உமதடிகள் அடைகின்றேனென்று ஒருகாலுரைத்தவரை
அமையுமினி என்பவர்போல் அஞ்சலெனக் கரம்வைத்து
தமதனைத்தும் அவர்தமக்கு வழங்கியுந்தான் மிகவிளங்கும்
அமைவுடைய அருளாளர் அடியிணையை அடைந்தேனே - அடைக்கலப் பத்து.
சரணாகதி என்பது, தன்னை ஒருவரிடம் அர்ப்பணித்துவிடுவது விடுவது.
பரமாத்வாவிடம் நம்மை அர்ப்பணித்து, நம்மால் முடிந்தது ஒன்றும் இல்லை "எல்லாம் அவனே" என்றும் , நம்முடைய செயல்கள், மற்றும் அதனால் உண்டாகும் பலன்களையும் அவரிடமே அர்ப்பணித்து, பரமாத்மாவின் திருவடிகளைப் பற்றியிருப்பது ப்ரபத்தி / சரணாகதி எனப்படும்.
“நான் செய்தேன், என்னால் எல்லாம் முடியும் , நானே செய்து விடுவேன்.’ என்று சொல்பவர்களிடம் பகவான் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறார். "பகவானே, நீ தான் கதி, நீ விட்ட வழி” என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. திரௌபதி கதை இதற்கு எடுத்துக்காட்டு . சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்சுதா -கோவிந்தா புண்டரீகாக்ஷா ரக்ஷமாம் சரணாகதம் " என்று கூப்பிட்டவுடன் ஓடி வந்து உதவினான் .
குலசேகர ஆழ்வார்
தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவும் மலர்பொழில் சூழ் வித்துவக் கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழுங்குழவி அதுவே போல் இருந்தேனே!
என்று பாடியுள்ளார்.
ஒரு தாய் தன் குழந்தையை விட்டுவிட்டாலும், அந்தக் குழந்தை, தாயின் அன்புக்காக ஏங்கி அழுவது போன்று , தனக்குத் துயரம் வந்தபோதும், தான் அந்தப் பெருமாளின் அருளையே வேண்டியிருப்பதாகக் கூறுகிறார். கஷ்டங்களோ, துன்பமோ வந்தாலும் அவற்றைப் போக்குபவனும் அவனே என்கிறார்.
“என்னைக் காத்தருள வேண்டிய பொறுப்பு உன்னுடையது உன்னாலன்றி என்னால் ஆவது ஒன்றுமில்லை” என்னும் திடமான எண்ணத்துடன் அவன் திருவடியைப் பற்றிக்கொள்ளுவதே ப்ரபத்தி ஆகும்.
தன்னைச் சரணடைந்தவர்களின் துயரை நீக்குபவர் பகவான். தன் பக்தர்களுக்கு உண்டான துன்பத்தைத் தன் துன்பமாகக்கருதி பக்தர்களைக் காப்பாற்றுகிறார்.
தாய்ப்பூனை எங்கு சென்றாலும், குட்டியைத் தன் வாயால் கவ்விக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லும். குட்டிப்பூனை இதற்காக எந்த முயற்சியும் செய்வதில்லை. அதாவது தன்னை முழுமையாக தாயிடம் ஒப்படைத்து விட்டது. இதே போல் அந்தப் பரமாத்மாவைப் பற்றும் நிலையே ப்ரபத்தி .
"பகவானே, நீ தான் கதி, நீ விட்ட வழி” என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. அப்போது பகவான் நம்மைக் காப்பாற்றுகிறான், நம்மை வழி நடத்துகிறான், நற்கதியடையச் செய்து மோக்ஷத்தையும் அளிக்கிறான்.
No comments:
Post a Comment