Tuesday, March 3, 2020

கண்ணுக்கினியன கண்டோம்- திரு வடமதுரை (மதுரா) விருந்தாவனம், கோவர்த்தனம் அடங்கியது - நிறைவுப் பகுதி

நாள் 4 
வடமதுரை/மதுரா (Vadamadurai/Mathura)
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். -  ஆண்டாள்

கிருஷ்ணர் அவதரித்த இடம். யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்று. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மூலவர் கோவர்த்தநேசன் (பால க்ருஷ்ணன்), தாயார்: சத்ய பாமா நாச்சியார். பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஆழ்வார்களால் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.  ஆழ்வார்களால் பாடப்பட்ட கோவில்களும், மூர்த்திகளும் தற்போது இல்லை. இங்கு உள்ள  துவாரகாநாத்ஜி, மதுராநாத்ஜி கோவில்கள்  பிற்காலத்தில் கட்டப்பட்டவை.


குறிப்பு:
மதுரா ஜன்மஸ்தான கோவிலில், கைபேசி, பெரிய கைப்பைகள், போன்றவற்றிற்கு அனுமதி இல்லை.

ஜன்மஸ்தானம்:
நாங்கள் ஜன்மஸ்தான கோயிலுக்கு மட்டுமே சென்றோம். கோயில் உள்ளே நுழைந்ததும், வாயிலில் இடது புற சுவற்றில், தேவகியும் வசுதேவரும், கையில் வாளோடு கம்சனும் நிற்பது போலவும், அடுத்து, சிறையில் விலங்கோடு வசுதேவரும் தேவகியும் உட்கார்ந்திருப்பது போலவும், ஒரு குழந்தையைத் தலைகீழாகப் பிடித்து, கொல்ல முயற்சிக்கும் கம்சன் போன்ற சுதைகளையும் பார்க்கலாம். உள்ளே நான்கு சந்நிதிகள் உள்ளது. கேஷவ்ஜி, யோகமாயா, ஜன்மஸ்தானம், ராதாக்ருஷ்ணர் சந்நிதி. கேஷவ்ஜி, யோகமாயாவைத் தரிசித்துவிட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த காராக்ருஹத்தைப் (சிறைச்சாலையை) பார்க்கச் சென்றோம். சிறையிலேயே சந்நதி அமைக்கப்பட்டிருக்கிறது.  குழந்தை வடிவில் கண்ணனையும், அழகான சித்திரரூபங்களில் குட்டிக் கண்ணனையும் தரிசனம் செய்தோம். பிறகு, ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்றோம். ராதாக்ருஷ்ணனை கண்ணாரக் கண்டு, ராமர், ஆஞ்சநேயர், யோகமாயா சன்னதிகளையும் சேவித்தோம். கண்ணன் விரும்பி  உண்ணும் நவநீதம் பிரசாதமாகக் கிடைத்தது.  சன்னதியின் கூரைகளில் கிருஷ்ணலீலைகளை சித்திரமாக வரைந்திருக்கிறார்கள். கண்டு களித்தோம். அனைவரும் தரிசித்து மகிழ வேண்டிய தலம்.

மதுரா நகர் கடைவீதிகளில் ஏகப்பட்ட இனிப்புகள் விற்பனை செய்கிறார்கள். மதுரா பேடா, பலவிதமான இனிப்புகள், சூடான பால், லஸ்ஸி, தயிர் என ஒரே பால்மயம் தான்! மண் குவளைகளில், மணக்க மணக்க லஸ்ஸி, பால் தருகிறார்கள். தெருக்களில் நிறைய பசுக்களைக் காணலாம்.  கடைகளில் சில பொருட்களை வாங்கிக் கொண்டு, லஸ்ஸி ஒன்றை அருந்திவிட்டு, ராவலுக்குப் பயணித்தோம்.

