Saturday, July 22, 2017

பூவிருந்தவல்லி - திருக்கச்சி நம்பிகள் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் / கண்ணுக்கினியன கண்டோம் - 30

பூந்தமல்லி என்னும் பூவிருந்தவல்லி, சென்னையில் இருந்து மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . இங்கு அமைந்துள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருக்கச்சி நம்பிகளுக்காக, வரதராஜரும் , ரங்கநாதரும், திருவேங்கடத்தானும் ஒரே இடத்தில் எழுந்தருளிய திருத்தலமாகும். 
புஷ்பபுரி க்ஷேத்ரம். ஐந்து நிலை ராஜகோபுரம். ஸ்வேதராஜ புஷ்கரிணி. ஸ்ரீதேவி பூதேவி ஸமேத வரதராஜப் பெருமாள். தாயார் ஸ்ரீ புஷ்பவல்லி. இந்த தலத்தில் பெருமாள் வரதராஜ பெருமாள் என்ற திருநாமத்துடனேயே எழுந்தருளியுள்ளார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸமேதராக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இங்குள்ள வரதராஜப்பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின்தலையில் சூரியனுடன் சேவை சாதிக்கிறார். தாயார் புஷ்பவல்லி என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். தாயார் மல்லிகைப் பூவில் இருந்து தோன்றியதால், பூவிருந்தவல்லி என்ற பெயர் இந்த ஸ்தலத்திற்கு ஏற்பட்டதாம். தனிக் கோயில் நாச்சியார். தலவிருக்ஷம் மல்லிவனம். திருக்கச்சி நம்பிகள் இங்கு நந்தவனம் அமைத்து மலர் தொண்டு செய்ததால், புஷ்பமங்கலம் என்றும், தற்போது பூவிருந்தவல்லி என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள். ஸ்ரீனிவாச பெருமாளும் ஆண்டாளும் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். அருகிலேயே கோசாலை அமைந்துள்ளது. ஒய்யாளி மண்டபமும் உள்ளது. அதில் அழகான ஓவியங்கள் உள்ளது. இத்தலத்தில் அரச மரம், வேப்பமரமும் பின்னிப் பிணைந்த பீடம் உள்ளது. அதில் நாகரும், அருகில் காளிங்க நர்த்தன கிருஷ்ணன் சன்னிதியும் உள்ளது. இந்தக் கிருஷ்ணனை அஷ்டமி தினங்களில் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நாக தோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கை. திருக்கோயிலின் உள்ளே ரங்கநாதருக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் தனிச் சன்னிதி இருக்கிறது. ஆஞ்சநேயர் கைகூப்பிய வண்ணம் சிறிய கற்சன்னதியில் தரிசனம் தருகிறார். பெருமாளை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். 


திருக்கச்சி நம்பிகள் வைசிய குலத்தைச் சேர்ந்தவர். வீரராகவர், கமலாயர் தம்பதிகளுக்கு நான்காவதாக பிறந்தவர் கஜேந்திரதாசர். இவர்தான் பிற்காலத்தில் திருக்கச்சி நம்பிகள் என்று பெயர் பெற்றார். திருமாலின் மீது பக்தி கொண்டவராய் வளர்ந்து வந்தார். இவர் தந்தை தன் பிள்ளைகள் நால்வருக்கும் தனது ஆஸ்தியைப் பங்கிட்டுக் கொடுத்தார். முதல் மூன்று பிள்ளைகளும் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டு வாழ்ந்தனர். கஜேந்திரதாசர் மட்டும் செல்வத்தைப் பற்றி எண்ணாமல் திருமாலுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே காலத்தைக் கழித்தார். தந்தையார் அது பற்றிக் கேட்டபோது,"கலங்காப் பெருநகரில் சேகரித்து வைத்தேன்" என்றார். அதாவது பரமபதத்தில் மறுமை செல்வம் சேர்த்து வைத்தார் என்று பொருள். பரம்பொருளின் திருவடி கைங்கர்யத்திலேயே எண்ணம் கொண்டவராக விளங்கினார்.

பூவிருந்தவல்லியில் தந்தை கொடுத்த நிலத்தில் நந்தவனம் அமைத்தார். பலவித பூச்செடிகளை நட்டு வளர்த்து வந்தார். அங்கு பூக்கும் பூக்களைப் பறித்து மாலையாக்கி, பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு நடந்தே சென்று வரதராஜருக்கு மாலை அணிவித்து அழகு பார்த்தார். இவர் காஞ்சி வரதருக்கு ஆலவட்டக் கைங்கர்யம் தவறாது செய்து வந்தார். இவரது கைங்கர்யத்தில் மகிழ்ந்த வரதராஜ பெருமாள், தன்னுடன் நேரில் பேசும் பாக்கியத்தை நம்பிகளுக்குத் தந்தருளினார். எவருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம் கிடைத்ததில் நம்பிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

நம்பிகளுக்கு வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் தளர்ச்சியினால், காஞ்சிபுரம் சென்று வரதராஜ பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் கவலையுற்றார். அப்போது வரதராஜ பெருமாள், அவர்முன் காட்சி தந்து அருள்புரிந்தார். அப்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதரும், திருமலை வேங்கடத்தானும் காட்சி கொடுத்து, பூவிருந்தவல்லியில் நிரந்தரமாக எழுந்தருளி நித்திய சேவை சாதிப்பதாக அருளினார்கள்.

உற்சவங்கள்/ திருவிழா: ஒவ்வொரு பெருமாளுக்கும் தனிதனி பிரம்மோற்சவம், விசேஷ திருமஞ்சனங்கள், வைகுண்ட ஏகாதசி, திருக்கச்சிநம்பியின் அவதார விழா

கோயில் திறந்திருக்கும் நேரம்: 6.30 am - 4.30 pm - 8.30 pm. திருவிழாக் காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டது

பேருந்து: சென்னையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

முகவரி:
அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில்
பூந்தமல்லி, 

சென்னை - 56

No comments:

Post a Comment