Monday, June 8, 2009

பசுமாடு ஸ்தோத்ரம்

இந்த ஸ்தோத்ரம் 1940-ல் என் தாத்தா கையால் எழுதப்பட்டு ஒரு பழைய நோட்டில் இருந்தது.


பசுமாடு ஸ்தோத்ரம்


ஸ்ரீமன் நாராயணனும், பரமனும், இந்திரனும், ஆதி விஷ்ணுவும், அவருடைய அச்சுதரும், “பசுவம்மா ஸ்தோத்திரத்தை தினந்தோறும் சொன்னவர்க்கு சனியொன்றும் வாராது சகலமும் நான் தருவேன் சந்தானம் சம்பத்து சகலமும் நான் தருவேன்என்று சொல்லறா.


கார்த்தாலே எழுந்திருந்து, கைகால் அலம்பி, வாய் பூசி, சாலமே எண்ணி, கணவனைக்கைதொழுது, நிலமே எண்ணி, இத்தனையும் தானெண்ணி, ராக்கண்கள் எண்ணி, பலங்கள், நிலங்கள் எண்ணி, கோமாம்பசுக்கள் எண்ணி, பஞ்சபாண்டவ த்ரௌபதியும் தானெண்ணி, மத்தவன், கத்தவன், மாதவன், கேசவன், கேளுங்கள். பாவிகளே கேளுங்கள். இக்கித்துப்பேசுகிற

இனியாத்மா கேளுங்கள். தூரம் பேசுகிற துராத்மா கேளுங்கள்.

ஆத்மசுத்தி இல்லாத அரும்பாவிகளே கேளுங்கள். சரீர சுத்தி இல்லாத ஸாஹஸிகளே கேளுங்கள். மானத்தார் கேட்டால் வருஷம் வருஷிப்பார், பூமியார் கேட்டால் பொதிபொதியாய்

நெல் விளையும். சில பெண்கள் கேட்டால் புத்திரரைப்பெற்றிடுவார். கண்மணிகள் கேட்டால் ஸ்ரீவைகுந்தம் போவார்கள். ப்ருஹ்மசாரி கேட்டால் நல்ல ஸ்த்ரீ அடைவான். கன்னியர்கள் கேட்டால் கடுகி மணம் பெறுவாள். பசுவின் பிறப்பு நல்ல பிறப்பு என்று இச்சொல் சொன்னால் இவர்த்தி அடங்கும். இவர்த்தி சொன்னால் தோஷம் நிவர்த்தி ஆகும்.


பசுவம்மா ஸ்தோத்திரத்தை தினந்தோறும் சொன்னவர்க்கு சனியொன்றும் வாராது சகலமும் நான் தருவேன் சந்தானம் சம்பத்து சகலமும் நான் தருவேன்.


பசுவுக்கு நெற்றியில் சுட்டியும் நிறைஞ்ச முகத்தில் அழகும் இருக்கும்.