ராவல்(Raval)

ஸ்ரீ ராதாராணியின் பிறந்த இடம். யமுனையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது கிருஷ்ணரின் பிறந்த இடமான கோகுல் (மஹாவன்) கிராமத்திற்கு அருகே சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ராவல் கிராமத்தில், லார்லி -லாலா மந்திர் என்று
குழந்தையாக வணங்குகிறார்கள். லார்லி என்ற சொல்லுக்கு அன்பு மகள் என்றும் லாலா என்றால் அன்பு மகன் என்றும் பொருள். இந்தக் கோவிலில், தவழும் கோலத்தில் ராதை மிகமிக அழகு. குழந்தையாக ராதையையும், கிருஷ்ணரையும் ஆனந்தமாக சேவித்தோம். இக்கோயில், ராதையின் வம்ஸத்தினரால்  பராமரிக்கப்பட்டு வருகின்றது. ராதையைக் கண்டெடுத்த மரம் அந்தக் கோயில் வளாகத்திலேயே உள்ளது. ராதாக்ருஷ்ணர் சந்நிதி, குழந்தை ராதா சந்நிதி உள்ளது.


விருஷபானு மகாராஜ், அதிகாலையில் குளிக்க யமுனா நதிக்குச் சென்றபோது, அழகான பெண் குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தையை வீட்டிற்கு எடுத்து வந்தார். அந்தப் பெண் குழந்தை கண்ணையும் திறக்கவில்லை, சத்தமும் கேட்கவில்லை என்பதை அனைவரும் கவனித்தனர். நாரதர் ராவலுக்கு வந்தபோது, இந்தக் குழந்தை மகாலக்ஷ்மியின் அவதாரம் என்று உணர்ந்து, ஒரு பெரிய விழாவை ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார். மேலும் கோகுலம், ராவலில் உள்ள அனைவரையும் அழைக்கும்படி அவர் கூறினார். விருஷபானு, தனது அன்பு நண்பர் நந்தகோபர் உட்பட அனைவரையும் குடும்பத்தினருடன் அழைத்தார். நந்தகோபர் யசோதையுடனும் கண்ணனுடனும்  ராவலுக்கு வந்து, விருஷபானுவிற்குக்கு வாழ்த்து தெரிவித்தார். பெற்றோர் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, ​​குட்டிக் கண்ணன் ராதையின் தொட்டிலுக்கு அருகே சென்று முகத்தைக் காட்டினார். கண்ணனின் முகம் அருகே வந்ததும் ராதை கண்களைத் திறந்தாள், ஏனென்றால் இவள் கண்ணனைத் தவிர வேறு யாரையும் இந்த உலகில்  முதலாவதாகப் பார்க்க விரும்பவில்லை. அன்பின் பரவசத்தால் குழந்தை ராதா அழ ஆரம்பித்தாள்.  இதைக் கண்ட அனைவரும் சந்தோஷமடைந்து ஸ்ரீ ராதாராணியின் பிறந்தநாள் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

பெருமை வாய்ந்த இந்த இடத்தில் தரிசனம் முடிந்து, ரமண்ரேதி பயணப்பட்டோம்.

ரமண்ரேதி (Raman reti)

கிருஷ்ணரின் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட பல இடங்கள் கோகுலத்தில் உள்ளன. 'ரமண்' என்றால் விளையாடுவது என்றும், 'ரேதி' என்றால் மணல் என்றும்  பொருள். பகவான் கிருஷ்ணர், பலராமர் மற்றும் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்காக வந்த இடம். 'ரமண்ரேதி' என்ற இந்த இடம், மக்களின் இதயங்களிலும் மனதிலும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. கோயிலுக்கு அருகிலேயே உள்ள பூங்காவில், நிறைய மான்களும், வாத்துக்களும்  இருக்கின்றன.  கோயில் வளாகத்தில் சாதுக்களும் சன்யாசிகளும் குடில்களில் வாழ்கின்றனர். 
இங்கு ரங்க்பிஹாரிஜி, ராதாரமண் கோயில் உள்ளது. ராதாரமண் கோவிலில் ஆரத்தியைக் கண்டு களித்தோம். எந்நேரமும் பாட்டும், பஜனையும், நடனமும் நடக்கிறது. கும்மி ஆடினோம்

ராதா, ரமண் தரிசனத்திற்குப் பிறகு, வளாகத்திலேயே உள்ள ரமண்ரேதி சென்றோம். இங்குள்ள மணல் கொழிந்த மண்ணைப்போல் மிகவும் மென்மையாக உள்ளது.  கிருஷ்ணர் தனது நண்பர்களுடன் இந்த இடத்தில் மென்மையான மணலில் உருண்டு விளையாடி, ரமண் சரோவரில் குளிப்பார். இந்த இடத்திற்கு வரும் பக்தர்களும் கிருஷ்ணர் விளையாடிய, ஸ்ரீ கிருஷ்ணரின் பாதம் பட்ட இந்த மண் தங்கள் மேல் படவேண்டும்  என்று இந்த மண்ணிலே புரண்டு, தங்கள் பக்தியை வெளிப்படுத்தி, கிருஷ்ணரின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். இங்கு, ஹோலி பண்டிகை மணலிலே கொண்டாடப்படுகிறது.

