Friday, February 28, 2014

ஸ்ரீ நாராயணீயம் / ஸ்ரீ நாராயணீயமும் நாராயண பட்டத்ரியும்

ஸ்ரீ நாராயணீயம்

ஸ்ரீ நாராயணீயம் / ஸ்ரீ நாராயணீயமும் நாராயண பட்டத்ரியும்

முன்னுரை:

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன், மேப்பத்தூர் என்ற ஊரில் பிறந்த நாராயண பட்டத்ரி அவர்களால் இயற்றப்பட்ட ஸ்லோகங்கள். ஸ்ரீ நாராயணீயம் என்ற . அற்புதமான, அழகான தொகுப்பு. ஸ்ரீமத் பாகவத ஸாராம்சம். பட்டத்ரி, தனது தந்தையிடத்திலும், அச்சுத பிஷாரடி என்ற குருவிடத்திலும் தர்க்கம், மீமாம்ஸை, வியாகரணம் போன்ற சாஸ்திரங்களைக் கற்றார். அச்சுத பிஷாரடி வாத ரோகத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்படுவதைக் கண்ட பட்டத்ரி, குரு தக்ஷிணையாக, அந்த வாத ரோகத்தை முன்வந்து ஏற்றுக்கொண்டார். உடனே, வாத ரோகம், பட்டத்ரியைப் பீடித்து அதனால் மிகவும் அவதிப்பட்டார். பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. துஞ்சத்தெழுத்தச்சன் என்பவர் கவிஞர், பக்தர், ஜோசியர். அவர், பட்டத்ரியை குருவாயூருக்குச் சென்று “நாவிலே மச்சம் தொட்டு உண்” என்று பணித்தார். அறிவற்றவர்களாய் இருந்தால், மீனை உண்ணச் சொல்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், பட்டத்ரிக்கு மச்சாவதாரம் தொடங்கி பகவானை வர்ணிக்கச் சொல்கிறார் என்று புரிந்தது. உடனேயே, குருவாயூர் சென்று அங்குள்ள புண்யதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, சன்னிதியிலேயே அமர்ந்து, அவன் பெருமையைக் காவ்யமாக எழுத ஆரம்பித்தார். அந்தக் காவ்யமே “ஸ்ரீ நாராயணீயம்”. மொத்தம் 1034 ஸ்லோகங்கள் உள்ளன. 100 தசகங்கள் கொண்டது . ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் உள்ளன. சில தசகங்களில் 10 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளன. 


ஒவ்வொரு ஸ்லோகம் எழுதி முடித்ததும், “ஹே குருவாயூரப்பா, இவ்வாறு நடந்தது உண்மையா? என்று கேட்பாராம். குருவாயூரப்பன் “ஆம்” என்று தலையை ஆட்டினால்தான் அடுத்த ஸ்லோகம் எழுதுவாராம். ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் "ஹே கிருஷ்ணா! ஹே குருவாயூரப்பா! உனது மூர்த்திதான் எனக்குக் கதி, என்னை ரோகத்திலிருந்து காக்க வேண்டும்" என்ற வரிகளை நோக்கும்பொழுது, நாராயண பட்டத்ரி தன் ரோகத்தை மட்டுமின்றி பக்தர்கள் எல்லாருடைய ரோகங்களையும் போக்கவே பிரார்த்தித்திருக்கிறார் என்று தெரிகிறது. "என்னுடைய ரோகத்தைப் போக்க வேண்டும் என்பதால் இதை படிப்போர் யாவருமே இப்படி உச்சரித்து, தமது ரோகத்தையும் போக்கிக் கொள்ளவேண்டும் என்ற அவருடைய விசாலமான எண்ணம் தெரிய வருகிறது. இப்படி, எல்லா ஸ்லோகங்களுக்கும் ஊகித்துக்கொள்ள வேண்டும். கலியுகத்தில் ஜன்மம் கடைத்தேற பக்தி மார்க்கம் ஒன்றே வழி.  நாராயணீயத்தில் பக்தியே பிரதானம்.  ஆகையால், இதைப் படிக்கும்போது  பகவத் தியானமே  சிறந்த வழி, பகவானே சிறந்த புகலிடம் என்றும் தெரிய வருகிறது.

இதை எழுதி முடித்ததும், அவருடைய வாதரோகம் நீங்கிவிட்டது. ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய சரிதத்தைக் கூறுவதாலும், நாராயண பட்டத்ரி என்பவர் இயற்றியதாலும் , நாராயணீயம் என்று பெயர் பெற்றது. 

