Wednesday, August 9, 2017

திருக்கடிகை(சோளிங்கர்) - ஸ்ரீ யோக நரசிம்மஸ்வாமி திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 44

108 திருப்பதிகளில் ஒன்றான சோளிங்கர் என்னும் ஸ்தலம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முற்காலத்தில் சோழசிம்மபுரம் என்றும் தற்காலத்தில் சோளிங்கர் என்றும் அழைக்கப்படுகிறது. 

சோளிங்கரில் உள்ள நரசிம்மரைத் தரிசிக்க ஆவல் இருந்தாலும், மலை ஏறுவது மிகவும் கடினம் என்பதால் யோசித்துக் கொண்டே இருந்தேன். அவன் அருள் இல்லாமல் அவனைத் தரிசிக்க முடியாது அல்லவா? அதனால் மனதைரியத்தையும், உடல் பலத்தையும் தருமாறு அவனிடமே விண்ணப்பித்துக் கொண்டிருந்தேன். அந்த தருணத்தையும் அவனே ஏற்படுத்த, ஒரு நாள் (சற்றே யோசனையுடன்தான்) கிளம்பினோம். 


மலையில் எடுத்த புகைப்படங்கள் சிதைந்துவிட்டது. அதனால்  படங்கள் பதிவேற்ற முடியவில்லை. பழுது பார்த்தபின் பதிவேற்றுகிறேன்.

சோளிங்கர் கோவில் மூன்று சன்னதிகள் உடையது. இரண்டு மலைக்கோயில்களும், ஒரு ஊர்க்கோயிலும் சேர்ந்ததே சோளசிங்கபுரம் என்னும் சோளிங்கர். முதலில் பெரிய மலை. 
வானரங்கள் அதிகம் என்பதால் மலையின் அடிவாரத்திலேயே சிறிய பிரம்பு கொடுக்கிறார்கள். ஏற முடியாதவர்களுக்கு கீழேயே டோலி வசதியும் உண்டு. பெரிய மலைக்குச் செல்ல 1,300 படிகள் ஏற வேண்டும். ஏறும் வழி முழுவதும் கூரை அமைத்திருக்கிறார்கள். சூரியனின் கதிர்களில் இருந்து ஏறுபவர்களைக் காப்பாற்றுகிறது. ஆயினும் படிகள் செங்குத்தாக இருப்பதால் சற்று கடினமாகத்தான் இருந்தது. அங்கங்கே அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் ஏற வேண்டும். அமரும்போது தான் வானரங்கள் அருகில் வரும். பயந்து எழுந்து மீண்டும் படி ஏற, இப்படியேதான் மலை ஏறுதல் தொடர்ந்தது. பெரியதும், சிறியதும், குட்டிகளுமாக, வானரங்கள் மிக அதிகம் என்றே சொல்ல வேண்டும். சற்றும் சும்மா இருப்பதில்லை. கையில் எதுவும் கொண்டு போக முடியாது. மூக்குக் கண்ணாடி, தண்ணீர் பாட்டில், பூமாலை, தின்பண்டங்கள், வாழைப்பழம் என்று எது இருந்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் பிடுங்கிக் கொண்டு ஓடுகிறது. கையில் பிரம்பு இருந்தால் அருகில் வருவதில்லை. சுமார் 50 நிமிடங்களில் ஒரு வழியாக உச்சியை அடைந்ததும் நரசிம்மருக்கும் ஞ்சநேயருக்கும் நன்றி சொன்னேன். ஏறிவிட்ட சந்தோஷம்! நரசிம்மரை சேவிக்கப் போகும் ஆனந்தம்! ஒடுக்கமான கூண்டு வழியே சன்னதிக்குச் செல்ல வேண்டும். அங்கும் கூட சில குரங்குகள் கூடவே வந்தன. அனுமன்தான் மலை ஏற்றி விட்டாற்போல் உணர்ந்தேன். 

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.
-திருமங்கையாழ்வார்

1. பெரியமலை: ஸ்ரீயோக நரசிம்மர் எழுந்தருளியுள்ள மலைக்கோயில். கடிகாசல மலை என்னும் இந்த மலையில்
 பெருமாள் யோக நரசிம்மராக, அக்காரக்கனி என்னும் திருநாமத்துடன் கிழக்கே திருமுக மண்டலத்துடன், வீற்றிருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இங்கு ஒரு கடிகை (24 நிமிடம்) தங்கி இருந்தாலே பீடைகள் தொலைந்து, மோக்ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் இத்தலத்திற்கு ‘திருக்கடிகை’ என்று பெயர் வந்தது. கடிகாசலம் என்றும் பெயர். கடிகை என்றால் நாழிகை அசலம் என்றால் மலை. நரசிம்ம அவதாரத்தை மீண்டும் ஒரு முறை தரிசிக்க முனிவர்கள் விரும்பி இத்தலத்தில் தவம் செய்ய, முனிவர்களுக்காக அவர்கள் நினைத்த மாத்திரத்தில், ஒரு கடிகையில், அவர்களுக்குக் காட்சி கொடுத்ததால் ‘கடிகாசலம்’ என்று பெயர் ஏற்பட்டதாம். அமிர்தவல்லித் தாயார் / சுதாவல்லித் தாயார் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். பொதுவாக, பெருமாள் கோயில்களில் மூலவரும் உற்சவரும் ஒரே சன்னதியில் தான் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இங்கு உற்சவ மூர்த்திகள் கீழே ஊர்க்கோவிலில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

விமானம் : ஸிம்ஹகோஷ்டாக்ருதி விமானம் (ஹேமகோடி விமானம்)

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், தக்கான் குளம். மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. இங்கு தான் நுழைவு வாயில். இங்கு ஒரு பெரிய ஆஞ்சனேயர் சிலை உள்ளது.