இதை ஒட்டிய இடத்தில், ஒரு சிவன் கோயிலும், கிருஷ்ண பலராம ஆலயமும் உள்ளது. ரமண்ரேதி கட்டாயம்  பார்க்கவேண்டிய இடம்.

இதன்பிறகு, அருகில் உள்ள அன்னசத்திரத்தில் மதிய உணவை உண்டோம். பிறகு, கிருஷ்ணர் ரகசியமாக வளர்க்கப்பட்ட கோகுலத்தைக் காண ஆவலுடன் சென்றோம்.


திருவாய்ப்பாடி(கோகுலம் )/Thiruvaippadi (Gokul)


108 திவ்யதேசங்களில் ஒன்று. பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் 13 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர், மனமோகன க்ருஷ்ணன், நின்ற திருக்கோலம்,தாயார், ருக்மணி, சத்யபாமா. ஆழ்வார்கள் பாடிய கோவில்களும், மூர்த்திகளும் தற்போது இல்லை. இங்கு உள்ள கோவில்  பிற்காலத்தில் கட்டப்பட்டது. 

கிருஷ்ணர் தனது வளர்ப்பு தாய் யசோதாவால் ரகசியமாக வளர்க்கப்பட்ட இடம். நாங்கள் சென்ற பிராசீன ஜன்மஸ்தான்/புரானா கோகுல் (பழைய கோகுலம்) என்ற கோவில் வாசலிலேயே யமுனை ஓடுகிறது.

கிருஷ்ணரும் பலராமரும் ஓடி விளையாடி, நந்தருக்கும், யசோதைக்கும் மற்ற கோபர்கள், கோபிகைகளுக்கும் சொல்லொணா மகிழ்ச்சியைக் கொடுத்த ஊர் கோகுலம். மனதை மயக்கும் யமுனை நதிக்கரையில் கோகுலம் அழகின் உருவாக அமைந்துள்ளது.

நந்த பவன் (Nand Bhawan)


'நந்தபவன்' என்ற நந்தகோபரின் இல்லமானது மஹாவனம் என்ற பகுதியைச் சார்ந்த கோகுலத்தில் உள்ளது. பலராமர் பிறந்த ஊர். குழந்தை கிருஷ்ணரை வஸுதேவர் யாருக்கும் தெரியாமல் இந்த இல்லத்தில்தான் அன்னை யசோதையின் அருகில் வைத்துவிட்டு, அன்னை யசோதைக்கு பிறந்த பெண் குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.
ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார் *
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார் *
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று *
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே.

யோகமாயா பிறந்த இடம், பூதனா சம்ஹாரம் நடந்த இடம் என்று சந்நிதிகள் உள்ளது. நந்தபவனில் கம்பீரமாக காட்சியளிக்கும் 84 தூண்களைக் காணலாம். 5,000 வருடத்திற்கு முன் நந்த மஹாராஜரின் காலத்தில் கட்டப்பட்ட தூண்கள் இன்றும் இவ்விடத்தில் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்விடம் தற்போது கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.





கோகுலத்தில் இருக்கும் இந்த நந்தபவனில்தான் முதன் முதலில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாடப்பட்டது. கிருஷ்ண-பலராமரின் குழந்தைப் பருவ லீலைகளும் இங்கேதான் நடந்தன என்பதால் கூடுதல் சிறப்பு.  'யசோதா பவன்' என்ற இடத்தில், நந்தகோபர் மற்றும் அன்னை யசோதைக்கு  நடுவே பலராமரும், தொட்டிலில் புல்லாங்குழல் ஊதும் குட்டிக் கண்ணனையும்  கண்டு மெய்மறந்தோம். கண்ணன் இருக்கும் தொட்டிலை நாமே அசைக்கலாம். சிறிய பூஜைகள் செய்து நம்மிடம் தொட்டில் சங்கிலியைக் கொடுத்து அசைக்கச் சொல்கிறார்கள். குட்டிக் கண்ணனை தொட்டிலில் ஆட்டி, கண்ணாரக் கண்டு மகிழ்ந்தோம். கண்ணன் குழந்தையாக இருப்பதால் அண்ணாந்து பார்த்தால், கழுத்து வலிக்கும் என்பதால், இங்கு வரும் பக்தர்கள் நடந்து செல்லாமல், தவழ்ந்தே செல்கிறார்கள். அடியேனும் அப்படியே சென்றேன்.
 
