Sunday, August 20, 2017

கண்ணன் கதைகள் (77) - பக்த கமலாகர்

பண்டரீபுரத்தில் கமலாகர் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். நற்பண்புகளுடன் சிறந்த அறிவாளியாக இருந்தார். சிறந்த பக்திமான். அவரது மனைவி சுமதியும் மிகுந்த குணவதி. கணவனைப் போலவே நற்பண்புகளும், பக்தியும் உள்ளவள். அவர்களுக்கு பத்மாகர் என்ற ஐந்து வயது மகன் இருந்தான். 

அவர்கள் இருவரும் தினந்தோறும் சந்த்ரபாகா நதியில் குளித்து, பகவானை
ப்ரார்த்தித்து, தங்கள் சக்திக்குத் தகுந்தபடி பக்தர்களுக்கு உணவு வழங்கி, பிறகு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள், அவ்வாறு குளித்துவிட்டு வரும் வழியில், நாமதேவர் என்ற மகானையும், அவருடன் சில சாதுக்களையும் கண்டனர். தங்கள் இல்லத்தில் உணவருந்துமாறு அவர்களை அழைத்தனர். ஆனால், நாமதேவர் கமலாகரிடம், 'இவ்வளவு பேருக்கு உணவிடுவது உனக்கு சிரமமாக இருக்கும், எங்கள் ஆசீர்வாதம் உனக்கு என்றும் உண்டு, கவலைப்படாதே' என்று கூறினார். கமலாகரோ, 'விட்டலனும், தாயார் ருக்மிணியும் இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை? தயவு செய்து வீட்டிற்கு வந்து உணவருந்துங்கள்' என்று கூறினார். 'சரி, நீங்கள் செல்லுங்கள், நாங்கள் நீராடிவிட்டு வருகிறோம்' என்று நாமதேவர் சொல்லி நீராடச் சென்றார்.

கமலாகர், மனைவியிடம் உணவு தயாரிக்கச் சொன்னார். சுமதி, அக்கம்பக்கத்தாரிடம் பொருட்களைக் கடனாக வாங்கி சமையல் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள். அப்போது விறகு தீர்ந்துவிட்டது. அதனால், கொல்லைப்புறத்தில் உள்ள சுள்ளி
களை எடுத்து வரும்படி தனது ஐந்து வயது மகனை அனுப்பினாள்.

சிறுவன் பத்மாகர் சுள்ளிகளை எடுக்கும்போது, அதனடியில் இருந்த பாம்பு அவனைத் தீண்டியது. சில நிமிடங்களில் அந்தக் குழந்தை இறந்தது. சுமதி அழுதாள். ஆனால், சாதுக்களுக்கு அன்னமிடுவது பாதிக்க
க்கூடாது என்று நினைத்து, அழுகையை அடக்கி, மனம் இறுகியவளாய், குழந்தையை வீட்டின் ஒரு மூலையில் கொண்டு வந்து கிடத்திவிட்டு, மீண்டும் குளித்து சமைக்க ஆரம்பித்தாள். 

சாதுக்கள் வந்ததும், கமலாகர் அவர்களை உபசாரம் செய்
, உணவு பரிமாறினார்கள். நாமதேவர், ஏதோ ஒரு வித இறுக்கமான அமைதியை உணர்ந்தார். பின்னர் அவர், உன் குழந்தையைக் கூப்பிடு, அவனுடன் சேர்ந்து உண்கிறோம் என்றார். சுமதி, 'ஸ்வாமி, அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான், இப்போதுதான் சாப்பிட்டான்' என்றாள். குழந்தையை எழுப்பி அழைத்து வா என்றார். அவள், எவ்வளவு எழுப்பியும் எழுந்திருக்கவில்லை என்றாள். நாமதேவரோ, குழந்தை வராமல் நாங்கள் உண்ணமாட்டோம் என்று சொல்ல, சுமதி செய்வதறியாது வேறு வழியில்லாமல் உண்மையைச் சொன்னாள். 

நாமதேவர், விட்டலா, இது என்ன சோதனை? அந்தக் குழந்தை எழுந்து வராமல், நாங்கள் உன் பிரசாதத்தை உண்ணமாட்டோம். உன் பக்தனை இவ்வாறு சோதிப்பாயா? என்று பாண்டுரங்கனிடம் பிரார்த்திக்க, குழந்தை தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல் விழித்து எழுந்து ஓடி வந்தது. சுமதியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. குழந்தையை ஆரத் தழுவினாள். நாமதேவரை வணங்கினாள். குழந்தையுடன் சேர்ந்து சாதுக்கள் அனைவரும் உணவு உண்டார்கள். சாதுக்களும், நாமதேவரும் அவர்களை ஆசீர்வதித்து, குழந்தைக்கு 'க்ருஷ்ண மந்த்ரம்' உபதேசம் செய்து சென்றனர்.

ஒரு நாள் விட்டலன், வயதான ப்ராம்மண வேடம் பூண்டு, சுமதியிடம், எனக்குப் பசிக்கிறது, ஏதாவது கொடு என்றான். அவளும் பொருட்களை இரவல் வாங்கி சமைத்து, அவருக்கு உணவளித்தாள்.

வெளியே சென்றிருந்த கமலாகர் வீடு திரும்பியதும், கிழவனாக வந்த விட்டலனுக்குக் கால் அமுக்கிவிட, அவர்கள் மகன் விசிறினான். சுமதி உணவு உண்ண அழைத்தும்கூட, கமலாகர் செல்லவில்லை. பசியைப் பொருட்படுத்தாமல் கிழவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தார். 'யோக நித்திரையில்' இருந்து வெகு நேரம் கழித்துக் கண்விழித்த கிழவர், நீ போய் சாப்பிடு என்றதும் அனைவரும் உண்டனர். அப்போது கிழவர் விட்டலனாக தரிசனம் கொடுத்து, 'உன் பணிவிடையில் மகிழ்ந்தேன்' என்று திருவாய் மலர்ந்தருளினார். 'எப்போதும் உங்கள் மனதில் நீக்கமற நிலைத்திருப்பேன்' என்றும் வரமருளினார்.

கமலாகர், தன் மனைவி, மகனுடன் பகவானை எப்போதும் துதித்தபடி சந்தோஷமாக நாட்களைக் கழித்தார்.

கண்ணன் கதைகள் (76) - வானரதம்

கிருஷ்ண பக்தரான பூந்தானம் செய்யும் பாகவத உபன்யாசங்களை மக்கள் மிகவும் நேசித்தார்கள். கேரளாவில் உள்ள கொட்டியூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவில் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். பூந்தானம் கொட்டியூர் சென்று அங்குள்ள குளத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு மிகுந்த சந்தோஷத்துடன் அங்கேயே சில நாட்கள் தங்கினார்.

தினசரி கோவிலில் சிவன் முன்னால் பாகவத ப்ரவசனம் செய்தார்.
நூற்றுக்கணக்கான மக்கள் அவருடைய இனிமையான பிரவசனத்தைக் கேட்டார்கள்.

ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணர் விளையாட்டாக ருக்மிணியிடம், சிசுபாலன், ஜராசந்தன், சால்வன் போன்றோர் இருக்கும்போது என்னை ஏன் திருமணம் செய்தாய் என்று பரிஹாஸமாகப் பேச, ருக்மிணி மயங்கி விழ, பின்னர் கிருஷ்ணர் சமாதானம் செய்வதைக் கூறும் ஸர்க்கம்.

பூந்தானம் இந்தப் பகுதியை வாசித்து முடித்து, அடுத்த நாள் தொடர்வதற்கு வசதியாய் அந்த அத்தியாயத்தின் முடிவில் அடையாளம் வைத்தார். ஆச்சர்யப்படும் வகையில் அடுத்த நாள் அவர் வைத்த அடையாளம் அந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் இருந்தது. அதனால் மறுபடியும் அந்த ஸர்க்கத்தையே வாசித்தார். மீண்டும் சில நாட்களுக்கு இவ்வாறு தொடர்ந்து நடந்தது. கோவிலை மூட வேண்டிய நாள் வந்தது. பூந்தானம் பிரவசனத்தை முடித்து, வீட்டிற்குத் திரும்பும் வழியில் பாகவத புத்தகத்தைக் கோவிலிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார். அதை எடுக்க மீண்டும் கோவிலுக்குச் சென்றார். ஆனால் நடை சாத்திவிட்டார்கள். யாருமே அருகில் இல்லை.

அவர் ப்ரவசனம் செய்த பாகவத அத்தியாயத்தின் அதே பகுதியை யாரோ கோவிலின் உள்ளிருந்து சொல்வதைக் கேட்க முடிந்தது. சாவி த்வாரத்தின் வழியே உள்ளே பார்த்தார். அங்கே அவர் கண்ட காட்சி!!! பரமசிவனே அதைப் படித்துக் கொண்டிருந்தார். பார்வதிதேவியும், பூதகணங்களும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பூந்தானம் அசையாமல் அதைக் கேட்டார். கடைசியில் சிவன் பார்வதியிடம், நான் படித்த இந்த பாகவத ஸர்க்கம் உனக்குப் பிடித்ததா? என்று கேட்க, பார்வதி, “ நன்றாக இருந்தது, ஆனால் பூந்தானம் சொன்னதைப்போல் இல்லை” என்று கூறினாள். சிவனும், உண்மைதான் நானும் பூந்தானம் சொல்வதையே கேட்க ஆசைப்படுகிறேன். அதனால்தான், தினமும் அவர் வைத்த அடையாளத்தை இந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் வைத்தேன் என்று கூறினார்.

வெளியே நின்றுகொண்டிருந்த பூந்தானம் இதைக் கேட்டவுடன் மெய்சிலிர்த்து, க்ருஷ்ணா, க்ருஷ்ணா என்று உரக்கக் கூறினார். அவர் மீண்டும் பார்த்தபோது, சிவபெருமானும் பார்வதியும் மறைந்து விட்டனர். பாகவதத்தை ஏனைய தெய்வங்களும் நேசிக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.

இவ்வாறு பாகவத பாராயணத்திலும், கிருஷ்ண நாமத்திலும் பூந்தானத்தின் காலம் ஓடியது. பூந்தானத்திற்கு வயதாகியது. ஒரு நாள் கிருஷ்ணன் பூந்தானத்தை ‘என்னிடம் வா’ என்று அழைத்தார். மிகுந்த சந்தோஷமடைந்த பூந்தானம், வீட்டில் உள்ளவர்களிடம், நாளை விஷ்ணுதூதர்கள் நம் இல்லத்திற்கு வருகிறார்கள். வீட்டை நன்கு அலங்கரியுங்கள்; யாரெல்லாம் கிருஷ்ணனைக் காண வருகிறீர்கள் என்று கேட்டார். எப்போதும் கிருஷ்ணனை நினைத்து அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவரது வீட்டாரும், அவ்வூர் மக்களும் நினைத்தார்கள். அடுத்த நாள் வானரதம் வருவதைக் கண்ட அவர், மனைவியிடம் சீக்கிரம் வா, நாம் செல்லலாம் என்று கூறினார். அவர் மனைவிக்கு சமையற்கட்டில் வேலை இருந்ததால் உள்ளே சென்றுவிட்டாள். அப்போது, அவர் வீட்டில் வேலைசெய்த ஒரு பெண், நான் வருகிறேன், என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று வேண்டினாள். பூந்தானமும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டார். வேலை முடிந்து அவர் மனைவி வந்து பார்த்தபோது வேலைசெய்த அந்தப் பெண்மணி இறந்திருந்தாள். பூந்தானத்தைக் காணவில்லை; பூந்தானம் கிருஷ்ணனோடு ஐக்கியமாகிவிட்டார்.

ஓம் நமோ நாராயணாய!

Saturday, August 19, 2017

கண்ணன் கதைகள் (75) - வாழைக்கு மோக்ஷம்

குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர். மலையாள மொழியில் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லும் ஞானப்பான என்னும் பாடல்களை எழுதியவர் பூந்தானம். சிறந்த கவிஞர். பாகவத பாராயணம், ப்ரவசனம் செய்து கொண்டே இருப்பார்.

