Wednesday, August 2, 2017

திருவஹீந்த்ரபுரம் - ஸ்ரீ தேவநாதப்பெருமாள் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் -39

108 திவ்யதேசம், நடுநாடு திவ்யதேசங்கள், திருவஹீந்த்ரபுரம்
திருவஹீந்த்ரபுரம் - நடு நாட்டுத் திருப்பதிகள் இரண்டில் ஒன்றான இந்த க்ஷேத்ரம், கடலூரிலிருந்து சுமார் 5 கி மீ தொலைவில் உள்ளது. இத்தலம்  திரு அயிந்தை என்றும் வழங்கப்படுகிறது. 

மூலவர்: தெய்வ நாயகன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் ஸேவை சாதிக்கிறார். தேவநாதன் என்றும் திருநாமம்
உற்சவர்: மூவராகிய ஒருவன், அச்சுதன், தேவநாதன்,அடியார்க்கு மெய்யன் என்று பல திருநாமங்கள்

தாயார்: வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜவல்லித் தாயார்.
விமானம்: சந்த்ர விமானம், சுத்தஸத்வ விமானம்
தீர்த்தம்: கருட நதி, சந்த்ர தீர்த்தம், சேஷ தீர்த்தம்.
ப்ரத்யக்ஷம்: சிவன், கருடன், ஆதிசேஷன், தேவாசுரர்கள்.

ராமர், ஆண்டாள், ஆஞ்சனேயர் சன்னதிகளும் உள்ளது. மாடவீதியில் மணவாள மாமுனிகள் சன்னதி இருக்கிறது. 


ஸ்தல விசேஷங்கள்:

கோவிலுக்கு
 அருகில் உள்ள 'ஔஷதகிரி' என்ற சிறிய மலையின் மேல் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார். இந்தக் கோவிலில் இருக்கும் தேசிகன் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது. ஸ்வாமி தேசிகன் இந்த மலையில் தவம் செய்தபோது கருடன் அவருக்குப் பிரத்யக்ஷமாகி, ஹயக்ரீவ மந்த்ரத்தை உபதேசித்தார். இங்குதான் ஸ்வாமி தேசிகன் கருட பஞ்சாசத், தேவநாயக பஞ்சாசத், அச்சுத சதகம் முதலிய ஸ்தோத்ரங்களை இயற்றினார். ஹயக்ரீவர் கல்விக் கடவுள் என்பதால், கல்வியறிவு பெருக வேண்டி இந்த சன்னதிக்கு வருவோர் ஏராளம். இந்த மலையில் உள்ள 74 படிகள் 74 சிம்மாசனாதிபதிகளைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது விசேஷம். 

திருவஹீந்த்ரபுரத்தில் ஸ்வாமி தேசிகன் திருமாளிகையும் உள்ளது.  ஸ்வாமி தேசிகன் தமது விக்ரத்தைத் தானே செய்து கொண்டார். அந்த விக்ரகமும் இத்தலத்தில் உள்ளது. ஸ்வாமி தேசிகன் ஆராதித்த ஹயக்ரீவர் விக்ரகம் தேவனாதப்பெருமாள் சன்னதியில் உள்ளது.

ஸ்தல வரலாறு:

ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த போரில் தேவர்கள், ஸ்ரீமன் நாராயணனைத் துதிக்க, அவர்களுக்கு உதவ வந்த பெருமாள் அசுரர்களுடன் போரிட்டார். அசுரர்களுக்கு உதவ வந்த பரமசிவன் சக்ராயுதத்திற்கு எதிராக தனது சூலாயுதத்தை ஏவ, அது சக்கரத்தில் ஒட்டிக்கொண்டு அதற்கு ஓர் அணிகலன் போல் நின்றது. அப்போது சிவனுக்கு, பெருமாள் தம்மை மும்மூர்த்தி வடிவாக, தாமே மும்மூர்த்தி
என்பதாகக் காண்பித்தார். பரமசிவனின் வேண்டுகோளுக்கு இணங்கி அவ்விடத்திலேயே கோவில் கொண்டார். தேவர்களுக்குத் தலைவனாக இருந்ததால் பெருமாளுக்கு 'தேவநாதன்' என்ற திருநாமம்.