நந்த பவனிற்கு சற்று தூரத்தில் நந்த மஹாராஜாவின் கோசாலை அமைந்துள்ளது. இந்த கோசாலைக்கு சற்று தூரத்தில் சப்த-சமுத்திர கிணறும் உள்ளது. இந்த கிணற்றில் பிரபஞ்சத்தில் காணப்படும் ஏழு சமுத்திரங்களின் நீரும் உள்ளடங்கி காணப்படுகிறது. நாங்கள் அங்கு செல்லவில்லை.

பிரம்மாண்ட் காட் (brahmand ghat)
 
கிருஷ்ணர் மண் துகள்களை விழுங்கி, பின்னர் பிரபஞ்சம் முழுவதையும் தனது வளர்ப்புத் தாய் யசோதாவுக்கு வாயில் காட்டிய இடம். இங்கே யமுனை மிக அருகிலேயே இருக்கிறது. யமுனா நதி அதன் இயற்கை அழகுடன், வளைந்து அழகாக இருக்கிறது. யமுனையிலிருந்து சில துளிகளை ப்ரோக்ஷணம் செய்து கொண்டோம். இங்கு பிரம்மாண்ட்விஹாரி கோவில் உள்ளது. தரிசனம் செய்தோம். பிரம்மாண்ட்விஹாரியின் ஆசீர்வாதங்களுடன்  எங்கள் அடுத்த இடமான உகல் பந்தன் புறப்பட்டோம்.

ஊகல் பந்தன் (ukhal bandan)
எங்கள் வாகனம்  ஒரு சிறிய ஆசிரமத்தைப் போன்ற கோவிலின் முன் நின்றது. கோவில் உள்ளே சென்றோம்.
 
இங்கேதான் நந்தர் பிள்ளை வரம் வேண்டி தவம் செய்தாராம். நந்தகோபருக்கு தனி சந்நிதி உள்ளது. யமுனாதேவி, யசோதா, ராதா-க்ருஷ்ண சன்னிதிகளும் உள்ளது.


தாய்ப்பால் அருந்திக்கொண்டிருந்த கண்ணனை விட்டுவிட்டு, சமையல் அறையில் வேலை இருந்ததால் யசோதை உள்ளே சென்றாள். அதனால் கோபம் கொண்டு கண்ணன் தயிர்ப் பானையை உடைத்தான். குறும்புக்கார கண்ணனைத் தண்டிக்க யசோதை அவனை உரலில் கட்டினாள். கண்ணன் அந்த உரலை இழுத்துக் கொண்டு, தவழ்ந்து சென்று, சற்று தூரத்தில் இருந்த மருத மரங்களின் இடையே சென்று அந்த மருத மரங்களை முறித்தார். மணிக்ரீவன், நளகூபரன் என்ற  குபேரனின் மைந்தர்கள், நாரதரின் சாபத்தால் மரங்களாக இருந்தனர். கண்ணனின் திருப்பாதம் பட்டதும் சாப விமோசனம் அடைந்தனர். மரங்கள் சாபவிமோசனம் பெற்றுவிட்டதால் மரங்கள் அங்கு இல்லை. கோவிலின் அருகே அந்த மருத மரங்கள் இருந்த இடமும் உள்ளது. கல் பந்தன் என்ற இந்த இடத்தில்தான் யசோதை, கண்ணனைக் கயிற்றால் உரலில் கட்டினாள். அந்த உரல் ஒரு சன்னிதியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த உரலையும், கண்ணனின் திருப்பாதங்களையும் தரிசித்து, பிரதக்ஷிணம் செய்து சேவித்தோம்.





இங்கே சேவித்துக் கொண்டு, அடுத்த இடமான 'டெர் கடம்ப்' செல்ல ஆவலுடன் புறப்பட்டோம்.