கொம்பிலே கூத்தகன் இருப்பான்

நெத்தியிலே நீலகன் இருப்பான்

இடது காதிலே இந்திரன் இருப்பான்

வலது காதிலே ரஹஸ்ய பகவான் இருப்பார்

இரண்டு கண்களிலும் க்ருஷ்ண பகவான் இருப்பார்

முகத்திலே மூதேவி இருப்பாள்

அடிநாக்கிலே அருந்ததி இருப்பாள்

நுனி நாக்கிலே ஸரஸ்வதி இருப்பாள்

கண்டத்திலே காளமேகம் இருக்கும்

மடியிலே மஹாலக்ஷ்மி இருப்பாள்

கிடையிலே பார்வதி இருப்பாள்

சாணத்திலே சந்திர, சூர்யர் இருப்பர்

கோமியத்திலே கங்கா, பார்வதி இருப்பாள்

வாலிலே வைகுந்தமிருக்கும்

நாலு காலிலும் நந்தகன் இருப்பான்


இப்படியாப்பட்ட பசுவை அருணோதயத்திலே பார்த்தால், ஆயிரம் காராம்பசுவைக்கொண்டுவந்து கொம்புக்குப்பூண்கட்டி, கொளம்புக்கு வெள்ளிகட்டி, ஓடுகிற காலுக்கு ஓர் சலங்கைதான் போட்டு, நடக்கிற காலுக்கு வண்டயங்கள்தான் போட்டு, வீசுற வாலுக்கு வெண்சாமரம் போட்டு, வேத பிராமணர் கையில் கொடுத்த பலன் பெறுமே. பூமிதானம், பொருள்தானம், பண்ணின பலன் பெறுமே. சாளக்ராம தானம், துளசிமாலை தானம் பண்ணின பலன் பெறுமே. உடுக்கும் ஒரு புடவை கொடுத்த பலன் பெறுமே.


பசுவம்மாதான் அப்போ கங்கைக்கரையிலே மேயத்தான் போனது. மேயப்போன இடத்தில் ஆக்ருஷம் கண்டது . ஆக்ருஷம் தான் அப்போ பசுவைத்தின்னுடறேன் என்றது. பசுவம்மா அப்போ கன்னுக்கு புத்தி சொல்லி திரும்பிவரேன் என்று சத்தியங்கள் பண்ணித்து. பக்கத்தில் நின்ன அந்தணரை சாட்சியாய் இருக்கச்சொன்னது.


(பசு திரும்பி வருவேன் என்று பண்ணின சத்தியம்):


ஓராம் சமூகத்தில் ஒரு மகனே நீர் கேளும். ஆழி அன்னத்தில் அரைச்சொம்பு நீரெடுத்து, பாதமிருக்கப்பல் தேய்த்து வாய் கொப்பளித்தால் அந்த நரகத்தில் போவேன் நான் அந்தணரே.


இரண்டாம் சமூகத்தில் இந்திரரே நீர் கேளும். இச்சிக்கும்போது பிச்சைக்கு வந்தவரை தள்ளிக்கதவடைத்து தாழ்போட்டு மண்ணை இரைத்த அந்த நரகத்தில் போவேன் நான் அந்தணரே.


மூன்றாம் சமூகத்தில் மும்மூர்த்தி நீர் கேளும். மூத்தாள் இருக்க இளையாளைக்கொண்டு ஒத்தாப்புச்சொல்லி எதிரே சிரித்திருப்பான். அந்த நரகத்தில் போவேன் நான் அந்தணரே.


நாலாம் சமூகத்தில் நல்மகனே நீர் கேளும். சாலிருக்க நீரே எடுக்காவிட்டால் குஞ்சுகளைக்கன்னத்தைத்திருகிற பேரும், கதுப்பைப்பிடித்து இழைக்கிற பேரும், கொள்ளித்தேளாய்ப்பிறப்பார்கள். அந்த நரகத்தில் போவேன் நான் அந்தணரே.


ஐந்தாம் சமூகத்தில் அறுமுகனே நீர் கேளும். அரசு வைத்து பயிராக்கி ஆயிரம் நாள் வாழ்ந்துவிட்டு கல்யாணம் பண்ணாது பரமபதம் சேர்வார்கள். அந்த நரகத்தில் போவேன் நான் அந்தணரே.


ஆறாம் சமூகத்தில் அந்தணரே நீர் கேளும். அங்காடிக்கூடையிலே அதிர அடி இட்டவரும், பிச்சைக்கு வந்தவரைப்பின்னே வரச்சொன்னவரும் அந்த நரகத்தில் போவேன் நான் அந்தணரே.


ஏழாம் சமூகத்தில் என்மகனே நீர் கேளும் . கல்யாண நாழியிலே கலைத்துவிடுகிற பேரும், மித்ரபேதம் பண்ணினபேரும் அந்த நரகத்தில் போவேன் நான் அந்தணரே.


