Monday, July 31, 2017

திருநீர்மலை / ஸ்ரீ நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 37

108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், தொண்டைநாடு திவ்யதேசம்,
‘கண்ணுக்கினியன கண்டோம்’ வரிசையில் இன்று நாம் பார்க்கப் போவது திருநீர்மலை! சென்னையிலேயே இருந்தும் திருநீர்மலையை தரிசித்தது இல்லை என்ற எனது நீண்டநாள் குறையைப் போக்கிக்கொள்ள திருநீர்மலை பயணித்தோம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருநீர்மலை சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இங்கு, பெருமாளை நான்கு திருக்கோலங்களில் (நின்ற, இருந்த, கிடந்த, நடந்த) ஸேவிக்கலாம். மலையின் கீழே ஒரு சன்னதியும் மலை மேலே மூன்று சன்னதிகளும் உள்ளது.

ஐந்துநிலைக் கோபுரம். தோயகிரி விமானம்.
மலை அடிவாரத்தில் நீர்வண்ணன், (நீலமுகில்வண்ணன்), நின்ற திருக்கோலம். தாயார் அணிமாமலர்மங்கை தனிக்கோயில் நாச்சியார்

மலை அடிவாரத்தில் நீர்வண்ணப் பெருமாள், ஆஞ்சனேயர், ஆண்டாள் சன்னதிகள், பன்னிரு ஆழ்வார்களும், வெளிப் பிரகாரத்தில் அணிமாமலர் மங்கைத் தாயார் சன்னதியும், ஸ்ரீராமர் சன்னதியும் உள்ளது.

108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், தொண்டைநாடு திவ்யதேசம்,

108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், தொண்டைநாடு திவ்யதேசம்,
சுமார் 200-250 படிகள் ஏறினால் மலைக்கோயிலை அடையலாம். மலை மேலே பெருமாள் மூன்று திருக்கோலங்களில் சேவை சாதிக்கிறார்.
108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், தொண்டைநாடு திவ்யதேசம்,
ஸ்ரீ சாந்த நரசிம்மர்- வீற்றிருந்த திருக்கோலம். பால நரசிம்மரையும் காணலாம். பிரஹ்லாதனை வா என்று அழைப்பதுபோல் திருக்கரங்கள்.

ஸ்ரீ ரங்கநாதர் - சயன திருக்கோலம். மாணிக்க சயனம். ஸ்ரீதேவி பூதேவி திருவடியின்கீழ் அமர்ந்திருக்கின்றனர். உற்சவர் அழகியமணவாளன் ஸ்ரீதேவி பூதேவியுடன் மிகுந்த அழகாய் இருக்கிறார். தாயார் ரங்கநாயகி தனிக்கோயில் நாச்சியார். பிருகு மற்றும் மார்க்கண்டேய முனிவர்களின் தவத்திற்கு இரங்கிய பெருமாள், மாணிக்க ஸயனத்தில் அரங்கநாதர் திருக்கோலத்தில் அவர்களுக்குக் காட்சி தந்து அருளினார். 

உலகளந்த பெருமாள் (த்ரிவிக்ரமன்) - நடந்த திருக்கோலம்.
108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், தொண்டைநாடு திவ்யதேசம்,
க்ஷீர புஷ்கரிணி, ஸித்த புஷ்கரிணி, காருண்ய புஷ்கரிணி, ஸ்வர்ண புஷ்கரிணி என்ற நான்கு புஷ்கரிணிகள் அடங்கிய மணிகர்ணிகா தடாகம். 
108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், தொண்டைநாடு திவ்யதேசம்,
வால்மீகி இந்தத் தலத்தில் வந்து மலை மேல் உள்ள நரசிம்மர், ரங்கநாதர், த்ரிவிக்ரமப் பெருமாளை சேவித்து, பின் ஸ்ரீராமனைத் தியானம் செய்ய, ஸ்ரீ ராமர், சீதாதேவி, லக்ஷ்மணர், பரத, சத்ருக்னர் ஹனுமாரோடு காட்சி தந்து, வால்மீகியின் ப்ரார்த்தனைக்கிணங்க நீர்வண்ணராக சேவை சாதித்ததாக ஐதீகம். ராமருக்கும் தனி சன்னதி இருக்கிறது. இவரது சன்னதியில், வால்மீகியும் இருக்கிறார். இங்குள்ள ராமர், கல்யாணராமனாகக் காட்சி தருவதால், திருமணத்தடை நீக்கும் தலமாகவும், திருமணம் கைகூடும் பிரார்த்தனைத் தலமாகவும் விளங்குகின்றது.