நாராயணீயம் படித்தாலோ, பாராயணம் செய்தாலோ, சிரவணம் செய்தாலோ ஐஸ்வர்யம் கூடும், கொடிய ரோகம் நிவர்த்தியடையும், கிரக பீடை நீங்கும். காலசர்ப்ப தோஷ நிவர்த்தி, வாதரோக நிவர்த்தி, உத்யோக உயர்வு, சந்தான பாக்கியம், ஆயுள் விருத்தி, ஆரோக்யம் முதலியன கிடைக்கும், ராஸக்ரீடை, ருக்மிணி கல்யாணம் தசகங்களைப் படித்தால் ஆண்-பெண் இருபாலருக்கும் விவாகம் கூடிவரும் என்று எத்தனையோ பலன்களைச் சொல்கிறது பலஸ்ருதி.

தினமும் நாராயணீயம் ஒரு ஸ்லோகமாவது பாராயணம் செய்தால் நமது, பிரச்னைகள் , இன்னல்கள், மன அழுத்தம் குறைந்து , நிம்மதியையும், நீண்ட ஆயுளையும், உடல் நலத்தையும் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பட்டத்ரி, ஸ்ரீ நாராயணீயத்தை நிறைவு செய்த நாளான கார்த்திகை 28ம் நாள், நாராயணீய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நான் சிறுமியாய் இருந்த பொழுது, “ஸ்லோகங்கள் வாயில் நுழையாதவர்கள் அர்த்தங்களைப் படித்தாலும் அதே பலன், ஒரு நாளைக்கு, ஒரு தசகம் அல்லது ஒரு ஸ்லோகமாவது படி” என்று என் பாட்டி சொல்வார். நிறைய குருவாயூரப்பன் கதைகளையும் சொல்வார். அது முதல், எனக்கு ஸ்ரீ குருவாயூரப்பன் தான் இஷ்ட தெய்வம். எனக்கு நோய், மனக்கவலை, பிரச்னைகள் வந்தால் அனைத்திலிருந்தும் “என்னுடைய குருவாயூரப்பன்” தான் என்னையும், என் குடும்பத்தாரையும் இன்றளவும் காத்து வருகிறான்.


சுமார் 30 வருடங்களாக ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் எழுதிய நாராயணீயம் படித்து வருகிறேன். வேறு சில நாராயணீயப் புத்தகங்களிலும் விளக்கங்கள் படித்துள்ளேன்.  சில உபன்யாசங்களிலும் கேட்டிருக்கிறேன். எனக்கு சம்ஸ்க்ருதம் எழுத்துக்கள் தெரியும். எழுத்துக் கூட்டிப் படித்து விடுவேன். அர்த்தம் தெரியாது. இருப்பினும், படிக்கும் யாவருக்கும் பலனளிக்கும் என்பதாலும், வடமொழி அறியாதவர்களும் உச்சரிப்பு பிறழாமல் படிக்க வேண்டும் என்பதற்காகவும், என்னுடைய ஆத்ம திருப்திக்காகவும் இந்தச் சிறு முயற்சி. ஒரு நாளைக்கு ஒரு தசகம், சம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும், மற்றும் படித்த, கேட்ட அர்த்தங்களை மனதில் கொண்டு, எளிய நடையில் ஒரு சிறிய விளக்கம் பதிவிட " என் குருவாயூரப்பன்" பணித்துள்ளான். இதில் ஏதேனும் தவறு இருந்தால், மன்னிக்கவும். இச்செயல் நன்றாக ‘அவன்’ அடியேனைத் திருத்திப் பணி கொள்வான். நிச்சயம். ஸ்லோகங்களை வீடியோவில் ஒலிபரப்பிய மடிப்பாக்கம் ஸ்ரீமதி.லக்ஷ்மி மாமிக்கு என் நன்றிகள்.

2 comments:

  1. நானும் உங்களை மாதிரி ஸ்ரீ குருவாயுரப்பன் பக்தன் .தினமும் கஜேந்திர மோக்ஷம்(26) பாதாதி கேச வர்ணனை (100) ஸ்லோகங்களை சொல்லுகிறேன்.
    முடிந்தபொழுது முழு பாராயணமும் பண்ணி இருக்கிறேன்.அவர் கண் கண்ட தைய்வம்.நாரயணீயம் ஒரு வரப்பிரசாதம்

    ReplyDelete