பிற சன்னதிகள்: தாயார், சக்கரத்தாழ்வார், கண்ணன், சப்த ரிஷிகள், ஆழ்வார் ஆச்சார்யர்கள்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 3 பாசுரங்கள்(1731,1736,2673), பேயாழ்வார் - 1 பாசுரம் (2342)

2. சிறிய மலை: சிறிய மலைக்குச் செல்ல 420 படிகள் ஏற வேண்டும். 20-30 நிமிடங்கள் ஆகும். தனி மலையில் யோக ஆஞ்சனேயர் சன்னதி. இங்குள்ள ஆஞ்சனேயர், நான்கு திருக்கரங்களுடன், ஜபமாலை, சங்கு சக்கரங்களுடன் யோக நிலையில் வீற்றிருக்கிறார். சதுர்புஜ யோக ஆஞ்சனேயர் என்று திருநாமம். இவர், பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடியை நோக்கியபடி அமர்ந்துள்ளார். ராமர், ரங்கநாதர், நவநீத கிருஷ்ணர் சன்னதிகளும் உள்ளது.

3. ஊர்க்கோவில்: உற்சவர் பக்தோசிதன், உற்சவர் சுதாவல்லித் தாயார் இங்கே எழுந்தருளியுள்ளனர். உற்சவருக்கென்று தனிக்கோயில் அமைந்திருப்பது இந்த ஸ்தலத்தின் விசேஷம். இங்குதான் உற்சவங்கள், திருவிழாக்கள் நடக்கிறது.

தொட்டாச்சாரியார், எறும்பியப்பா பிறந்த இடம். இத்தலத்தில் தொட்டாச்சாரியாருக்கு காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கருட வாகனத்தில் தரிசனம் தந்தருளியதாக வரலாறு.

பிரார்த்தனை ஸ்தலம். பேய், பிசாசு, பில்லி, சூனியம், மற்றும் வியாதிகள் தீர விரதமிருந்து, தக்கான் குளத்தில் நீராடி, மலையில் பெருமாளை சேவித்தால் தொல்லைகள் தீரும் என்பது நம்பிக்கை. தக்கான் குளத்தருகில் கல்யாணகட்டமும் இருக்கிறது. முடி இறக்குதல், காது குத்துவது போன்றவற்றை இத்தலத்தில் செய்கிறார்கள்.

உற்சவங்கள்: நரசிம்ம ஜெயந்தி, ஆடிப்பூரம், பிரம்மோற்சவம், பவித்ர உற்சவம், மணவாள மாமுனிகள் உற்சவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் மற்றும் தேர்த் திருவிழா. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகள் விசேஷம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: மலைக்கோயில்களில் காலை 8 முதல் மாலை 5 மணிவரை தரிசிக்கலாம். ஊர்க்கோவில் 12 மணிக்கு நடைசாத்தி, மீண்டும் 4.30 மணிக்குத் திறக்கிறார்கள்.


வழி: சென்னையிலிருந்து 125 கிமீ. தூரத்திலும், அரக்கோணத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைலும் உள்ளது. அரக்கோணத்திலிருந்து, ஷேர் ஆட்டோ, பஸ் வசதி உண்டு. வேலூரிலிருந்து திருத்தணி வழியில் 60 கிமீ தூரத்திலும், சோளிங்கர் ரயில் நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சென்னை, திருத்தணி, சித்தூரில் இருந்து பேருந்து வசதி உண்டு. சென்னையிலிருந்து காரில் செல்லலாம். மலையடிவாரத்தில் கார் நிறுத்தம் இருக்கிறது. தங்கும் வசதிகளும் உள்ளது.

முகவரி:
ஸ்ரீ யோக நரசிம்மஸ்வாமி திருக்கோயில், 

சோளிங்கர்- 631102,
வேலூர் மாவட்டம்.

2 comments:

  1. 108 திவ்ய தேசங்களில் சிறப்பான ஸ்தலம் இந்த சோளிங்கபுரம். எப்போதோ சின்ன வயதில்.
    போனதுதான்.அழகாகவும் விரிவாகவும் கூறி என்னுள் மறுபடியும் செல்ல ஒரு அவாவை உண்டு பண்ணீர்கள்.படங்களை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்

    ReplyDelete
  2. மே, ஜூன் மாதங்களில் சோளிங்கர் அருகே உள்ள புலிவலம்
    என்ற இடத்தில் உள்ள கம்பெனிக்குப் போயிருந்தேன் வேலை விஷயமாக . ஆனால் கோயிலுக்குப் போக முடியவில்லை . உங்கள் பதிவிலிருந்து விவரம் அறிந்தேன் நன்றி

    ReplyDelete