Tuesday, August 15, 2017

கண்ணன் கதைகள் (71) - மாளாக் காதல்

சுமார் 42 வருடங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தில் நடந்த உண்மைச் சம்பவம்.

கோவைக்கு யார் வந்தாலும், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு அழைத்துச் செல்வது தாத்தாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி பல ஊர்களிலிருக்கும் வரும் உறவினர்களை மலம்புழா, குருவாயூர், ஆழியார் என்று கூட்டிக் கொண்டு போவார். செலவைப் பற்றி யோசனை பண்ண மாட்டார். வீட்டிலேயே கார் இருந்ததால் ரொம்பவே சௌகர்யமாக அனைவரையும் அழைத்துச் செல்லலாம். தாத்தாவுக்குப் பரந்த மனசு. இப்போது போல 5 பேர் கொள்ளும் காரில், ஐந்தாவதாக ஆள் வந்தாலே கஷ்டம் என்று நினைப்பவர் அல்ல. அம்பாசடர் கார். திடமான கார். காரிலும், தாத்தா மனசிலும் இடம் நிறைய உண்டு. புளிமூட்டை போல் ஆட்களை ஏற்றினால்தான் அவருக்குத் திருப்தியாக இருக்கும். அம்பாசடர் காரும் ஈடு கொடுக்கும்.

அதுபோல ஒரு சமயம், சுமார் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் கோவைக்கு ஒரு விடுமுறைக்கு வந்திருந்தார்கள். காரிலும் டாக்ஸியிலுமாக குருவாயூர் சென்றோம். தரிசனம் செய்தோம். காலை முடி இறக்கும் வேண்டுதல் இருந்ததால், முடி இறக்கி, மறுபடி தரிசனம் முடித்து, காலை 9 மணி அளவில் குருவாயூரிலிருந்து கிளம்பி மதிய உணவிற்குக் கோவை சென்று விடுவதாகத் திட்டம். ஆண்கள் பஸ்சில் பாலக்காடு சென்று விடுவதாகவும், பெண்களும் குழந்தைகளும் எங்கள் காரில் சென்று விடலாம் என்றும், பாலக்காடு அடைந்ததும் எல்லாரும் சந்தித்துவிட்டு கோவை புறப்படலாம் என்றும் முடிவு செய்தார்கள். அதன்படி ஆண்கள் பஸ்சில் செல்ல, காரில் பெண்களும், சிறியவர்களும்.

காரில் டிரைவரைத் தவிர்த்து முன் பக்கம் 2 பேர் மடியில் ஒரு குழந்தையுடன். பின்னால், பெரியவர்கள் 4 பேர், மடியில் 10-12 வயது குழந்தைகள். டிக்கியில் சாமான்கள். பயணம் ஆரம்பித்தது. வடக்கஞ்சேரி வழியைத் தேர்ந்தெடுத்தார் டிரைவர்.

நீண்டு வானளாவிய மரங்களை ரசித்துக்கொண்டு செல்லும் வயதில் நாங்கள் இல்லை. ஏதோ பாடல்கள், அரட்டைகள் என்று இருந்தது. பாடிக்கொண்டு செல்வதால் மனமும் உடலும் உற்சாகமாக இருந்திருக்கலாம்.

இருபுறமும் படுபாதாளம். உயரமான பகுதி, குறுகலான பாதை. எதிரேயோ, பின்னாலோ வண்டி வந்தால் பொறுமையாக ஓட்ட வேண்டும். மயிரிழை நகர்ந்தாலும் அதோகதிதான். டிரைவர் மிக நேர்த்தியாக ஓட்டிக் கொண்டிருந்தாலும், பெரியவர்கள் நிதானமாய் ஓட்டுங்கள் என்று கூறிக் கொண்டு வந்தனர். சரியான மழை. ரோடு வழுக்குப்பாறை போல இருந்ததால், மிக மெதுவாகவே கார் ஓட்டவேண்டும் என்பதால் டிரைவர் மிகக் கவனமாகவே ஓட்டினார். மழை மிகப் பலமாக இருந்தது. வானிலையும் பொழுதுக்குப் பொழுது மாறியது. கருமேகங்கள் கூடும். திடீரென்று சோவென்று மழை கொட்டும், சில சமயம் தூறலாக இருக்கும். இப்படியே அந்த மலைப்பாதையில் மெதுவான பயணமாக இருந்தது. மலைப்பாதை வளைந்து வளைந்து சென்றது. வளைவுகளில் கார் திரும்பும்போது சற்று பயமாக இருக்கும். இருப்பினும் நாங்கள் குழந்தைகளாக இருந்ததாலோ என்னவோ, சந்தோஷமாகவும், ஆசையாகவும், உற்சாகமாகவும் இருந்தது அந்தப் பயணம். மலைப் பகுதிகளில் பசுமை வழிந்தோடியது. எனக்கு இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் வயதில்லை. சில சிறிய ஊர் வரும் சமயங்களில் வயல்களும் அங்கங்கே வீடுகளும் தெரிந்தது.