இதனாலேயே மூவராகிய பெருமாள் என்று திருமங்கையாழ்வார் பாடுகிறார். திருமங்கையாழ்வார் பத்து பாசுரங்களால் (1148-1157) மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.

மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த
பாவு தண்டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே - (1157)

இந்த க்ஷேத்ரத்தை சேவிப்பவர்களுக்குப் பாவம் அண்டாது என திருமங்கையாழ்வார் சொல்கிறார்.

ஒரு சமயம் பெருமாள் தன் தாக சாந்திக்கு நீர் கேட்க, கருடன் ஆகாயத்திற்கும், ஆதிசேஷன் பாதாளத்திற்கும் சென்றனர். ஆதிசேஷன் பூமியைத் தன் வாலால் அடித்து, பாதாள கங்கை தீர்த்தத்தை முதலில் கொண்டு வர, பெருமாளும் அந்த தீர்த்தத்தை ஏற்றுக் கொண்டு தாகம் தீர்ந்தார் என்பதும் வரலாறு. இவ்வாறு ஆதிசேஷனால் நீர் கொண்டு வரப்பட்டு, அவரால் உண்டாக்கப்பட்ட தலம் என்பதால், திருவஹீந்தரபுரம் என்று பெயர் பெற்றது. கோயிலின் உள்ளே பிரகாரத்தில் இந்த தீர்த்தக் கிணறு உள்ளது. இங்குள்ள ஆதிசேஷனை வழிபட்டால் சர்ப்பதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம். அஹீ என்றால் பாம்பு. அஹீந்தன் என்னும் ஆதிசேஷன் வழிபட்ட க்ஷேத்ரம் என்பதால் திருவஹீந்த்ரபுரம் (திரு அஹீந்த புரம்). தீர்த்தம் கொண்டு வர   ஆகாயத்தில் பறந்த கருடன், சிறிது தாமதமாக விரஜா தீர்த்தத்தைக் கொண்டு வந்தார். பெருமாள் அதையும் ஏற்றுக் கொண்டார் என்றும் வரலாறு. சேஷ தீர்த்தம் நிவேதனத்திற்கும், கருட தீர்த்தம் திருமஞ்சனத்திற்கும் ஏற்றுக் கொள்கிறோம் என்று பெருமாள் சாதித்தாராம். அவ்வாறே இன்றளவும் உபயோகப்படுத்தப்படுகிறதாம். கருடன் கொண்டு வந்த விரஜா தீர்த்தம்தான் கெடிலம் ஆறாக அருகே ஓடுகிறதாம். இந்த ஆறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடுவது சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.
108 திவ்யதேசம், நடுநாடு திவ்யதேசங்கள், திருவஹீந்த்ரபுரம்
தேவநாதப் பெருமாளையும், எதிரே மலைமேலே வீற்றிருக்கும் ஹயக்ரீவரையும் சேவித்து மகிழ்வுடன் ஊர் திரும்பினோம்.

உற்சவங்கள்: ப்ரஹ்மோத்ஸவம், கருடசேவை, வசந்த உற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீ ராம நவமி, நரசிம்ம ஜெயந்தி, ஸ்ரீஜெயந்தி, மாசிமகம், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், புரட்டாசியில் தேசிகனுக்கு உற்சவங்கள், ஹயக்ரீவருக்கு திருவோண நட்சத்திரம்.

வழி: சென்னையிலிருந்து பாண்டிச்சேரி, கடலூர் வழியே செல்லலாம். கடலூரிலிருந்து பேருந்து வசதி உண்டு. அருகில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் உள்ளது. திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ வசதியும் உண்டு. சுமார்  50-60 கி.மீ. தூரத்தில் நடுநாட்டுத் திருப்பதியில் மற்றொன்றான திருக்கோவிலூரும் உள்ளது.


கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 - 11 , மாலை 4.30 - 8

முகவரி:
ஸ்ரீ தேவநாதப்பெருமாள் திருக்கோயில்
திருவஹீந்த்ரபுரம்-607 401.
கடலூர் மாவட்டம்.

No comments:

Post a Comment