Tuesday, July 18, 2017

கண்ணன் கதைகள் (61) - சீசா



வயதான நம்பூதிரிப் பெண் ஒருத்தி தனியே வசித்து வந்தாள். அவள் பலகாலமாகத் தாங்க முடியாத தலைவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தாள். பல சிகிச்சைகள் செய்தும் அவள் தலைவலி குணமாகவில்லை. அவள் எப்போதும் குருவாயூரப்பனையே தியானித்துத் தலைவலி சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருப்பாள்.

ஒரு நாள் இரவு நேரம். அவளுக்குத் தலைவலி  மிகவும் அதிகமாக இருந்தது. துணைக்கு வேறு யாரும் இல்லை. காற்றாட திண்ணையில் அமர்ந்திருந்தாள். அப்போது ஏழு  அல்லது எட்டு வயதுள்ள சிறுவன் ஒருவன் அங்கு வந்தான்.  சிறுவன் அவளிடம் வந்து, "நீ எப்போதும் குருவாயூரப்பா, குருவாயூரப்பா  என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே, அப்படி இருந்தும் உனக்கு இந்தத் தலைவலி ஏன் போகவில்லை தெரியுமா?  நீ உன்னுடைய முன் ஜென்மத்தில் உன் குடும்பத்தில் இருந்த பெரியவர்களை மிகவும் மனம் நோகச் செய்தாய். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறாய்" என்று கூறினான். மேலும், அந்த சிறுவன், நான் ஒரு சீசாவில் தைலம் தருகிறேன், அதைத் தடவிக் கொள் என்று கூறி ஒரு சீசாவைக் கொடுத்தான்.

தைலத்தின் பெயரைப் பார்க்கலாம் என்று பார்த்தபோது, அதன் மேலிருந்த காகிதத்தில் முகவரி, குருவாயூர் கிழக்கே நடை என்று இருந்தது. அந்தத் தைலத்தை எடுத்து மூன்று முறை தலையில் தடவுவதற்குள் அவள் தலைவலி குணமாகியிருந்தது. தைலத்திற்குப் பணம் கொடுக்கலாம் என்று அந்த சிறுவனைத் தேடினாள். சிறுவனைக் காணவில்லை. அவனை அவள் அந்த ஊரில் இதுவரை பார்த்ததே இல்லை. சாக்ஷாத் குருவாயூரப்பனே சிறுவன் வடிவில் வந்து தன் தலைவலியைப் போக்கியதை உணர்ந்து மெய்சிலிர்த்தாள்.  இதுபோன்ற பல அற்புதங்கள் இன்றும் நடக்கிறது. கண்ணனை நம்பினோர் கைவிடப்பட்டுவதில்லை.

No comments:

Post a Comment