Saturday, February 22, 2014

முஸலகிஸலயம்


முஸலகிஸலயம்

ஆசார்யனின் கருணை இருந்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு வாதிகேஸரியின் வாழ்க்கையே ஒரு உதாரணம்.

பெரியவாச்சான் பிள்ளைக்கு வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர் என்று ஒரு சிஷ்யர் இருந்தார். இவர், பரிசாரகன். தளிகை செய்பவர். இவர் படிப்பில்லாமல் முப்பது வயது வரை திரிந்து கொண்டிருந்தார்.

இவர், ஒரு நாள் சாஸ்திரங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து, "நீங்கள் படிக்கிறது என்ன?" என்று கேட்டார். அவர்கள் கிண்டலாக 'முஸலகிஸலயம்' என்றார்கள். (இதற்கு அர்த்தம் உலக்கைக் கொழுந்து என்பது. முசலம் என்றால் உலக்கை. கிசலம் என்றால் கொழுந்து). மரம்தானே என்று தண்ணீர் தெளித்தாலும், உலக்கையிலிருந்து துளிர் வருமா? நடக்கவே நடக்காது என்று அர்த்தம்.

இவர், பெரியவாச்சான் பிள்ளையிடம் வந்து 'முஸலகிஸலயம்' சாஸ்திரம் அதைக் குறிப்பிடுகிறது என்று கேட்டார். "நீ படிப்பில்லாதவன்" என்று ஏளனமாக அவர்கள் உலக்கைக் கொழுந்து என்று சொல்லியிருக்கிறார்கள்" என்றார் பெரியவாச்சான் பிள்ளை.

"என்னை வித்வானாக்கி அருள் புரிய வேண்டும்" என்று வாதிகேஸரி அவரை நமஸ்கரித்துக் கேட்டுக்கொண்டார். பெரியவாச்சான் பிள்ளையும் சம்மதித்து அவருக்கு அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்து, காவியம், நாடகம், தர்க்கம், வியாக்யானம், வேதம், வேதாந்தம் எல்லாவற்றையும் கற்பித்தார். 


இவரும், சாஸ்த்ர நிபுணராகி,  தன்னைப் பரிஹசிக்க உபயோகப்படுத்திய 'முஸலகிஸலயம்' என்ற பெயரிலேயே ஒரு காவியம் எழுதித் தன்னைப் பரி
ஸித்தவர்கள் கையில் .பரிசாகக் கொடுத்து , அவர்களைத் தலை கவிழச் செய்தார். வாதத்தில் அனைவரையும் வென்றார். "வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர்” என்று பெயர்பட விளங்கினார்.

பிறகு துறவு பூண்டு, திருவாய்மொழியின் பழைய வியாக்யானங்களை எல்லாம் பரிசீலனை செய்து அவற்றின் 
ஸாரங்களைத் தொகுத்து 'பன்னீராயிரப்படி' என்ற தம் வியாக்யானத்தைச் செய்து முடித்தார். ஆசார்ய கடாக்ஷம் இருந்தால் எதைத்தான் அடைய முடியாது?!!

இவர் இயற்றிய இதர நூல்கள் பரந்தரஹஸ்ய விவரணம், மாணிக்க மாலை, நவரத்ன மாலை, ஸகலப்ரமாண தாத்பர்யம், உபகார ரத்னம், கத்யத்ரய வியாக்யானம், ஆளவந்தார் ஸ்தோத்ர வியாக்யானம், அபயப்ரதான வியாக்யானம்,சாமரகஸ்யம், அனுஸந்தான ரகஸ்யம் என்பன.

இவர் சிஷ்யர்கள் நாயனாராச்சான் பிள்ளை, ப்ரகால தாஸர், பின்பழகிய பெருமாள் ஜீயர்.

- பழைய, கிழிந்த நூலில் இருந்து தட்டச்சியது. பதிப்பு பற்றி தெரியவில்லை.

6 comments:

  1. மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
    யத் க்ருபாதமஹம் வந்தே பரமானந்த மாதவம்
    என்பதை போல குருவின் கடாக்ஷம் இருந்தால் சாதிக்க
    முடியாதது இல்லை என்பதற்கு நல்ல உதாரணம்.
    இது எனக்கு தெரியாத விஷயம்.
    உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. மிகவும் நன்றாக இருக்கிறது. ஶ்ரீமந்நாராயணனை சரண் அடைந்தோர்க்கு ஒரு குறையும் இருக்காது.
    ஶ்ரீ பார்த்தசாரதி மாமா தான் என்க்கு இதை அனுப்பினார். மேலும் நிறைய எழுதவும். பத்மா.

    ReplyDelete
  3. இந்த பதிவு... அடியேன் எழுதி வாட்ஸப்பில் அனுப்பியது
    அடியேன்
    காக்கூர் கண்ணன் ராமாநுஜதாசன்
    போன்: 9994395957

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்க வேண்டும் சுவாமி, ஒரு பழைய நூலில் இருந்து 2014-ம் வருடம் தட்டச்சினேன். லிப்கோ-வாக இருக்கலாம்.

      Delete