இப்போது பள்ளத்தாக்கு ஏதும் இல்லை. சமவெளிப்பகுதி. சிறிது நேரத்தில் பாலக்காடு சென்றுவிடலாம், அங்கே பஸ் ஸ்டாண்டில் உள்ள குடும்பத்து ஆண்களைப் பார்த்த பிறகு, மீண்டும் கோவை செல்லலாம் எனப் பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். கார்க் கண்ணாடிகளைத் திறந்து வைத்தால், மழைச்சாரல் உடல் மீது படும் என்பதால், அவ்வப்போது ஜன்னலை மூடி, பிறகு திறந்து என்றவாறு பயணம். டிரைவரின் ஜன்னல் மட்டுமே பாதி திறந்திருந்தது. சற்றுமுன் வரை மனிதர்களே இல்லாத அந்தப் பகுதியில், சிலர் சற்று தூரத்தில் இருந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு குடிசைகள்.

அதிக வளைவு இல்லாமல் பாதை நேராகச் சென்ற ஒரு இடத்துக்கு வந்தபோது என்ன ஆயிற்றோ நினைவில்லை, டிரைவர் சற்றே காரை லாகவமாய்த் திருப்ப, கண் இமைக்கும் நேரத்தில் எங்கள் கார் ரோடின் ஓரமாக இருந்த மைல்கல்லில் நேருக்கு நேர் மோதியது. சாலை சற்று சரிவாக இருந்ததால், கார் இரண்டு முறை சுழன்று தலைகீழாக விழுந்தது. பெரியவர்கள் அனைவரும் ‘குருவாயூரப்பா காப்பாத்து’ என்று கூக்குரல். குழந்தைகளும் பெரியவர்களும் காரின் உள்ளே. டிரைவர் எப்படியோ சுதாரித்து, அரைகுறையாய்த் திறந்திருந்த ஜன்னல் வழியே வெளியே வந்து, திறந்திருந்த ஜன்னலின் வழியே கையைவிட்டு, இன்னுமோர் ஜன்னலைத் திறந்து, வெறி பிடித்தவர் போல் உள்ளேயிருந்து எல்லாரையும் இழுத்து வெளியே போட்டார். இரண்டு டயர்கள் கழண்டு எங்கோ விழுந்திருந்தது. அதற்குள் வயலில் வேலை செய்தவர்களும் அங்கு ஓடி வந்து திறந்திருந்த ஜன்னலின் வழியே கையைவிட்டு, மற்ற ஜன்னல்களைத் திறந்து, எல்லாரையும் இழுத்து வெளியே போட்டார்கள். இவையனைத்தும் மிக வேகமாக நடந்தன. முடி இறக்கிய குழந்தையை வெளியில் இழுத்த அதே நொடியில், மயிரிழையில் ஏதோ ஒரு கனமான இரும்புப் பொருள் உள்ளே விழுந்தது. டிரைவரும் மயங்கி விட்டார். குடும்பத்தினர் சிலர் மயங்கி விட்டனர். அங்கிருந்தவர்கள் உடனே சற்று தூரத்தில் இருந்த குடிசைக்கு எங்களை அழைத்துச் சென்றனர். அனைவரையும் ஆசுவாசப்படுத்தி, டீ போட்டுக்கொடுத்தனர். அனைவரும் உயிரோடு இருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, அப்பனுக்கு நன்றி சொன்னோம்.

