ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகளின் சீடர் ஸ்ரீ ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் அமைக்கப்பட்ட இக்கோயில், மிகுந்த கலைநயத்துடன் வியக்கத்தகுந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் தென்னிந்திய பாணியில் கட்டப்பட்டுள்ளது. பூரி ஜகன்னாதர் கோவிலின் பாணியில் கருவறை கோபுரம் அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த கோபுரமும் அதன்மேல் தங்க கலசமும், அதன்மேல் சுதர்சன சக்கரமும், மஞ்சள்நிறக்கொடியும் பார்க்கும்போது பிரம்மாண்டமாய் இருக்கிறது.
கண்ணன் என்றாலே அலங்காரப்ரியன். பாண்டுரங்கனுக்குத் தினமும் ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்கிறார்கள். ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீ குருவாயூரப்பன், ஸ்ரீ வேணுகோபாலன், ஸ்ரீ ராமர், வெண்ணை அலங்காரம், ராஜஸ்தான் தலைப்பாகையுடன் ராஜகோபாலன் அலங்காரம், காளிங்க நர்த்தனம் என்று ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரம்.
தல விருக்ஷம் தமால மரம். இந்த மரம் மிகவும் விசேஷமானது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் இம்மரத்தின் கீழ் நின்று புல்லாங்குழல் வாசிப்பார் எனவும், கோபிகைகளும் ராதையும் அதைக் கேட்டு மயங்கியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. வடக்கே சாக்ஷி கோபால் என்னும் ஊரில் இந்த மரத்தினடியில்தான் ஸ்ரீ க்ருஷ்ணர் தன் பக்தனுக்கு சாக்ஷி சொன்னாராம். வட மாநிலங்களில் மட்டுமே காணப்படும் இந்த விருக்ஷம் தென்னாட்டில் இந்தத் தலத்தில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு. ப்ரார்த்தனை செய்துகொண்டு இம்மரத்தை 12 முறை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்தால் திருமணம், குழந்தைப்பேறு சித்திக்கின்றது என்று மரத்தினடியில் உள்ள குறிப்பு கூறுகின்றது.
அர்த்தமண்டபம், மஹாமண்டபம் போன்ற மண்டபங்களும் இருக்கிறது. மண்டபங்களில் ஃபைபர்கிளாசில் கலை வேலைப்பாடுகளுடன் கண்ணனின் லீலைகளை அழகிய வண்ண ஓவியங்களாக அமைத்திருக்கிறார்கள். முன் மண்டபத்தில் விதம் விதமான அலங்காரங்களைப் படங்களாக வைத்திருக்கிறார்கள். மேற்கூரைகளிலும் இதுபோன்று ஓவியங்கள் வரையப்பட்டிருக்கிறது. நந்தவனத்தை மிக நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். கோவிலும் மிகத் தூய்மையாக உள்ளது.
இந்த ஆலயத்திற்கு அருகிலேயே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும் உள்ளது. மலயத்வஜ பாண்டியன் குழந்தைப்பேறு வேண்டி இந்தத் தலத்தில் யாகம் செய்தபோது யாக குண்டத்திலிருந்து மீனாக்ஷி தோன்றியதாகவும், அவளை அழைத்துக்கொண்டு மன்னன் மதுரை சென்றதாகவும் ஐதீகம். அதனால் இந்தத் தலம் மீனாக்ஷியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.
கோவிலுக்குப் பின்புறம் ஞானாந்த சுவாமிகளின் மடம் உள்ளது. அங்கு ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகளுக்கு துளசி பிருந்தாவனமும் உள்ளது.
உற்சவங்கள்/ திருவிழா: கருட சேவை, புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் வெள்ளித் தேர், கிருஷ்ண ஜெயந்தி,வைகுண்ட ஏகாதசி, விஷுக்கனி.
கோயில் திறந்திருக்கும் நேரம்: 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
வழி:
கோயில் திறந்திருக்கும் நேரம்: 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
வழி:
பேருந்து வசதிகள் உள்ளன. காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் அனைத்து பேருந்துகளும் தென்னாங்கூர் வழியாகவே செல்லும். வந்தவாசியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாகவும் செல்லலாம். உத்திரமேரூரில் இருந்து 21 கி.மீ. தூரத்தில் உள்ளது.
முகவரி:
அருள்மிகு ரகுமாயி ஸமேத பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர் - 604 408.
முகவரி:
அருள்மிகு ரகுமாயி ஸமேத பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர் - 604 408.
திருவண்ணாமலை மாவட்டம்.
தென்னாங்கூர் பாண்டுரங்கனை..அழகிய படங்களுடன் நாங்களும் அறிந்து கொண்டோம்....
ReplyDeleteஅருமை..