சென்ற பதிவில் பூந்தானத்தின் சோகம் எப்படி ஸ்லோகமானது, ஞானப்பான எப்படி உருவானது என்பது பற்றிப் பார்த்தோம். அவர் வாழ்வில் நடந்த அதிசயமான மற்றொரு சம்பவம் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஒருநாள் பூந்தானம் உறங்கும்போது, அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில், வானரதம் வருகிறது. விஷ்ணுதூதர்கள் இருவர் வந்து அவரை வைகுண்டத்திற்கு அழைக்கிறார்கள். அவர் அவர்களை வரவேற்று ரதத்தில் ஏறுகிறார். ரதம் பல உலகங்களைக் கடந்து, வைகுண்டத்தை அடைகிறது. அங்கு பக்தி யோகத்தால் பகவானை அடைந்த பலரைப் பார்க்கிறார். வைகுண்டத்தின் வாயிலை அடைந்ததும், இருவர் அவரை வரவேற்று வணங்குகின்றனர். வைகுண்டத்தில் இருக்கும் நீங்கள் பூஜிக்கப்பட வேண்டியவர்கள், என்னை வணங்குகிறீர்களே, நானல்லவோ உங்களை வணங்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்கிறார். அப்போது அவ்விருவரும், நாங்கள் முந்தைய ஜென்மத்தில் உங்கள் வீட்டில் இரண்டு வாழை மரங்களாக இருந்தோம். தினமும் உங்கள் பாகவத பாராயணம் கேட்டு, அப்புண்ணியத்தின் பலனாக, இந்த உன்னதமான நிலையை அடைந்துள்ளோம், அதனால் நீங்களே எங்கள் குரு, அதனால் வணங்கினோம் என்று கூறினார்கள். 


இதைக் கேட்டதும், பூந்தானத்தின் கனவு கலைந்தது. தூக்கத்திலிருந்து விழித்தார். வீட்டின் வெளியே சென்று பார்க்கும்போது அங்கே இருந்த இரண்டு வாழைமரங்கள் கீழே விழுந்திருந்தன. பகவன் நாமத்தை கேட்பதால் உண்டாகும் பலனைக் கண்கூடாகக் கண்ட பூந்தானம், முன்னிலும் தீவிரமாக, பகவானை வணங்கி அவன் நாமத்தைப் பாடிப் பரப்பினார்.

Friday, August 18, 2017

கண்ணன் கதைகள் (74) - ஞானப்பான

கேரளாவிலுள்ள மலப்புரத்தில் கீழாத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர் பூந்தானம் நம்பூதிரி. பூந்தானம் என்பது அவர்கள் இல்லத்தின் பெயர். இல்லப்பெயரே அவரது பெயராக  நிலைத்துவிட்டது. சிறந்த பக்திமான். குருவாயூரப்பனிடம் மிகுந்த பக்தி கொண்டவர். மலையாளத்தில் பல ஸ்லோகங்கள் கண்ணன் மீது எழுதியுள்ளார். 

சரி, அதென்ன ஞானப்பான? மேலே படியுங்கள்.

பூந்தானத்திற்குத் தன் மடியில் கொஞ்சி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று குறை. குருவாயூரப்பனிடம் பிரார்த்திக்க, நீண்ட காலம் கழித்து அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்குப் பரம சந்தோஷம். நாமகரணம் செய்தார். குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனபோது அன்னப்ராசனம் செய்ய முஹூர்த்தம் குறித்து, உறவினர்களை எல்லாம் அழைத்திருந்தார். அன்னப்ராசன தினத்தன்று, வீட்டில் உள்ள எல்லாரும் சீக்கிரமே எழுந்துவிட்டனர். அவர் மனைவி, குழந்தையை நீராட்டி, புதுத் துணிகள் உடுத்தி விட்டு, அலங்கரித்து, தாய்ப்பால் கொடுத்துவிட்டு, குழந்தையை ஒரு துணியில் சுற்றித் தூங்க வைத்தாள். குழந்தை உறங்க ஆரம்பித்ததும் உறவினர்களை வரவேற்கச் சென்றாள்.

கேரளத்தில், மிகவும் மடியாக இருக்கும் பெண்கள் கையில் தாழங்குடையையையும், மேலே வெள்ளைத்துணியையும் போர்த்தியிருப்பார்கள். வந்திருந்த பெண்களில் ஒருவர், தான் போர்த்தியிருந்த துணியை, குழந்தை இருப்பதை அறியாமல் அதன்மேல் போட்டாள். பின்னால் வந்த அனைவரும் மேலே மேலே துணிகளைப் போட்டார்கள். அன்னப்ராசனம் நடக்கவேண்டிய நேரம் நெருங்கவே, குழந்தையை எடுத்து வர உள்ளே சென்று பார்த்த போது, குழந்தை மூச்சு முட்டி இறந்துவிட்டிருந்தது. நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தை இறந்ததைக் கண்ட  
பூந்தானத்தின் மனைவி  நிலைகுலைந்து போனாள். அழுது அரற்றினாள். கிருஷ்ணா ஏன் இப்படி? என்று கதறினார் பூந்தானம்.

அவரது சோகத்தைக் கண்ட குருவாயூரப்பன், "பூந்தானம் கவலைப் படாதே! இனி நானே உன் பிள்ளை, என்று கூறி அவர் மடியில் அமர்ந்து, உன் மடியில் படுத்துக் கொள்ளட்டுமா?" என்று கேட்டான். கண்ணனைத் தன் மடியில் கண்ட பூந்தானம், பரவசமடைந்து, "கண்ணனே என் மடியில் குழந்தையாகத் தவழும்போது, எனக்கென்று பிள்ளையும் வேண்டுமோ?" என்று பக்தியில் தன்னை மறந்தார். ‘ஞானப்பான’ என்ற தத்துவ முத்துக்கள் அவர் வாயிலிருந்து கவிதையாக வந்து விழுந்தது. சோகமே ஸ்லோகமானது. ‘ஞானப்பான’ எளிய மலையாள நடையில் உயர்ந்த தத்துவக் கருத்துகளைக் கொண்ட ஓர் காவியம். ஞானத்தைத் தரும் பானை அதாவது ஞானக் களஞ்சியம் என்றே சொல்லலாம். 
‘ஞானப்பானை' சாஸ்வதமற்ற வாழ்க்கையைப் பற்றிய ஓர் கவிதை.

மனிதப்பிறவியின் அர்த்தத்தை மிக அழகாய்ச் சொல்லும் இந்தக் கவிதையிலிருந்து சில துளிகள்:


"எத்ர ஜென்மம் மலத்தில் கழி
ஞ்தும் 
எத்ர ஜென்மம் ஜலத்தில் கழிஞ்தும் 
எத்ர ஜென்மங்ள் மண்ணில் கழிஞ்தும் 
எத்ர ஜென்மங்ள் மரங்ளாய் நின்னதும் 
எத்ர ஜென்மங்ள் மரிச்சு நடன்னதும் 
எத்ர ஜென்மங்ள் ம்ருகங்ள் பஷுக்களாய்"

மானிடப் பிறவி அரியது. முன்பு புழுவாய், பூச்சியாய், மிருகங்களாய், மரங்களாய், பல ஜன்மங்களை எடுத்து பின்னர் இப்போது கிடைத்திருக்கிறது இந்த மனிதப் பிறவி. குறுகிய காலம் மட்டுமே இருக்கும் இந்த வாழ்க்கையில் நாம் பகவானது திருநாமத்தை உச்சரிக்காமல் இருக்கின்றோமே? என்று ஆச்சர்யப்படுகிறார் பூந்தானம்.

"இன்னலேயோளம் எந்தென்னறிஞ்ஞிலா
இனி நாளேயும் எந்தென்னறிஞ்ஞிலா
இன்னீக்கண்ட தடிக்கு வினாசவும்
இன்ன நேரம் என்னேதுமறிஞ்ஞிலா"

நேற்று வரை என்ன நிகழ்ந்தது  என்று  அறியவில்லை, இனி நாளை என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை, இன்றிருக்கும் இந்த சரீரத்திற்கு அழிவு எந்த நேரத்தில் என்றும் அறிவதில்லை.

"நம்மெயொக்கேயும் பந்திச்ச ஸாதனம்
கர்மம் என்னறியேண்டது முன்பினால்
முன்னில் இக்கண்ட விஸ்வம் அசேஷவும்
ஒன்னாயுள்ளொரு ஜ்யோதிஸ்வரூபமாய்"

நம் அனைவரையும் இந்த உலகத்தில் கட்டி இருப்பது கர்மமே என்பதை அறிய வேண்டும். ப்ரளயத்தில் நாம் காணும் இந்த உலகமெல்லாம் ஒன்றேயான ஒரே ஜோதிஸ்வரூபத்தில் ஒடுங்குகின்றது.

க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்
யுதானந்த கோவிந்த மாதவா
சச்சிதானந்த நாராயணா ஹரே!!!

Thursday, August 17, 2017

கண்ணன் கதைகள் (73) - அரைஞாண்

பண்டரிபுரத்தில் நரஹரி என்ற பொற்கொல்லர் இருந்தார். தீவிரமான சிவபக்தர். அவருக்கு விட்டல நாமாவளியைக் கேட்கக் கூடப் பிடிக்காது, கேட்டால் காதுகளைப் பொத்திக் கொள்வார். பாண்டுரங்க கோவில் இருக்கும் தெருவின் வழியே கூடப் போகமாட்டார்.

ஒரு சமயம், பாண்டுரங்கனின் பக்தனான வணிகர் ஒருவர், தனக்குக் குழந்தை பிறந்தால் பாண்டுரங்கனுக்கு நவரத்தினங்கள் இழைத்த அரைஞாணைக் காணிக்கையாகச் செலுத்துவதாக வேண்டிக்கொண்டார்.

ப்ரார்த்தனையும் பலித்தது. வேண்டிக்கொண்டபடியே அரைஞாண் செய்ய முடிவு செய்து, பொற்கொல்லரான நரஹரியைத் தேடி வந்தார். நரஹரி தம்மால் சிவனைத் தவிர பிற தெய்வங்களுக்குச் செய்ய முடியாது என்று சொல்ல, வணிகரோ, வேறு பொற்கொல்லர் இந்த ஊரில் இல்லை என்பதால் உம்மிடம் வந்தேன், தயவு பண்ணி செய்து கொடுங்கள் என்று கூறினார்.

நரஹரி, விக்ரஹத்தின் அளவு தந்தால் செய்து தருகிறேன் என்று சொல்ல, வணிகர் கோவிலுக்குச் சென்று, அளவை வாங்கிக் கொண்டு வந்து நரஹரியிடம் கொடுத்தார்.

நரஹரியும் மிக நேர்த்தியாக அரைஞாண் செய்து தர, மகிழ்ந்த வணிகர், அதைப் பெற்றுக் கொண்டு கோவிலில் கொடுத்தார். அதை விட்டலனுக்கு அணிவித்தபோது,  சில விரற்கடைகள் குறைவாக இருந்தது. மீண்டும் நரஹரியிடம் சென்று அ
ரைஞாணைக் கொடுத்து, சரிசெய்து தரச்சொல்ல, அவரும் சரி செய்து கொடுத்தார். இரண்டாம் முறை செய்து கொடுத்தது, விக்ரஹத்திற்குப் பெரிதாக இருந்தது. வணிகர் வருத்தத்துடன் நரஹரியிடம் சென்று, அவரையே கோவிலுக்கு வந்து விக்ரஹத்தை அளந்து கொள்ளுமாறு சொல்ல, நரஹரி ஒப்புக் கொள்ளவில்லை. வணிகர் கெஞ்சினார். கடைசியில், கண்ணைக் கட்டிக் கொண்டுதான் கோவிலுக்கு வருவேன் என்ற நிபந்தனையுடன் கோவிலுக்குச் சென்று அளவெடுக்க சம்மதித்தார். அவரது விஷ்ணு த்வேஷத்தைக் கண்ட வணிகர் வியந்து, நரஹரியின் கண்ணைக் கட்டி அழைத்துச் சென்று, பாண்டுரங்கனின் விக்ரஹத்தின் முன்னால் நிறுத்தினார்.

கண்களைக் கட்டிக் கொண்டிருந்த நரஹரி, அளவேடுக்கவேண்டி பாண்டுரங்கனின் இடுப்பைத் தடவ, அவர் கைகளுக்குப் புலித்தோலைத் தடவுவதுபோல் பட்டது. உடனே அவர், மற்ற அங்கங்களைத் தடவ, திரிசூலம், உடுக்கை, சடாமுடி, ருத்திராக்ஷம் என்று கைகளில் தட்டுப்பட்டது. அவர், சிவபெருமான் என்று நினைத்து, 
கண்கட்டை அவிழ்த்து, கண் திறந்து பார்த்தால், எதிரே சங்கு, சக்ரங்களுடன், பீதாம்பரதாரியாகப் பண்டரிநாதன் நின்றார். அதிர்ந்து, மீண்டும் கண்களைக் கட்டிக் கொண்டார். தடவிப் பார்த்தால், முன்போலவே சிவபெருமானுக்கு உரிய அனைத்தும் கைகளில் தட்டுப்பட்டது.

இப்போது நரஹரியின் அகக்கண் திறந்தது. ஹரனும் ஹரியும் ஒன்றே என்று உணர்ந்த அவர் விட்டலனை வணங்கித் தொழுது அழுதார். தனது அறியாமையை மன்னிக்க வேண்டினார். இப்போது அரைஞாணும் கனகச்சிதமாய்ப் பொருந்தியது.

