Monday, April 11, 2011

மதுராந்தகம் - ஏரி காத்த ராமர் கோயில் / கண்ணுக்கினியன கண்டோம்-2




நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே "ராமா" என்ற இரண்டெழுத்தினால். - கவிச் சக்கரவர்த்தி கம்பன்மதுராந்தகம்: அபிமான ஸ்தலம். இது வகுளாரண்ய க்ஷேத்ரம் எனப்படுகிறது.

பெருமாள்: ஏரி காத்த ராமர், கருணாகரன் . கிழக்கே நின்ற திருக்கோலம்
தாயார்: ஜனகவல்லி
தீர்த்தம்: ராமசந்த்ர புஷ்கரிணி
ஸ்தல விசேஷம்: பாஷ்யகாரர் ஸ்ரீ பெரிய நம்பிகளிடம் பஞ்சஸம்ஸ்காரம் பெற்ற ஸ்தலம்.

மூலவர் ஸ்ரீ ராமர் சீதாதேவியின் கைகளைப் பற்றியவாறு, நின்ற திருக்கோலத்தில், கோதண்டராமராகக் காக்ஷி தருகிறார். தர்மத்தைக் காக்க திருஅவதாரம் செய்து தானே மனிதனாக வாழ்ந்த ராமபிரான் சீதா லக்ஷ்மண ஸமேதராய் எழுந்தருளியிருக்கிறார். இவர்களை வணங்கியபடி விபண்டக மகரிஷியும் இருக்கிறார். ஸ்ரீதேவி பூதேவி சமேத கருணாகரமூர்த்தியும் இங்கு எழுந்தருளியுள்ளார். கர்ப்பக்ருஹத்திற்குள்ஆஞ்சநேயர் இல்லை என்பது ஆச்சர்யம்.

ஆஞ்சநேயர், கோயிலுக்கு வெளியே புஷ்கரிணியின் கரையில் தனிக்கோயில் கொண்டுள்ளார்.

ராமர் சன்னிதிக்கு வலப்புறம் ஜனகவல்லி தாயாருக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.

தனிச்சன்னிதியில் யந்த்ர சக்கரத்தாழ்வார் காக்ஷி தருகிறார். பின்புறம் யோக நரசிம்ஹர். ஆண்டாள், ராமனுஜருக்குத் தனிச்சன்னிதிகளும் உள்ளன. நவநீதக்கண்ணன் ராமானுஜர் சன்னிதியில் காக்ஷி தருகிறார்.

ஆண்டாள் சந்நிதிக்கு அருகில் உள்ள மகிழமரத்தடியில்தான் ராமாநுஜர் பெரிய நம்பிகளிடம் மந்திர உபதேசம்பெற்றார் என்பதும் அங்கு பொறிக்கப்பட்டு வரைபடமாகவும் உள்ளது.

பாஷ்யகாரருக்கு ஸ்ரீ பெரிய நம்பிகள் மகிழ மரத்தடியில் பஞ்சஸம்ஸ்காரம் செய்துவைத்து அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகியவற்றை உபதேசித்தாராம்.

நாங்கள் சென்ற சமயம் கோயிலில் பல்லவோற்சவம். பங்குனி மாதத்தில் திருவோணம் முடிய இந்த உற்சவம் 3 நாள் நடைபெறுமாம். காஞ்சி, திருவள்ளூர், மதுராந்தகம் ஆகிய மூன்று ஊர்களில் இந்த உற்சவம் நடைபெறுவதாக அர்ச்சகர் சொன்னார்.

1937ம் வருடம் இந்த கோவிலை வடநாட்டில் உள்ள ஒருவர் புனரமைத்தார். ஒரு தூண் நடுவதற்காகத் தோண்டும் போது ஒரு சுரங்கம் தென்பட்டதாம். இச்சுரங்கத்தின் நடுவே ஒரு தட்டில் நவநீதக் கண்ணன் விக்ரகமும் பஞ்சஸம்ஸ்காரத்திற்கு உபயோகப்படும் சங்கும் சக்கரமும் வைக்கப்பட்டு இருந்தனவாம். இந்த சங்கும் சக்கரமும் பாஷ்யகாரரின் பஞ்சஸம்ஸ்காரத்திற்கு உபயோகப் படுத்தப்பட்டிருக்கும் என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்.

