குருவாயூரில் இருந்த ஒரு வியாபாரியின் மகன் கல்லூரியில் படித்து வந்தான். வாலிபனாக இருப்பினும் தீவிர பக்தனாக இருந்தான். நாள்தோறும் பகவானின் நாமஜபம் செய்து வந்தான். ஓய்வு நேரத்தில் பாகவதம் படிப்பான். ஒரு நாள் எட்டமனூரில் இருந்த தன் சகோதரிக்குத் துணையாக எட்டமனூரில் இருந்து குருவாயூர் சென்றான். படகுப் பயணம். பொதுவாக படகுப் பயணம் பச்சைப்பசேலென்ற மனதைக் கொள்ளைக் கொள்ளும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு செல்வதால் மிகவும் உல்லாசமாக இருக்கும். அன்று வானம் இருண்டிருந்தது. ஒரே புயல் காற்று வேறு. அவர்கள் சென்ற படகில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. படகு தண்ணீரில் மூழ்கிவிடும் அபாயம் அதிகரித்தது. இந்தப்பையனும் அவன் சகோதரியும் விடாது நாமஜபம் செய்தார்கள்.
அந்தப் படகு நீரில் சிறிது சிறிதாக மூழ்கிக் கொண்டிருந்தது. படகிலிருந்த அனைவரும் பீதியடைந்து கூச்சலிட்டார்கள். இவர்கள் இருவரும் நாமஜபம் செய்வதை நிறுத்தவே இல்லை. அப்போது யாரோ அவர்களை இழுத்துத் தண்ணீரில் வீசி எறிவதைப் போல் உணர்ந்தார்கள். அவர்கள் சுயநினைவு தப்பியது. சுயநினைவுக்கு வந்தபோது கரையில் பாதுகாப்பான இடத்தில் இருப்பதை அறிந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்த மக்கள், அந்தப் படகு மூழ்கியதைப் பற்றியும், அதிலிருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும், இவர்கள் இருவரை மட்டும் ஒரு மீனவன் காப்பாற்றியதாகவும் சொன்னார்கள்.
அன்றிரவு பகவான் அவர்கள் கனவில் தோன்றி, "மீனவனாக வந்து உங்களைக் காப்பாற்றியது நான்தான்" என்று திருவாய் மலர்ந்தருளினார். பகவான் ஸ்ரீஹரியை எப்போதும் நினைவில் கொண்டு ஜபிப்பவர்கள் எப்பேற்பட்ட ஆபத்திலிருந்தும் காப்பாற்றப்படுவார்கள் என்று அவன் பாகவதத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. அவன் பகவானுக்கு நன்றி செலுத்தி மேலும் சிறந்த பக்தனாக விளங்கினான்.
No comments:
Post a Comment