எதிரே பாண்டுரங்கன் சிரித்தவாறு சேவை சாதிப்பதைக் கண்ட அவர், விட்டலனை நமஸ்கரித்தார். அதுமுதல் நரஹரி பாண்டுரங்க பக்தராகவும் விளங்கினார்.

Wednesday, August 16, 2017

கண்ணன் கதைகள் (72) - தெய்வ குற்றம்

குருவாயூரப்பனின் மகிமைகளை இக்கலியிலும் கண்கூடாகக் கண்டவர் பலர் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம் இது.

பக்தர் ஒருவரின் மகனுக்குத் திடீரென்று புத்தி ஸ்வாதீனமில்லாமல் போய்விட்டது. ஒருவருடனும் பேசாமல், கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் பித்துப் பிடித்தவன்போல் ஆகிவிட்டான். பல சிகிச்சைகள் செய்தும் சரியாகவில்லை. மிகுந்த கவலையடைந்த பக்தர், பகவானே கதி என்று, தனது மகனை அழைத்துக் கொண்டு குருவாயூர் சென்று, பல நாட்கள் சன்னதியிலேயே தங்கி, கைங்கர்யங்களும் செய்து வந்தார். தன் மகனை நினைத்து மிகுந்த கவலையுடன் இருந்தார்.

ஒரு நாள், குருவாயூரப்பன் அவரது கனவில் தோன்றி, 'உன் மகன் முன் ஜென்மத்தில் ஒரு குரங்கைக் கொன்று, ராமருக்கு அபசாரம் செய்ததால், தெய்வ குற்றம் உண்டானதால், இவ்வாறு உள்ளான். நீ அவனை திருப்பரையாறு அழைத்துச் சென்று, ராமரை சேவித்தால் அவன் குணமடைவான்' என்று கூறினார். உடனே, அவர் திருப்பரையாறு சென்றார். அங்கேயே தங்கி, தினமும் ராமரை சேவித்து வந்தார்.

இவ்வாறிருக்கையில், ஒரு நாள், அவர் ராமர் சன்னதியில் இருக்கும் போது, ஸ்ரீ ஹனுமார், கையில் சந்தனம், குங்குமம், துளசியுடன் அவர் மகனின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படியாகத் தோன்றி, 'இதை வாங்கிக் கொள்' என்று கூறினார். அந்த பக்தரின் கண்களுக்குத் தெரியவில்லை. அவர் மகன் அவரிடம், 'அப்பா, ஒரு குரங்கு சந்தனம், குங்குமம் கொடுக்கிறது, வாங்கிக் கொள்ளட்டுமா?' என்று கேட்டான். என்றுமில்லாமல் மகன் நன்றாகப் பேசுகிறானே என்று மகிழ்ந்த அவர், வாங்கிக் கொள் என்று கூறினார். பக்தரின் கண்களுக்குத் தெரியவில்லையே தவிர, மகனின் கையில் இப்போது பிரசாதங்கள் இருப்பது தெரிந்தது. பகவானின் அனுக்ரஹத்தையும், மகிமையையும் அறிந்த பக்தர் மனம் மகிழ்ந்து அப்பனுக்கு நன்றி கூறினார். அதுமுதல் அவர் மகன் நன்றாகப் பேச ஆரம்பித்து, சித்தமும் தெளிந்தது.

திருப்பரையாறு கோவிலில் அதிர்வெடி வழிபாடு ப்ரசித்தம். பிரச்சனைகள் தீர, அதிர்வெடி வழிபாடு செய்து மக்கள் தமது பிரச்சனைகள் தீரப் பெறுகிறார்கள். கேரளக் கோவில்களில் வெடி வழிபாடு நடைமுறை உண்டு.

இந்த வலைத்தளத்தில் அடியேன் பதிவேற்றியிருக்கும் அனேக குருவாயூரப்பன் கதைகள் என் பாட்டியும், அவரது சிநேகிதியுமான மற்றொருவரும் கூறக் கேட்டவைகளே.

Tuesday, August 15, 2017

கண்ணன் கதைகள் (71) - மாளாக் காதல்

சுமார் 42 வருடங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தில் நடந்த உண்மைச் சம்பவம்.

கோவைக்கு யார் வந்தாலும், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு அழைத்துச் செல்வது தாத்தாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி பல ஊர்களிலிருக்கும் வரும் உறவினர்களை மலம்புழா, குருவாயூர், ஆழியார் என்று கூட்டிக் கொண்டு போவார். செலவைப் பற்றி யோசனை பண்ண மாட்டார். வீட்டிலேயே கார் இருந்ததால் ரொம்பவே சௌகர்யமாக அனைவரையும் அழைத்துச் செல்லலாம். தாத்தாவுக்குப் பரந்த மனசு. இப்போது போல 5 பேர் கொள்ளும் காரில், ஐந்தாவதாக ஆள் வந்தாலே கஷ்டம் என்று நினைப்பவர் அல்ல. அம்பாசடர் கார். திடமான கார். காரிலும், தாத்தா மனசிலும் இடம் நிறைய உண்டு. புளிமூட்டை போல் ஆட்களை ஏற்றினால்தான் அவருக்குத் திருப்தியாக இருக்கும். அம்பாசடர் காரும் ஈடு கொடுக்கும்.

அதுபோல ஒரு சமயம், சுமார் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் கோவைக்கு ஒரு விடுமுறைக்கு வந்திருந்தார்கள். காரிலும் டாக்ஸியிலுமாக குருவாயூர் சென்றோம். தரிசனம் செய்தோம். காலை முடி இறக்கும் வேண்டுதல் இருந்ததால், முடி இறக்கி, மறுபடி தரிசனம் முடித்து, காலை 9 மணி அளவில் குருவாயூரிலிருந்து கிளம்பி மதிய உணவிற்குக் கோவை சென்று விடுவதாகத் திட்டம். ஆண்கள் பஸ்சில் பாலக்காடு சென்று விடுவதாகவும், பெண்களும் குழந்தைகளும் எங்கள் காரில் சென்று விடலாம் என்றும், பாலக்காடு அடைந்ததும் எல்லாரும் சந்தித்துவிட்டு கோவை புறப்படலாம் என்றும் முடிவு செய்தார்கள். அதன்படி ஆண்கள் பஸ்சில் செல்ல, காரில் பெண்களும், சிறியவர்களும்.

காரில் டிரைவரைத் தவிர்த்து முன் பக்கம் 2 பேர் மடியில் ஒரு குழந்தையுடன். பின்னால், பெரியவர்கள் 4 பேர், மடியில் 10-12 வயது குழந்தைகள். டிக்கியில் சாமான்கள். பயணம் ஆரம்பித்தது. வடக்கஞ்சேரி வழியைத் தேர்ந்தெடுத்தார் டிரைவர்.

நீண்டு வானளாவிய மரங்களை ரசித்துக்கொண்டு செல்லும் வயதில் நாங்கள் இல்லை. ஏதோ பாடல்கள், அரட்டைகள் என்று இருந்தது. பாடிக்கொண்டு செல்வதால் மனமும் உடலும் உற்சாகமாக இருந்திருக்கலாம்.

இருபுறமும் படுபாதாளம். உயரமான பகுதி, குறுகலான பாதை. எதிரேயோ, பின்னாலோ வண்டி வந்தால் பொறுமையாக ஓட்ட வேண்டும். மயிரிழை நகர்ந்தாலும் அதோகதிதான். டிரைவர் மிக நேர்த்தியாக ஓட்டிக் கொண்டிருந்தாலும், பெரியவர்கள் நிதானமாய் ஓட்டுங்கள் என்று கூறிக் கொண்டு வந்தனர். சரியான மழை. ரோடு வழுக்குப்பாறை போல இருந்ததால், மிக மெதுவாகவே கார் ஓட்டவேண்டும் என்பதால் டிரைவர் மிகக் கவனமாகவே ஓட்டினார். மழை மிகப் பலமாக இருந்தது. வானிலையும் பொழுதுக்குப் பொழுது மாறியது. கருமேகங்கள் கூடும். திடீரென்று சோவென்று மழை கொட்டும், சில சமயம் தூறலாக இருக்கும். இப்படியே அந்த மலைப்பாதையில் மெதுவான பயணமாக இருந்தது. மலைப்பாதை வளைந்து வளைந்து சென்றது. வளைவுகளில் கார் திரும்பும்போது சற்று பயமாக இருக்கும். இருப்பினும் நாங்கள் குழந்தைகளாக இருந்ததாலோ என்னவோ, சந்தோஷமாகவும், ஆசையாகவும், உற்சாகமாகவும் இருந்தது அந்தப் பயணம். மலைப் பகுதிகளில் பசுமை வழிந்தோடியது. எனக்கு இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் வயதில்லை. சில சிறிய ஊர் வரும் சமயங்களில் வயல்களும் அங்கங்கே வீடுகளும் தெரிந்தது.

இப்போது பள்ளத்தாக்கு ஏதும் இல்லை. சமவெளிப்பகுதி. சிறிது நேரத்தில் பாலக்காடு சென்றுவிடலாம், அங்கே பஸ் ஸ்டாண்டில் உள்ள குடும்பத்து ஆண்களைப் பார்த்த பிறகு, மீண்டும் கோவை செல்லலாம் எனப் பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். கார்க் கண்ணாடிகளைத் திறந்து வைத்தால், மழைச்சாரல் உடல் மீது படும் என்பதால், அவ்வப்போது ஜன்னலை மூடி, பிறகு திறந்து என்றவாறு பயணம். டிரைவரின் ஜன்னல் மட்டுமே பாதி திறந்திருந்தது. சற்றுமுன் வரை மனிதர்களே இல்லாத அந்தப் பகுதியில், சிலர் சற்று தூரத்தில் இருந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு குடிசைகள்.

அதிக வளைவு இல்லாமல் பாதை நேராகச் சென்ற ஒரு இடத்துக்கு வந்தபோது என்ன ஆயிற்றோ நினைவில்லை, டிரைவர் சற்றே காரை லாகவமாய்த் திருப்ப, கண் இமைக்கும் நேரத்தில் எங்கள் கார் ரோடின் ஓரமாக இருந்த மைல்கல்லில் நேருக்கு நேர் மோதியது. சாலை சற்று சரிவாக இருந்ததால், கார் இரண்டு முறை சுழன்று தலைகீழாக விழுந்தது. பெரியவர்கள் அனைவரும் ‘குருவாயூரப்பா காப்பாத்து’ என்று கூக்குரல். குழந்தைகளும் பெரியவர்களும் காரின் உள்ளே. டிரைவர் எப்படியோ சுதாரித்து, அரைகுறையாய்த் திறந்திருந்த ஜன்னல் வழியே வெளியே வந்து, திறந்திருந்த ஜன்னலின் வழியே கையைவிட்டு, இன்னுமோர் ஜன்னலைத் திறந்து, வெறி பிடித்தவர் போல் உள்ளேயிருந்து எல்லாரையும் இழுத்து வெளியே போட்டார். இரண்டு டயர்கள் கழண்டு எங்கோ விழுந்திருந்தது. அதற்குள் வயலில் வேலை செய்தவர்களும் அங்கு ஓடி வந்து திறந்திருந்த ஜன்னலின் வழியே கையைவிட்டு, மற்ற ஜன்னல்களைத் திறந்து, எல்லாரையும் இழுத்து வெளியே போட்டார்கள். இவையனைத்தும் மிக வேகமாக நடந்தன. முடி இறக்கிய குழந்தையை வெளியில் இழுத்த அதே நொடியில், மயிரிழையில் ஏதோ ஒரு கனமான இரும்புப் பொருள் உள்ளே விழுந்தது. டிரைவரும் மயங்கி விட்டார். குடும்பத்தினர் சிலர் மயங்கி விட்டனர். அங்கிருந்தவர்கள் உடனே சற்று தூரத்தில் இருந்த குடிசைக்கு எங்களை அழைத்துச் சென்றனர். அனைவரையும் ஆசுவாசப்படுத்தி, டீ போட்டுக்கொடுத்தனர். அனைவரும் உயிரோடு இருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, அப்பனுக்கு நன்றி சொன்னோம்.

அடுத்து, பாலக்காடு சென்ற ஆண்களுக்கோ, வீட்டிற்கோ தகவல் சொல்ல வேண்டும். வீட்டில் தொலைபேசி உண்டு; ஆனால், அருகில் தொலைபேசி வசதி இல்லை. அக்காலத்தில் செல்போன் கிடையாது. எப்போதோ ஓரிரு வண்டிகள் வரும் அந்த ரோடில் யாரிடம் கேட்டு அனைவரும் ஊர் திரும்புவது? சிலருக்கு எலும்பு முறிவு, சிலருக்கு அடி, சிராய்ப்பு வேறு. முதலில் பாலக்காட்டிற்கு சென்று, ஆண்களிடம் தகவல் சொல்லி, பின்னர் ஏதாவது மருத்துவமனையில் வைத்தியம் வேறு பார்க்க வேண்டும். என்ன செய்வது என்று புரியவில்லை.

