Sunday, July 23, 2017

கண்ணன் கதைகள் (64) - திருமண அனுக்ரஹம்

கண்ணன் கதைகள் (64) - திருமண அனுக்ரஹம்
முன்னோரு சமயம் தெய்வ பக்தி நிரம்பிய ஓர் வைதீகர் இருந்தார். அவர் பெரிய சம்சாரி. மிகவும் ஏழ்மையில் இருந்த அவர், தன் பெண்ணிற்குத் திருமணம் செய்ய வேண்டுமே என்று மிகவும் கவலைப்பட்டார். ஜோதிடர்கள் அந்தப் பெண்ணிற்கு திருமணம் சற்று தாமதமாக நடக்கும் என்று கூறியதால் மிகுந்த கவலையுடன் இருந்தார்.

அவர் கவலையை அறிந்த அவர் நண்பர், அவரைத் தேற்றி, "நான் சொல்வது படி செய்யுங்கள், விரைவிலேயே திருமணம் நடக்கும். ஸ்ரீ குருவாயூரப்பனின் படத்தை வைத்து, தினமும் பூஜை செய்து, ஸ்ரீ நாராயணீயத்தைப் பாராயணம் செய்து வாருங்கள், உங்கள் பெண்ணுக்குத் திருமணம் நடக்கும். ஸ்ரீ நாராயணீயத்தைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கட்டாயம் அளிக்கும். தைரியமாக இருங்கள்" என்றார். அதன்படி வைதீகரும் தினந்தோறும் செய்து வந்தார். ஒரு வாரம் ஆயிற்று. ஒருநாள் பூஜை, பாராயணம் செய்துவிட்டு வந்தபோது அவரது நீண்ட நாள் நண்பர் தனது மனைவியுடன் அவர் வீட்டிற்கு வந்தார். க்ஷேமங்கள் பற்றி விசாரித்த அவர், உனக்கு ஒரு பெண் இருந்தாளே, அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்க, வைதீகரும் இன்னமும் ஆகவில்லை என்றார். உடனே நண்பர், தனக்குத் தெரிந்த ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பையன் இருப்பதாகவும், அவர்கள் வீட்டிற்குச் சென்று பேசி வரலாம் என்றும் கூறினார். உடனே வைதீகரும் மகிழ்ச்சியுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களைப் பார்த்துப் பேசி பெண் பார்க்க வர வேண்டும் என்று சொன்னார்கள். ஒரு நல்ல நாளில் அவர்கள் பெண் பார்க்க வந்து அன்றே நிச்சயதார்த்தமும் செய்து சென்றார்கள். வெளியூரில் இருந்த மகனுக்கு இந்த நல்ல விஷயத்தைப் பற்றிக் கடிதம் எழுதினார்.

வைதீகருக்கு இதில் மிகவும் மகிழ்ச்சி என்றாலும், கல்யாணத்திற்குச் சில நாட்களே இருந்த நிலையில், அதற்குத் தேவையான பணம் இல்லாததால் மிகுந்த கவலையுடன் குருவாயூரப்பன் படத்தின்முன் சென்று மனதார வேண்டினார். அப்போது வாசலில் தபால்காரர் வந்து ஒரு தபால் கொடுத்தார். அவர் மகனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. நீண்ட நாட்களாக அவனிடமிருந்து கடிதம் வராமல் இப்போது வந்ததில் ஆனந்தமடைந்து அதைப் படித்தார். அதில், “அப்பாவுக்கு அனேக நமஸ்காரம். உங்கள் கடிதம் கண்டேன். இத்துடன் தங்கையின் கல்யாணத்திற்காக நான் சேர்த்து வைத்திருந்த பணம் இருக்கிறது, அதை வைத்து வேண்டிய செலவுகளைச் செய்து கொள்ளுங்கள், நானும் புறப்பட்டு வந்து விடுகிறேன், கவலை வேண்டாம்" என்று எழுதியிருந்தான். பிறகு, குறிப்பிட்ட தேதியில் அவர் பெண்ணின் திருமணமும் நல்லவிதமாக நிறைவேறியது. வைதீகர், குருவாயூரப்பனின் திருவருளை நினைத்து ஆனந்தத்துடன் மெய்சிலிர்த்து குருவாயூரப்பனுக்கு நன்றி கூறி மிக மகிழ்ந்தார்.

No comments:

Post a Comment