எட்டாம் சமூகத்தில் ஈஸ்வரரே நீர் கேளும். ஒத்தி இருக்க ஒத்தி கொண்டுவந்து ஒத்தாப்பு சொல்லி உலகத்தே ஆண்டிடுவாள். அந்தியம்போதும் அசலாத்தே வம்பளந்து ஸந்தி விளக்கேற்றாதே ஸாஹஸம் பண்ணினபேரும் அந்த நரகத்தில் போவேன் நான் அந்தணரே.


ஒன்பதாம் சமூகத்தில் உலகளந்தாரே நீர் கேளும். ஒரு பானைச் சோற்றிலே ஓரவஞ்சனை பண்ணவரும், கலவஞ்சனை பண்ணவரும் அந்த நரகத்தில் போவேன் நான் அந்தணரே.


பத்தாம் சமூகத்தில் நான்முகனே நீர் கேளும். பர்த்தாவைத் தூங்கவைத்து பரபுருஷன் போறபேரும் அந்த நரகத்தில் போவேன் நான் அந்தணரே.


இப்படி காராம்பசுவும் சத்தியம் பண்ணி கன்னிடம் வந்தது.


கன்றை அணைத்து மடியில் வைத்து வயிறு நிறைய பால் கொடுத்து சொல்லித்து.


ஒரு வீட்டு நெல்லை ஓடிப்போய்த் திங்காதே.

பட்டரையன் வீட்டு நெல்லை பதறிப்போய்த் திங்காதே. மொட்டச்சி கன்னென்று முறத்தால் அடிப்பார்கள். கம்மனாட்டி கன்னென்று கழுத்தைப்பிடித்துத் தள்ளுவார்கள்.


ஆழியங் கிணற்றுலே அருகு முளைத்ததென்று அந்தப்புல்லைப் பதறிப்போய்த் திங்காதே என்று சொல்லி, “ஆறுகளா, குளங்களா உன் அடைக்கலம் என்றது . பக்ஷிகளா பருந்துகளா பார்த்துக்கோ என்றது. உங்கள் குஞ்சுகளைப்போல கூட்டு வளருங்கோ, உங்கள் பாலகனைப்போல பார்த்து வளருங்கோ, உங்கள் மக்களைப்போலே வருந்தி வளருங்கோ. உங்கள் பிள்ளைகளைப்போலே போற்றி வளருங்கோ


இப்படி எல்லாத்துகிட்டேயும் சொல்லி நாழியாகிவிட, ஆக்ருஷம், “சத்தியமும் தப்பி பொய்களும் சொன்னாயேஎன்றது.


எல்லாத்துகிட்டேயும் சொன்னதால் நாழியாயிடுத்துஎன்றது பசுவம்மா.


காராம்பசுவின் கன்னும் கிட்ட வந்து "அம்மா சத்தியமும் தப்பவில்லை, பொய்களும் சொல்லவில்லை என்றது.


காராம்பசுவும் ஆக்ருஷம் கிட்ட வந்து "ஆக்ருஷம், நீர் ரொம்ப இளைப்போடே இருக்கிறீரே. நான் பக்ஷியா பருந்தாஎன்று பரிதாபமா சொல்லித்து.


ஆக்ருஷம் தான் அப்போ முக்கால் வணங்கிவந்து மூத்தோரை சேவித்து , கல்லோட மோதி பரமபதம் சேர்ந்தது.


பசுவம்மா ஸ்தோத்திரத்தை தினந்தோறும் சொன்னவர்க்கு சனியொன்றும் வாராது சகலமும் நான் தருவேன். தாழி வைத்துத் தயிர் கடைவார். சந்தானம் பெற்றிடுவார். முத்தொட்டில் போட்டு முறியாதே வாழ்ந்துவிட்டு, கட்டிப்பிரியாத கணவனோடே வாழ்ந்துவிட்டு பர்த்தாவுக்கு முன்னே பரமபதம் சேர்ந்திடுவார்கள்.


சுபம்

No comments:

Post a Comment