பாடலாத்ரி என்கிற இந்தத் தலத்தில் சிவந்த குன்றின் குகைக்குள் பெருமாள் இருப்பதால் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். ‘பாடலம்’ என்றால் ‘சிவப்பு’ என்றும், ‘அத்ரி’ என்பதற்கு ‘மலை’ என்றும் பொருள்.
மூலவர் பாடலாத்ரி நரசிம்மர். பெரிய மூர்த்தி. நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். மேல் திருக்கரங்களில் சங்கு சக்கரங்களும், கீழ் வலது திருக்கரம் அபயமுத்திரையுடனும், இடது திருக்கரத்தை மடியில் வைத்தபடியும் சேவை சாதிக்கிறார். வலது காலை மடித்து வைத்துக் கொண்டு, இடது திருவடியைத் தாமரை மலர்மேல் வைத்துக் கொண்டு ப்ரணவ கோடி விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சி தருகிறார். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. பொதுவாக நரசிம்மர் இடதுகாலை மடித்து வைத்தும் வலது காலை ஊன்றியும் இருப்பார். ‘த்ரிநேத்ரதாரியாய்’ (மூன்று கண்களுடன்) திருமார்பில் மஹாலஷ்மியோடு, ஸாளக்கிராம மாலை, ஸஹஸ்ரநாம மாலைகள் தரித்து அமர்ந்திருக்கிறார். இப்பெருமாளுக்கு மூன்று நேத்ரங்கள் (கண்கள்) அமையப் பெற்றுள்ளது சிறப்பு. பட்டாச்சாரியார், பெருமாளின் நெற்றியிலுள்ள திருநாமத்தை சற்றே தூக்கி மூன்றாவது கண்ணை சேவிக்கச் சொல்கிறார். விசேஷமான த்ரிநேத்ர தரிசனம் கண்டோம்.
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரஹ்லாதவரதர்.
தாயாரின் திருப்பெயர் அஹோபிலவல்லித் தாயார். தனிக்கோயில் நாச்சியார்.
தீர்த்தம் சுத்த புஷ்கரணி, தல விருக்ஷம் பாரிஜாதம்.
தலவரலாறு: ஜாபாலி முனிவரின் தவத்தை மெச்சி, அவர் வேண்டுகோளுக்கிணங்கி இரணியனை ஸம்ஹாரம் செய்த திருக்கோலத்துடன் உக்ர நரசிம்மராக அவருக்கு இந்த குகையினுள் காட்சி கொடுத்ததாக ஐதீகம்.
கோவில் முகப்பில் சுதையில் தசாவதாரக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மலையின் குகைக்குள் பெருமாள் இருப்பதால், பெருமாளை வலம் வரவேண்டுமென்றால் குன்றையும் சேர்த்தே ப்ரதக்ஷணம் செய்ய வேண்டும். பெருமாள் பர்வதமே திருமேனியாகக் கொண்டுள்ளார். அதனால் பெருமாளை வலம் வந்தால் மலையையும் வலம் வந்த புண்ணியம் கிடைக்கும் என்பதால் இங்கு கிரிப்ரதக்ஷணம் விசேஷம். குறிப்பிட்ட தினம் என்று இல்லாமல், எல்லா நாட்களிலும் மக்கள் கிரிவலம் வருகிறார்கள். பானகம் சமர்ப்பித்து நரசிம்மரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். இங்கு கிடைக்கும் தோசைப் பிரசாதம் மிகவும் பிரசித்தம்.
பிற சன்னதிகள்: தாயார், விஷ்வக்ஸேனர், லட்சுமி நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர், ஆண்டாள், ஆழ்வார்கள்
பிரதக்ஷிணம் வரும்போது அழிஞ்சல் மரம் என்னும் மரத்தைக் காணலாம். திருமணமாகாதவர்களும், குழந்தைப்பேறு இல்லாதவர்களும் தாங்கள் அணிந்திருக்கும் வஸ்திரத்திலிருந்து ஒரு நூலிழையை எடுத்து நரசிம்மரை நினைத்து இந்தத் தலத்தில் உள்ள அழிஞ்சல் மரத்தின் கிளையில் கட்டி, மஞ்சள், குங்குமம் பூசி, நெய் விளக்கேற்றி வழிபட்டு, ஸ்ரீ நரசிம்மருக்கு அர்ச்சனை செய்தால் நினைத்தது நடக்கும்.
உற்சவங்கள்: பிரதோஷ நாட்களில் விசேஷ பூஜை, நரசிம்மர் ஜெயந்தி, வைகாசி மாதம் பிரம்மோற்சவம். விழாவின் 7ம் நாள் தேர்த் திருவிழா, ராமானுஜர் ஜெயந்தி, திருவாடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, தெப்போற்சவம், பவித்ரோத்சவம், சித்ராபவுர்ணமி.
வழி: சென்னை- செங்கல்பட்டு சாலையில் சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் உள்ளது. ரயில் நிலத்திலிருந்து ஆட்டோ வசதி உண்டு. சென்னை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
பிரதக்ஷிணம் வரும்போது அழிஞ்சல் மரம் என்னும் மரத்தைக் காணலாம். திருமணமாகாதவர்களும், குழந்தைப்பேறு இல்லாதவர்களும் தாங்கள் அணிந்திருக்கும் வஸ்திரத்திலிருந்து ஒரு நூலிழையை எடுத்து நரசிம்மரை நினைத்து இந்தத் தலத்தில் உள்ள அழிஞ்சல் மரத்தின் கிளையில் கட்டி, மஞ்சள், குங்குமம் பூசி, நெய் விளக்கேற்றி வழிபட்டு, ஸ்ரீ நரசிம்மருக்கு அர்ச்சனை செய்தால் நினைத்தது நடக்கும்.
வழி: சென்னை- செங்கல்பட்டு சாலையில் சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் உள்ளது. ரயில் நிலத்திலிருந்து ஆட்டோ வசதி உண்டு. சென்னை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
முகவரி:
ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மஸ்வாமி திருக்கோயில்,
சிங்கப்பெருமாள் கோவில் - 603 202
செங்கல்பட்டு,
காஞ்சிபுரம் மாவட்டம்
NINAITHADU SEEKRAM NADANDADU.ON THE SPOT ANUGRAHAM THARUM PIRAN .NARASIMHASWAMY THIRUVADIGALE CHARANAM
ReplyDelete