Tuesday, July 25, 2017

காக்களூர் - ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 32

காக்களூர், திருவள்ளூர் அருகே 3 கி.மீ தூரத்தில் ருக்கிறது. இங்கு உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், மிகவும் ப்ரசித்தி பெற்றது. 

மூலவர் ஸ்ரீ வீர ஆஞ்சனேயர். ஆஞ்சநேயரின் வால் தலைக்கு மேல் சுருண்டு இருக்கிறது. வாலின் நுனியில் மணி கட்டப்பட்டுள்ளது. ஒரு கரம் அபய முத்திரையுடனும், இன்னொரு கரத்தில் சௌகந்திகா மலரை ஏந்தியும் இருக்கிறார். இரண்டு கைகளிலும் கங்கணம். வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

இந்த ஆஞ்சனேயரை ஸ்ரீ வ்யாசராஜர் பிரதிஷ்டை செய்தாராம். ஸ்ரீ வ்யாஸராஜர் பல ஆஞ்சனேயர் ஆலயங்களை அமைத்தார். அவர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேய மூர்த்திகளுக்கு தனிச் சிறப்புக்கள் உண்டு. வால் சுருண்டு தலைக்கு மீது இருக்கும். வாலில் மணி கட்டப்பட்டு இருக்கும். ஒரு கரம் அபய முத்திரையுடனும், இன்னொரு கரத்தில் சௌகந்திகா மலரை ஏந்தியும் இருப்பார். இவை மூன்றும் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சனேயரிடம் மட்டுமே பார்க்கமுடியும் என்று அர்ச்சகர் சொன்னார். விஜயநகர சாம்ராஜ்யத்தில் இருந்து புண்ணிய யாத்திரையாக வந்த ஸ்ரீ வ்யாஸராஜர், இங்கு வந்தபோது இவ்வாலயத்தை அமைத்தார் என்று கூறுகிறார்கள். ஸ்ரீ ராகவேந்திரர் இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்து, 14 ஆண்டுகள் தங்கியிருந்து பூஜை செய்து, ஸ்லோகங்கள் இயற்றி இருக்கிறார் என்றும் அர்ச்சகர் சொன்னார்.

கர்ப்பக்ருஹமும் ஒரு முக மண்டபமும் மட்டுமே உள்ள சிறிய கோவில். இந்த கோவிலின் பூஜைகளை மத்வ மத சம்ப்ரதாயத்தின்படி செய்து வருகிறார்கள்.

இந்த கோவிலின் வாசலில் ஒரு வேப்ப மரமும், அரச மரமும் இணைந்து வளர்ந்திருக்கிறது. இந்த மரத்தின் அடியில் நின்று கொண்டு அங்கிருந்தே ஆஞ்சனேயரிடம் நம் வேண்டுகோளை வைத்து பிரார்த்தனை செய்து, பின்னர் ஆலயத்துக்குள் சென்று அவரை வணங்கினால் வேண்டியது நடக்கும் என்று நம்பிக்கை. மரத்தினடியில் நாகப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சன்னதியை அடுத்து ஒரு சிறிய விநாயகர் சன்னதியும் உள்ளது. 
இந்த ஊரிலேயே ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது.

உற்சவங்கள்: ஹனுமத் ஜெயந்தி
கோயில் திறந்திருக்கும் நேரம்: 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை.

வழி:
திருவள்ளூரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சென்னையிலிருந்து புறநகர் ரயிலில் புட்லூர் ஸ்டேஷனில் இறங்கி இந்தக் கோவிலை அடையலாம். ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோக்கள் கிடைக்கும்.

முகவரி:
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் திருக்கோயில், 
காக்களூர் 602003
திருவள்ளூர் மாவட்டம்.

3 comments:

  1. தங்களின் இந்த புனிதமான ஆன்மீக பணி சிறப்புற ஸ்ரீ ஆஞ்சனேயரின் திருப்பாதம் பணிகின்றேன்.
    அன்பன்
    ஸ்ரீனிவாசன், திருவள்ளுர்

    ReplyDelete