Friday, July 28, 2017

பொன்விளைந்த களத்தூர் - ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்கள் / கண்ணுக்கினியன கண்டோம் - 34

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்
பொன்விளைந்த களத்தூர் என்னும் திருத்தலம் பசுமையான வயல்கள் சூழ்ந்த ஓர் அழகிய கிராமம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்விளைந்த களத்தூர். அபிமான ஸ்தலம். பொன்விளைந்த களத்தூரில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் கோயில், கோதண்டராமர் கோயில், தர்ப்பசயன ராமர் கோயில் மற்றும் பொன்பதர்க்கூடம் சதுர்புஜ ராமர் கோயில் ஆகிய நான்கு கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்யலாம்.

ஸ்வாமி தேசிகன் யாத்திரையாக திருவஹீந்திபுரம் செல்லும் வழியில் களத்தூரில் தங்கியிருந்தார். அவர் ஆராதிக்கும் ஸ்ரீ ஹயக்ரீவ விக்கிரகத்தையும் உடன் எடுத்துச் செல்வது வழக்கம். ஸ்ரீ ஹயக்ரீவருக்கு பூஜை செய்து நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுவதும் அவர் வழக்கம். களத்தூருக்கு வந்த அன்று, பெருமாளுக்குக் கண்டருளப் பண்ண எதுவும் கிடைக்காததால், தீர்த்தத்தையே நிவேதனம் செய்து, அதையே தானும் பருகிவிட்டு உறங்கினார். அன்று இரவு அந்த ஊர் நிலங்களை ஒரு வெள்ளைக் குதிரை மேய்ந்ததைக் கண்ட அவ்வூர் மக்கள் அதைத் துரத்த, அந்தக் குதிரை, ஸ்வாமி தேசிகன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்தது. சப்தம் கேட்டு எழுந்த ஸ்வாமி தேசிகனிடம், ஊர் மக்கள் குதிரை மேய்ந்த விஷயத்தைக் கூற, ஸ்வாமி தேசிகனுக்கு அது சாதாரணக் குதிரை அல்ல, சாக்ஷாத்  ஹயக்ரீவரே என்று புரிந்தது. உடனே நிலத்துக்குச் சென்று பார்த்ததில் அந்தக் குதிரை மேய்ந்த இடங்களில் எல்லாம் நெல்மணிகளுக்குப் பதிலாகப் பொன்மணிகள் விளைந்திருப்பதைக் கண்டார். மக்களிடம் இவையனைத்தும் ஹயக்ரீவப் பெருமாளின் செயலே என்று விளக்கிக்கூறி பின்னர் ஸ்வாமி தேசிகன் அங்கிருந்து புறப்பட்டார் என்பது வரலாறு. வயலில் (களத்தில்) பொன் விளைந்ததால், அந்த ஊருக்கு பொன்விளைந்த களத்தூர் என்ற பெயர் ஏற்பட்டது என்பது தலவரலாறு.

பொன்விளைந்த களத்தூரில் விளைந்த பொன் நெல்மணிகளைத் தூற்றியபோது அந்த பொன் பதர்கள் காற்றில் பறந்து போய் விழுந்த இடம், அருகே உள்ள பொன்பதர்க்கூடம் என்ற திருத்தலம். பொன்பதர்க்கூடம் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.


பொன் விளைந்த களத்தூரில் அருகருகே இரண்டு கோயில்கள் அமைந்திருக்கிறது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீகோதண்ட ராமர் திருக்கோயில். 