திருமங்கையாழ்வார் இங்கு எழுந்தருளியபோது, இந்த மலையைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்ததாம். ஆறு மாதம் காத்திருந்து மங்களாசாசனம் செய்தாராம். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் பெருமாளுக்கு ‘நீர்வண்ணப்பெருமாள்’ என்றும், இந்த மலைக்கு ‘நீர்மலை’ என்று பெயர் உண்டாயிற்றாம். ஆழ்வார் தங்கியிருந்த இடம் திருமங்கை ஆழ்வார்புரம் என்று அழைக்கப்படுகின்றது. இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், பாடிய பாசுரத்தில், தாயாரை "அணிமாமலர்மங்கை' எனக் குறிப்பிடுகிறார்.

அன்றாயர் குலக்கொடியோடு
அணிமாமலர்மங்கையொடு அன்பளவி* அவுணர்க்கு
என்தானும் இரக்கமிலாதவனுக்கு
உறையுமிடமாவது* இரும்பொழில் சூழ்
நன்றாய புனல்நறையூர் திருவாலி குடந்தை
தடந்திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் 

மாமலையாவது நீர்மலையே. - திருமங்கையாழ்வார்.

அதாவது, இத்தலத்தை தரிசித்தால், நான்கு திவ்ய தேசங்களான நாச்சியார்கோவில், திருவாலி, திருகுடந்தை , திருகோவிலூர் ஆகிய திருத்தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும் என்று திருமங்கையாழ்வார் கூறுகிறார். 


பூதத்தாழ்வாரோ ஸ்ரீ ரங்கத்தை வணங்கிய பலன் கிடைக்கும் என்று சொல்கிறார். 


பயின்ற தரங்கம் திருக்கோட்டி*பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே* பன்னாள் - பயின்ற
தணி திகழுஞ்சோலை அணிநீர் மலையே*
மணிதிகழும் வண்தடக்கை மால். - பூதத்தாழ்வார்


மங்களாசாசனம்:  திருமங்கையாழ்வார் 19  பாசுரங்கள்(1078-1087,1115,1521,1554,1660,1765,1848,2069,2673.73,2674.130)
பூதத்தாழ்வார் 1 பாசுரம் (2227).

நாங்கள் வைகுண்ட ஏகாதசியையொட்டி சென்றதால், சொர்க்கவாசல் மிதித்து, அழகிய மணவாளனின் கருடசேவையையும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். மாடவீதியில் தேசிகன் சன்னதியும் ஹனுமார் சன்னதியும் உள்ளது.

108 திவ்யதேசம், TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம், தொண்டைநாடு திவ்யதேசம்,
அனைவரும் காண வேண்டிய திருக்கோயில்! சிறப்புமிக்க இந்த திருக்கோயிலில் நான்கு நிலைகளில் பெருமாளை சேவித்து, திருவீதி உலாவும் காணக்கிடைத்த திருப்தியுடன் சென்னை திரும்பினோம். 

உற்சவங்கள்: பௌர்ணமி கிரிவலம், ரதசப்தமி, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, பவித்ரோத்சவம், வசந்தோற்சவம்.

வழி: சென்னையிலிருந்து சுமார் 22 
கி.மீ., தூரத்தில்,  சென்னை தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருநீர்மலை உள்ளது. பல்லாவரம் சென்று, அங்கிருந்து பேருந்தில் இக்கோயிலை அடையலாம். பேருந்து கோவில் வாசல் வரை செல்கிறது. காரில் செல்வதானால், G.S.T. ரோடில் பல்லாவரம் கடந்ததும்  PONDS கம்பெனி வரும், அதற்கு எதிரே போகும் ரோடில் திரும்பி மேற்கே பயணித்தால் திருநீர்மலை செல்லலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை

முகவரி:
அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்,
திருநீர்மலை - 600 044.
காஞ்சிபுரம் மாவட்டம்.

2 comments:

  1. சிறிய வயதில் போனதுதான்.லேசான ஞாபகம்.உங்கள் பதிவை படித்தவுடன் மறுபடியும் போகவேண்டும் என்கிற அவாவை தூண்டிவிட்டது.நீங்கள் எழுதிய பாணி கோவிலை என் மனக்கண் முன் கொண்டுவந்துவிட்டது.படங்கள் நேர்த்தியாக உள்ளன.

    ReplyDelete
  2. படி ஏறாமல் மலை மேல் சென்று ஸ்சுவாமி தரிசனம் செய்ய வழி உள்ளதா?

    ReplyDelete