ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
திருமண தடை நீக்கும் நவ நரசிம்மர்
ஆரணியிலிருந்து 15 கி.மீ, வந்தவாசியிலிருந்து 30 கி.மீ , சேத்துப்பட்டிலிருந்து 15 கி.மீ, செய்யாறிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது.
தட்சிண சிம்மாசலம் என்றும் தட்சிண அகோபிலம் என்றும் சொல்லப்படும் இந்த நவநரசிம்ம ஸ்தலம் சிறிய மலைமேல் உள்ளது. சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றும் பின்னர் மருவி ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
சிறிய பர்வதம். மலை சிங்கத்தைப் போன்று கம்பீரமாக இருக்கின்றது. மலை ஏறும் வழியில் நிறைய குரங்குகள் இருக்கின்றன. அதில் ஒரு குரங்கு குழாயைத் திறந்து தண்ணீர் அருந்தும் காட்சியை ரசித்துக் கொண்டே ஏறினோம்.
ஆவணியாபுரம் பஞ்ச திருப்பதி என பக்தர்களால் போற்றப்படுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி, திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், சோளிங்கர் யோக நரசிம்மர், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் ஆகிய ஐந்து மூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
சன்னதிகள் மலையின் இருநிலைகளாக அமைந்துள்ளன. மலை உச்சியில் ஸ்ரீ ரங்கநாதரும், ஸ்ரீ வெங்கடாஜலபதியும், ஸ்ரீ வரதராஜபெருமாளும், ஸ்ரீ யோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர். கீழே குகை போன்ற கர்ப்பக்ருஹத்தில் ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது இடதுபுறம் எழுந்தருளி உள்ள தாயாருக்கும் சிம்மமுகம். உற்சவர் நின்ற திருக்கோலத்தில் சிம்ம முகத்துடன் சேவை சாதிக்கிறார். சன்னதியின் எதிரில் எழுந்தருளியுள்ள கருடாழ்வாருக்கும் சிம்ம முகம். இச்சிறப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காதது. நவநரசிம்மரை சேவித்த பலனை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெறுகின்றனர். லட்சுமி நரசிம்மர் கர்ப்பக்ருஹத்தில் மூன்று நரசிம்மரும், தாயார் சன்னதி அருகே பஞ்ச நரசிம்மரும், மலை உச்சியில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மர் என்று நவ நரசிம்மராக சேவை சாதிக்கிறார். கீழ்மலையில் உள்ள சன்னதியின் மேற்கு திசையில், வில் ஏந்திய நிலையில் வீர ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.
கீழ்மலையில், லட்சுமி நரசிம்மர் சன்னதியும், அலர்மேல்மங்கை தாயாருக்கு தனி சன்னதியும், தாயார் சன்னதி அருகே பஞ்சநரசிம்மர் சன்னதியும், அழகிய கண்ணாடி அறையில் உற்சவ மூர்த்திகளும் காட்சியளிக்கின்றனர். மேல் மலையில், வெங்கடாசலபதி பெருமாளுக்கு தனி சன்னதியும், ரங்கநாதர், வரதராஜர், யோக நரசிம்மர், அமிர்தவல்லி தாயார் சன்னதியும் உள்ளது.
உற்சவங்கள்/ திருவிழா: திருக்கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம், மாதந்தோறும் சுவாதி நட்சத்திர தினத்தில் ஊஞ்சல் உற்சவம், நரசிம்ம ஜெயந்தி, விசேஷ திருமஞ்சனங்கள், வைகுண்ட ஏகாதசி
கோயில் திறந்திருக்கும் நேரம்: 6AM–12 PM; 3–8 PM
பேருந்து: சேத்துப்பட்டு, செய்யாறு, ஆரணி, வந்தவாசி முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
முகவரி:
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்
ஆவணியாபுரம், திருவண்ணாமலை-604504.
No comments:
Post a Comment