இதற்கிடையில் மற்றொரு அதிசயம். விபத்து நடந்த இடத்தைக் கடந்த ஒரு சிறிய வேன் சற்று தூரம் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்தது. எங்கள் காரின் நம்பரைப் பார்த்த அவர்கள், ‘இது ஐயர்வீட்டுக் காராச்சே’ என்று தமக்குள் பேசிக்கொண்டு அங்கிருந்த ஒருவரிடம் விசாரிக்க, அவர் அருகில் குடிசையில் அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள் என்று சொல்ல, அங்கே வந்தார்கள். அது எங்கள் தாத்தா வேலை செய்த கம்பெனியின் வேன். அந்த வேன் அங்கு வந்தது குருவாயூரப்பனின் திருவருள்தான். அவர்கள் மூலமாக பாலக்காட்டில் உள்ளவர்களுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் தகவல் சொல்லச் சொன்னோம். டிரைவர் அவர்களுடன் சென்று அருகில் இருந்த சிறிய ஊரில் இருந்து ஒரு வாடகைக் கார் எடுத்து வந்தார். அனைவரும் பாலக்காடு சென்று, மற்றொரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு குடும்பத்து ஆண்களுடன் கோவைக்குப் பயணமானோம். கோவையில், நேராக ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவம் பார்த்துவிட்டு, எலும்பு முறிந்தவர்களுக்குக் கட்டும் போட்டு, பின்னர் வீடு திரும்பினோம்.

யோசித்துப்பார்த்தால், யாருமற்ற வனாந்திரத்தில் எங்கேயிருந்து சில வீடுகளும், மக்களும் எங்களுக்கு உதவினார்கள்? இவ்வளவு பெரிய விபத்தில் இருந்து மொத்தக் குடும்பத்தையும் காப்பாற்றிய அந்த மகாசக்தி எது? குருவாயூரப்பன்தான். சத்தியம்! சத்தியம்! புதிதாய்ப் பிறந்தது போல உணர்ந்தோம். மொத்தக் குடும்பத்தையும் குருவாயூரப்பன் காப்பாற்றினான். இந்தக் கதை எனது சொந்த அனுபவம். இந்த சம்பவத்திற்குப் பின்தான் குருவாயூரப்பன் எனது இஷ்டதெய்வம் ஆனான்.

“குருவாயூரப்பா சரணம், எண்டே குருவாயூரப்பா, எண்டே குருவாயூரப்பா, பொன்னு குருவாயூரப்பா சரணம்” என அடியேன் ஸ்மரிக்கும்படி செய்ததும் அவனே! குருவாயூரப்பன் பெருமைகள் கணக்கில் அடங்காது. அவன் பெருமைகளை என்னுடைய ஆசையினாலும், என் இஷ்ட தெய்வம் என்பதாலும், எளிய நடையில் எழுதுகிறேனே ஒழிய, அந்த யோக்கியதை எனக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

புன்சிரிப்பு தவழ என் பூஜையறையிலும், என் மனதிலும் நிற்கும் மாமணிவண்ணனே இன்றளவும் என் மருத்துவன். வரப்ரசாதி. இந்த மருத்துவன்பால் அடியேனுக்கு என்றுமே மாளாத காதல்தான்! இது போன்று குருவாயூரப்பன் நடத்திக் காட்டிய அற்புதங்கள் உங்கள் வாழ்விலும் நடந்திருந்தால் setlur.shanu@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தட்டச்சு செய்து அனுப்பி வைத்தால் பதிவேற்றுகிறேன்.

“குருவாயூரப்பா சரணம், எண்டே குருவாயூரப்பா, எண்டே குருவாயூரப்பா, பொன்னு குருவாயூரப்பா சரணம்”

Monday, August 14, 2017

கண்ணன் கதைகள் (70) - மன நிம்மதி

சென்ற பதிவில் நாராயண பட்டத்ரி பற்றியும் அவர் எப்படி நாராயணீயம் எழுதினார் என்பது பற்றியும் பார்த்தோம்.

நாராயண பட்டத்ரியின் வாழ்வில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் இது.

நாராயணீயத்தை இயற்றிய நாராயண பட்டத்ரிக்கு பாகவதத்தின் சாரமாக
நாராயணீயத்தைத் தான் இயற்றிவிட்டதாக சிறு கர்வம் ஏற்பட்டது.
மன நிம்மதியை இழந்தார். பகவான் அவரது கனவில் தோன்றி முக்திபுரியில் (மலையாளத்தில் முக்கோலக்கல்) இருக்கும் பவானியின் கோவிலுக்குச் செல் என்று கூற, முக்திபுரியில் உள்ள முக்கோல தேவியின் கோவிலுக்குச் சென்றார். அப்போது அவர் முக்கோலக தேவியை வழிபட்டு, தேவியின்மீது ஸ்லோகத்தை எழுதத் தொடங்கினார். எழுபது ஸ்லோகங்கள் எழுதி முடித்துவிட்ட நிலையிலும் அவரால் தேவியின் திருப்பாதங்களைப் பற்றி மட்டுமே சொல்ல முடிந்திருந்தது. அதற்குமேல் எழுத வரவில்லை. அப்போது, தாம் இயற்றியதெல்லாம் பகவானின் திருவருளால்தான் என்பதை அவர் உணர்ந்தார். மிகுந்த மன நிம்மதியும் அடைந்தார்.

பின்னர், தேவியைத் துதித்து, தம் இறுதிக் காலம் வரை அங்கேயே கழித்தார். 'ஸ்ரீபாத ஸப்ததி' என்ற தேவியின் புகழ் பாடும் அந்த ஸ்லோகம் தான் அவர் கடைசியாக எழுதியது. ஒரு நாள் தேவியைத் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியதும் நிம்மதியாக பகவானின்  திருவடியை  அடைந்தார்.

நாமும் அப்பனின் பாதாரவிந்தங்களை வணங்கி அவள் அருளைப் பெற்று மகிழ்வோமாக!

Sunday, August 13, 2017

கண்ணன் கதைகள் (69) - குருதக்ஷிணை

மேப்பத்தூர் நாராயண பட்டத்திரி  ஸ்ரீமன் நாராயணீயத்தை இயற்றியவர்.

கேரளாவில் 
மேப்பத்தூர் என்ற ஊரில்,  ப்ராம்மண குடும்பத்தில் பிறந்த அவர், வேதம், தர்க்கம், மீமாம்சை என்று அனைத்தையும் கற்றார். அவருக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் இருந்தனர். அக்காலத்தில் நம்பூதிரி குடும்பத்தில் மூத்தவர் நம்பூதிரியை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். மற்றவர் எந்த சமூகத்திலும் திருமணம் செய்யலாம் என்ற ஒரு கோட்பாடு இருந்தது.

நாராயண 
பட்டத்திரிக்கு பிஷாரடி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சம்பந்தம் ஏற்பட்டது. பிறகு அந்தப் பெண்மணியைத் திருமணம் செய்து மணவாழ்க்கையே இன்பம்  என்று  அனுபவித்து வந்தார்.

அந்தப் பெண்ணின் குடும்பத்தில் அச்சுத பிஷாரடி (அச்சுத பிஷாரடியின் தமக்கை மகள் 
பட்டத்திரியின் மனைவி) என்ற ஒரு பண்டிதர் இருந்தார். சிறந்த பக்திமான். ஒரு நாள் அவர் தியானத்தில் இருந்தார். அப்போது வீட்டின் உள்ளிருந்து அவரைக் கடந்து சென்ற பட்டத்திரியைப் பார்த்து, உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, அழிந்துபோகும் உணர்ச்சிகளுக்குப் பலியாகி, உன் வாழ்க்கையை ஏன் வீணாக்கிக் கொள்கிறாய் என்று கேட்டார். இந்த வார்த்தை பட்டத்திரியின் வாழ்க்கையை மாற்றியது. பிஷாரடியிடமே சிஷ்யனாக சேர்ந்து,  சம்ஸ்க்ருதமும் கற்று பண்டிதரானார். வாலிபத்தில் தவறு செய்த அவர் சிறந்த பக்தரானார். பல நூல்கள் இயற்றினார்.

அந்த சமயம், அவரது குருவான அச்சுத பிஷாரடிக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. அது கண்டு வருந்திய 
பட்டத்திரி, தன் குருவுக்குத் தர வேண்டிய குருதக்ஷிணைக்குப் பதிலாக, அவருடைய நோயை ஆவாஹனம் செய்து ஏற்றுக் கொண்டார். குருவின் நோய் நீங்கியது. பட்டத்திரிக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. அதனால் மிகவும் அவதிப்பட்டார். பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. அதைக் கண்ட துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர், நோய் நீங்க குருவாயூருக்குச் சென்று (மீன் தொட்டுக் கூட்டுக) அதாவது, “நாவிலே மச்சம் தொட்டு உண்” என்று பணித்தார். அறிவற்றவர்களாய் இருந்தால், மீனை உண்ணச் சொல்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், பட்டத்ரிக்கு மச்சாவதாரம் தொடங்கி பகவானை வர்ணிக்கச் சொல்கிறார் என்று புரிந்தது.
பட்டத்திரியும் உடனேயே, குருவாயூர் சென்று அங்குள்ள புண்யதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, சன்னிதியிலேயே அமர்ந்து, அவன் பெருமையைக் காவ்யமாக எழுத ஆரம்பித்தார். அந்தக் காவ்யமே “ஸ்ரீ நாராயணீயம்”.

ஸ்ரீமன் நாராயணீயத்தில் மொத்தம் 1034 ஸ்லோகங்கள் உள்ளன. 100 தசகங்கள் கொண்டது . ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் உள்ளன. சில தசகங்களில் 10 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளன. ஸ்ரீமன் நாராயணீயத்தில் ஒவ்வொரு தசகமும் தமது நோயை குணமாக்கும்படி வேண்டுவது போல் அமைந்துள்ளது. படிப்பவர்களுக்கும் தங்கள் நோயை குணமாக்கும்கும்படி வேண்டுவதுபோல் அமைந்திருப்பது விசேஷம்.
பட்டத்திரியின் வாழ்வில் நிகழ்ந்த வேறொரு சம்பவத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்.

நாராயண! நாராயண !

Friday, August 11, 2017

கண்ணன் கதைகள் (68) - வைர அட்டிகை

கோவையில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குத் திடீரென்று மிகுந்த கைவலி ஏற்பட்டது. பல டாக்டர்களிடம் காண்பித்தும் பலனில்லை. அவர் அவஸ்தைப்படுவதைக் கண்ட அவர் மனைவியும் மிகுந்த கவலையுற்றாள்.

ஒரு நாள், அவர்கள் இருவரும் சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் நிகழ்த்திய 'நாராயணீய உபன்யாசம்' கேட்கச் சென்றிருந்தார்கள். ஸ்ரீ குருவாயூரப்பனின் பெருமைகளைக் கேட்ட அவர்கள், வீடு திரும்பியதும் அவர் மனைவி அவரிடம், கை வலி நீங்கினால் தன்னுடைய கழுத்தில் இருக்கும் வைர அட்டிகையை காணிக்கையாகச் செலுத்துவதாக வேண்டிக் கொள்ளச் சொல்ல, அவரும் அவ்வாறே வேண்டிக் கொண்டார்.  சிறிது காலத்திலேயே, அவர் கைவலி படிப்படியாகக் குறைந்தது. வேண்டிக்கொண்டபடி குருவாயூர் சென்று அட்டிகையைக் காணிக்கை செலுத்த முடிவு செய்தார்கள்.

அந்த அட்டிகை அவரது தாத்தா கொடுத்தது. இதற்கிடையில், செல்வந்தர் வைர வியாபாரிகள் சிலரிடம் அதை மதிப்பீடு செய்யச் சொன்னார். அவர்களும் மதிப்பீடு செய்து விலையைச் சொன்னார்கள். குருவாயூர் சென்றார்கள். அங்கு சென்றதும், அவருக்கு தாத்தா அளித்ததைக் காணிக்கையாக்குவதற்கு மனம் வரவில்லை. அதனால் அதற்குப் பதிலாக அதன் மதிப்பைவிட அதிகமான பணத்தை உண்டியலில் சமர்ப்பித்தார்கள். பிறகு ஊர் திரும்பினார்கள்.

ஆனால், மீண்டும் அவருக்குக் கைவலி தொடங்கியது. குடும்ப ஜோசியர் தெய்வ குற்றத்தால் அவ்வாறு வலிப்பதாகச் சொன்னார். வேறு வழியில்லாமல் மீண்டும் குருவாயூர் சென்று அட்டிகையை உண்டியலில் சமர்ப்பித்துவிட்டு  வந்தனர். கைவலியும் வேதனையும் நிரந்தரமாக நீங்கியது. 

பகவான் கீதையில் கூறியபடி, பக்தியுடன் கொடுத்தால் தண்ணீரையும் ஏற்றுக் கொள்வார், பக்தியில்லாமல் கொடுத்தால் எவ்வளவு மதிப்பானதாக இருந்தாலும் ஏற்க மாட்டார் என்பதற்கு இந்த உண்மைச் சம்பவமே சான்று.

கண்ணன் கதைகள் (67) - உறியமதம்

முன்னொரு சமயம் சிறந்த பக்தரான நம்பூதிரி ஒருவர் வாதநோயால் பீடிக்கப்பட்டார். அவருக்கு நோய் மிகவும் தீவிரமாகி, கை கால்களை நீட்ட முடியாமல், உடல் குறுகிவிட்டது. அவரால் நடக்க முடியாததால், அவரை உறியில் வைத்துத் தூக்கிச் செல்வார்கள். அதனாலேயே அவரை 'உறியமதம்' என்று அவ்வூர் மக்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். மருத்துவங்கள் பலனளிக்கவில்லை. பெருந்தொகையைக் காணிக்கையாகச் செலுத்துவதாகவும், தான் பூரண குணமடைய வேண்டும் என்றும் குருவாயூரப்பனுக்கு வேண்டிக்கொண்டார். குருவாயூர் செல்ல பயணப்பட்டார். உறியில் வைத்து அவரை அழைத்துச் சென்றனர். 

அதே சமயம், வறுமையால் வாடிய ஒருவன், குருவாயூர் சென்று வேண்டினால், வறுமை தீர்ந்து சௌகரியமாய் வாழலாம் என்ற நம்பிக்கையில் குருவாயூர் வந்தான்.

உறியமதம் ஸ்வாமி, தீர்த்தத்தில் நீராடி, நித்ய அனுஷ்டானத்தை முடிக்க ருத்ர தீர்த்தம் சென்றார். தன்னுடைய பணப்பையைப் குளத்துப் படிக்கட்டில் வைத்தார். உறியைக் குளத்தில் இறக்கி வைக்கச் சொன்னார். ஏற்கனவே அங்கிருந்த, பணமில்லாமல் வாடிக் கொண்டிருந்த பக்தன், அந்தப் பணப்பையை எடுக்கக் கையை வைத்தான். அதைக் கண்ட உறியமதம், யாருமே எதிர்பார்க்கா வண்ணம், உறியிலிருந்து குதித்து, அவனைப் பிடிக்க ஓடினார். ஆனால் அவன் ஓடிவிட்டான். தான் குணமடைந்ததையே உணராத 

உறியமதம், காணிக்கை அளிக்க முடியவில்லையே என்று மனம் வருந்தினார். அப்போது "கவலைப்படாதே! உங்கள் இருவரின் ப்ரார்த்தனையும் நிறைவேறிவிட்டது" என்று அசரீரி கேட்டது. மகிழ்ந்த அவர் பெருமானை சேவித்து ஊர் திரும்பினார்.

அவரது நோயும் பூரணமாக நீங்கியது.

இவ்வாறு கலியுகத்தில் அப்பனின் லீலைகள் அனைவரையும் வியக்க வைக்கும் அற்புதமாகும்.

Thursday, August 10, 2017

இஸ்கான் - ஸ்ரீ ராதா கிருஷ்ணர் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 45

இஸ்கான். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த இயக்கத்தை நிறுவியவர் ஸ்வாமி ப்ரபுபாதா. ஹரே கிருஷ்ண இயக்கம் என்ற பெயரில் மிகவும் பிரபலம். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சோழிங்கநல்லூரில் உள்ள ‘அக்கரை’ என்னும் இடத்தில் இந்தக் கோயில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. 
கடல்காற்று நிறைந்த அமைதியான இடத்தில், மிகவும் எழிலாக அடுக்கடுக்கான கோபுரங்களுடன் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. வெள்ளை வெளேரென்று பார்க்க மிகவும் அழகாக இருக்கின்ற இக்கோவிலின் படிகளில் ஏறும்போது இருபுறமும் கல் யானைகள் வரவேற்கின்றது. படி ஏறிச் சென்றதும் கீழ்த்தளம். அங்கே பளிங்கினால் ஆன கன்றை நக்கிக் கொண்டிருக்கும் வெள்ளைப்பசுவும்  பசுவிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் கன்றும். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற அழகு. மன்னார்குடி ராஜகோபாலனும் அவனைச் சுற்றியுள்ள மாடும் கன்றும் நினைவுக்கு வருகிறது. 
அந்தத் தளத்தின் இருபுறங்களிலும்  மாடிப்படிகள். சில படிகளில் சக்கரங்கள் போன்ற அமைப்பு. இவ்வாறு படிகளில் ஆறு சக்கரங்கள் இருக்கிறதாம். மாடிப்படிகளில் ஏறிச் சென்றால் பிரம்மாண்டமான ஹால். இந்த முதல் தளத்தில்தான் ஏழாவது சக்ரம் அதாவது மோக்ஷ சக்கரம் இருக்கிறதாம். அந்த சக்கரத்தில் நின்றுகொண்டு மேலே பார்த்தால், கூரையில் பிரம்மஸ்தானம் என்பர் சொல்லப்படும் ஒரு துவாரம். தளம் முழுக்கக் பளிங்கினாலேயே இழைத்திருக்கிறார்கள். இந்த தளத்தில்தான் மூன்று சன்னதிகளாக கர்ப்பக்ருஹம். பளிங்கு மூர்த்திகள்.
நடுவில் உள்ள சன்னதியில் ராதையும் கிருஷ்ணனும் லலிதா விசாகாவுடன். ராதாக்ருஷ்ணன் சன்னதிக்கு இடப்புறம் ஸ்ரீ ஜகன்னாதர், ஸ்ரீ பலராமர், ஸ்ரீ சுபத்ரா சன்னதி, வலப்புறம் சைதன்யர், நித்தியானந்தா சன்னதி என்று அமைந்திருக்கிறது.
நாங்கள் சென்ற சமயம் சற்றே அமர்ந்து ஆரத்தியைப் பார்த்துச் செல்லும்படி அங்குள்ள பண்டிட் சொன்னார். மண்டபம் முழுவதும் க்ருஷ்ண லீலைகள் படமாகவும், மூரல் (mural) எனப்படும் ஓவியங்களும், கண்ணாடி ஓவியங்களும் இருக்கிறது. எத்தனை படம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார். அதனால் ஆரத்திக்காகத் திரை விலகும்வரை மண்டபத்தில் உள்ள சில கிருஷ்ணரின் லீலைகளைப் படம் எடுத்தோம். ஆரத்தி நேரத்தின்போது, மூன்று சன்னதிகளிலும் ஒரே நேரத்தில் திரை விலக்கி, சங்கு ஒலியுடன் தீப ஆரத்தி. மிக அழகாக பூஜைகள்.  

நாமசங்கீர்த்தனம் தான் பகவானை அடைய எளிதான வழி என்பதால் அங்குள்ள அனைவரும் இடைவிடாது 'ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே,
ஹரே க்ருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

இரண்டாம் தளத்தில் கோபுரங்களும் கலசங்களும் இருக்கிறது என்று சொன்னார்கள். நாங்கள் அங்கு செல்லவில்லை.
கோவிலை விட்டு இறங்கிக் கீழே வந்தால், வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாத விநியோகம். கோயில் திருப்பணிகளிலும், கைங்கர்யங்களிலும் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

அனைவரும் சொல்லக்கூடிய எளிதான திருநாமத்தைச் சொல்லி நாமும் இன்புறுவோமாக!

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!
ஹரே க்ருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!

உற்சவங்கள்: ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா விசேஷம். கிருஷ்ண ஜெயந்தி அன்று, சங்காபிஷேகம், ஆரத்தி, இன்னிசை நிகழ்ச்சி, பஜனை, சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. கிருஷ்ண யாகமும் நடைபெறுகிறது. 


வழி:  கோல்டன் பீச் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் நுழைவு வாயிலை அடைந்து  அங்கிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் கோவிலை அடையலாம்.  நேரடி ஷேர் ஆட்டோக்களும் உண்டு. நாங்கள் காரில் சென்றோம். கார் நிறுத்த வசதியும் உண்டு.

முகவரி:
ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோவில்.
பக்தி வேதாந்தஸ்வாமி ரோடு
அக்கரை,
சோளிங்கநல்லூர்
சென்னை 600119.

Wednesday, August 9, 2017

திருக்கடிகை(சோளிங்கர்) - ஸ்ரீ யோக நரசிம்மஸ்வாமி திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 44

108 திருப்பதிகளில் ஒன்றான சோளிங்கர் என்னும் ஸ்தலம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முற்காலத்தில் சோழசிம்மபுரம் என்றும் தற்காலத்தில் சோளிங்கர் என்றும் அழைக்கப்படுகிறது. 

சோளிங்கரில் உள்ள நரசிம்மரைத் தரிசிக்க ஆவல் இருந்தாலும், மலை ஏறுவது மிகவும் கடினம் என்பதால் யோசித்துக் கொண்டே இருந்தேன். அவன் அருள் இல்லாமல் அவனைத் தரிசிக்க முடியாது அல்லவா? அதனால் மனதைரியத்தையும், உடல் பலத்தையும் தருமாறு அவனிடமே விண்ணப்பித்துக் கொண்டிருந்தேன். அந்த தருணத்தையும் அவனே ஏற்படுத்த, ஒரு நாள் (சற்றே யோசனையுடன்தான்) கிளம்பினோம். 


மலையில் எடுத்த புகைப்படங்கள் சிதைந்துவிட்டது. அதனால்  படங்கள் பதிவேற்ற முடியவில்லை. பழுது பார்த்தபின் பதிவேற்றுகிறேன்.

சோளிங்கர் கோவில் மூன்று சன்னதிகள் உடையது. இரண்டு மலைக்கோயில்களும், ஒரு ஊர்க்கோயிலும் சேர்ந்ததே சோளசிங்கபுரம் என்னும் சோளிங்கர். முதலில் பெரிய மலை. 
வானரங்கள் அதிகம் என்பதால் மலையின் அடிவாரத்திலேயே சிறிய பிரம்பு கொடுக்கிறார்கள். ஏற முடியாதவர்களுக்கு கீழேயே டோலி வசதியும் உண்டு. பெரிய மலைக்குச் செல்ல 1,300 படிகள் ஏற வேண்டும். ஏறும் வழி முழுவதும் கூரை அமைத்திருக்கிறார்கள். சூரியனின் கதிர்களில் இருந்து ஏறுபவர்களைக் காப்பாற்றுகிறது. ஆயினும் படிகள் செங்குத்தாக இருப்பதால் சற்று கடினமாகத்தான் இருந்தது. அங்கங்கே அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் ஏற வேண்டும். அமரும்போது தான் வானரங்கள் அருகில் வரும். பயந்து எழுந்து மீண்டும் படி ஏற, இப்படியேதான் மலை ஏறுதல் தொடர்ந்தது. பெரியதும், சிறியதும், குட்டிகளுமாக, வானரங்கள் மிக அதிகம் என்றே சொல்ல வேண்டும். சற்றும் சும்மா இருப்பதில்லை. கையில் எதுவும் கொண்டு போக முடியாது. மூக்குக் கண்ணாடி, தண்ணீர் பாட்டில், பூமாலை, தின்பண்டங்கள், வாழைப்பழம் என்று எது இருந்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் பிடுங்கிக் கொண்டு ஓடுகிறது. கையில் பிரம்பு இருந்தால் அருகில் வருவதில்லை. சுமார் 50 நிமிடங்களில் ஒரு வழியாக உச்சியை அடைந்ததும் நரசிம்மருக்கும் ஞ்சநேயருக்கும் நன்றி சொன்னேன். ஏறிவிட்ட சந்தோஷம்! நரசிம்மரை சேவிக்கப் போகும் ஆனந்தம்! ஒடுக்கமான கூண்டு வழியே சன்னதிக்குச் செல்ல வேண்டும். அங்கும் கூட சில குரங்குகள் கூடவே வந்தன. அனுமன்தான் மலை ஏற்றி விட்டாற்போல் உணர்ந்தேன். 

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.
-திருமங்கையாழ்வார்

1. பெரியமலை: ஸ்ரீயோக நரசிம்மர் எழுந்தருளியுள்ள மலைக்கோயில். கடிகாசல மலை என்னும் இந்த மலையில்
 பெருமாள் யோக நரசிம்மராக, அக்காரக்கனி என்னும் திருநாமத்துடன் கிழக்கே திருமுக மண்டலத்துடன், வீற்றிருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இங்கு ஒரு கடிகை (24 நிமிடம்) தங்கி இருந்தாலே பீடைகள் தொலைந்து, மோக்ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் இத்தலத்திற்கு ‘திருக்கடிகை’ என்று பெயர் வந்தது. கடிகாசலம் என்றும் பெயர். கடிகை என்றால் நாழிகை அசலம் என்றால் மலை. நரசிம்ம அவதாரத்தை மீண்டும் ஒரு முறை தரிசிக்க முனிவர்கள் விரும்பி இத்தலத்தில் தவம் செய்ய, முனிவர்களுக்காக அவர்கள் நினைத்த மாத்திரத்தில், ஒரு கடிகையில், அவர்களுக்குக் காட்சி கொடுத்ததால் ‘கடிகாசலம்’ என்று பெயர் ஏற்பட்டதாம். அமிர்தவல்லித் தாயார் / சுதாவல்லித் தாயார் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். பொதுவாக, பெருமாள் கோயில்களில் மூலவரும் உற்சவரும் ஒரே சன்னதியில் தான் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இங்கு உற்சவ மூர்த்திகள் கீழே ஊர்க்கோவிலில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

விமானம் : ஸிம்ஹகோஷ்டாக்ருதி விமானம் (ஹேமகோடி விமானம்)

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், தக்கான் குளம். மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. இங்கு தான் நுழைவு வாயில். இங்கு ஒரு பெரிய ஆஞ்சனேயர் சிலை உள்ளது.

பிற சன்னதிகள்: தாயார், சக்கரத்தாழ்வார், கண்ணன், சப்த ரிஷிகள், ஆழ்வார் ஆச்சார்யர்கள்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 3 பாசுரங்கள்(1731,1736,2673), பேயாழ்வார் - 1 பாசுரம் (2342)

2. சிறிய மலை: சிறிய மலைக்குச் செல்ல 420 படிகள் ஏற வேண்டும். 20-30 நிமிடங்கள் ஆகும். தனி மலையில் யோக ஆஞ்சனேயர் சன்னதி. இங்குள்ள ஆஞ்சனேயர், நான்கு திருக்கரங்களுடன், ஜபமாலை, சங்கு சக்கரங்களுடன் யோக நிலையில் வீற்றிருக்கிறார். சதுர்புஜ யோக ஆஞ்சனேயர் என்று திருநாமம். இவர், பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடியை நோக்கியபடி அமர்ந்துள்ளார். ராமர், ரங்கநாதர், நவநீத கிருஷ்ணர் சன்னதிகளும் உள்ளது.

3. ஊர்க்கோவில்: உற்சவர் பக்தோசிதன், உற்சவர் சுதாவல்லித் தாயார் இங்கே எழுந்தருளியுள்ளனர். உற்சவருக்கென்று தனிக்கோயில் அமைந்திருப்பது இந்த ஸ்தலத்தின் விசேஷம். இங்குதான் உற்சவங்கள், திருவிழாக்கள் நடக்கிறது.

தொட்டாச்சாரியார், எறும்பியப்பா பிறந்த இடம். இத்தலத்தில் தொட்டாச்சாரியாருக்கு காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கருட வாகனத்தில் தரிசனம் தந்தருளியதாக வரலாறு.

பிரார்த்தனை ஸ்தலம். பேய், பிசாசு, பில்லி, சூனியம், மற்றும் வியாதிகள் தீர விரதமிருந்து, தக்கான் குளத்தில் நீராடி, மலையில் பெருமாளை சேவித்தால் தொல்லைகள் தீரும் என்பது நம்பிக்கை. தக்கான் குளத்தருகில் கல்யாணகட்டமும் இருக்கிறது. முடி இறக்குதல், காது குத்துவது போன்றவற்றை இத்தலத்தில் செய்கிறார்கள்.

உற்சவங்கள்: நரசிம்ம ஜெயந்தி, ஆடிப்பூரம், பிரம்மோற்சவம், பவித்ர உற்சவம், மணவாள மாமுனிகள் உற்சவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் மற்றும் தேர்த் திருவிழா. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகள் விசேஷம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: மலைக்கோயில்களில் காலை 8 முதல் மாலை 5 மணிவரை தரிசிக்கலாம். ஊர்க்கோவில் 12 மணிக்கு நடைசாத்தி, மீண்டும் 4.30 மணிக்குத் திறக்கிறார்கள்.


வழி: சென்னையிலிருந்து 125 கிமீ. தூரத்திலும், அரக்கோணத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைலும் உள்ளது. அரக்கோணத்திலிருந்து, ஷேர் ஆட்டோ, பஸ் வசதி உண்டு. வேலூரிலிருந்து திருத்தணி வழியில் 60 கிமீ தூரத்திலும், சோளிங்கர் ரயில் நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சென்னை, திருத்தணி, சித்தூரில் இருந்து பேருந்து வசதி உண்டு. சென்னையிலிருந்து காரில் செல்லலாம். மலையடிவாரத்தில் கார் நிறுத்தம் இருக்கிறது. தங்கும் வசதிகளும் உள்ளது.

முகவரி:
ஸ்ரீ யோக நரசிம்மஸ்வாமி திருக்கோயில், 

சோளிங்கர்- 631102,
வேலூர் மாவட்டம்.

Tuesday, August 8, 2017

திருமழிசை ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 43

சென்னையை அடுத்து இருக்கும் சிறிய கிராமம் திருமழிசை. சென்னையிலிருந்து 25 கிமி தொலைவில் உள்ளது. திருமழிசையாழ்வாரின் அவதார ஸ்தலம். அதனால் ஊருக்கும் அதே பெயர். அபிமான ஸ்தலம்.

திருமழிசை ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் கோயில்:
மூன்று ஜகன்னாத க்ஷேத்ரங்களில் இது 'மத்திய ஜகந்நாதம்' என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. வடக்கே உள்ள பூரி, உத்திர ஜகன்னாதம் என்றும் திருப்புல்லாணி தக்ஷிண ஜகன்னாதம் என்றும் சொல்வார்கள். பூரியில் நின்ற திருக்கோலத்திலும், திருப்புல்லாணியில் ஸயன திருக்கோலத்திலும், திருமழிசையில் வீற்றிருந்த திருக்கோலத்திலும் பெருமாள் சேவை சாதிக்கிறார். ஜகன்னாதப் பெருமாள் வீற்றிருந்த கோலத்தில் ருக்மணி ஸத்யபாமா ஸமேதராக சேவை சாதிக்கிறார். தாயாரின் திருநாமம் திருமங்கைவல்லித் தாயார். தனிக்கோயில் நாச்சியார்.

இந்த ஸ்தலத்தில்தான் திருமழிசையாழ்வார், திருமாலின் சக்ராயுதத்தின் அம்சமாக அவதரித்தார். திருமழிசையாழ்வாரின் அவதார ஸ்தலம் என்பதால் அவருக்கும் இங்கே தனி சன்னதி இருக்கிறது. இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய மதங்களைக் கற்று, சிவவாக்கியர் என்ற பெயரில் சைவத்தை முதலில் பின்பற்றி, பிறகு வைணவத்திற்கு வந்தார்.

'சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல்ஆராய்ந்தோம்; பாக்கியத்தால் வெங்கட்கரியனை சேர்ந்தோம்' என்று அவரே பாடியுள்ளார்.

இவரின் சொல்வன்மையைக் கண்ட சிவபெருமான், இவருக்கு 'பக்திசாரார்' எனப் பெயரிட்டாராம். திவ்யப்ரபந்தத்தில் நான்முகன் திருவந்தாதியும், திருச்சந்த விருத்தமும் திருமழிசையாழ்வார் பாடியவையே. 
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், பிராகார ஜகன்னாதர், அனுமார், தும்பிக்கை ஆழ்வார், வைஷ்ணவி தேவி, மணவாள மாமுனிகள் சன்னதிகளும் உள்ளது. கலைநயமிக்க ஒரு மண்டபமும் இருக்கிறது. ஜெகந்நாத விமானம். ப்ருகு தீர்த்தம் கோவிலுக்கு முன்னால் உள்ளது.
ஸ்தல புராணம்: ஒரு சமயம், பிருகு, வசிஷ்டர், பார்க்கவர், அத்ரி போன்ற ரிஷிகள் பூலோகத்தில் தவம் செய்ய சிறந்த இடம் எது என்று பிரம்மாவிடம் கேட்க, பிரம்மா, ஒரு தராசைக் கொண்டு வரச்சொல்லி, தராசின் ஒரு பக்கம் திருமழிசை ஸ்தலத்தையும், மற்றொரு தட்டில் உலகில் உள்ள மற்ற புண்ணிய ஸ்தலங்களையும் வைக்க, அப்பொழுது திருமழிசை இருந்த தட்டு கீழிறங்கியதாம். திருமழிசையின் பெருமையை உணர்ந்த முனிவர்கள் அங்கேயே தவம் செய்ய, அவர்கள் தவத்தில் மகிழ்ந்த மகாவிஷ்ணு இத்தலத்தில் ஜெகன்னாதப் பெருமாளாக திருமங்கைவல்லித் தாயாருடன் காட்சியளித்தார் என்கிறது புராணம். 

திருமழிசையிலேயே வீற்றிருந்த பெருமாள் கோயிலும், சிவாலயமான ஒத்தாண்டீஸ்வரர் கோயிலும் உள்ளது.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் சுமார் 20 கி.மீ. தொலைவிலும், திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயில் சுமார் 12 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. அவற்றையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்.

வழி: திருமழிசை சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் இருக்கிறது. சென்னை-பூந்தமல்லி-திருவள்ளூர் மார்க்கம். சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லிக்கு அருகே 3 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சென்னை கோயம்பேடு, தி.நகர், பூந்தமல்லி மற்றும் திருவள்ளூரிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கிறது.

உற்சவங்கள்: ஆனி பிரம்மோற்சவம், தை மாதம் மக நட்சத்திரத்தில் திருமழிசை ஆழ்வார் திரு அவதார உற்சவம், தெப்ப உற்சவம்

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 8 - 11 மணி , மாலை 6- 8.30 மணி

முகவரி:
அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில்,
திருமழிசை - 602 107
திருவள்ளூர் மாவட்டம்.

Monday, August 7, 2017

வடுவூர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 42

Pic. vaduvurtemple.in
வடுவூர். மன்னார்குடியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள ஓர் அழகிய கிராமம். பச்சைபசேலேன்ற நெல் வயல்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் ஆகிய ஸ்தலங்கள் 'பஞ்ச ராம க்ஷேத்ரம்' என்று அழைக்கப்படுகின்றன. தில்லைவிளாகம் ஸ்ரீ ராமர் பற்றி அறிய இங்கேயும், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலன் பற்றி அறிய இங்கேயும் சொடுக்கவும். இப்போது வடுவூருக்குப் போகலாமா?

வடுவூர். இந்த ஊரில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோவில், “பஞ்ச ராம க்ஷேத்திரங்களில்” ஒன்று. அபிமான ஸ்தலம். தக்ஷிண அயோத்தி. ஒரு காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் வகுளாரண்ய க்ஷேத்ரம் என்றும், பாஸ்கர ஷேத்திரம் என்றும் பெயர். '

ஐந்து நிலை ராஜகோபுரம். மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் லக்ஷ்மணர், அனுமாருடன் எழுந்தருளியுள்ளார். உற்சவர் ராமர் பேரழகு! இந்த ராமனைக் காணக் கண் கோடி வேண்டும். பேரழகு வாய்ந்த ராமர். அழகுக்கே அழகு சேர்க்கும் ராமர். சேவித்துக்கொண்டே இருக்கலாம். என்ன அழகு! என்ன அழகு! பார்த்தவர் மயங்கும் அழகு! மந்தகாசப் புன்னகை!! இது போன்ற தத்ரூபமான புன்னகையை வேறு எங்குமே காண முடியாது. வில்லினைப் பிடித்திருக்கும் அழகு அதி ஆச்சர்யம்! 

“மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு! என்பது ஓர் அழியா அழகு உடையான்”

என்ற கம்பரின் வரிகள் நினைவுக்கு வருகிறது. ஸ்ரீராமனை முழுவதுமாகத் துதிக்கமுடியாமல் தன்னுடைய இயலாமையை ‘ஐயோ’ என்ற பதத்தால் கம்பரே வெளிப்படுத்தி இருக்கும்போது நாம் எம்மாத்திரம்??!! கண்டோம்! கண்டோம்! கண்டோம்! கண்ணுக்கினியன கண்டோம்! என்று மெய்சிலிர்க்க மட்டுமே முடியும்.

வடுவூர் சிலையழகு, மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு என்பர். சரி இந்த உற்சவமூர்த்திக்கு அப்படி என்ன சிறப்பு? இது ஸ்ரீ ராமரே உருவாக்கிய விக்கிரகத் திருமேனி. அதனால்தான் அப்படியொரு உயிரோட்டம்!

உற்சவரின் திருமேனியைப் பற்றிய வரலாறு:

ராவண வதத்தின் பிறகு, சீதாபிராட்டியை மீட்டு, வனவாசம் முடித்துக்கொண்டு, கோடியக்கரை வழியாக அயோத்திக்கு ராமர் திரும்பியபோது, அவரைக் கண்ட ரிஷிகள், ராமரைத் தங்கள் கூடவே இருக்கச் சொல்லிக் கேட்டார்களாம். பரதனைக் காண வேண்டிய அவசியத்தை அவர்களுக்குக் கூறிய ராமர், தன்னுடைய உருவத்தை விக்ரஹமாக வடித்து அவர்களுக்குக் கொடுத்து, நானே வேண்டுமா? இந்த விக்ரஹம் வேண்டுமா? எனக் கேட்க, அந்த விக்ரஹத்தின் அழகில் மயங்கிய ரிஷிகள், ராமருக்கு பதிலாக அந்த விக்ரஹத் திருமேனியே போதும் என்றனராம். தாங்கள் பூஜிக்க அந்த விக்ரஹத்தைத் தரும்படி ரிஷிகள் கேட்க, அதன்படி ராமர் அவர்களிடம் விக்ரஹத்தைக் கொடுத்துவிட்டு, அயோத்தி திரும்பினார் என்பது வரலாறு.

பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் இந்த விக்ரஹத்தைப் பூஜித்து வந்தனர். அந்நியப் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக தலைஞாயிறு என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர்.

தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னன் கனவில் வந்த ராமர், தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு, தனக்குக் கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி தலைஞாயிறு சென்ற மன்னர் விக்ரஹங்களை எடுத்துக் கொண்டு, தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணிக் கொண்டு வரும் வழியில் வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. விக்ரகங்களை வடுவூர் கோவிலில் வைத்துக் கொண்டு, அங்கேயே தங்கினார். அந்த ஊர் மக்கள் ராமரின் அழகில் மயங்கி, அங்கேயே ஸ்ரீராமரை விட்டுச் செல்ல மன்னனிடம் வேண்டினர். மன்னன் மறுத்து விக்ரஹத்தை எடுக்க முயற்சித்தபோது, வைத்த இடத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை. அதனால் மக்கள் வேண்டியபடி மன்னன் வடுவூரிலேயே சிலையை விட்டு சென்றார் என்கிறது ஸ்தல புராணம்.

கரிகால் சோழன், போரில் வென்று ஊர் திரும்பியபோது, மூலிகைகள் நிறைந்த இந்த ஊரில், போரில் அடிபட்ட வீரர்களுக்கு வைத்தியம் பார்த்தார்களாம். வீரர்களின் வடுக்களை ஆற்றிய ஊர் என்பதால் வடுவூர் என்றும் கூறுகின்றனர்.

ப்ராகாரத்தில் வடக்கு பார்த்த ஹயக்ரீவர் விசேஷம். கருடன், விஷ்வக்சேனர், ஆதிசேஷன், ஆண்டாள், ஆழ்வார் ஆச்சார்யர்கள் சந்நிதிகள் உள்ளன. மன்னார்குடி ராஜகோபாலனைப் போலவே இங்கும் ஒரு ராஜகோபாலன் உள்ளார். ஊஞ்சல் மண்டபம், கண்ணாடி அறை இருக்கிறது. உற்சவர் திருமஞ்சனம் விசேஷம்.

தல விருட்சம் வகுள(மகிழ)மரம். கோவிலுக்கு அருகே சரயு புஷ்கரணி. அக்ரஹாரங்கள். அழகான படித்துறை. குளத்தில் சென்று நின்றால் கால்களைக் கவ்வும் மீன்கள் நிறைந்த குளம்.

உற்சவங்கள்: ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஹனுமத் ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம், திருத்தேரோட்டம். தேரில் ராமாயணக் காட்சிகளை அழகாய் வடித்திருக்கிறார்கள். தெப்போத்ஸவம், திருக்கல்யாண உற்சவம். திருமணத் தடை உள்ளவர்கள் திருக்கல்யாண உற்சவத்தைப் பார்த்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8:00 to 12:00 மாலை 4.30 to 8.30

வழி: தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி அல்லது திருத்துறைப்பூண்டி (வழி) வடுவூர் செல்லும் பஸ்சில் செல்லலாம். மன்னார்குடியில் இருந்து 13 கி.மீ. தஞ்சாவூர்-மன்னார்குடி மார்க்கம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் வடுவூரில் நிற்கும்.

முகவரி:
நிர்வாக அதிகாரி,
வடுவூர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில்,
வடுவூர் 614019,
திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம! ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம!

Sunday, August 6, 2017

கண்ணன் கதைகள் (66) - வாகைச்சார்த்து / வாகச்சார்த்து

சில ஆண்டுகளுக்கு முன் குருவாயூர் சென்ற பொழுது அதிகாலை நிர்மால்ய தரிசனம் செய்ய சன்னதிக்குச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்ததால், நாங்கள் சென்ற சமயம் நிர்மால்யம் முடிந்துவிட்டது, ஆனால் வாகைச்சார்த்து சேவிக்கும் பாக்கியம் பெற்றோம்.

வாகைச்சார்த்து என்றால் என்ன? குருவாயூரில் தரிசனம் தரும் குழந்தைக் கண்ணனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தமும், தைலமும், தோல் நோய்களையும், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என்பது நம்பிக்கை. பகவானின் திருமேனியில் வாகை மரத்துப் பட்டையின் பொடியைக் கொண்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத்தான் ‘வாகைச்சார்த்து’ என்று கூறுகிறார்கள். இந்த வாகைச்சார்த்து வழிபாடு வழக்கம் எப்படி வந்தது?

இது பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு காலத்தில், ஒரு கிராமத்தில், காஷு என்ற சிறுவன் இருந்தான். பத்து, பனிரெண்டு வயதிருக்கும். தாய் தந்தை யாரும் இல்லை. மிகுந்த வறுமை. அந்த கிராமத்தில் சிறு சிறு வேலைகள் செய்து அதனால் கிடைக்கும் பணத்தை வைத்து தனக்கு வேண்டிய உணவை வாங்கி உண்பான். ஒரு சமயம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டது. பசியின் கொடுமையைத் தாங்க முடியாத அந்த சிறுவன், அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி இறந்துவிட நினைத்தான். அப்போது நாரதர் அவன் முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த பாத்திரத்திலிருந்து அவனுக்கு வேண்டிய உணவு கிடைக்கும் என்று கூறினார். அந்தப் பாத்திரத்தில் இருந்து அவனுக்கு வேண்டிய உணவை அவன் பலகாலம் பெற்று வந்தான்.

இந்நிலையில் ஒருநாள் காஷுவுக்கு வீடு, செல்வம் வேண்டும் என்ற பேராசை ஏற்பட்டது. மீண்டும் தண்ணீரில் மூழ்குவது போல நடித்தால், நாரதர் வருவார் என்ற எண்ணத்தில், நதியில் மூழ்கினான். நாரத முனிவரும் வரவில்லை, பாத்திரமும் மறைந்துவிட்டது. மீண்டும் பசியின் கொடுமையில் வாடினான். தனது பேராசை பெரு நஷ்டமாகிவிட்டதை உணர்ந்த காஷு, மிகவும் வருந்தினான். அப்போது நாரதர் மீண்டும் அவன் முன் தோன்றி, அவனிடம், ‘உன்னுடைய முன்ஜென்மத்தில் உனக்கு சாம்பு என்று ஒரு மகன் இருந்தான், அந்த மகனின் பக்தியால்தான் இப்போது என்னைப் பார்க்க முடிகிறது, நீயும் பக்தி செய்து முக்தியடை’ என்று கூற, அதன் பிறகு காஷு, எப்போதும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டு தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான்.

அவனது நிலையைக் கண்ட மஹாலக்ஷ்மி, அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்டினாள். அதற்கு பகவான் அவன் பாவங்கள் இன்னும் தீரவில்லை, முன்ஜென்மத்தில் அவன் ஒரு பூசாரியாய் இருந்தான். வேசிகளுடன் சுற்றிக்கொண்டு, கோவிலையும் கவனிக்கவில்லை. அப்போது அவன் மகன் சாம்பு, கோவிலில் பூஜைகளை பக்தியுடன் செய்து என்னை வந்தடைந்தான். முன்பைப் போலவே இப்போதும் காஷு தனது ஆசை நிறைவேறியதும் என்னை மறந்துவிடுவான். ஆகையால் அவனை சிறிது காலம் சோதித்துப் பிறகு ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். காஷுவும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தான். மீண்டும் மஹாலக்ஷ்மி பகவானிடம் வேண்ட, பகவானும் அதற்கு இணங்கினார்.

இதற்கிடையே, காஷு சுயநினைவை இழந்துவிட, பகவான் அவன் முன்னே தோன்றினார். அவன் தலையைத் தடவிக் கொடுத்தார். தன்னை அவரது திருவடிகளில் சேர்த்துக்கொள்ளுமாறு காஷு வேண்டினான். தன்னைப் போலத் துன்பமடைபவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் தானும் உதவ அருள் புரியுமாறும் வேண்டினான்.

பகவானும் அதை ஏற்றுக் கொண்டு, "கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனாக இருக்கும் எனக்கு, தினமும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, பின் என்னை வாகைத் தூளினால் தேய்ப்பார்கள். அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய். என் மூலமாக எனது பக்தர்களின் தோல் நோய்களும் தீரும்'' என்று கூறி காஷுவை ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.

குருவாயூரப்பனுக்கு "வாகை சார்த்து' வழக்கம் இவ்வாறுதான் ஏற்ப்பட்டது. அதன்படியே இன்றும், நிர்மால்யம் முடிந்தவுடன், தைலாபிஷேகம் செய்து, பின்னர் வாகை மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகைச் சார்த்து என்கிறார்கள். பிறகு பகவானுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்கின்றனர். இந்த அபிஷேக தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என்பது நம்பிக்கை.

குருவாயூரப்பனை வழிபட்டு, வாழ்வில் நோய்களும், தோஷங்களும் நீங்கப் பெறுவோம்! ஓம் நமோ நாராயணாய! நாராயண! நாராயண!

Saturday, August 5, 2017

கண்ணன் கதைகள் (65) - ஸர்ப்ப தோஷ நிவர்த்தி

குருவாயூர் க்ருஷ்ணரின் மகிமை.

குருவும் வாயுவும் சேர்ந்து ப்ரதிஷ்டை செய்த குருவாயூரப்பனின் லீலைகளை அளவிட முடியாது. பாம்பின் தலையிலேயே தன் பாதத்தை வைத்து நடனமாடிய க்ருஷ்ணரை மனதார வணங்கினால் ஸர்ப்ப தோஷம், தொழு நோய், தோல் நோய், எல்லாம் பயந்து ஓடும் என்பதற்கு இந்த புராணக் கதையே எடுத்துக்காட்டு.

உத்தரையின் கர்ப்பத்திலிருந்த குழந்தையை  ஸ்ரீ கிருஷ்ண பகவான் காப்பாற்றினார். அந்தக் குழந்தையே "விஷ்ணுரதன்" எனப்படும் பரீக்ஷித்.

பஞ்ச பாண்டவர்கள் இமயத்திற்குச் சென்றபின் அவர்கள் பேரனான பரீக்ஷித் அரசாட்சி ஏற்று, நீதி தவறாமல் ஆண்டு வந்தான். ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சமீகர் என்ற முனிவரைக் கண்டு தாகத்திற்குத் தண்ணீர் கேட்டான். தவத்திலிருந்த முனிவரிடம் சலனம் இல்லாததால், தனது வில்லின் நுனியால் அருகில் இருந்த ஓர் உயிரற்ற பாம்பை அவர் கழுத்தின் மீது போட்டுவிட்டுச் சென்றான். சற்று நேரம் கழித்து அங்கு வந்த முனிவரின் மகன் சிருங்கி, தன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்தைக் கண்டு, அன்றிலிருந்து ஏழாவது நாள், பரீக்ஷித் கொடிய விஷம் கொண்ட 'தக்ஷகன்' என்ற பாம்பால் கடிபட்டு இறப்பான் என சபித்தான். இதனை அறிந்த பரீக்ஷித், தான் செய்த தவற்றை உணர்ந்து, அரியணையைத் துறந்து, தனது மகன் ஜனமேஜயனுக்கு அரசை அளித்து, தன் கடைசி ஏழு நாட்களில் சுக முனிவரிடம் பாகவதக் கதையை கேட்டறிந்தான்.

சாபத்தின்படி, தக்ஷகன் என்னும் கொடிய விஷமுள்ள பாம்பு பரீக்ஷித்தை ஏழாம் நாளில் கடிக்க பரீக்ஷித் இறந்துவிடுகிறான். இதனால் கோபமடைந்த பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயன், தன் தந்தையைக் கொன்ற பாம்புகளின் வம்சத்தையே அழிக்க முடிவு செய்து, பாம்பு வேள்விக்கு உத்தரவிட்டான். சரியான மந்திரங்களை உச்சரித்து, பாம்புகளின் பெயர்களைச் சொல்லி வேள்வி செய்ய, பாம்புகள் ஆயிரக்கணக்கில் அந்த அக்னியில் விழுந்து அழிந்தன. அறம் அறிந்த 'ஆஸ்தீகர்' என்பவர், ஜனமேஜயனிடம் சென்று, அவருடைய தவறை எடுத்துச் சொல்லி, பாம்புகள் அழிவதைத் தடுத்தார். ஜனமேஜயனும் மனம் திருந்தினார். ஆனால், பல பாம்புகளை கொன்றதால் ஜனமேஜயனுக்கு ஸர்ப்பதோஷம் உண்டானது. அவருக்கு தொழுநோய் உண்டானது.

பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லாமல், மரணத்தை ஏற்க முடிவு செய்தபோது, ஆத்ரேயர் என்ற முனிவர், அரசனிடம்,"உனக்கு ஏற்பட்டிருக்கும் ஸர்ப்பதோஷத்தையும், தொழுநோயையும் போக்க ஒரு வழியிருக்கிறது. பாம்பின் தலையிலேயே தன் பாதத்தை வைத்திருக்கும் ஸ்ரீ க்ருஷ்ணரை மனதார வணங்கினால் உன்னுடைய ஸர்ப்பதோஷமும், தொழுநோயும் நீங்கும். வைகுண்டத்தில் தன்னை தானே வழிபட்ட க்ருஷ்ணரின் விக்கிரகமானது குருவாயூரில் உள்ளது. நீ உடனே குருவாயூர் சென்று அங்கு உள்ள க்ருஷ்ண விக்கிரகத்தைத் தரிசித்து வணங்கு" என்று சொன்னார். ஜனமேஜயனும், குருவாயூர் சென்று, அங்குள்ள க்ருஷ்ண விக்கிரகத்தைத் தியானம் செய்து, அன்புடன் பூஜை முதலியவற்றை செய்து பத்து மாதங்கள் வழிபட்டார். தொழுநோய் படிப்படியாக நீங்கியது. ஸ்ரீ குருவாயூர் க்ருஷ்ணரும் ஜனமேஜயனுக்கு பூரண குணத்தை அருளினார். மகிழ்ச்சியடைந்த ஜனமேஜயன் குருவாயூர் கோவிலைப் புதுப்பித்துக் கொடுத்தார் என்பது புராணம்.

ஸர்ப்ப தோஷத்தை நீக்கும் சக்தி படைத்தவர் குருவாயூரப்பன். குருவாயூர் 
க்ருஷ்ணரை மனதார வணங்கினால் ஸர்ப்ப தோஷம், தொழு நோய், தோல் நோய் அனைத்தும் நீங்கும் என்பது சத்தியம்.

Friday, August 4, 2017

விட்டலாபுரம் - ஸ்ரீ பிரேமிக விட்டலர் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 41

விட்டலாபுரம்-ஸ்ரீ பிரேமிக விட்டலர் திருக்கோயில்

சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில், கல்பாக்கம் புதுப்பட்டினம் அருகில் உள்ள சிறிய ஊர் விட்டலாபுரம். இங்கு பாண்டுரங்கன் கோவில் ப்ரசித்தம். விட்டலேஸ்வரர் கோவில் என்று சொல்கிறார்கள்.

சுமார் 500 வருடம் பழமைவாய்ந்த திருக்கோயில். கிருஷ்ண தேவராயரின் பிரதிநிதியான கொண்டைய தேவ சோழ மகாராஜா என்பவரால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திருவீதி வலம் வரத் தேர் ஒன்றும் ராஜாக்களால் பரிசாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சிதிலமாக இருந்த இக்கோயில் தற்போது ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி அவர்களால் சீரமைக்கப்பட்டு 
ம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் இலாகா கட்டுப்பாட்டில் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கும், சதுரங்கப்பட்டினம் வரதராஜபெருமாள் கோவிலுக்கும் பாதாள வழி உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
த்வஜஸ்தம்பம், தாண்டி கருடாழ்வாரை ஸேவித்து, சன்னதி சென்றோம். மூலவர், விட்டலேஸ்வரர் என்னும் பிரேமிக விட்டலன், சுமார் 5 அடி உயரம் இருப்பார். இடுப்பில் கையை வைத்தபடி பாண்டுரங்கன் மிக அழகாக இருக்கிறார். பொதுவாக பாண்டுரங்கன் ருக்மிணித் தாயாருடன் மட்டுமே இருப்பார். ஆனால் இங்கு ருக்மணி ஸத்யபாமா ஸமேதராகக் காட்சி தருவது விசேஷம். உற்சவ மூர்த்திகளும் மிகுந்த அழகு. நாமசங்கீர்த்தனமே பிரதானம். இக்கோயிலில் பஜனை ஸம்ப்ரதாய பூஜை முறை மட்டுமே. மந்திரங்கள் சொல்லிப் பூஜை செய்வதில்லை. நம்மையும், ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே’ என்று சொல்லச் சொல்கிறார்கள். தினசரி மாலையில் நாமசங்கீர்த்தனம் உண்டு.

தாயார் சந்தானலக்ஷ்மி தனிக்கோயில் நாச்சியார்.
சுற்றுப் ப்ராகாரத்தில் ஸ்ரீனிவாசப்பெருமாள், வரதராஜப்பெருமாள், ராமானுஜர் மற்றும் விஸ்வக்ஸேனர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள். சக்கரதாழ்வார், அனுமார் சன்னதிகளும் உள்ளது. கோவில் எதிரிலேயே ஆஞ்சநேயருக்குத் தனி சன்னதியும் இருக்கிறது. 
சிறிய கோவிலாக இருந்தாலும் அழகாகவும், தூய்மையாகவும் இருக்கிறது. நந்தவனம் மிக நேர்த்தியாய்ப் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு உள்ளூர் மக்களைவிட, வெளியூர் மக்களின் வருகை அதிகம்.

சிறிய கிராமம். அருகில் உள்ள தோட்டத்தில் விளையும் காய்கறிகளை கோவில் வாசலில் விற்கிறார்கள். அவர்கள் வாழ்வாதாரமே அதுதான் என்பதால் கள்ளங்கபடமற்ற சிறு குழந்தைகள் விற்கும் கீரை, காய்கறியை வேண்டாம் என்று சொல்ல மனம் வராது. அன்பான மக்கள். இதே கிராமத்தில் அருகிலேயே விசாலாக்ஷி ஸமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலும் உள்ளது.

உற்சவங்கள்: ஸ்ரீஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி போலவே, மஹாசிவராத்திரியும் கொண்டாடப்படுவது விசேஷம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 to 10.30 மாலை 4.30 to 07.30

வழி:  இக்கோயில் கல்பாக்கத்திலிருந்து 3 கி.மி தொலைவில், புதுப்பட்டினம் நெரும்பூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. கல்பாக்கத்திலிருந்து ஆட்டோ வசதியும் உண்டு. பாண்டிச்சேரியிலிருந்து கல்பாக்கம் செல்லும் வழியில் செல்லலாம்.

முகவரி: ஸ்ரீ பிரேமிக விட்டலர் திருக்கோயில்,
விட்டலாபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

Thursday, August 3, 2017

திருப்புட்குழி - ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 40

108 திவ்யதேசம், தொண்டைநாடு திவ்யதேசம், கண்ணுக்கினியன கண்டோம்

108 திவ்யதேசம், தொண்டைநாடு திவ்யதேசம், கண்ணுக்கினியன கண்டோம்
திருப்புட்குழி 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். தொண்டைநாடு திவ்யதேசங்களில் ஒன்றான இந்த க்ஷேத்ரம், காஞ்சியிலிருந்து சுமார் 11 கி.மீ. தூரத்தில் உள்ளது. 

மூலவர்: விஜயராகவப் பெருமாள்

தாயார்: மரகதவல்லித் தாயார், தனிக்கோயில் நாச்சியார்.
தீர்த்தம்: ஜடாயு புஷ்கரிணி
விமானம்: விஜயகோடி (வீரகோடி )விமானம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள் - 1115, 2674

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ள மென்னும்
புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும்
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே - திருமங்கையாழ்வார்

ஸ்தல வரலாறு:

ராமர் சீதையைத் தேடிச்செல்லும் வழியில் இங்கு தங்கியதாகவும், ஜடாயுவுக்கு மோக்ஷமளிக்க, பூமியைக் கீறி தீர்த்தத்தை உண்டாக்கி, ஜடாயுவுக்கு ஸம்ஸ்காரம் செய்ததால், திரு புள்குழி என்று பெயர் ஏற்பட்டதாக ஸ்தல வரலாறு. மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு, ஸம்ஸ்காரம் செய்வதைப்போல் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அந்த சிதையின் சூடு  தாங்க முடியாமல் ஸ்ரீதேவியும் பூதேவியும் இடம்வலம் மாறி எழுந்தருளியுள்ளனராம். ராமபிரானே இங்கு ஜடாயுவுக்கு அந்திம க்ரியை செய்த தலமானதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வரும் மக்கள் ஏராளம்.

பொதுவாக பெருமாள் கோவில்களில் தாயார் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறம் இருக்கும். ஆனால் இங்கு தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது மற்றுமோர் விசேஷம். தாயார் சன்னதியிலும், மற்ற இடங்களிலும் அழகாகக் கோலங்கள் வரையப்பட்டுள்ளது.  வசந்த மண்டபம் மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டிருக்கிறது.
108 திவ்யதேசம், தொண்டைநாடு திவ்யதேசம், கண்ணுக்கினியன கண்டோம்

108 திவ்யதேசம், தொண்டைநாடு திவ்யதேசம், கண்ணுக்கினியன கண்டோம்
ஸ்தல விசேஷம்:

ராமானுஜரின் குருவான யாதவப்ரகாசர், தனது சிஷ்யர்களுக்கும், ராமானுஜருக்கும் வேதாந்தங்களைக் கற்பித்த இடம்.

வறுத்த பயிறை முளைக்க வைக்கும் தாயார்:
குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள், பச்சைப்பயறை மடப்பள்ளியில் கொடுத்து வறுத்துத் தரச் சொல்லி கொடுப்பார்களாம். பின்னர், தாயார் சன்னதிக்குச் சென்று, பட்டர் அதில் தீர்த்தத்தினைத் தெளிப்பார். நனைத்த பயறை மடியில் கட்டிக்கொண்டு அங்கேயே தங்கி புஷ்கரிணி தீர்த்தத்தை நாள் முழுவதும் தெளித்துக் கொண்டே இருப்பார்களாம். மறுநாள் விடிந்ததும், தாயார் சன்னதிக்குச் சென்று அந்தப் பயறை சன்னதியில் சமர்ப்பிக்கிறார்கள். வறுத்த பயறு முளைத்திருந்தால் குழந்தைப்பேறு நிச்சயம் என்பது நம்பிக்கை. அதனால் மரகதவல்லி தாயார் ‘வறுத்த பயிறை முளைக்க வைக்கும் தாயார்’ என அழைக்கப்படுகிறார். குழந்தை பிறந்ததும், குழந்தையோடு வந்து தாயாரை சேவிப்பார்களாம்.

இத்தலத்தில் குதிரை வாகனம் ஒரு அதிசயமாகும். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. பெருமாளுக்காகவே இதை ஓர் தச்சர் செய்ய, அரசன் அதே மாதிரி தனக்கும் ஒன்று செய்யச் சொல்ல, தச்சர் விஜயராகவனைத் தவிர வேறு யாருக்கும் வாகனம் செய்து கொடுப்பதில்லை என்ற உறுதியோடு உயிர் துறந்தாராம். அதனால் திருவிழாவில் எட்டாம் நாளன்று, குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, தச்சரின் பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளி, அவரது வாரிசுகள் பெருமாளுக்கு மரியாதை செய்கின்றனர்.

உற்சவங்கள்: பிரம்மோற்சவம், குதிரை வாகனம், தெப்போற்சவம், ஸ்ரீ ராம நவமி, வசந்த உற்சவம், வைகுண்ட ஏகாதசி.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 - 12, மாலை 4 - 7

வழி: சென்னை பெங்களூர் மார்க்கத்தில் சென்னையிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ளது. காஞ்சியிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் உள்ளது. பாலு செட்டியார் சத்திரம் என்ற ஊரிலிருந்து செல்லும் சென்னை - வேலூர் சாலையில் அமைந்துள்ளது. சென்னை, காஞ்சியிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

முகவரி:
ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோயில்

திருப்புட்குழி - 631 551
பாலு செட்டியார் சத்திரம் வழி
காஞ்சிபுரம் மாவட்டம்