டேர் கடம்ப்(Ter Kadamb)
விரஜ பாஷையில் டேர் என்றால் அழைப்பது. கிருஷ்ணர், இங்கு உள்ள கடம்ப மரத்திலிருந்து மாடுகள், கோபிகள் மற்றும் கோபர்களை அழைப்பாராம். அதனால் இப்பகுதிக்கு இப்பெயர். டேர் கடம்ப் மிகவும் அருமையான இடம்! 
 


இந்த வனத்தில் பல கடம்ப மரங்கள் நிறைந்துள்ளதாலும் இது டேர் கடம்ப் என்று அழைக்கப்படுகிறது. கடம்ப மரம் அன்பு, பிணைப்பு, அரவணைப்பு மற்றும் பாசத்தைக் குறிக்கும். கிருஷ்ணர் தனது புல்லாங்குழலை வாசித்து, மேய்ச்சலுக்குச் சென்ற தனது 900000 மாடுகளையும் அழைக்கும் இடம் அது. யாத்திரை இயக்குனர் மிக அழகாக இந்தப் புனிதமான இடத்தைப் பற்றிச் சொன்னார். அமைதியான, மயில்கள் சூழ்ந்த அந்த வனத்தில் தெய்வீகமான அந்த சம்பவங்களைக் கேட்டது, நேரிலேயே பார்ப்பது போன்று இருந்தது.
 
கிருஷ்ணர் தினமும் காலையில் உணவு தயாரானதும், காலை உணவை உட்கொண்டு, மதியத்திற்கு உணவு மூட்டையைக் கட்டிக் கொண்டு, மாடு, கன்றுகளுடன் இந்த இடத்திற்கு வந்து, அவைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவார். மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளை மீண்டும் அழைக்க, இங்கு உள்ள ஒரு கடம்ப மரத்தில் அமர்ந்து, புல்லாங்குழலில் வித்தியாசமான ஒரு ஒலியை எழுப்புவார். எல்லா மாடுகளையும் வீட்டிற்கு அழைப்பார். கிருஷ்ணர் தனது புல்லாங்குழலை வாசிக்கும் போது, மாடுகள் ஒவ்வொன்றிற்கும் தனது பெயரைக் கூப்பிடுவது போல் இருக்குமாம் (கௌரி, லக்ஷ்மி, அருணி, ஷியாமளா என்பதைப்போல்). மந்திரத்தால் கட்டுண்டது போல் அனைத்து மாடுகளும் திரும்பி வந்துவிடுமாம். நம்மிடம் உள்ள ஜபமாலையை போல, கிருஷ்ணரிடம் 108 ரத்தினங்கள் கொண்ட ஜபமாலை இருந்தது. கிருஷ்ணரிடம், 900,000 மாடுகள் இருந்தன. அவை நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் 25 துணைப் பிரிவுகள் இருந்தன. 4x25-100. எட்டு சிறப்புக் குழுக்களும் இருந்தன.  100+8-108.  வெள்ளை மாடுகள், மஞ்சள் மாடுகள், கருப்பு மாடுகள் மற்றும் சிவப்பு மாடுகள் என்று பிரித்து குழுக்களாக மேய்ச்சலுக்கு அனுப்புவார். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவி பசு இருக்கும். ஒவ்வொரு தலைவியும் திரும்பி வரும்போது, ​​கிருஷ்ணர் அதனுடைய மூக்கைத் தொட்டு, பின்னர் அவரது ஜபமாலையை எண்ணுவார். பின்னர், அடுத்த தலைவியின் மூக்கைத் தொடுவார்.  கிருஷ்ணருக்கு அவைகளின் பெயர்கள் அனைத்தும் தெரியும். சில மாடுகளைக் காணவில்லை என்றால், ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் புல்லாங்குழல் வாசிப்பார், காணாமல் போன மாடுகளை மீண்டும் அவற்றின் பெயர்களால் புல்லாங்குழல் இசையிலேயே அழைப்பார்.  

