Sunday, December 14, 2014

கண்ணன் கதைகள் (2) - மஞ்சுளாவின் மலர்மாலை

கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள், கண்ணன் கதைகள் (2) - மஞ்சுளாவின் மலர்மாலை

கிழக்கே இருந்து குருவாயூருக்குள் நுழையும் போது முதலில் தென்படுவது அடிப்பகுதியில் பிரம்மாண்டமான கருடனுடன் கூடிய ஒரு பெரிய ஆலமரம். இது “மஞ்சுளால்”, அதாவது மஞ்சுளாவின் ஆலமரம் என்று அழைக்கப்படுகிறது.

வாரியார் வகுப்பைச் சேர்ந்த மஞ்சுளா, மனப்பூர்வமான பக்தியுள்ள பெண். ஒவ்வொரு இரவும், அவள் மலர் மாலைகளைக் கட்டி, குருவாயூர் கோயிலில் கொண்டு கொடுப்பாள். மேல்சாந்தி அம்மாலையை அப்பனுக்கு ஸமர்ப்பிப்பார். ஒரு நாள் அவள் தாமதமாக வந்ததால், கிழக்கு நடையில் உள்ள ஆலமரத்தின் அருகே வரும்போதே கோவில் மூடப்பட்டு விட்டது. கண்களில் நீர் வழிய, மிகுந்த மன வேதனையுடன் அம்மரத்தின் அருகே அவள் நிற்பதைக் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பூந்தானம் நம்பூதிரி கண்டார். அவர், அவளுக்கு ஆறுதல் கூறி, “ இறைவன் எல்லா இடத்திலும் உள்ளார். அதனால் நீ மாலையை ஆலமரத்தின் அடியில் உள்ள கல்லில் வைத்து விடு, அவர் அதை ஏற்றுக் கொள்வார்” என்று கூறினார். அவளும் நம்பிக்கையுடன் அந்த மாலையை மரத்தின் அடியில் வைத்துவிட்டு மனநிம்மதியுடன் வீடு சென்றாள்.

அடுத்த நாள் ஒரு அதிசயத்துடன் விடிந்தது. நிர்மால்ய தரிசனத்திற்குப் பிறகு, மேல்சாந்தி விக்ரகத்தின் மீதிருந்த முந்தைய நாள் மாலைகளை அகற்றினார். மிகவும் முயற்சித்தும் ஒரு மாலை மட்டும் அகற்ற முடியாமல் சிக்கிக்கொண்டு இருந்தது. நிர்மால்ய தரிசனத்திற்கு வந்திருந்த அனைவரும் வியந்தனர். அப்போது அங்கிருந்த பூந்தானம் நம்பூதிரிக்கு முதல் நாள் இரவு நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. “அது மஞ்சுளாவின் மாலையென்றால் அதுவும் வரட்டும்” என்று உரக்கக் கூவினார். உடனே அப்பனிடம் சிக்கிக் கொண்டிருந்த மாலை நழுவி, கீழே விழுந்தது. அனைவரும் ‘ஹரே கிருஷ்ணா’ என்று கோஷமிட்டுக் கொண்டே மஞ்சுளாவின் மாலையிலிருந்த பூக்களை எடுத்துக் கொண்டனர். ஆலமரத்தை நோக்கி அதனை வழிபட விரைந்தனர். அது முதல் அந்த மரம் “மஞ்சுளால்/மஞ்சுளா ஆல்” என்று அழைக்கப்படுகிறது.

உற்சவத்தின் முதல் நாள் நடத்தப்படும் ‘ஆனையோட்டம்’ (யானைப் பந்தயம்), கிழக்கு நடையில் உள்ள இந்த ‘மஞ்சுளால்’ என்ற மரத்தில் இருந்துதான் தொடங்குகிறது.

No comments:

Post a Comment