காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள பொன்விளைந்தகளத்தூர் என்ற திருத்தலத்திலிருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ தொலைவில், பொன்பதர்க்கூடம் என்னும் தலம் இருக்கிறது. இரண்டு தலங்களையும் ஒரே நாளில் சேவிக்கலாம். பொன்விளைந்த களத்தூர் வழியாகவே செல்ல வேண்டும் என்றாலும், பொன்பதர்க்கூடம் கோவில் சீக்கிரமே சாத்தி விடுவார்கள் என்று கேள்விப்பட்டதால், நாங்கள் முதலில் பொன்பதர்க்கூடம் சென்றோம். பிறகு திரும்பும் வழியில் பொன்விளைந்த களத்தூரிலும் சேவித்தோம்.
பொன்விளைந்த களத்தூரில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் கோயில், கோதண்டராமர் கோயில், தர்ப்பசயன ராமர் கோயில் மற்றும் பொன்பதர்க்கூடம் சதுர்புஜ ராமர் கோயில் ஆகிய நான்கு கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்யலாம். பொன்விளைந்த களத்தூர் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.
பொன்விளைந்த களத்தூரில் விளைந்த பொன் நெல்மணிகளைத் தூற்றியபோது அந்த பொன் பதர்கள் காற்றில் பறந்து போய் விழுந்த இடம், பொன்பதர்க்கூடம் என்ற திருத்தலம். இங்குதான் சதுர்புஜ ராமர் கோயில் உள்ளது. மூலவர் ஸ்ரீ சதுர்புஜ ராமர் புஷ்பக விமானத்தின்கீழ் அமர்ந்த திருக்கோலத்தில் சங்கு, சக்ர, அபய, வரத ஹஸ்தங்களுடன் சேவை சாதிக்கிறார். தேவராஜ புஷ்கரிணி. தேவராஜ மகரிஷி ஸ்ரீராமரை மகாவிஷ்ணுவாகத் தரிசிக்க ஆசைப்பட்டுத் தவமிருந்தார். அவர் தவத்தில் மகிழ்ந்த ஸ்ரீராமர் அவருக்கு மகாவிஷ்ணுவாகத் தரிசனம் தந்தார். தேவராஜ மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று, அதே திருக்கோலத்தில் கோயில் கொண்டுள்ளார். ஸ்ரீராமர் மகாவிஷ்ணு ரூபத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவதால், பெருமாளுக்கு ஸ்ரீசதுர்புஜ கோதண்டராமர் என்று திருநாமம். ராமர், மஹாவிஷ்ணுவாகக் காட்சி தந்ததால் மார்பில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி. உற்சவமூர்த்தி நின்ற திருக்கோலத்தில் திருக்கரங்களில் சங்கு, சக்ரத்துடன் கோதண்டமும் பாணமும் ஏந்திக்கொண்டு இளைய பெருமாள், சீதாபிராட்டி, அனுமனுடன் சேவை சாதிக்கிறார். உற்சவமூர்த்தியின் விரல்கள், நகம், கைரேகை , முழந்தாள், நரம்புகள் எல்லாம் தெளிவாகத் தெரிகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது விசேஷம். உற்சவர் இடது திருவடியை சற்றே முன்புறமாக மடித்த நிலையில் இருப்பது மற்றொரு விசேஷம். வில்லை ஊன்றி அதை முறிப்பதற்குத் தயாராக இருப்பது போல் உள்ளது. பவ்ய ஆஞ்சனேயர். வாய் பொத்தி பவ்யமாகக் காட்சி தருகிறார்.
திருமணத் தடை நீக்கும் சன்னதி. பிரிந்த தம்பதியர் கூடவும், குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகவும், ஸ்ரீராமருக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர்.
தர்மிஷ்டர் என்னும் மகான், இங்கு உள்ள தேவராஜ புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீசதுர்புஜ கோதண்ட ராமரை வழிபட்டு, தனது சரும நோய் நீங்கப் பெற்றார் என்கிறது புராணம். சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வேண்டிக்கொண்டால், விரைவில் குணம் பெறலாம் என்கின்றனர்.
லட்சுமி நாராயணர், ஆழ்வார் ஆசார்யர்கள் சன்னதிகளும் உள்ளது.
உற்சவங்கள்: ஸ்ரீராமநவமி உத்ஸவம், பங்குனி பிரம்மோற்சவம்.
ஒவ்வொரு மாதமும் புனர்வசு நட்சத்திரத்தில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜை.
மகர சங்கராந்தி அன்று ஸ்ரீராமருக்குத் திருமஞ்சனம், பின்னர் பாரிவேட்டை
கோயில் திறந்திருக்கும் நேரம்: 7.30 am-8.30 am , 5 pm-6 pm
வழி:
செங்கல்பட்டிலிருந்து பேருந்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று, செங்கல்பட்டிலிருந்து திருக்கழுகுன்றம் ரோடில் பொன்விளைந்த களத்தூர் வழியாக இந்த கோவிலுக்குச் செல்லலாம். ஒத்திவாக்கம் ரயில் நிலையம் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்ஸி வசதியும் உள்ளது.
முகவரி:
அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் கோயில்,
பி.வி.களத்தூர் வழி,
பொன்பதர்க்கூடம் - 603 405.
காஞ்சிபுரம் மாவட்டம்
பொன்பதர்க்கூடம்....சதுர்புஜ ராமர்...
ReplyDeleteஅழகிய பெயர்கள்....பெயர்காரணங்களையும் கோவிலையும் தரிசித்தோம்....அருமை...