மதுராந்தகம் ஏரியைக் காத்த ராமர் இவர். இதற்குப் பின்னால் ஒரு சுவையான வரலாறு உள்ளது. 18ம் நூற்றாண்டு . ஒவ்வொரு வருடமும் மழையில் மதுராந்தகம் ஏரி உடைத்துக்கொண்டு விடும் ஒருநாள் பெரிய மழை பெய்தது. மதுராந்தகம் ஏரியின் கரைகள் உடையக்கூடிய அபாய நிலையில் இருந்தது. செங்கல்பட்டு ஜில்லாவிற்கு கிழக்கு இந்திய கம்பெனியின் கலெக்டராக இருந்த கர்னல் லையனல் பிளேஸ் என்பவர், அந்தப் பெரும் மழையிலும், மதுராந்தகம் பெரிய ஏரியைப் பார்வையிடுவதற்காக வந்திருந்தார்.

அப்போது அங்கு இருந்தவர்களிடம், "நீங்கள் கோயில் கட்டி
வணங்குகிறீர்களே. அந்த தெய்வம் இந்த ஏரியின் கரை உடையாமல் காக்க
வேண்டியதுதானே?" என்றாராம்.

அப்போது ஒருவர், "நம்பிக்கையுடன் எங்கள் ராமரைக்
வேண்டிக்கொண்டால் அவர் வந்து ஏரியைக் காப்பார்", என்று சொன்னாராம்.உடனே கலெக்டர், “இந்த ஸ்ரீ ராமன் ஏரியை உடையாமல் காப்பாற்றினால் ஜனகவல்லித் தாயார் சந்நிதியை சரி செய்து தரலாம்என்று நினைத்துக் கொண்டாராம்.

மழை பெய்து ஏரி நிரம்பியது. வெள்ளம் மிகவும் அதிகமாகி, ஏரிக்கரையும் உடையும் நிலையில் இருந்தது. ஆனால் கரை உடையவில்லை. ஏரியில் தண்ணீர் நிரம்பிக்கொண்டு இருந்தது. ஆனாலும் கரை உடையவில்லை.

தண்ணீர் நிரம்பியும் ஏன் ஏரி உடையவில்லை என்பது பெரிய மர்மமாக இருந்தது.

அப்பொழுது திடீரென்று கண்ணைப் பறிக்கும் அளவுக்கு மின்னல் வெட்டியது.

அந்த ஆங்கிலேயர் ஒரு காட்சியைக்கண்டார்.

ஏரியின் கரை மீது இரண்டு வீரர்கள் நின்றுகொண்டிருந்தனர். இருவர் கைகளிலும்
வில்லேந்தியிருந்தார்கள். ஒரே கணம்தான் அந்தக் காட்சியை அந்த அதிகாரி
கண்டார். கரையில் வில் அம்புடன் ராமலக்ஷ்மணர்கள் ஏரியைப் பாதுகாத்து வருவதைக் கண்டு தரையில் மண்டியிட்டு விழுந்து வணங்கினார்.

அந்த வருடம் ஏரிக்கரை உடையவில்லை. தாம் முன் கூறியபடி தாயார் சந்நிதியின் சீரமைப்பு கைங்கர்யங்களை செய்தார். இந்த வரலாறு தாயார் சந்நிதியில் பொறிக்கப்படுள்ளது. அதன்பின்னர் அங்கிருந்த ராமர் கோயிலுக்குத் திருப்பணிகள் பலவற்றை அவர் செய்தாராம்.

இதனால் ராமருக்குஏரி காத்த ராமர்என்று பெயர் ஏற்பட்டது.

4 comments:

  1. விஸ்தாரமாகவும் சுவைப்படும்படியாகவும் எழுதி உள்ளீர்கள்.
    slide show needs to be rotated .

    ReplyDelete
  2. Thanks for visiting my blog. The font I used is TAMaduram and the link is given in my blog posting of FEB 2011. Pls find below the link for your easy access:

    http://mahaperiavaamyguru.blogspot.com/2011/02/tamil-font.html


    I visited your blogspots and it is really very informative and useful. Keep writing!!
    Regards,
    Subbu

    ReplyDelete
  3. //அப்பொழுது திடீரென்று கண்ணைப் பறிக்கும் அளவுக்கு மின்னல் வெட்டியது.

    அந்த ஆங்கிலேயர் ஒரு காட்சியைக்கண்டார்.

    ஏரியின் கரை மீது இரண்டு வீரர்கள் நின்றுகொண்டிருந்தனர். இருவர் கைகளிலும்
    வில்லேந்தியிருந்தார்கள். ஒரே கணம்தான் அந்தக் காட்சியை அந்த அதிகாரி
    கண்டார். கரையில் வில் அம்புடன் ராமலக்ஷ்மணர்கள் ஏரியைப் பாதுகாத்து வருவதைக் கண்டு தரையில் மண்டியிட்டு விழுந்து வணங்கினார்.//
    வணங்க வேண்டிய பதிவு ... வாழ்த்துக்கள்

    ReplyDelete