாள் இரவு நேரம். அவளுக்குத் தலைவலி  மிகவும் அதிகமாக இருந்தது. துணைக்கு வேறு யாரும் இல்லை. காற்றாட திண்ணையில் அமர்ந்திருந்தாள். அப்போது ஏழு  அல்லது எட்டு வயதுள்ள சிறுவன் ஒருவன் அங்கு வந்தான்.  சிறுவன் அவளிடம் வந்து, "நீ எப்போதும் குருவாயூரப்பா, குருவாயூரப்பா  என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே, அப்படி இருந்தும் உனக்கு இந்தத் தலைவலி ஏன் போகவில்லை தெரியுமா?  நீ உன்னுடைய முன் ஜென்மத்தில் உன் குடும்பத்தில் இருந்த பெரியவர்களை மிகவும் மனம் நோகச் செய்தாய். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறாய்" என்று கூறினான். மேலும், அந்த சிறுவன், நான் ஒரு சீசாவில் தைலம் தருகிறேன், அதைத் தடவிக் கொள் என்று கூறி ஒரு சீசாவைக் கொடுத்தான்.

தைலத்தின் பெயரைப் பார்க்கலாம் என்று பார்த்தபோது, அதன் மேலிருந்த காகிதத்தில் முகவரி, குருவாயூர் கிழக்கே நடை என்று இருந்தது. அந்தத் தைலத்தை எடுத்து மூன்று முறை தலையில் தடவுவதற்குள் அவள் தலைவலி குணமாகியிருந்தது. தைலத்திற்குப் பணம் கொடுக்கலாம் என்று அந்த சிறுவனைத் தேடினாள். சிறுவனைக் காணவில்லை. அவனை அவள் அந்த ஊரில் இதுவரை பார்த்ததே இல்லை. சாக்ஷாத் குருவாயூரப்பனே சிறுவன் வடிவில் வந்து தன் தலைவலியைப் போக்கியதை உணர்ந்து மெய்சிலிர்த்தாள்.  இதுபோன்ற பல அற்புதங்கள் இன்றும் நடக்கிறது. கண்ணனை நம்பினோர் கைவிடப்பட்டுவதில்லை.