Saturday, July 29, 2017

செட்டிபுண்ணியம் - ஸ்ரீ யோக ஹயக்ரீவர் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 35

TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
செட்டிபுண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுக்கு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது செட்டிபுண்ணியம். செட்டிபுண்ணியம் தேவநாதப் பெருமாள் கோயிலில் உள்ள யோக ஹயக்ரீவர் மிகவும் பிரசித்தம். தேவநாதப்பெருமாள் கோயிலாக இருந்தாலும் கூட செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே மக்கள் கூறுகின்றனர்.

பழமையான இந்தக் கோயிலில் மூலவர் வரதராஜப் பெருமாள். தாயார் ஹேமாம்புஜவல்லி. திருவஹீந்திரபுரத்தில் உள்ள அதே பெருமாள். உற்சவர், தேவநாதப் பெருமாள் மற்றும் யோக ஹயக்ரீவர். ஆனந்தநிலைய விமானம்.

இங்குள்ள யோக ஹயக்ரீவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு சக்ரதாரியாக யோகநிலையில் சேவை சாதிக்கிறார். வரப்ரசாதி. யோக ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடுகிறார்கள். இந்தத் தலத்திற்கு வந்து அக்ஷராப்யாஸம் செய்ய பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். படிக்கும் மாணவர்கள், பரீக்ஷைக்கு முன் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டு, ஹயக்ரீவரின் கடாக்ஷத்தைப் பெற்றால் படிப்பில் நல்ல முன்னேற்றமும், வெற்றியும் உண்டாகும் என்பது நம்பிக்கை. பேச முடியாதவர்கள் தேன் நிவேதனம் செய்து தினமும் சாப்பிட்டு வர பேசும் சக்தியை ஹயக்ரீவர் அருள்வார் என்பதும் நம்பிக்கை. இந்தக் கோவில் திருமணத் தடை, தொழிலில் தடை போன்றவற்றிற்கும் பரிகார ஸ்தலமாய் விளங்குகிறது. ஸ்தல விருக்ஷம் அழிஞ்சல் மரம். இந்த மரத்தில் நூல், வேண்டுதல்கள் எழுதிய காகிதங்கள்
 முதலியவற்றைக் கட்டி, படிப்பிற்கும், குழந்தைப் பேற்றுக்கும் வேண்டிக் கொள்கிறார்கள். 
TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,

TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
தனி சன்னதியில் ஸீதா லக்ஷ்மண ஹநுமத் ஸமேதராக கோதண்டராமர். இத்தலத்து ராமரது கணுக்காலில் ஒரு ரட்சை காணப்படுவது விசேஷம். தாடகா வதத்தின்போது ராமருக்குத் திருஷ்டி படாமலிருக்க விஸ்வாமித்திர முனிவர் இந்த ரட்சையைக் கட்டினாராம்.

தாயார் ஹேமாம்புஜ நாயகி தனிக்கோயில் நாச்சியார். ஆண்டாள், ஆழ்வார் சன்னதிகளும் உள்ளது.

தேவநாத பெருமாளும், ஹயக்ரீவரும் திருவஹீந்திரபுரத்தில் இருந்தும், ஸ்ரீ ராமர் தஞ்சாவூர் சமஸ்தானத்திலிருந்தும் இங்கு கொண்டு வரப்பட்டதாக பலகைக் குறிப்பு கூறுகிறது. 1920-ல் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட வெண்கல மணி, விரிசல் இருப்பதால் தற்போது உபயோகப்படுத்துவது  இல்லையாம்.

TEMPLE VISITS, கண்ணுக்கினியன கண்டோம்,
கோவில் வாசலில் பச்சைப்பசேலென்று காய்கறிகள், கீரை வகைகள் விற்கப்படுவதையும் காணலாம்.

உற்சவங்கள்: ஹயக்ரீவ ஐயந்தி, ஒவ்வொரு மாதமும் திருவோண நக்ஷத்திரத்தில் ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. புதன், வியாழன் விசேஷம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை.

முகவரி:
அருள்மிகு யோக ஹயக்ரீவர் திருக்கோயில் (தேவநாதப் பெருமாள்), செட்டிபுண்ணியம் - 603 204,
செங்கல்பட்டு,
காஞ்சிபுரம் மாவட்டம்

1 comment: