Wednesday, August 29, 2012

திருவிண்ணகர் / ஒப்பிலியப்பனுடன் ஒப்பில்லா ஒரு நாள் / ஒப்பிலியப்பன் கோயில் / கண்ணுக்கினியன கண்டோம்-7


தொகுப்பு சுற்றுப்பயணம் (package tour) பற்றிக்கேள்விப்பட்டிருக்கிறோம். இது தொகுப்பு தரிசனம் (package of darshans).

அதென்ன தொகுப்பு தரிசனம்?

என் அம்மா, வெகு வருடங்களுக்கு முன்பு உப்பிலியப்பனுக்கு பெரிய திருமஞ்சனம் வேண்டிக் கொண்டிருந்தார். அவருக்குக் குடும்பத்தில் எல்லாரும் ஸேவிக்க வேண்டும் என்று ஆசை. ரொம்ப வருடங்கள் தள்ளிப்போட்டு, ஒரு வழியாக சென்ற வருடம் சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரத்தில், மதுரகவியாழ்வார் திரு நக்ஷத்திரத்தன்று ஏற்பாடாயிற்று.


வந்த உடனேயே பதிவிட நினைத்தேன். அனைத்தும் அவன் திருவுள்ளப்படி தானே நடக்கிறது? மிகவும் தாமதமாக இன்று பதிவிட்டதும் நல்லதற்குத் தான். ஸ்ரீஒப்பிலியப்பனுக்கு ஆவணி மாதத்தில் ‘பவித்ரோற்சவம்’ நடைபெறுகிறது.  இந்த விழா, திருவோண நட்சத்திரத்தன்று (ஓணம் பண்டிகை) முடிவடைகிறது. அன்று சூரிய உதயத்தின்போது கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார் பெருமாள். இதை ‘உதய கருட சேவை’ என்கிறார்கள். கருட வாகனத்தில் புறப்படும் பெருமாள் தட்சிண கங்கை எனப்படும் நாட்டாற்றில் தீர்த்தமாடி திரும்புகிறார். அதன்பின் திருவோண பூஜை நடக்கிறது.

ஒரு வருடம் கழித்து இந்தப் பதிவு இன்று, திருவோணம், ஓணம் பண்டிகையன்று அமைந்திருப்பதை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

மறுபடியும் ஒப்பிலியப்பனுடன் இருந்த அந்த ஒரு நாளை மனக்கண்ணில் கொண்டு வந்து எழுதியது, மறுபடியும் ஸேவித்தது போல் உள்ளது. என்னுடைய மனோரதமும் நிறைவேறியது.

எது நடக்க வேண்டுமோ அது அவன் திருவுள்ளப்படி தானே நடக்கும்! எல்லாரும் அவரவர்கள் இடங்களில் இருந்து ஒப்பிலியப்பன் கோயில் சென்றடைந்தோம்.

கம்பீரமாகக் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறது ராஜ கோபுரம். 




முதல் நாள் - உப்பிலியப்பன் கல்யாண உற்சவம் , கருட ஸேவை, டோலை (ஊஞ்சல் ஸேவை



தன் மகளை ஒரு பொழுதும் பிரியக்கூடாது என மார்க்கண்டேயர் கேட்டுக்கொண்டதால், தாயாருடன் திருவீதி புறப்பாடு. 


இரண்டாம் நாள் - விஸ்வரூப தரிசனம் , பெரிய திருமஞ்சனம், பெருமாளுக்கு தங்க கவசம் சாற்றுதல், ஸ்வர்ண புஷ்ப அர்ச்சனை , வடை மாலை, பள்ளியறை சேவை. எல்லா ஸேவையும் ஸேவிக்கப்பெற்றது எங்கள் பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும். 

இனி, இந்த திவ்யதேசம் பற்றி:

திருவிண்ணகரம் (ஒப்பிலியப்பன் கோயில்). மார்க்கண்டேய க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.

மூலவர்: ஒப்பிலியப்பன்(ஒப்பில்லாதவன்), ஸ்ரீனிவாசன் என்ற திருநாமம். திருப்பதி வேங்கடாசலபதியைப் போன்ற தோற்றத்துடன் நின்ற திருக்கோலம்.

பெருமாளின் வலது ஹஸ்தத்தில் சரம ஸ்லோகத்தின் பகுதியான "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்பது வைரத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. வைணவ ஸம்பிரதாயத்தில் உயர்வாகப் பேசப்படும் சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் அழகிய ஹஸ்தம்." என்னையே சரணடை" என்று சரணாகதி மார்க்கத்தை உணர்த்தும் ஹஸ்தம்.

தாயார்: பூமி தேவி , பூமி நாச்சியார் என்று திருநாமம். பெருமாளுக்கு வலது புறம், கீழே மண்டியிட்டு வணங்கிக்கொண்டிருக்கும் திருக்கல்யாணக்கோலம். தனிச்சன்னிதி இல்லை.

பெருமாளுக்கு இடதுபுறம் மார்க்கண்டேயர் மண்டியிட்டு வணங்கிக் கொண்டிருக்கிறார்.

தீர்த்தம் - அஹோராத்ர புஷ்கரிணி, ஆர்த்தி புஷ்கரிணி, ஆர்த்தி புஷ்கரிணி, "பகலிராப்பொய்கை' என்றும் பெயருண்டு. 

விமானம் - விஷ்ணு விமானம், சுத்தானந்த விமானம்.


ப்ரத்யக்ஷம் - மார்க்கண்டேயர், பெரிய திருவடி, காவேரி, தர்மதேவதை.

ம்ருகண்டு முனிவரின் மகன் மார்க்கண்டேயர், மகாலக்ஷ்மி தனக்கு மகளாய் வர வேண்டும் எனத் தவம் செய்தார். திருத்துழாய் வனத்தில், பூமியில், தாயாரையே மகளாய்ப் பெற்றார். பூமியிலிருந்து கிடைத்ததால் பூமிதேவி என்று திருநாமம். அவள் திருமணப் பருவம் அடைந்தாள். திருமால் முதியவர் வேடமிட்டு மார்க்கண்டேயரிடம் சென்று பெண் கேட்டார். மார்க்கண்டேயர், ‘‘அவள் குழந்தை. மிகச் சிறியவள். உப்பு போட்டு சமைக்க வேண்டும் என்று கூட தெரியாது " என்று கூறினார். அப்போது முதியவர், அவருக்கு ஸ்ரீமந் நாராயணனாகக் காட்சி தந்தார். அதைக்கண்ட மார்க்கண்டேயர், மனம் மகிழ்ந்து, திருமணத்துக்குச் சம்மதித்தார். பெருமாள், "உங்கள் பெண் உப்பில்லாமல் சமைப்பதையே நாம் ஏற்றுக்கொள்வோம், மகாலக்ஷ்மியான இவளை மணம் புரியவே யாம் வந்தோம்" என்று கூறி பூமிதேவியை மணந்தார்.

அதனால் இக்கோயிலில் தளிகையில் உப்பு சேர்ப்பதில்லை. பெருமாளும் உப்பிலியப்பன் என்று அழைக்கப்படலானார். உப்பு இல்லாவிட்டாலும், பிரஸாதங்கள் மிகவும் ருசியாக உள்ளது.

பெருமாள் சந்நிதியை நோக்கியபடி கருடன் சந்நிதியும், மற்றும் கண்ணன், ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், பாஷ்யகாரர், ஸ்வாமி தேசிகன், ஆழ்வார்கள் சந்நிதிகளும் உள்ளன.

நம்மாழ்வாருக்கு , மூலவர் விண்ணகரப்பனாகவும், உற்சவர் பொன்னப்பனாகவும், போகமூர்த்தி முத்தப்பனாகவும், தனிச் சன்னதிகளில் என்னப்பனாகவும் மணியப்பனாகவும் காட்சி அளித்திருக்கின்றார். மணியப்பனது இரு புறமும் சங்கும் சக்கரமும் அமைந்துள்ளன. முத்தப்பனுக்கு மட்டும் சந்நிதி இல்லை.

இப்படி பெருமாளை ஐந்து வடிவங்களில் அர்ச்சாவதாரமாய்க் கண்ட நம்மாழ்வார்,

என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பாரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே.

(திருவாய்மொழி ஆறாம் பத்து 6-3-9,) 

என்று பாடியுள்ளார்.

தன்னொப்பாரில்லப்பன் என்று நம்மாழ்வார் அழைத்ததால் “ஒப்பிலியப்பன்” என்ற திருநாமம் பெருமாளுக்கு ஏற்பட்டது.

க்ஷேத்ர விசேஷம் : திருப்பதி பெருமாளுக்கு, உப்பிலியப்பன் அண்ணா என்று ஐதீகம். அதனால் , திருப்பதி போக முடியாதவர்கள், தங்கள் பிரார்த்தனைகளை இங்கே செலுத்துகிறார்கள்.

இரவில் புஷ்கரிணியில் நீராடுவது பாவம் என்று ஐதீகம். ஆனால், இந்த ஒரு திவ்ய க்ஷேத்ரத்தில் மட்டும் புஷ்கரிணியில் இரவிலும் நீராடலாம் என்பது சிறப்பம்சம்.  புஷ்கரிணியில் மீன்கள் நிறைய இருக்கின்றன. 





சென்ற, பார்த்த திருக்கோவில்களைப் பற்றிய நினைவுக்குறிப்புகள் அடியேனுக்குத் தேவையாய் இருந்ததால் "கண் படைத்த பயன்" என்ற இந்த தொடர் எழுத ஆரம்பித்தேன்.. இது எனக்கு சிறந்த வடிகாலாகவும் உள்ளது அதே சமயம் மிகுந்த மனநிறைவையும் தருகிறது. மனதுக்கு நிறைவான யாத்திரை.

இக்கோவிலுக்கு அருகில் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. அதனால் இத்திருத்தலம் திருநாகேஸ்வரம் என்றே சொல்லப்படுகிறது.