ஆனால் சில மாடுகளுக்கு, அவை செல்லாவிட்டால், கிருஷ்ணர் அவர்களை தனது தாமரை வாயால் அவர்களின் சொந்த பெயரில் அழைப்பார்! என்ற ஒரு விஷயம் தெரியும்.
ஒரு முறை ஸ்வேதா என்ற ஒரு மாடு வேண்டுமென்றே செல்லாமல் பின்தங்கியது. அதன் மனதில், கிருஷ்ணர் நான் வரவில்லையென்று கண்டுபிடித்து, என்னைக் கூப்பிடுகிறாரா என்று பார்க்கலாம்; அப்படி அவர் என்னை அறியாவிட்டால், நான் உயிருடன் இருந்து என்ன பயன்?’ என்று நினைத்து செல்லவில்லை. அதை அறிந்த கிருஷ்ணர், 'ஸ்வேதா' என்று தனது பவளவாயால் அழைக்க, அதைக் கேட்பதற்காகவே காத்திருந்த அந்தப் பசு, தனது காதுகளை முன்னே நிமிர்த்து, அதன் கண்களின் மூலையிலிருந்து  நீர் வழிய, மிகுந்த  மகிழ்ச்சியுடன் டேர் கடம்பாவுக்குப் பாய்ந்தோடி வந்தது.
சைதன்ய மகாபிரபுவின் அறிவுறுத்தலின் பேரில், ஆறு கோஸ்வாமிகளில் ஒருவரான  ஸ்ரீல ரூபா கோஸ்வாமி, பஜனை மூலம் பக்தியைக் கடைப்பிடித்து, ராதா ராணி மற்றும் பகவான் கிருஷ்ணரைப் புகழ்ந்து அழகான பாடல்களையும்,  பல்வேறு இலக்கியங்களையும்  எழுதியதும் இந்த டேர் கடம்பாவில் தான். அழகான பெரிய குளம் ஒன்றும் உள்ளது.


இந்த இடத்துடன் தொடர்புடைய இன்னொரு கதை:
ஸனாதன கோஸ்வாமி யாசகம் செய்து பெற்ற மாவில் செய்த வெறும் ரொட்டியையே சாப்பிடுவது  ஒரு முறை, அவர் டெர் கடம்பாவில் தங்கியிருந்த ரூப கோஸ்வாமியைப் பார்க்கச் சென்றபோது, ​​ரூப கோஸ்வாமி அவருக்கு சிறப்பு மிக்க ஒன்றை அவருக்கு அளிக்க விரும்பினார். அதனால் இனிப்பான பாயசத்தை(kheer) அவருக்குக் கொடுத்தார்.

கீர் அமிர்தத்தைப் போல இருந்ததால், எங்கிருந்து வந்தது என்று ஸனாதன் கோஸ்வாமி ரூப கோஸ்வாமியிடம் கேட்டார். அருகில் இருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது மாமியார் தரச் சொன்னதாக சொல்லி, அதைக்கொடுத்தார் என்று ரூப கோஸ்வாமி சொன்னார். இருவருமாக அந்த கிராமத்துக்குச் சென்று, அந்தப் பெண் சொன்ன வீட்டில் கேட்டபோது, அந்த வீட்டுப் பெண்மணி தான் தரவில்லையென்றும், அங்கு அப்படி ஒரு பெண் இல்லை என்றும் கூறினார்கள். ஸ்ரீ ரூப ஸ்வாமியின் விருப்பத்தை நிறைவேற்ற வந்த கிராமத்து பெண் ராதா ராணி என்று சனாதன் கோஸ்வாமி உடனடியாக புரிந்து கொண்டார். ராதையை இப்படி வருத்துவதைவிட கீர் இல்லாமல் இருப்பதே மேல் என்று வருந்தி சொன்னாராம். ரூப கோஸ்வாமி மன்னிப்பு கேட்டாராம். அன்று முதல், டேர் கடம்பில் 'கீர்' பிரசாதம் தினமும் வழங்கப்படுகிறது. எங்களுக்கும் கீர் பிரசாதம் கிடைத்தது.

இங்கே ரூபா கோஸ்வாமியின் பஜன் குடிர் மற்றும் சனாதன கோஸ்வாமி உட்கார்ந்த இடம் ஆகியவற்றைக் காணலாம். ஹ்ருஷிகேஷ் மஞ்ச் என்ற சன்னிதியில், கிருஷ்ணர், பலராமர் அருள் பாலிக்கிறார்கள்.
 

