Tuesday, December 16, 2014

கண்ணன் கதைகள் (5) - குசேலரின் கதை

கண்ணன் கதைகள் (5) -  குசேலரின் கதை, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

குசேலோபாக்யானம்

இன்று மார்கழி மாதம் முதல் புதன்கிழமை. மார்கழி மாத முதல் புதன்கிழமை "குசேலர் தினம்" என்று கொண்டாடப்படுகிறது.


ஸாந்தீபனி முனிவரிடம் கண்ணனும், சுதாமா (குசேலர்) என்ற பிராமணரும் ஒன்றாக குருகுலம் பயின்றார்கள். கிருஹஸ்தனான அவர் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி பூண்டிருந்ததால், செல்வங்களில் பற்றற்றவராய்ப் புலன்களை அடக்கி, தன்னுடைய நாட்களைக் கழித்தார். அவருடைய மனைவியும் அவரைப் போன்ற குணங்கள் உள்ளவளாய் இருந்தாள். வறுமையில் குழந்தைகளைப் பேண முடியாததால், ஒரு நாள் அவள் தன் கணவரிடம், லக்ஷ்மீபதியான கிருஷ்ணர் உங்கள் நண்பரல்லவா? வாழ்வதற்குப் பொருளைப் பெற ஏன் அவரை அணுகக்கூடாது? என்று கேட்டாள். பசியின் துன்பத்தாலேயே அவள் அவ்வாறு கூறினாள். செல்வம் கர்வத்தை உண்டாக்கி வாழ்க்கையைக் குலைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தாலும், கண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால், தனது வஸ்திரத்தின் நுனியில் மூன்று பிடி அவலை முடிந்துகொண்டு, காணிக்கையாய் எடுத்துச் சென்றார்.

கிருஷ்ணர் இருக்கும் துவாரகா நகரத்தை அடைந்தார். கிருஷ்ணனுடைய மாளிகைக்குள் நுழைந்ததும் வைகுண்டத்தில் இருப்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். பகவான் கிருஷ்ண
ர், அவரை வரவேற்று உபசரித்ததும் விளக்கமுடியாத ஆனந்தமடைந்தார். கிருஷ்ணர், அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு குருகுலத்தில் நடந்த பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். குருபத்தினிக்கு விறகு கொண்டு வர காட்டுக்குச் சென்றபோது மழையில் நனைந்ததைப் பற்றிப் பேசினார்..

கொண்டு வந்த அவலைக் கொடுக்க வெட்கப்பட்டுத் தயங்கிய குசேலரிடமிருந்து கட்டாயப்படுத்தி அவலை வாங்கி ஒரு பிடியை உண்டார். இரண்டாவது பிடியை எடுத்ததும், “போதும், போதும்” என்று மகாலக்ஷ்மியான ருக்மிணி கிருஷ்ணருடைய கையைப் பிடித்துத் தடுத்தாள். (இதற்குமேல் உண்டால் கொடுப்பதற்குப் பொருள் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்). பக்தர்களுக்கு அடியவனான கிருஷ்ணர், குசேலரை மிகவும் உபசரித்தார். குசேலர், மிகவும் மகிழ்ச்சியுடன் அன்று இரவு கிருஷ்ணருடன் தங்கினார். மறுநாள் பொருள் எதுவும் பெறாமல் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார்.

" பொருள் வேண்டும் என்று கேட்டிருந்தால் கிருஷ்ணன்  கொடுத்திருப்பார். மனைவியிடம் எவ்வாறு சொல்வது?" என்று வழிநெடுக யோசித்துக் கொண்டே சென்றார். அவரது மனம் முழுக்க பகவான் கிருஷ்ணருடைய புன்னகையும், பேச்சுக்களும் நிறைந்திருந்தது. 


அப்போது அவர் பிரகாசம் மிக்க ரத்தினங்களால் விளங்கும் ஒரு மாளிகையை அடைந்தார். க்ஷணநேரம் வழி தவறி வந்து விட்டோமோ என்று திகைத்து, பின்னர் வீட்டினுள் நுழைந்தார். உள்ளே தோழிகள் சூழ, ரத்தினங்களாலும், தங்கத்தினாலும் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கும் தன் மனைவியைக் கண்டார். கிருஷ்ணனுடைய கருணை மிக அற்புதமானது, ஆச்சர்யமானது என்று அறிந்தார்.

ரத்னமயமான மாளிகையில் வசித்துக் கொண்டு இருந்தாலும் அவர் கண்ணனிடமே மனதைச் செலுத்தி மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தார்.

பகவான் கிருஷ்ணரை சந்திக்க குசேலர் அவலை எடுத்துச் சென்றது ஒரு மார்கழி மாத முதல் புதன்கிழமை. அதனால், மார்கழி மாத முதல் புதன்கிழமை "குசேலர் தினம்" என்று கொண்டாடப்படுகிறது. குருவாயூர் கோவிலில் பக்தர்கள் அன்றைய தினம் குருவாயூரப்பனான உன்னிக்கண்ணனுக்கு அவல் ஸமர்ப்பித்து வழிபடுவர். மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று கண்ணனுக்கு அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. வீடுகளில் அன்றைய தினம் "குசேலோபாக்யானம்" (குசேலரின் கதை) பாராயணம் செய்வார்கள். கையகலத்திற்கு ஒரு சிறிய சிவப்பு வஸ்திரம் (கண்ணனின் கௌபீனம் என்று ஐதீகம்) மடித்து வைத்து , அவல், வெல்லம் வைத்து வழிபடுவார்கள். பிறகு அந்த அவலை சிறு சிறு  கிழியாகக் (சிறிய மூட்டையைப் போல்) கட்டி அனைவருக்கும் விநியோகம் செய்வார்கள்.

இந்த கதையைப்  படித்து, அவலும் வெல்லமும் நைவேத்யம் செய்து கண்ணனை வழிபடலாம். பக்தர்களுடைய விருப்பத்தை குருவாயூரப்பன் நிச்சயம் நிறைவேற்றுவான். அது சரி, அதென்ன  சிவப்பு வஸ்திரம்? அதுவும் கண்ணனின்  கௌபீனமா? அடுத்த  கதைக்குப் பொறுத்திருங்கள். 

7 comments:

  1. தெரிந்த கதைதான் ஆனால் அவலை மடித்த சிவப்பு வஸ்த்திரத்தில் நைவேத்யமாக சமர்ப்பிபது எனக்கு புதிய விஷயம்

    ReplyDelete
  2. Beautiful Shanthi. . You are bringing unknown facts to light.. God bless us all

    ReplyDelete