அடுத்து, பாலக்காடு சென்ற ஆண்களுக்கோ, வீட்டிற்கோ தகவல் சொல்ல வேண்டும். வீட்டில் தொலைபேசி உண்டு; ஆனால், அருகில் தொலைபேசி வசதி இல்லை. அக்காலத்தில் செல்போன் கிடையாது. எப்போதோ ஓரிரு வண்டிகள் வரும் அந்த ரோடில் யாரிடம் கேட்டு அனைவரும் ஊர் திரும்புவது? சிலருக்கு எலும்பு முறிவு, சிலருக்கு அடி, சிராய்ப்பு வேறு. முதலில் பாலக்காட்டிற்கு சென்று, ஆண்களிடம் தகவல் சொல்லி, பின்னர் ஏதாவது மருத்துவமனையில் வைத்தியம் வேறு பார்க்க வேண்டும். என்ன செய்வது என்று புரியவில்லை.

இதற்கிடையில் மற்றொரு அதிசயம். விபத்து நடந்த இடத்தைக் கடந்த ஒரு சிறிய வேன் சற்று தூரம் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்தது. எங்கள் காரின் நம்பரைப் பார்த்த அவர்கள், ‘இது ஐயர்வீட்டுக் காராச்சே’ என்று தமக்குள் பேசிக்கொண்டு அங்கிருந்த ஒருவரிடம் விசாரிக்க, அவர் அருகில் குடிசையில் அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள் என்று சொல்ல, அங்கே வந்தார்கள். அது எங்கள் தாத்தா வேலை செய்த கம்பெனியின் வேன். அந்த வேன் அங்கு வந்தது குருவாயூரப்பனின் திருவருள்தான். அவர்கள் மூலமாக பாலக்காட்டில் உள்ளவர்களுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் தகவல் சொல்லச் சொன்னோம். டிரைவர் அவர்களுடன் சென்று அருகில் இருந்த சிறிய ஊரில் இருந்து ஒரு வாடகைக் கார் எடுத்து வந்தார். அனைவரும் பாலக்காடு சென்று, மற்றொரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு குடும்பத்து ஆண்களுடன் கோவைக்குப் பயணமானோம். கோவையில், நேராக ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவம் பார்த்துவிட்டு, எலும்பு முறிந்தவர்களுக்குக் கட்டும் போட்டு, பின்னர் வீடு திரும்பினோம்.

யோசித்துப்பார்த்தால், யாருமற்ற வனாந்திரத்தில் எங்கேயிருந்து சில வீடுகளும், மக்களும் எங்களுக்கு உதவினார்கள்? இவ்வளவு பெரிய விபத்தில் இருந்து மொத்தக் குடும்பத்தையும் காப்பாற்றிய அந்த மகாசக்தி எது? குருவாயூரப்பன்தான். சத்தியம்! சத்தியம்! புதிதாய்ப் பிறந்தது போல உணர்ந்தோம். மொத்தக் குடும்பத்தையும் குருவாயூரப்பன் காப்பாற்றினான். இந்தக் கதை எனது சொந்த அனுபவம். இந்த சம்பவத்திற்குப் பின்தான் குருவாயூரப்பன் எனது இஷ்டதெய்வம் ஆனான்.

“குருவாயூரப்பா சரணம், எண்டே குருவாயூரப்பா, எண்டே குருவாயூரப்பா, பொன்னு குருவாயூரப்பா சரணம்” என அடியேன் ஸ்மரிக்கும்படி செய்ததும் அவனே! குருவாயூரப்பன் பெருமைகள் கணக்கில் அடங்காது. அவன் பெருமைகளை என்னுடைய ஆசையினாலும், என் இஷ்ட தெய்வம் என்பதாலும், எளிய நடையில் எழுதுகிறேனே ஒழிய, அந்த யோக்கியதை எனக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

புன்சிரிப்பு தவழ என் பூஜையறையிலும், என் மனதிலும் நிற்கும் மாமணிவண்ணனே இன்றளவும் என் மருத்துவன். வரப்ரசாதி. இந்த மருத்துவன்பால் அடியேனுக்கு என்றுமே மாளாத காதல்தான்! இது போன்று குருவாயூரப்பன் நடத்திக் காட்டிய அற்புதங்கள் உங்கள் வாழ்விலும் நடந்திருந்தால் setlur.shanu@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தட்டச்சு செய்து அனுப்பி வைத்தால் பதிவேற்றுகிறேன்.

“குருவாயூரப்பா சரணம், எண்டே குருவாயூரப்பா, எண்டே குருவாயூரப்பா, பொன்னு குருவாயூரப்பா சரணம்”

No comments:

Post a Comment