ஸ்ரீ ல
க்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்.
ஐந்துநிலை ராஜகோபுரம். மூலவர் வைகுண்டநாதர். உற்சவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். ஆனால் சிங்கமுகம் இல்லை. சாந்தமான ரூபத்தில் சேவை சாதிக்கிறார். இவர் மாமல்லபுரத்தில் இருந்தவராம். ஸ்ரீ நரசிம்மரே விரும்பி வந்து குடிகொண்ட தலம். அந்நிய படையெடுப்பின்போது ஸ்ரீ நரசிம்மரே அசரீரியாக, தன்னை மாமல்லபுரத்திலிருந்து எடுத்துச் செல்லும்படியும், கூடவே பறந்து வரும் கருடன் எங்கே தரை இறங்குகிறதோ, அங்கே தன்னைப் பிரதிஷ்டை செய்யும்படி அருளினாராம். மாமல்லபுரம் ஆலயங்கள் கடலில் மூழ்கிய நிலையில், ஒரு வயோதிகரின் கனவில் நரசிம்மர் தோன்றி சொன்னார் என்றும் சொல்வதுண்டு. தாயார் அஹோபிலவல்லித் தாயார். ராமர், ஹயக்ரீவர், ஆண்டாள், ஆழ்வார்களுக்கும் தனி சன்னதிகள் உள்ளன.
TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்
அருகே ஸ்ரீ கோதண்டராமர் சன்னதி. இந்தக் கோயிலில் ஸ்ரீ ராமர் நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலங்களில் சேவை சாதிப்பது விசேஷம். ஸ்ரீ கோதண்ட(பட்டாபி) ராமர் திருக்கோயிலில் ஸ்ரீபட்டாபி(கோதண்ட)ராமர் (மூலவர்) அமர்ந்த திருக்கோலத்திலும், உற்சவர் ஸ்ரீ கோதண்டராமர் நின்ற திருக்கோலத்திலும், ஸ்ரீ தர்ப்பஸயன சேதுராமர் (மூலவர்) ஸயனத் திருக்கோலத்திலும் சேவை சாதிக்கிறார்கள்.

உற்சவரும் மிக அழகாக இருக்கிறார். மூலவர் ஸ்ரீ பட்டாபிராமர், சீதாபிராட்டியை இடது மடியில் அமர்த்தியபடி, பட்டாபிஷேகக் கோலத்தில் சேவை சாதிக்கிறார். பொதுவாக ஸ்ரீராமருக்கு வலப்புறம் சீதாதேவியும், இடப்புறம் ஸ்ரீலட்சுமணனும் இருப்பார்கள் என்றும் இங்கே பட்டாபிஷேகக் கோலம் என்பதால் ஸ்ரீராமருக்கு இடப்புறம் சீதையும், வலப்புறம் லட்சுமணரும் இருக்கின்றார்கள் என்றும், இந்தத் திருக்கோலம் அரியது என்றும் பட்டர் சொன்னார். அருகில், ஆஞ்சநேயரும் உள்ளார். உத்ஸவர் ஸ்ரீ கோதண்டராமர் நின்ற கோலத்தில் அருள்கிறார். இதே கோயிலில் தனிச்சன்னதியில் ஸ்ரீ தர்ப்பஸயன சேதுராமர். ஸயனக்கோலம். திருப்புல்லாணியில் சேவிக்கும் அதே திருக்கோலம். இராமருக்குப் பின்னால் லக்ஷ்மணரும், திருவடிக்கு அருகில் ஸமுத்ரராஜனும், ஆஞ்சநேயரும் நிற்கிறார்கள். உத்ஸவ மூர்த்தி சீதா, லக்ஷ்மண அனுமத் ஸமேத ஸ்ரீராமர்.


ஸ்ரீதேவி பூதேவி ஸமேத அபய வேங்கடவரதர் சன்னதியும் உள்ளது.
ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ஆதிசேஷன், ஆண்டாள், ஆழ்வார் ஆச்சார்யர்கள் சன்னதிகளும் உள்ளது. 

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்

TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்

இந்த ஊரில் உள்ள ஸ்ரீ முன்குடுமீஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்தம்.

உற்சவங்கள்: ஸ்ரீராமநவமி உத்ஸவம், நரசிம்ம ஜெயந்தி
ஒவ்வொரு மாதமும் புனர்வசு நட்சத்திரத்தில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

கோயில் திறந்திருக்கும் நேரம்: 8 am-11 am and 5 pm-7.30 pm


வழி:

செங்கல்பட்டிலிருந்து பேருந்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று, செங்கல்பட்டிலிருந்து திருக்கழுகுன்றம் ரோடில் பொன்விளைந்த களத்தூர் கோவிலுக்குச் செல்லலாம். ஒத்திவாக்கம் ரயில் நிலையம் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்ஸி வசதியும் உள்ளது. 

முகவரி: 
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மஸ்வாமி திருக்கோயில்
பொன்விளைந்த களத்தூர் (வழி) செங்கல்பட்டு
காஞ்சிபுரம் மாவட்டம்
தமிழ்நாடு 603 405

No comments:

Post a Comment