Saturday, December 13, 2014

கண்ணன் கதைகள் (1) - பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும்

கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள், கண்ணன் கதைகள் (1) -  பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும்

முன்னொரு சமயம் வில்வமங்கலம் ஸ்வாமிகளிடம் வாரியர் என்ற பக்தன் வேலை செய்து வந்தான். அவனுக்கு முறைப்படி பூஜை செய்யவோ, தியானம் செய்யவோ தெரியாது. அவன் ஒரு நாள் ஸ்வாமிகளிடம், “நான் குருவாயூரப்பனை எவ்வாறு தியானம் செய்ய வேண்டும்? அருள் கூர்ந்து எனக்கு சொல்லுங்கள்” என்று வேண்டினான். அவரோ அலட்சியமாக, “ஒரு பெரிய கொம்புள்ள எருமை போல் நினைத்து பூஜிக்க வேண்டும்” என்று சொன்னார். அவனும் அதை உண்மையென நம்பி அவ்வாறே பூஜித்து வந்தான்.

ஒரு நாள் ஸ்வாமிகளுடன் அவன் கோயிலுக்கு சென்றிருந்தான். அப்போது “ஸ்ரீவேலி” பூஜைக்காக உற்சவ விக்ரஹத்தை நம்பூதிரி எடுத்துக் கொண்டு வெளியில் வர முயற்சித்தார். வாசற்படியைத் தாண்ட முடியவில்லை. தாண்டும்போது ஏதோ இடிக்கும் சத்தம் மட்டும் கேட்கிறது. எது இடிக்கிறது என்று தெரியவில்லை, தாண்டவும் முடியவில்லை. ஸேவிக்க வந்த அனைவரும் கவலையுற்றனர். அங்கு இருந்த ஸ்வாமிகளிடம் அது பற்றிக் கேட்டனர். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்பொழுது, வேலையாளான பக்தன் நம்பூதிரியிடம், “நிதானமாக எடுத்து வாருங்கள், கொம்பு இடிக்கிறது, சற்று சாய்த்து எடுத்து வாருங்கள்” என்று சொன்னான். அதன்படி செய்ததும் விக்ரஹத்தை எடுத்து வர முடிந்தது. வில்வமங்கலம் ஸ்வாமிகள், “என்ன பிதற்றுகிறாய்”? என்று அவனைக் கடிந்து கொண்டார். அவனோ, “ஸ்வாமி, எருமையின் கொம்பு இடித்ததால் சொன்னேன் என்று பணிவுடன் கூறினான். உடனே வில்வமங்கலத்திற்குத் தான் முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது. கண்களை மூடித் தியானித்தபோது அவரது மனக்கண்ணில், சங்கு, சக்கரம், கதை, பத்மத்துடன் ஒரு தெய்வீக எருமை தெரிந்தது !!!! 

உடனே, அவர் அந்த பக்தனிடம், என்னை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார். அவனும், நான் எவ்வாறு பூஜிக்க வேண்டும் என்று  எனக்குச் சொல்லித் தாருங்கள் என்று கூற, அவர் சந்தோஷத்துடன், “ஸ்ரீ குருவாயூரப்பனை சூர்யனை விடப் பிரகாசமான கிரீடம், மேல் நோக்கியுள்ள திலகத்தால் அழகிய கருணை பொங்கும் கண்கள், புன்சிரிப்புடன் கூடிய செவ்வாய், மீனைப் போன்ற நாசி, கன்னங்களில் ஒளி வீசும் மகர குண்டலங்கள், மார்பை அலங்கரிக்கும் கௌஸ்துப மணி, வனமாலை, முத்துமாலை, ஸ்ரீவத்ஸம், நான்கு கரங்களில் தோள்வளைகள், கங்கணம், சிறந்த ரத்னங்களால் இழைத்த மோதிரம், மேலும், கரங்களில் சங்கம், சக்ரம், கதை, தாமரை, இடுப்பில் பொன் அரைஞாண், பீதாம்பரம், தாமரை மலரை ஒத்த திருவடி கொண்ட அழகிய திருமேனியுடன் தியானம் செய்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். அந்த பக்தனும் அவ்வாறே தியானம் செய்து பூஜைகளை அனுஷ்டித்து நற்கதி அடைந்தான். இதிலிருந்து, “ பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும் என்பதையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மனிதனின் தர்க்கத்திற்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்டவர்” என்பதையும் நாம் அறியலாம்.

No comments:

Post a Comment