இந்த இடத்தின் தொடர்புடைய கதைகளை சித்திரமாகக் காணலாம். பூங்காவைப் போன்ற இடத்தில், அரியணை போல் அமைக்கப்பட்ட வனவிகாரி பீடம் இருக்கிறது. அதைச் சுற்றி வேறு வேறு பெயர்களுடன் மாடுகள் நிற்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. ஏராளமான மயில்கள் நடமாடுகின்றது. மிகவும் இயற்கையான சூழலில், வனத்தைப் போன்று உள்ளது. 
 
 

இங்கு கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழா கோபாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ணர் முதன்முதலில் மாடுகளை மேய்ச்சலுக்காக வெளியே அழைத்துச் சென்ற நாள்.
 
கண்ணன் பிறந்து வளர்ந்து ஆடிப்பாடிய வடமதுரையையும், ஆயர்பாடியையும் விருந்தாவனத்தினையும் யாரே மறப்பர்! இது போன்ற இடங்களைக் காண்பது, நமது ஆன்மீக வாழ்க்கையை அதிவேகமாக உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான ஆலயங்களும், காட், குண்ட் போன்ற காண வேண்டிய பல இடங்களும் உள்ளன. இந்தத் தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். சீர்காட், வம்சீவட், சரண் பஹட், சேவாகுஞ்ச், காஞ்சனா மகால் போன்ற பல இடங்கள் இருக்கிறது. ஒரு மாதம் தங்கியிருந்து சேவித்தாலும் தீராது. ஒரு யாத்ரீகரின் பார்வையில், அவை அனைத்தையும் உள்ளடக்குவது கடினம். நாங்கள் சென்று, கண்டு களித்ததை மட்டும் இங்கு பகிர்ந்துள்ளேன். கண்ணன் அனுக்ரகம் இருந்தால் மீண்டும் செல்வேன். இந்த விருந்தாவன யாத்திரை பதிவில் தவறுகள் ஏதும் இருப்பின், பொறுக்கவேண்டுகிறேன். இந்தப் பதிவினைப் படித்தபின், யாருக்கேனும் ஆசை ஏற்பட்டு மதுரா, ஆயர்பாடி, விருந்தாவனம் சென்று, கண்ணனைத் தரிசித்தால், அதுவே என் பாக்கியம்.  

கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா!
கருணையுடன் அருள் செய்ய வருவாய் கண்ணா!

யாதுமில்லை மிக்கதனில் என்றென்றது கருதி
காதுசெய்வான் கூதைசெய்து கடைமுறை வாழ்க்கை யும்போம்
மாதுகிலின் கொடிக் கொள்மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர்தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர்சரணே. - நம்மாழ்வார்

குலசேகர ஆழ்வார் முகுந்தமாலையிலே மிக அழகாகச் சொல்லுகிறார்:

‘முகுந்த மூர்த்தா ப்ரணிபத்ய யாசே

பவந்தம் ஏகாந்தம் இயந்தம் அர்த்தம்

அவிஸ்மிருதி: த்வத் சரணாரவிந்தே

பவே பவே மே அஸ்து பவத் ப்ரசாதாத்’

ஹே முகுந்தா! உம்மைத் தலையால் வணங்கி, இந்த ஒன்றைமட்டும் உம்மிடம் யாசிக்கிறேன். ஒவ்வொரு பிறவியிலும் உம்முடைய அருளால் உம் திருவடிகளை நான் மறவாமல் இருக்க வேண்டும்.

எல்லாப் புகழும் கண்ணனுக்கே!
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்!

3 comments:

  1. Ungaludan naanum virundavanukku vanthathupol unarkinren.radhe krishna

    ReplyDelete
  2. இவ்வளவு விஸ்தாரமாகவும்,விவரமாகவும் ஒன்றை கூட விடாமல் ஞாபகத்துடன் எழுதியும்,அதற்கு தக்க படங்களை போட்டும் உள்ள உங்கள் பதிவு எளிதில் காணப் பெறாதது நானும் மதுரா போனேன்,பிருந்தாவனம் போனேன் என்று பெருமையாக பீற்றி கொள்ளுவேன்.இதை படித்த பின்னர் தான் கால் வீசம் கூட பார்க்கவில்லை என்பது தெரிகிறது!! Hats off to you and your husband.
    மிக்க நன்றி. .

    ReplyDelete
  3. Superbly described stories . Anantha koti Namaskaram

    ReplyDelete